இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
| இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) Communist Party of India (Marxist) | |
|---|---|
| भारतीय कम्युनिस्ट पार्टी | |
| மக்களவைத் தலைவர் | கே.ராதாகிருஷ்ணன் |
| தொடக்கம் | 1964 |
| தலைமையகம் | புதுதில்லி,இந்தியா |
| மாணவர் அமைப்பு | இந்திய மாணவர் சங்கம் |
| இளைஞர் அமைப்பு | இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் |
| பெண்கள் அமைப்பு | அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் |
| தொழிலாளர் அமைப்பு | CITU, (AIAWU) |
| விவசாயிகள் அமைப்பு | A.I.K.S |
| கொள்கை | கம்யூனிசம் மார்க்சியம்-லெனினியம் |
| அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி |
| இ.தே.ஆ நிலை | அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சி |
| கூட்டணி | இடது முன்னணி |
| மக்களவை உறுப்பினர்கள் எண்., | 04 / 545 |
| மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 03 / 245 |
| சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., () | 79 / 4,036 |
| இணையதளம் | |
| cpim | |
| இந்தியா அரசியல் | |
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (English : Communist Party of India (Marxist)) இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் கட்சி ஆகும். இக்கட்சி கேரளம், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது. இது இடது பொதுவுடைமைக் கட்சி என்றும் சி.பி.எம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இக்கட்சியின் தலைமையிலான இடது சாரிக் கட்சிகளின் கூட்டணி கேரள மாநிலத்தி்ல் ஆட்சி புரிகின்றது. இக் கட்சி முதலாளித்துவம், பேரரசுவாதம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்துவருகிறது. 2025 ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெற்ற 24-வது அகில இந்திய மாநாட்டில் (24th Party Congress) முக்கிய மாற்றமாக, செப்டம்பர் 2024-ல் மறைந்த சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்குப் பிறகு, எம். ஏ. பேபி புதிய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்பொறுப்பிற்கு வரும் ஆறாவது நபர் இவராவார்.
வெளியிடுகள்
[தொகு]People's Democracy கணசக்தி மார்க்சிஸ்ட் தீக்கதிர் தேசாபிமானி பிரஜாசக்தி செம்மலர் Daily desherkatha
வரலாறு
[தொகு]பிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சியின் முதல் கிளை
[தொகு]1920 அக்டோபர் 17 அன்று, சோவியத் யூனியனின் துர்க்கிஸ்தான் குடியரசின் தலைநகராக அப்போதிருந்த தாஷ்கண்ட் நகரில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உதயமானதை அறிவிப்பதற்காக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எம். என். ராய், எவ்லின் டிரெண்ட்-ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிட்டிங்கோவ், முகமது அலி, முகமது சஃபீக் மற்றும் எம்பிபிடி ஆச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டார்கள். கட்சியின் செயலாளராக முகமது சஃபீக் தேர்வு செய்யப்பட்டார்.[2]
பங்கேற்றவர்களின் விவரம்
[தொகு]| உறுப்பினர்கள் | சிறப்பம்சம் |
|---|---|
| எம். என். ராய் | 1920இல் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின்
இரண்டாவது காங்கிரசில் மெக்சிகன் பொதுவுடைமைக் கட்சியின் பிரதிநிதியாகப் பங்கேற்றவர் |
| எவ்லின் | அமெரிக்கக் பொதுவுடைமையாளரும் எம். என்.ராயின் மனைவியுமாவார் |
| ரோசா பிட்டிங்கோவ் | ரஷ்யக் பொதுவுடைமையாளர் , அபானி முகர்ஜியைத் திருமணம் செய்திருந்தார். |
சதி வழக்குகள்
[தொகு]1934இல், மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அகில இந்திய கட்சியாக செயல்படத்தொடங்கியது.[3] இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிளவுபடாத இந்தியப் பொதுவுடமைக் கட்சி நல்ல எழுச்சியைக் கண்டதுடன், தேபாகா, புன்னப்புரா வயலார், வடக்கு மலபார், வார்லி ஆதிவாசிகள், திரிபுரா பழங்குடி இன மக்கள் எழுச்சி, தெலுங்கானா உட்பட பல இடங்களில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தியது, இருப்பினும், அது விரைவில் நாடாளுமன்ற அரசியலில் பங்குபெற்றது .
உருவாக்கம்
[தொகு]1950 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொது செயலாளர் மற்றும் கட்சியின் உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்கு மிகுந்தவருமான பி.டி. ரணதேவ், இடதுசாரி புதுமுயற்சி வேட்டலுக்காக படியிறக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் அரசு, சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமான உறவு மற்றும் கூட்டணியையும் கொண்டது. இதனால் சோவியத் அரசாங்கம் இந்தியப் பொதுவுடைமை கட்சியினர் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என விரும்பியது. இருப்பினும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பெரும்பகுதியினர் இந்தியா இன்னும் அரை-நிலபிரபுத்துவ நாடாக விளங்குவதாகவும், சோவியத்தின் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளுக்காக வர்க்க போராட்டத்தை கிடப்பில் போடமுடியாது எனவும் வாதிட்டனர். மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் போட்டிகளுக்கு எதிராக பகைமையுணர்வைக் காட்டியது. 1957இல் இந்தியாவின் ஒரே காங்கிரஸ் அல்லாத மாநில அரசான இ. எம். எஸ். நம்பூதிரிபாட் அமைச்சரவையை மத்திய அரசு தலையிட்டுக் கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.
இதே வேளையில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குமான உறவு கசந்தது. 1960களின் ஆரம்பத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர பாதையில் இருந்தும், மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளில் இருந்தும் விலகுவதாக குற்றம்சாட்டியது.
மார்க்சிஸ்டு கட்சி நிறுவுதல்
[தொகு]இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) - சிபிஎம் உருவானதற்கான முக்கியமான காரணமாக இந்தியப் பொதுவுடமைக் இயக்கத்தில் நிலவிய ஆழமான சித்தாந்த மோதல்களின் வெளிப்பாடாகும். 1964-ஆம் ஆண்டு நிலவிய மத்தியவாத மற்றும் திரிபுவாதப் போக்குகளுக்கு எதிராகவும், குறிப்பாக இந்திய ஆளும் வர்க்கமான காங்கிரஸை அணுகும் முறையில் ஏற்பட்ட முரண்பாட்டினாலும் இந்தப் பிளவு ஏற்பட்டது. இந்திய முதலாளித்துவ வர்க்கம் முற்போக்கானது என்றும், அதனுடன் இணைந்து 'தேசிய ஜனநாயக முன்னணி' அமைக்க வேண்டும் என்ற இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (CPI) சமரச நிலைப்பாட்டை இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர். மாறாக, இந்திய ஆளும் வர்க்கம் என்பது ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்துள்ள 'நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவக் கூட்டு' என்பதே இவர்களின் நிலைப்பாடாக இருந்தது. சர்வதேச அளவில் சோவியத் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே நிலவிய தத்துவ மோதல்களும், மார்க்சியக் கொள்கைகளை இந்தியச் சூழலுக்கு ஏற்பச் சுதந்திரமாகச் செயல்படுத்த வேண்டிய அவசியமும் 1964-இல் 32 தலைவர்கள் புதிய கட்சியைத் தோற்றுவிக்கக் காரணமாகின.[4]
1964ம் ஆண்டு ஏப்ரல் 11ம் நாள் நடந்த சி.பி.ஐ இன் தேசிய மாநாட்டில் இருந்து, எஸ். ஏ. டாங்கே மற்றும் அவரது ஆதரவு வலதுசாரிகளின், காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராகவும் மற்றும் பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்தும் 32 மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இடதுசாரிகளான அந்த 32 மன்ற உறுப்பினர்களும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெனாலியில் ஜூலை 7 முதல் 11 வரை ஒரு மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டில் உட்கட்சி பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தனர். இந்த மாநாட்டில் 1 இலட்சம் பொதுவுடைமைவாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 146 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் சிபிஐயின் 7ஆவது (கட்சி காங்கிரஸ்) தேசிய மாநாட்டை கல்கத்தாவில் அதே வருடத்தில் கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.
எம். பசவபுன்னையா தயாரித்த வரைவுத் திட்டம் வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிப்பதாகப் பரிமள் தாஸ் குப்தா, சாரு மஜும்தார் போன்ற தீவிர இடதுசாரிகள் விமர்சித்தனர். பல மாவட்டக் கலந்தாய்வுகளில் மாற்று வரைவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டதோடு, சோவியித் சீன ஆதரவு நிலைப்பாடு மற்றும் வர்க்க ஆய்வு குறித்துக் கடுமையான விவாதங்கள் நடைபெற்றன.
இறுதியாக, 1964 அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில், இக்குழுவினர் தங்களை "இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)" என்று அறிவித்துக் கொண்டனர். பி. சுந்தரையா கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் சுமார் 60 சதவீத சிபிஐ உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 422 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தியப் பெரு முதலாளிகள் ஏகாதிபத்தியத்துடன் கொண்டுள்ள உறவை அம்பலப்படுத்திய இம்மாநாடு, கட்சிக்குத் தனித்துவமான கொள்கைத் திட்டத்தை வகுத்தது. மாநாட்டின் போது தீவிர இடதுசாரித் தலைவரான சௌரெண் பாசு, மாவோவின் உருவப்படம் குறித்து எழுப்பிய கேள்விக்குக் கிடைத்த பலத்த வரவேற்பு, கட்சிக்குள் நிலவிய தீவிரமான புரட்சிகர மனநிலையைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. இவ்வாறு இந்திய அரசியலில் ஒரு புதிய மற்றும் வலுவான இடதுசாரி சக்தியாக சிபிஎம் உருவெடுத்தது.[5].
கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் (Members of the Politburo) [6]
- பி. சுந்தரய்யா (பொதுச் செயலாளர்)
- பி. டி. ரணதிவே
- பிரமோத் தாஸ்குப்தா
- ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட்
- எம். பசவபுன்னையா
- ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்
- பி. ராமமூர்த்தி
- ஏ. கே. கோபாலன்.
- ஜோதி பாசு
கட்சி அமைப்பு
[தொகு]2004இல் நடந்த பாராளும்ன்றத் தேர்தலில் சிபிஎம் 5.66 சதவித வாக்குகளை பெற்றது. போட்டியிட்ட 69 இடங்களில் 42.31 சதவிதத்தை சராசரியாக பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சிபிஎம் வெளியில் இருந்து ஆதரித்தது. 2008 ஜூலை 9 இல் அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தின் காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது.[7] 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 16 உறுப்பினர்களைக் கட்சி கொண்டிருந்தது.2014 நாடாளுமன்றத் தேர்தலில் 9 உறுப்பினர்களைக் கட்சி கொண்டிருந்தது.2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3 உறுப்பினர்களைக் கட்சி கொண்டிருந்தது. தற்போது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 4 உறுப்பினர்களைக் கட்சி கொண்டிருக்கிறது.
சட்ட மன்ற உறுப்பினர்கள்
[தொகு](பீகார்)
(கேரளம்)
(ஒடிசா)
(காஷ்மீர்)
(திரிபுரா)
(அசாம்)
அமைப்பு
[தொகு]- அரசியல் தலைமைக் குழு
- மத்திய குழு
- மாநிலக் குழுக்கள்
- மாநிலச் செயற்குழுக்கள்
- மாவட்டக் குழுக்கள்
- மாவட்டச் செயற்குழுக்கள்
- இடைக் குழுக்கள்
- பகுதிக் குழுக்கள்
- கிளைகள்
22வது தேசிய மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட அரசியல் தலைமைக் குழு
[தொகு]
12 ஏப்ரல் 2018 ஐதராபாத்தில் நடந்த 22வது தேசிய மாநாட்டில் சிபிஎம் பொதுச் செயலாளராக சீத்தாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]
அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள்
[தொகு]| எண் | பெயர் | மாநிலம் |
|---|---|---|
| 1 | சீத்தாராம் யெச்சூரி (பொதுச் செயலாளர்) | மேற்கு வங்காளம் |
| 2 | பிரகாஷ் காரத் (முன்னாள் பொதுச் செயலாளர்) | மேற்கு வங்காளம் |
| 3 | எச்.ராமச்சந்திரன் பிள்ளை | கேரளம் |
| 4 | மாணிக் சர்க்கார் (முன்னாள் திரிபுரா முதலமைச்சர்) | திரிபுரா |
| 5 | பிணறாயி விஜயன் (கேரள முதலமைச்சர்) | கேரளம் |
| 6 | பிமன் போஸ் | மேற்கு வங்காளம் |
| 7 | பி. வி. ராகவுலு | ஆந்திர பிரதேசம் |
| 8 | பிருந்தா காரத் | மேற்கு வங்காளம் |
| 9 | கொடியேரி பாலகிருஷ்ணன் | கேரளம் |
| 10 | சுர்ஜியா காந்தா மிஸ்ரா | மேற்கு வங்காளம் |
| 11 | ம. அ. பேபி | கேரளம் |
| 12 | முகமது சலீம் | மேற்கு வங்காளம் |
| 13 | சுபாசினி அலி | உத்தரப் பிரதேசம் |
| 14 | கன்னன் மொல்லா | மேற்கு வங்காளம் |
| 15 | ஜி. ராமகிருஷ்ணன் | தமிழ்நாடு |
| 16 | தபன் குமார் சென் | மேற்கு வங்காளம் |
| 17 | நிலோட்பால் பாசு | மேற்கு வங்காளம் |
24வது தேசிய மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட அரசியல் தலைமைக் குழு
[தொகு]தற்போதைய சிபிஎம் பொதுச் செயலாளர் எம். ஏ. பேபி. இவர் ஏப்ரல் 2025 மதுரையில் நடந்த 24வது தேசிய மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டார்.[9]
அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள்
[தொகு]| எண் | பெயர் | மாநிலம் |
|---|---|---|
| 1 | எம். ஏ. பேபி (பொதுச் செயலாளர்) | கேரளம் |
| 2 | பிணறாயி விஜயன் (கேரள முதலமைச்சர்) | கேரளம் |
| 3 | பி. வி. ராகவுலு | ஆந்திர பிரதேசம் |
| 4 | தபன் சென் | மேற்கு வங்காளம் |
| 5 | நிலோட்பால் பாசு | மேற்கு வங்காளம் |
| 6 | ஸ்ரீதீப் பட்டாச்சார்யா | மேற்கு வங்காளம் |
| 7 | ஏ. விஜயராகவன் | கேரளம் |
| 8 | முகமது சலீம் | மேற்கு வங்காளம் |
| 9 | விஜூ கிருஷ்ணன் | கேரளம் |
| 10 | ஆர்.அருண்குமார் | டெல்லி |
| 11 | மரியம் தாவ்லே | மகாராஷ்டிரா |
| 12 | முகமது சலீம் | மேற்கு வங்காளம் |
| 13 | அசோக் தாவ்லே | மகாராஷ்டிரா |
| 14 | ராமச்சந்திர டோம் | மேற்கு வங்காளம் |
| 15 | க. பாலகிருஷ்ணன் | தமிழ்நாடு |
| 16 | எம்.வி.கோவிந்தன் | கேரளம் |
| 17 | ஜிதேந்திர சௌத்ரி | திரிபுரா |
| 18 | யு. வாசுகி | தமிழ்நாடு |
உறுப்பினர்கள்
[தொகு]2004 இன் நிலவரப்படி கட்சியில் 8,67,763 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.[10]
| மாநிலம் | 2001 | 2002 | 2003 | 2004 | வாக்காளர் எண்ணிக்கையில் உறுப்பினர் சதவிதம் |
|---|---|---|---|---|---|
| ஆந்திர பிரதேசம் | 40785 | 41879 | 45516 | 46742 | 0.0914 |
| அஸ்ஸாம் | 10480 | 11207 | 11122 | 10901 | 0.0726 |
| அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 172 | 140 | 124 | 90 | 0.0372 |
| பீகார் | 17672 | 17469 | 16924 | 17353 | 0.0343 |
| சத்தீஸ்கர் | 1211 | 1364 | 1079 | 1054 | 0.0077 |
| டெல்லி | 1162 | 1360 | 1417 | 1408 | 0.0161 |
| கோவா | 172 | 35 | 40 | 67 | 0.0071 |
| குஜராத் | 2799 | 3214 | 3383 | 3398 | 0.0101 |
| ஹரியானா | 1357 | 1478 | 1477 | 1608 | 0.0131 |
| ஹிமாச்சல் பிரதேசம் | 1005 | 1006 | 1014 | 1024 | 0.0245 |
| ஜம்மு காஷ்மீர் | 625 | 720 | 830 | 850 | 0.0133 |
| ஜார்கண்ட் | 2552 | 2819 | 3097 | 3292 | 0.0200 |
| கர்நாடகா | 6574 | 7216 | 6893 | 6492 | 0.0168 |
| கேரளா | 301562 | 313652 | 318969 | 316305 | 1.4973 |
| மத்திய பிரதேசம் | 2243 | 2862 | 2488 | 2320 | 0.0060 |
| மகராஷ்டிரா | 8545 | 9080 | 9796 | 10256 | 0.0163 |
| மணிப்பூர் | 340 | 330 | 270 | 300 | 0.0195 |
| ஓடிஸா | 3091 | 3425 | 3502 | 3658 | 0.0143 |
| பஞ்சாப் | 14328 | 11000 | 11000 | 10050 | 0.0586 |
| இராஜஸ்தான் | 2602 | 3200 | 3507 | 3120 | 0.0090 |
| சிக்கிம் | 200 | 180 | 65 | 75 | 0.0266 |
| தமிழ் நாடு | 86868 | 90777 | 91709 | 94343 | 0.1970 |
| திரிபுரா | 38737 | 41588 | 46277 | 51343 | 2.5954 |
| உத்தர்காண்ட் | 700 | 720 | 740 | 829 | 0.0149 |
| உத்தரப் பிரதேசம் | 5169 | 5541 | 5477 | 5877 | 0.0053 |
| மேற்கு வங்காளம் | 245026 | 262882 | 258682 | 274921 | 0.579 |
| மத்திய குழு உறுப்பினர்கள் | 96 | 95 | 95 | 87 | |
| மொத்தம் | 796073 | 835239 | 843896 | 867763 | 0.1292 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ All but one Left Front candidates lose security deposit in West Bengal
- ↑ இந்தியாவில் 100 ஆண்டுகளை கடந்த பொதுவுடைமைக் கட்சியின் வரலாறு
- ↑ ""Meerut - the trial"". Archived from the original on 2014-11-02. Retrieved 2014-11-02.
- ↑ [1]
- ↑ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சீனப் போரால் பிரிந்தது ஏன்?
- ↑ "முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் அடங்கிய புகைப்படம்". Archived from the original on 2013-12-22. Retrieved 2013-03-12.
- ↑ 9 July 2008 தேதியிட்ட தி ஹிந்து வின் கட்டுரை : ஜனாதிபதியை சந்தித்த இடதுசாரிகள் விலகல் கடிதத்தை கொடுத்தனர் பரணிடப்பட்டது 2008-07-13 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "New Central Committee Elected at the 22nd Congress". 22 April 2018. Archived from the original on 27 May 2018. Retrieved 27 May 2018.
- ↑ 10 name="cpim.org">
{{cite web}}: Empty citation (help) - ↑ உறுப்பினர் எண்ணிக்கை http://www.cpim.org/pd/2005/0403/04032005_membership.htm பரணிடப்பட்டது 2008-02-24 at the வந்தவழி இயந்திரம். வாக்காளர் எண்ணிக்கை http://www.eci.gov.in/SR_KeyHighLights/LS_2004/Vol_I_LS_2004.pdf பரணிடப்பட்டது 2008-02-27 at the வந்தவழி இயந்திரம். பாண்டிச்சேரி தமிழ்நாடாக கூட்டப்பட்டுள்ளது, சண்டிகார் பஞ்சாப்பாக கூட்டப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
[தொகு]- கட்சியின் திட்டம் தமிழில் பரணிடப்பட்டது 2021-02-26 at the வந்தவழி இயந்திரம், 1964, அக்டோபர் 31 - நவம்பர் 7 இல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது
- கட்சியின் திட்டம் ஆங்கிலத்தில்
- கட்சியின் அமைப்புச் சட்டம் தமிழில்
- கட்சியின் அமைப்புச் சட்டம் ஆங்கிலத்தில்
- மத்தியகுழு மற்றும் மாநிலக்குழுவின் முகவரிகள்
- தமிழ்நாடு மாநிலக்குழு பரணிடப்பட்டது 2021-04-11 at the வந்தவழி இயந்திரம்