வீரன் சுந்தரலிங்கம்
மாவீரன் சுந்தரலிங்ககுடும்பனார் தமிழ் நாடு, தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரி என்னும் ஊரில் காலாடி என்ற கட்டக் கருப்பணனுக்கும், முத்திருளி அம்மாளுக்கும் மகனாக பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.நேர்மை, வீரம், புத்திகூர்மை ஆகியவற்றை ஒருங்கே பெற்றவர்.
கும்பினி (ஆங்கிலேயருக்கு) எதிராக நடந்த போரில் வெள்ளையன், கந்தன் , முத்தன் , கட்டன கருப்பணன் போன்றோர்களுடன் பங்கு பெற்று இறந்தவர். தமிழக அரசு இவர் பிறந்த ஊரில் நினைவு சின்னமும், அழகு வளையமும் அமைத்துள்ளது.[1].
மேலும் நினைவாக முதுகுளத்தூரில் இவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது.1997இல் இவரது நினைவாக ஒரு போக்குவரத்துக் கழகத்துக்கு தமிழக அரசு பெயர் சூட்டியது. பின்னர் அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகத்திற்கும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எனப் பொதுப்பெயரிடப்பட்டது.
வரலாறு
[தொகு]வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு பல ஆண்டுகள் கழிந்து அவருடன் போரில் பங்கு பெற்றவர்களை பற்றி நாட்டுபுற பாடல்களும், கூத்துகளும் இயற்றப்பட்டன. வானமாமலை இப்பகுதியில் வழங்கப்பட்ட நாட்டு புற பாடல்களை தொகுத்துள்ளார். இதனின் ஊடாகவே இப்போரில் பங்கு பெற்ற சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை, கட்டன கருப்பணன் போன்றவர்களை அறிய முடிகிறது.
தற்கொலைப் படை தாக்குதல்
[தொகு]தூத்துக்குடி மாவட்டம் - பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கவர்னகிரி. 1770 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் காலாடி என்ற கட்டக் கருப்பணனுக்கும் முத்திருளி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது முழுப்பெயர் கட்டக் கருப்பண்ணன் சுந்தரலிங்கம் என்பதாகும். தனது ஊரில் உள்ள கண்மாயை (குளம்) பக்கத்து பாளையங்காரர்கள் மறிந்து கட்டும்பொழுது ஏற்படும் சண்டையில், மிக திறமையாக போரிடுவதால் அம்முயற்சி தடுக்கப்படுகிறது. இப்போரை அறிந்த கட்டபொம்மன், அவரது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தனது ஒற்றர் படைக்குத் தளபதியாக்கினார். தனது வீரத்தாலும் மதி நுட்பத்தாலும் சீக்கிரமே கட்டபொம்மனின் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தார் சுந்தரலிங்கம்.
சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.
கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தார். அந்தச் சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது தனது வாளால் பல வெள்ளைச் சிப்பாய்களை வீழ்த்தினார். இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க வெள்ளையர்கள் 1799ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் வெள்ளையர்களின் படை குவிந்திருந்தது.
1799 செப்டம்பர் 8ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வேடமணிந்து, வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனார். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள். அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.
வெண்கலச் சிலை
[தொகு]தளபதி சுந்தரலிங்கம் அவர்களின் நினைவாக பிப்ரவரி 23, 2014 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – எட்டயபுரம் சாலை சந்திப்பில் ஏழு அடி உயர வெண்கலச் சிலை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-07. பார்க்கப்பட்ட நாள் 2012-12-23.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.tndipr.gov.in/memorials.aspx பரணிடப்பட்டது 2013-03-07 at the வந்தவழி இயந்திரம்
- கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் வெண்கல சிலை திறப்பு". தினத் தந்தி (பிப்ரவரி 24, 2014). பார்த்த நாள் பிப்ரவரி 26, 2014
- நாட்டுப்புற பாடல்கள் தொகுப்பு -வானமாமலை
- பாஞ்சலகுறிஞ்சி படைத்தளபதி சுந்தரலிங்க தேவேந்திரர்- தமிழவேள்
- கட்டபொம்மனின் படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்கம்
- விக்கிமேப்பியாவில் கவர்னகிரி அமைவிடம்