உள்ளடக்கத்துக்குச் செல்

நீல் சிலை சத்தியாகிரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீல் சிலை சத்தியாகிரகம் அல்லது நீலன் சிலை சத்தியாகிரகம் என்பது இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாக பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற ஒரு அறவழிப் போராட்டம். சென்னை நகரில் மவுண்ட் சாலையில் (அண்ணா சாலை) அமைந்திருந்த கர்னல். ஜேம்ஸ் நீலின் சிலையை அகற்ற 1927 இல் இப்போராட்டம் நடத்தப்பட்டது.[1][2][3][4]

மெட்ராஸ் ஃபுசிலியர்ஸ் ரெஜிமண்ட் படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் நீல் 1857 சிப்பாய் கலகத்தை அடக்கியதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர். லக்னௌ முற்றுகையின் போது கொல்லப்பட்ட நீலை இந்தியர்கள் வெறுத்தனர். அலகாபாத்தில் அவர் நிகழ்த்திய வன்செயல்களுக்காக அவரை “அலகாபாத்தின் கசாப்புக்காரன்” என்று அழைத்தனர். பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு நீல் போற்றத்தக்க ஒரு படை வீரராக இருந்தார். எனவே சென்னையின் மவுண்ட் சாலையில் அவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டது. 1927 இல் இந்திய விடுதலை இயக்கம் சென்னை மாகாணத்தில் சூடு பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய தேசியவாதிகள் அச்சிலையினை அகற்ற முடிவு செய்தனர்.

சென்னை மகாஜன சபையும், இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாகாணக் குழுவும் நீல் சிலையை அகற்ற வேண்டி தீர்மானங்கள் இயற்றின. பின் அதற்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. திருநெல்வேலியைச் சேர்ந்த எஸ். என். சோமையாஜுலு இதற்கு தலைமை வகித்தார். மாகாணம் முழுவதும் இருந்து வந்த போராட்டக்காரர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு சில வாரங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனைகள் வழங்கப்பட்டன. சோமையாஜுலு, டி. என். தீர்த்தகிரி முதலியார், மற்றும் சாமிநாத முதலியார் போன்ற முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டபின்னர் செப்டம்பர் 1927 இல் காமராஜர் இப்போராட்டத்துக்கு தலைமை ஏற்றார். அச்சமயம் சென்னை வந்திருந்த மகாத்மா காந்தியும் போராட்டத்திற்கு தன் ஆதரவைத் தெரிவித்தார். சிலை அகற்றலுக்கு ஆதரவாக சென்னை சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. ஆனால் போராட்டம் விரைவில் வலுவிழந்து அடுத்து நிகழவிருந்த சைமன் குழு புறக்கணிப்புப் போராட்டத்திற்கு இடம் கொடுக்கும் வகையில் கைவிடப்பட்டது. சிலை மவுண்ட் சாலையில் பல ஆண்டுகள் தொடர்ந்து நீடித்தது. பின் சில ஆண்டுகள் ரிப்பன் கட்டிட வளாகத்தில் வைக்கப்பட்டது.

இந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்டு 1937 இல் நடந்த தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்று சி. ராஜகோபாலச்சாரி சென்னை மாகாண முதல்வரானார். அவரது ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் சிலையை அகற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வரான ராஜகோபாலச்சாரி சிலையை அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைக்க உத்தரவிட்டார். இன்று வரை நீலின் சிலை சென்னை அருங்காட்சியகத்தின் மானுடவியல் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Venkatesh, M. R. "The ‘Butcher of Allahabad’ lies in a museum attic". டெக்கன் ஹெரால்டு. http://www.deccanherald.com/content/99637/butcher-allahabad-lies-museum-attic.html. பார்த்த நாள்: 6 October 2011. 
  2. The Political Career of K. Kamaraj. Concept Publishing Company. p. 31.
  3. Iyengar, A. S (2001). [Role of press and Indian freedom struggle: all through the Gandhian era Role of press and Indian freedom struggle: all through the Gandhian era]. APH Publishing. p. 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176482561. {{cite book}}: Check |url= value (help)
  4. "The Impact Of The 1857 Revolt In Tamilnadu". People's Democracy. இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்). Archived from the original on 12 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 October 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_சிலை_சத்தியாகிரகம்&oldid=3560895" இலிருந்து மீள்விக்கப்பட்டது