உள்ளடக்கத்துக்குச் செல்

சுவான்சாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுவான் சுவாங்
யுவான் சுவாங்கின் ஓவியம். சப்பான், கமகுரா காலம் (14ஆம் நூற்றாண்டு).
சுய தரவுகள்
பிறப்பு(602-04-06)6 ஏப்ரல் 602
இறப்பு5 பெப்ரவரி 664(664-02-05) (அகவை 61)
தோங்சுவான், சென்சி மாகாணம், சீனா
சமயம்பௌத்தம்
பாடசாலைகிழக்கு ஆசிய யோகசரா
பதவிகள்
மாணவர்கள்

சுவான்சாங் (யுவான் சுவாங்) (பொ.ஊ. 602–664) என்பவர் ஒரு புகழ் பெற்ற சீன மதகுருவும், கல்வியாளரும், பயணியும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவரது பயணங்கள், சீனாவின் தொடக்க தாங் காலத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தின. தனது 17 ஆண்டுகள் பிடித்த இந்தியாவுக்குச் சென்று சீனா திரும்பிய பயணத்தின் மூலம் இவர் பெரும் புகழ் எய்தினார். தனது பயணம் பற்றிய விபரங்களை அவர் தனது தன்வரலாற்றில் குறித்துள்ளார்.[1]

இளமைக் காலம்[தொகு]

சுவான்சாங் ஹெனானில் உள்ள, இலுவோயங்குக்கு அண்மையிலுள்ள ஓர் இடத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஆண்டு பொ.ஊ. 602 எனக் கருதப்படுகிறது. பொ.ஊ. 664 ஆம் ஆண்டில் யூ ஹுவா கோங் என்னும் இடத்தில் இவர் காலமானார். சென் ஹுயி என்னும் இயற்பெயர்க் கொண்ட சுவான்சாங்கின் குடும்பம் பல தலைமுறைகளாகவே கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தனர். இவர் குடும்பத்தில் நான்கு பிள்ளைகளுள் கடைசியாகப் பிறந்தவர். இவரது பாட்டன், தலைநகரில் இருந்த இம்பீரியல் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். இவரது தந்தையார் ஒரு பழமைவாத கன்பூசியன். இவர் அக்காலத்தில் சீனாவைப் பீடித்திருந்த அரசியல் குழப்பங்களில் இருந்து தப்புவதற்காகத் தன் பதவியை உதறிவிட்டுத் தனிமையை நாடிச் சென்றுவிட்டார். மரபுவழிக் கதைகளின்படி, சுவான்சாங், இளம் வயதிலேயே மிகுந்த புத்திசாலியாகவும், ஊக்கம் உள்ளவராகவும் இருந்தார். இவரும், இவரது உடன் பிறந்தோரும், தமது தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடமே கற்றனர். மரபுசார் கன்பூசியனியத்தின் பல்வேறு நூல்களை அவர்கள் அவரிடமிருந்து கற்றனர்.

இவரது உறவினர்கள், பெரும்பாலும் கன்பூசிய மதம் சார்ந்தவர்களாகவே இருந்தாலும், இவரது ஒரு தமையனைப் பின்பற்றி பௌத்தத் துறவியாக வரும் ஆசை அவருக்கு இளம் வயதிலேயே ஏற்பட்டது. பொ.ஊ. 611 ஆம் ஆண்டில் தந்தையார் இறந்ததும், இவர் தனது மூத்த தமையனுடன், லுவோயாங்கில் இருந்த ஜிங்டு துறவிகள் மடத்தில் தங்கியிருந்தார். இம்மடத்தை சுயி அரச மரபினர் ஆதரித்து வந்தனர். இக்காலத்தில் சுவான்சாங் தேரவாத பௌத்தம், மகாயான பௌத்தம் ஆகிய இரண்டையுமே கற்றறிந்தார். எனினும், மகாயான பௌத்தத்தையே அவர் விரும்பினார்.

பொ.ஊ. 618 ஆம் ஆண்டில் சுயி மரபின் ஆட்சி வீழ்ச்சியடைந்ததும், சகோதரர்கள் இருவரும் தாங் அரசின் தலைநகராக அறிவிக்கப்பட்டிருந்த சாங்கான் என்னும் இடத்துக்குத் தப்பிச் சென்றனர். பின்னர் அங்கிருந்து தெற்குப் புறமாக சிச்சுவானில் உள்ள, செங்டுவை அடைந்தனர். அங்கே கொங் ஹுயி என்னும் துறவிமடத்தில் தங்கியிருந்து அபிதர்மகோசம் முதலிய நூல்களைப் படித்தனர். இவருக்குப் 13 மூன்று வயதாக இருந்தபோது புத்த துறவியாகும்படி கேட்கப்பட்டார். எனினும் இவரது அறிவுத் திறன் காரணமாக மடத்தலைவர் இவருக்கு விதிவிலக்கு அளித்தார்.

தனது 20 ஆவது வயதில் இவர் ஒரு முழுமையான புத்த துறவி ஆனார். அக்காலத்தில் சீனாவில் இருந்த பௌத்த நூல்களில் இருந்த பெரும் தொகையான முரண்பாடுகள், அவரை இந்தியாவுக்குச் சென்று, புத்த சமயத்தின் பிறப்பிடத்திலேயே கல்வி கற்கத் தூண்டின. இவர் தனது தமையனைப் பிரிந்து, பிறமொழிகளைப் பயிலவும், புத்த சமயம் பற்றி மேலும் அறிந்து கொள்ளவுமாக, செங்கானுக்குத் திரும்பினார். பொ.ஊ. 626 ஆம் ஆண்டில் சமஸ்கிருதம் கற்கத் தொடங்கினார். இக்காலத்தில் பௌத்ததின் யோகாசாரப் பிரிவிலும் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

பயணம்[தொகு]

பொ.ஊ. 629 ஆம் ஆண்டில், இவர் கண்ட கனவு ஒன்றினால் இவர் இந்தியாவுக்குச் செல்ல முடிவு செய்தார். அந்நேரம் தாங் பேரரசுக்கும், கிழக்குத் துருக்கியரான, கோக்துருக்கியருக்கும் போர் மூண்டது. பேரரசன் தாங் தைசோங் வெளிநாட்டும் பயணங்களைத் தடை செய்தான். சுவான்சாங் சில பௌத்த காவலர்களின் உதவியோடு கான்சு, கிங்காய் மாகாணம் ஆகிய இடங்களூடாகப் பேரரசை விட்டு வெளியேறினார். பின்னர் கோபி பாலைவனத்தின் ஊடாகப் பயணம் செய்து குமுல் என்னும் இடத்தை அடைந்த அவர் அங்கிருந்து மேற்கு நோக்கிச் சென்று துர்பான் என்னும் இடத்தை பொ.ஊ. 630 ஆம் ஆண்டில் அடைந்தார். இங்கே ஒரு புத்த சமயத்தவனான துர்பானின் அரசனைச் சந்தித்த சுவான்சாங், அவனிடமிருந்து அறிமுகக் கடிதங்களையும், பயணத்துக்கான பொருளும் பெற்றுக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

மேற்கு நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்த அவர் எதிர்ப்பட்ட கொள்ளையரிடம் இருந்து தப்பி யாங்கியை அடைந்தார். இங்கிருந்து, குச்சாப் பகுதியில் உள்ள பல தேரவாதத் துறவி மடங்களுக்குச் சென்றார். தொடர்ந்தும் மேற்குப் புறமாகச் சென்று அக்சு என்னும் இடத்தைக் கடந்தபின் வடமேற்கில் திரும்பி தியன் சானின் பெடல் கணவாய் வழியாக இன்றைய கிர்கிஸ்தானுக்குள் நுழைந்தார்.

இந்தியாவில்[தொகு]

கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்த யுவான் சுவாங் காஷ்மீரம், பாடலி புத்திரம் முதலான முக்கிய பௌத்தத் தலங்களுக்குச் சென்று புத்த மதம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். நாளந்தா பல்கலைக் கழகத்திலும் தங்கிப் பயின்றுள்ளார். பின்னர் அவர் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் இருந்த பௌத்தப் பல்கலைக் கழகத்திற்கும் வந்துள்ளார்.[2]

பார்த்திபன் கனவில்[தொகு]

பிரபல தமிழ்ப் புதினமான பார்த்திபன் கனவில் சீனப்பயணியாக சுவான் சாங் காட்டப்பட்டுள்ளார். பல்லவ மன்னனான நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிபுரத்தை இந்த சீனப் பயணி தரிசித்ததாக பார்த்திபன் கனவு புதினம் கூறுகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. சீன யாத்திரிகர் யுவான் சுவாங்
  2. எஸ், ராமகிருஷ்ணன் (2013). மறைக்கப்பட்ட இந்தியா. பக். 18-19, கல்விக்காக நூறு கிராமங்கள்: விகடன் பிரசுரம்.{{cite book}}: CS1 maint: location (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவான்சாங்&oldid=3859786" இலிருந்து மீள்விக்கப்பட்டது