பூட்டானின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
View of தாஷிகோ டிசோங், திம்பு. நகரத்தின் வடக்கு மூலையிலுள்ள 17ஆம்-நூற்றாண்டு கோட்டை-புத்த விகாரம் பூட்டான் அரசின் இருக்கையாக 1952 முதல் விளங்குகிறது.

பூட்டானின் வரலாறு துவக்கத்தில் தொன்மவியலை அடிப்படையாகக் கொண்டு தெளிவில்லாது உள்ளது. இங்குள்ள சில கட்டமைப்புக்களைக் கொண்டு இங்கு கி.பி 2000ங்களிலேயே மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன. செவிவிழிக் காதைப்படி இதனை கூச் பிகாரின் அரசர் சங்கல்திப் கி.பி ஏழாம் நூற்றாண்டுகளில் ஆண்டார்.[1] ஆனால் இங்கு 9ஆம் நூற்றாண்டில் திபெத்திய பௌத்தம் அறிமுகமானபிறகே வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கின்றன. அந்த நூற்றாண்டில் திபெத்தில் நடந்த கொந்தளிப்புகளால் துரத்தப்பட்ட பல துறவிகள் பூட்டானுக்கு வந்து குடியேறினர். 12ஆம் நூற்றாண்டில் துருக்பா காக்யூபா பள்ளி நிறுவப்பட்டது. இது திபெத்திய காக்யூபா பள்ளியின் கிளையாகும். இன்றுவரை இது பூட்டானின் பௌத்த சமயத்தில் முதன்மை இடம் பெற்றுள்ளுள்ளது. நாட்டின் அரசியல் வரலாறு இந்த சமய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. நாட்டில் உள்ள பல பௌத்த பள்ளிகள் மற்றும் விகாரங்களுக்கிடையே இருந்த தொடர்பாடலே அரசியலை முன்னிறுத்தியது.[2]

கீழ்படியாத நாடு[தொகு]

தங்கள் நாட்டு வரலாற்றில் முழுமையும் iசுதந்திரமாகவே இருந்த ஒருசில நாடுகளில் பூட்டானும் ஒன்று. இந்நாட்டை எவரும் வென்றதில்லை, ஆக்கிரமித்தது இல்லை, அல்லது வெளி அதிகாரங்கள் ஆட்சி செலுத்தியதுமில்லை. பூட்டான் 7ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டு வரை காமரூப பேரரசு அல்லது திபெத்தியப் பேரரசு கீழ் இருந்ததாக யூகங்கள் இருந்தாலும் இதற்கான உறுதியான சான்றுகள் இல்லை. வரலாற்றுப் பதிவுகள் தெளிவாக கிடைக்கும் காலகட்டத்தில் பூட்டான் தொடர்ந்தும் வெற்றிகரமாகவும் தனது கோன்மையைக் காப்பாற்றி வந்துள்ளது. [3]

பூட்டான் ஒருங்கிணைப்பு[தொகு]

1616இல் மேற்கு திபெத்திலிருந்து வந்த லாமா சப்துருங் ரின்பொச்சே என அறியப்பட்ட சப்துருங் இங்கவனாக் நாம்கியால் மூன்றுமுறை திபெத்திய தாக்குதல்களை முறியடித்தார். சண்டையிட்டு வந்த பௌத்தப் பள்ளிகளை அடக்கி, டிசா யிக் எனப்படுகின்ற சிக்கலான, முழுமையான சட்ட நெறியை உருவாக்கி தம்மை அரசராக வரித்துக்கொண்ட இவரே பூட்டானின் ஒருங்கிணைப்பிற்கு வழிவகுத்தார். சமய நிர்வாகத்தையும் நாட்டு நிர்வாகத்தையும் இவரே தலைமையேற்று நடத்தினார். இவரது மறைவிற்குப் பின்னர் அடுத்த 200 ஆண்டுகளில் உட்பூசல்களாலும் உள்நாட்டுச் சண்டைகளாலும் சப்துருங்கின் அதிகாரம் குறைந்தது. 1885இல் உக்யென் வாங்ச்சுக் மீண்டும் அதிகாரத்தை மையப்படுத்தி துணைக்கண்டத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த பிரித்தானியர்களுடன் நெருங்கிய நட்புடன் இருந்தார்.[2]

இருபதாம் நூற்றாண்டில்[தொகு]

1907இல் உக்யென் வாங்ச்சுக் பூட்டானின் பாரம்பரிய அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திசம்பர் 17, 1907இல் முடிசூட்டிக் கொண்டார். நாட்டுத் தலைவராக டிரக் கியால்ப்போ (கடல்நாக அரசர்) என அழைக்கப்பட்டார். 1910இல் அரசர் யுக்யென் பிரித்தானியருடன் புனாக்கா உடன்படிக்கை என்ற உடன்பாடு கண்டார்; இதன்படி பிரித்தானிய இந்தியா பூட்டானின் உள்விவகாரங்களில் எவ்விதத் தலையீடும் செய்யாது என உறுதி செய்யப்பட்டது, ஆனால் பூட்டான் தனது வெளிவிவகாரங்களில் பிரித்தானியரின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும். 1926இல் யுக்யென் இறந்தபோது அவரது மகன் ஜிக்மே வாங்சுக் பதவியேற்றார். 1947இல் இந்தியா விடுதலையுற்றபின் புதிய இந்திய அரசும் பூட்டானை சுதந்திரமான நாடாக அங்கீகரித்தது. 1949இல் இந்தியாவுடன் பூட்டான் அமைதியும் நட்புறவும் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டது. புனாக்கா உடன்பாட்டைப் போலவே இதிலும் இந்தியா பூட்டானின் உள்விவகாரங்களில் தலையிடாதென்றும் ஆனால் அதன் வெளிநாட்டுக் கொள்கை இந்தியாவின் பரிந்துரைப்படி இருக்குமென்றும் ஏற்கப்பட்டது. 1952இல் அவரது மகன் ஜிக்மே டோர்ஜி வாங்ச்சுக் பதவியேற்றார். இவரது ஆட்சியில் பூட்டான் மெதுவாக தனது தனிமையிலிருந்து வெளிவந்து திட்டமிட்ட வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டது. பூட்டான் தேசிய சட்டமன்றம், பூட்டானிய அரசப் படை, அரச நீதிமன்றம் ஆகியன நிறுவப்பட்டன. புதிய சட்டமுறை செயலாக்கப்பட்டது. [2] 1971இல் பூட்டான் ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினரானது.

நவீனமயமாக்கல்[தொகு]

1972இல் ஜிக்மே சிங்கே வாங்சுக் தமது 16ஆம் அகவையில் அரியணை ஏறினார்.[4] நவீனக் கல்விமுறை, அரசதிகாரத்தைப் பரவலாக்கல், நீர் மின் ஆற்றல் திட்டங்கள், சுற்றுலாத்துறை மேம்பாடு, நாட்டுப்புற வளர்ச்சி போன்றவற்றில் நாட்டம் செலுத்தினார். இவரது முன்னோக்கு வளர்ச்சிக் கருத்தியலான மொத்த தேசிய மகிழ்ச்சி எதிர் மொத்த தேசிய உற்பத்தி உலகளவில் மிகவும் அறியப்பட்ட ஒன்றாகும். இக்கருத்தியல் வளர்ச்சிக்குப் பல பரிமாணங்கள் உள்ளதென்பதையும் பொருளியல் இலக்குகள் மட்டுமே போதுமானவை அல்ல என்பதையும் அங்கீகரிக்கிறது. மக்களாட்சி முறைக்கு பூட்டான் தயாராகி விட்டதை உணர்ந்து திசம்பர் 2006இல் தமது அதிகாரத்தைத் தாமே துறந்தார். அவரது பதவி துறப்பிற்குப் பிறகு அவரது மகன், ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக், அரசரானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fraser, Neil; Bhattacharya, Anima; Bhattacharya, Bimalendu (2001). Geography of a Himalayan Kingdom: Bhutan. Concept Publishing. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8170228875. https://books.google.com/books?id=OzLsd5nvzGwC&q=sangaldip#v=snippet&q=sangaldip&f=false. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Background Note: Bhutan". U.S. Department of State (March 2008).
  3. Rose, Leo E. (1977). The Politics of Bhutan. Ithaca: Cornell University Press. பக். 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8014-0909-8. https://archive.org/details/politicsofbhutan00rose. "[T]here can be no doubt that since at least the tenth century no external power has controlled Bhutan, although there have been periods when various of its neighbors have been able to exert a strong cultural and/or political influence there." 
  4. "Who is Jigme Singye Wangchuck? Everything You Need to Know" (in en-US). http://www.thefamouspeople.com/profiles/jigme-singye-wangchuck-7529.php. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டானின்_வரலாறு&oldid=3582901" இலிருந்து மீள்விக்கப்பட்டது