இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இந்திய விடுதலைப் போராட்டம் பெரும்பாலும் வன்முறையற்ற அறிவழிப் போராட்டமாக இருந்தது. இருப்பினும் ஆயுதமேந்திய புரட்சி இயக்கங்கள் அதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தன. வன்முறையின் துணையுடன் பிரித்தானிய ஆட்சியை ஒழிக்க முயன்ற இவ்வியக்கங்கள் வங்காளம், பஞ்சாப், பீகார், மகாராட்டிரம், உத்தரப் பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் தீவிரமாக இயங்கி வந்தன. இந்தியாவுக்கு வெளியிலிருந்தும் சில புரட்சி இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. அனுசீலன் சமித்தி, (1902- வங்காளம்) யுகாந்தர் (1906- வங்காளம்), கதர் கட்சி (1913- கலிஃபோர்னியா), இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு (1924- பஞ்சாப்), இந்திய தேசிய ராணுவம் போன்றவை இத்தகைய புரட்சி இயக்கங்களில் குறிப்பிடத்தக்கவை.[1][2][3]
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானிய இந்தியாவில் மக்களிடையே தேசியவாத உணர்வுகள் பரவத்தொடங்கின. இந்திய தேசிய காங்கிரசு கட்சி இத்தேசிய எழுச்சிக்குத் தலைமை தாங்கியது. தொடக்கத்தில் காலனிய அரசிடம் முறையிட்டும், பேச்சுவார்த்தை நடத்தியும், ஆட்சியிலும் நிருவாகத்திலும் இந்தியர்களுக்கு உரிய பங்கைப் பெறுவதே காங்கிரசின் நோக்கமாக இருந்தது. நாளடைவில் காங்கிரசின் தலைமையிலான இயக்கம், இந்தியாவுக்கு தன்னாட்சியும் முழு விடுதலையும் கோரத் தொடங்கியது. இவ்வியக்கத்தினர் பெருமளவு அமைதியான போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கோரிக்கைகள் விடுத்தல், இதழ்களில் செய்தி வெளியிடல் போன்ற வன்முறையற்ற வழிகளில் போராடினர். அதே காலகட்டத்தில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் பிரித்தானியரை இந்தியாவில் இருந்து வெளியேற்றவும் சில புரட்சி இயக்கங்கள் முயன்றன. இறுதியில் வெற்றியும் பெற்றன.
அனுசீலசன் சமித்தி
[தொகு]அனுசீலன் சமித்தி (அனுஷீலன் சமித்தி, வங்காள மொழி: অনুশীলন সমিতি) இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் வங்காளத்தில் செயல்பட்ட ஒரு புரட்சி இயக்கம். 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் கிழக்கு இந்தியாவின் முக்கிய ஆயுதமேந்திய புரட்சி இயக்கமாக இருந்தது. வங்காளப் பிரிவினையால் வங்காளத்திலும் அதன் அருகிலிருந்த பகுதிகளிலும் ஆயுதப் போராட்டம் புகழ்பெற்றது. இவ்வியக்கமும் இதிலிருந்து பிரிந்த யுகாந்தர் அமைப்பும், புறநகர் உடற்பயிற்சி கழகங்கள் என்ற போர்வையில் பிரித்தானிய அரசுக்கு எதிராக ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தருவதே இதன் குறிக்கோள். ஆரம்ப காலத்தில் கொல்கத்தா, டாக்கா போன்ற நகர்புறங்களில் பரவிய இவ்வமைப்பு விரைவில் வங்காளத்தின் ஊர்ப்புறங்களிலும் வேரூன்றியது. 1902ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு பலமுறை பிளவுற்று, சில முறை புனரமைக்கப்பட்டது. வெடி குண்டு தயாரித்தல், பிரித்தானிய ஆட்சியாளர்களையும் அவர்களது இந்திய ஆதரவாளர்களையும் படுகொலை செய்தல், மக்களிடையே புரட்சிக் கருத்துகளைப் பரப்புதல், அரசு பணத்தைக் கொள்ளையடித்தல் போன்ற செயல்களில் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர்.
யுகாந்தர்
[தொகு]ஜுகாந்தர் அல்லது யுகாந்தர் (வங்காள மொழி:যুগান্তর) இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் வங்காளத்தில் செயல்பட்ட ஒரு புரட்சி இயக்கம். ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தருவதே இதன் குறிக்கோள். அனுசீலன் சமித்தி என்ற புரட்சி அமைப்பிலிருந்து பிரிந்து 1906ஆம் ஆண்டு உருவானது. அரவிந்தர், அவரது சகோதரர் பாரின் கோஷ், புபேந்திரநாத் தத்தா, ராஜா சுபோத் மாலிக் ஆகியோர் இதனைத் தொடங்கினர். இவ்வமைப்பும் அனுசீலன் சமித்தியும் புறநகர் உடற்பயிற்சி கழகங்கள் என்ற போர்வையில் பிரித்தானிய அரசுக்கு எதிராக ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அலிப்பூர் வெடிகுண்டு சதி வழக்கு, இந்து-ஜெர்மானிய சதி ஆகிய புரட்சி நடவடிக்கைகளில் யுகாந்தர் ஈடுபட்டது. இதன் பல உறுப்பினர்கள் காலனிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் இவ்வியக்கம் முடக்கப்பட்டு சிறு குழுக்களாகப் பிளவுண்டது.
இளம் இந்தியர் சங்கம்
[தொகு]வீர சாவர்க்கரால் நிறுவப்பட்ட இளம் இந்தியர் சங்க உறுப்பினரான மதன்லால் திங்கரா எனும் இளைஞர் 1 சூலை 1909 அன்று, இந்திய அரசின் செயலாளரின் அரசியல் உதவியாளரான லெப்டினண்ட் கர்னல் வில்லியம் கர்சன்-வில்லியை படுகொலை செய்தார். பின்னர் மதன்லால் திங்ரா கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் தூக்கிலிடப்பட்டார். நாசிக் மாவட்ட ஆட்சியரான எம். டி. ஜாக்சனை, இந்த சங்கத்தின் உறுப்பினரான அனந்த் இலக்குமணன் கன்ஹாரே என்பவரால் படுகொலை செய்யப்பட்டார்.[4][5]
ஜாக்சன் படுகொலை தொடர்பான விசாரணையில் அபிநவ பாரத் சங்கம் தொடர்பில் இருந்ததும், அதை வழிநடத்தியதில் சாவர்க்கர் சகோதரர்களின் பங்கும் தெரியவந்தது. விநாயக் சாவர்க்கர் 20 கைத்துப்பாக்கிகளை இலண்டனிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒன்று ஜாக்சன் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டது. ஜாக்சன் கொலையில் வீர சாவர்க்கர் மீது குற்றம் சாட்டப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தண்டனை விதிக்கப்பட்டது. சாவர்க்கர் 1910 இல் அந்தமானில் உள்ள சிற்றறைச் சிறையில் அடைக்கப்பட்டார்.[4]
கதர் கட்சி
[தொகு]கதர் இயக்கம் அல்லது கதர் கட்சி (Ghadar Party, தேவநாகரி: ग़दर पार्टी, நாட்டலீக்கு: غدر پارٹی, பஞ்சாபி: ਗ਼ਦਰ ਪਾਰਟੀ) அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வாழ்ந்த பஞ்சாபி இந்தியர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமாகும். இவ்வியக்கம் அமைதிப்பெருங்கடற்பகுதியில் பணியாற்றிய இந்தியர்களால் தொடங்கப்பட்டது. மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, சப்பான், ஆப்கானித்தான், செருமனி, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த இந்தியர்கள் அங்கிருந்தபடியே பிரித்தானியருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய நாட்டின் விடுதலைக்கு உதவிடும் நோக்கில் பல அமைப்புகளை உருவாக்கினர். அவற்றில் ஒன்று கதர் இயக்கமாகும். லாலா ஹர்தயாள், ராஷ் பிஹாரி போஸ் (இந்தியத் தேசப் படையை நிறுவியவர்), சசீந்திர சன்யால், கணேஷ் பிங்காலே, ஷோகன் சிங் வாக்னா, தோஹி கத்தார் சிங் ஆகியோர் இந்திய விடுதலைக்காக வெளியிலிருந்து உதவும் பொருட்டு இவ்வமைப்பைத் தொடங்கினர்.
கதர் இயக்கமும் ஆங்கிலேயரும்
செப்டெம்பர், 1914இல் 400 கதர் வீரர்களைச் சுமந்துகொண்டு கோம்காதா மாரு என்ற கப்பல் கொல்கத்தாத் துறைமுகம் வந்தது. அங்கு வெள்ளையப் படைகளுக்கும் கதர் வீரர்களுக்கும் இடையே கடும் போர் மூண்டது. இதில் கதர் வீரர்கள் வீரமரணம் எய்தினர். சிலரே தப்பித்தனர். இதனால் கதர் இயக்கம் சளைத்துவிடவில்லை. பெப்ரவரி 21, 1915ஆம் திகதி பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை துவக்குவதற்கு நாள் குறித்து அதற்கான மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஏராளமான நிதி திரட்டி ஆயுதங்களை வாங்கிக் குவித்த கதர் இயக்கம், தெற்காசிய நாடுகளின் படைகளில் இருந்த இந்தியப் படை வீரர்களையும் பிரித்தானிய அரசிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு தூண்டியது.
சதிவழக்குகள்
கதர் இயக்கத்தில் ஊடுருவியிருந்த பிரித்தானிய ஒற்றர்களால் இத்திட்டம் காலனிய அரசுக்குத் தெரிந்து விட்டது. அதன் மறைமுகத் திட்டங்களை கிர்பால் சிங் என்பவர் வெள்ளையர் அரசிடம் தெரிவித்தார். உடனடியாக முக்கியத் திட்டத்தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டதால் இக்கலகம் நிகழ்வது தவிர்க்கப்பட்டது. எனினும் ஆங்காங்கே கலகங்களும் புரட்சிகளும் மூண்டன. அவை காலனிய அரசால் அடக்கப்பட்டன. லாகூர் சதி வழக்கு, இந்து-ஜெர்மானிய சதி வழக்கு ஆகிய வழக்குகள் தொடரப்பட்டன. இதன் விளைவாக காலனிய அரசின் இந்தியக் கொள்கைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. முதலாம் உலகப் போரின் போது வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் செயல்பட்டு வந்த கதர் கட்சி ஒருங்கிணைக்கப்பட்ட ஆயுதப் புரட்சி மூலம் இந்து-ஜெர்மானிய சதி பிரித்தானிய அரசை வீழ்த்த முயன்று தோற்றது.
இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு
[தொகு]இந்துஸ்தான் சோசிலிசக் குடியரசு அமைப்பு (1928 வரை இந்துஸ்தான் குடியரசு அமைப்பு) பிரிட்டிஷாரை வெளியேற்றி இந்தியாவைச் சுதந்திர நாடாக்க ஆயுதமேந்திப் போராடிய ஒரு புரட்சி அமைப்பு. 1924ல் துவக்கப்பட்ட இவ்வமைப்பு 1930கள் வரை வன்முறை மற்றும் தீவிரவாத உத்திகளைக் கொண்டு பிரிட்டானிய ஆட்சியினை எதிர்த்து வந்தது. பகத் சிங், சுக்தேவ் தபார், ராஜ்குரு, சந்திரசேகர ஆசாத் ஆகியோர் இவ்வமைப்பின் முக்கிய உறுப்பினர்கள். ராம் பிரசாத் பிசுமில் இதன் முன்னோடி அமைப்பான இந்துசுத்தான் குடியரசு அமைப்பின் முக்கிய உறுப்பினர்.
தோற்றம்
கிழக்கு வங்காளத்தில் (பிரம்மபாரிய உட்பிரிவினைச் சேர்ந்த) போலா சாங் கிராமத்தில் 1924ல் நடந்த ஒரு கூட்டத்தில் இந்துஸ்தான் குடியரசு அமைப்பு (இ.கு.அ) உருவானது. அனுஷீலன் சமிதியின் கிளையமைப்பாக இது அமைந்தது. அக்கூட்டத்தில் பிரதூல் கங்கூலி, நரேந்திர மோகன் சென், சச்சிந்திர நாத் சன்யால் மூவரும் பங்கேற்றனர். ஐரியக் குடியரசுப் படையின் என்ற பெயரைப் போலிருக்க வேண்டுமென இவ்வமைப்புக்குப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. முன்னணித் தலைவரான சன்யால், தி ரெவலூஷனரி என்ற தலைப்பில் இப்புது இயக்கத்தின் கொள்கை விளக்க அறிக்கையைத் தயாரித்தார்.
குறிக்கோளும் கொள்கையும்
இந்துஸ்தான் குடியரசு அமைப்பின் குறிக்கோள், திட்டமிட்ட ஆயுதப் புரட்சியினால் இந்திய மாநிலங்களின் ஐக்கியக் குடியரசினை கூட்டாட்சி அடிப்படையில் நிறுவுவது. ஆயுதமேந்திப் போராடுவது, தீவிரவாதம், பதில் தாக்குதல் போன்றவை பிரித்தானிய அரசுக்கு எதிராக இவர்கள் கையாண்ட உத்திகள்.
இந்த அமைப்பின் கொள்கை விளக்கம்: “ அதிகாரபூர்வமான தீவிரவாதத்தினை எதிர்த் தீவிரவாதத்தால்தான் சந்திக்க வேண்டும். நாட்டின் எல்லாப் பக்கங்களிலும் முழுமையான உதவாக்கரைத் தன்மை பரவிக் கிடக்கிறது. தீவிரவாதந்தான் மக்களிடையே தேவையான எழுச்சியை ஏற்படுத்தப் பயனுள்ள வழியாகும்... சரியான தருணத்தில் மரண அடியை கொடுப்பதற்காகத் தான் இப்புரட்சி அமைப்பு தீவிரவாதப் பிரச்சாரத்தில் தற்சமயம் வேண்டுமென்றே கலந்து கொள்ளாமல் இருக்கிறது... தேவையான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் தீவிரவாதப் பிரச்சாரத்தை முழு வீச்சில் நடத்த இவ்வியக்கம் எந்தவொரு தயக்கமும் காட்டாது.
“ ரயில் மற்றும் ஏனைய போக்குவரத்துத் துறைகள், தொடர்புத் துறைகள், சுரங்கங்கள், பிற பெரிய அளவிலான தொழிற்சாலைகள்... அனைத்தும் தேசியமயமாக்கப் படவேண்டும்... ஒழுங்குபடுத்தப்படாத தனியார் வர்த்தக நிறுவனங்கள் ஒழிக்கப்பட்டு கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ”
அனைவருக்கும் வாக்குரிமை, அரசதிகாரத்தில் சட்டமன்றத்திற்கு மேலுயர்வு மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவை இந்த அமைப்பின் பிற குறிக்கோள்களாகக் கொள்கை விளக்க அறிக்கையில் தரப்பட்டிருந்தன.
தொடக்ககால செயற்பாடுகள்
1924லிருந்து 1925 வரை பகத் சிங், சந்திரசேகர ஆசாத், சுக்தேவ் தபார், ராம் பிரசாத் பிசுமில் போன்றவர்களின் சேர்வால் இ.கு.அ உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமானது. வெளியுலகிற்குத் தெரிந்த இதன் முதல் நடவடிக்கை ககோரி ரயில் கொள்ளை. ஆகஸ்ட் 9, 1925ல் இந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு கூட்டம் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடித்தது. ஆஷ்ஃப்க்குல்லா கான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோஷன் சிங், ராஜேந்திர லகிரி ஆகியோர் காகோரி சதி வழக்கில் தூக்கிலிடப்பட்டனர். சன்யால் மற்றும் ஜோகேஷ் சந்திர சட்டர்ஜிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ககோரி வழக்கின் முடிவினால் இ.கு.அ வின் தலைவர்களின் எண்ணிக்கைப் பெரிதும் குறைந்து அதன் நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. சதிகாரர்களில் ஆசாத் மற்றும் குந்தன் லால் குப்தா மட்டுமே தப்பினர். இக்காலகட்டத்தில் இ.கு.அ கான்பூர், லாகூர் மற்றும் வங்காளத்தைத் தலைமையிடமாகக் கொண்ட கோஷ்டிகளாகப் பிரிந்தது. 1927ல் ஜதிந்திரநாத் சன்யால், (சச்சிந்திரநாத்தின் சகோதரர்) ஃபனீந்திரநாத் கோஷ், வீரேந்திரநாத் பட்டாச்சார்ஜி போன்ற புதிய புரட்சியாளர்கள் தீவிர உறுப்பினர்களாயிருந்தனர். 1928ல் காசியில் நடந்த ராவ் பகதூர் ஜேஎன் பானர்ஜி கொலை முயற்சி நிகழ்ச்சியின் பின்னணியில் இருந்தவர் கோஷ். தியோகார் சதி வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் வீரேந்திரநாத் பட்டாச்சார்ஜி.
இந்துஸ்தான் சோசியலிசக் குடியரசு அமைப்பு
லாகூர் டிரிபியூன் நாளிதழின் முதல் பக்கம் -மார்ச் 25, 1931 செப்டம்பர் 1928ல் இகுஅ வின் லாகூர் பிரிவு (பகத் சிங், சுக் தேவ்), கான்பூர் பிரிவு (ஆசாத், குந்தன் லால் குப்தா) இரண்டும் ஃபனீந்திரநாத் தலைமையில் இயங்கிய வங்காளப் புரட்சிக் பிரிவுடன் இணைந்து இந்துஸ்தான் சோசியலிசக் குடியரசு அமைப்பு (இ.சோ.கு.அ) உருவானது. டெல்லியில் ஃபெரோஸ் ஷா கோட்லா திடலில் நடந்த கூட்டத்தில்தான் வெவ்வேறு பிரிவுகளை ஒருங்கிணக்கும் இந்தத் திட்டம் நிறைவேறியது. பகத் சிங் கட்சியின் இறுதியான குறிக்கோள் சோசியலிசமாக இருக்க வேண்டுமென்றும் கட்சியின் பெயர் அதனைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டுமென்றும் அறிவித்தார். ஆசாதுக்குப் தலைமைப் பொறுப்பும் பகத் சிங்கிற்குக் கருத்தியல் கொள்கைப் பொறுப்பும் தரப்பட்டது. வெடிகுண்டுத் தத்துவம் (தி ஃபிலாசஃபி ஆஃப் தி பாம்) என்ற தலைப்புடன் இ.சோ.கு.அ வின் கொள்கை விளக்கம் பகவதி சரன் வோராவால் தயாரிக்கப்பட்டது.
ஜே.பி. சாண்டர்சு படுகொலை
நவம்பர் 1928ல் காவல்துறையின் லத்தியடிக்குப் பலியான லாலா லஜபதி ராயின் மரணத்துக்குப் பழிவாங்க இ.சோ.கு.அ முடிவெடுத்து, லத்தியடிக்கு உத்தரவிட்ட லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளர், ஜே. ஏ. ஸ்காட்டைக் கொலை செய்யத் தீர்மானித்தது. பகத் சிங், சிவ்ராம் ஹரி ராஜ்குரு, ஆசாத் மற்றும் ஜெய்கோபால் ஆகியோர் இக்காரியத்தை நிறைவேற்ற தேர்ந்தெடுக்கப்பட்டனர். டிசம்பர் 17, 1928 அன்று படுகொலை முயற்சிக்குத் தேதி குறிக்கப்பட்டது. ஸ்காட் அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போது ஜெய்கோபால், பகத் சிங்கிற்கும் ராஜ்குருவிற்கும் சைகை காட்டவேண்டும் எனத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஜெய்கோபால் உதவிக் கண்காணிப்பாளர் சாண்டர்சைத் தவறுதலாக ஸ்காட் என நினைத்து சைகை காட்டிவிட பகத் சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்சை சுட்டுக் கொன்றுவிட்டனர். கொலையாளிகளை விரட்டிப்பிடிக்க முயன்ற தலைமைக் காவலர் (ஏட்டு) ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த நாள் லாகூரில் சுவரொட்டிகள் அடித்து ஒட்டித் தாங்கள் செய்த கொலையை ஒப்புக் கொண்டது இ.சோ.கு.அ. சுவரொட்டியில் காணப்பட்ட விவரம்: “ ஜேபி சாண்டர்சு கொல்லப்பட்டான். லாலா லஜபதி ராயின் மரணத்துக்குப் பழி தீர்க்கப்பட்டது. .. இந்த மனிதனின் மரணத்தில் இறந்து போனது இந்தியாவில் பிரித்தானிய அதிகாரத்துக்குத் துணைபோன ஒருவன். மனித ரத்தம் சிந்த நேர்ந்ததற்கு வருந்துகிறோம். ஆனால் புரட்சியின் சன்னிதியில் தனிமனிதத் தியாகங்கள் தவிர்க்கமுடியாதது. ”
சட்ட மன்றத்தில் குண்டு வீச்சு
டெல்லியில் மத்திய சட்ட மன்றத்தின் மீது குண்டு வீசியதுதான் இ.சோ.கு.அ நடத்திய அடுத்த முக்கிய நடவடிக்கை. பொதுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் வர்த்தகச் சிக்கல்கள் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சட்ட மன்றத்தின் மீது குண்டு வீசுவது என தீர்மானிக்கப்பட்டது. சட்ட மன்றத்தில் இவ்விரு சட்டங்களும் நிறைவேற்றப்படும் நேரத்தில் குண்டு வீசப்பட்டால் பொதுமக்களிடையே அச்சட்டங்களுக்கெதிரான எண்ணங்கள் வலுப்படும் என நினைத்தனர். ஏப்ரல் 8, 1929ல் பகத் சிங், பதுகேஷ்வர் தத் இருவரும் சட்டமன்றத்தில் காலியாயிருந்த ஆளுங்கட்சி இருக்கைகள் மீது குண்டுகளை வீசினர். குண்டுவீசி விட்டு இருவரும் தப்பிச் செல்ல முயற்சிக்கவில்லை. இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வாழ்க), சாம்ராஜ்யவாத் கோ நாஷ் ஹோ (ஏகாத்திபத்தியம் ஒழிக) என்று முழக்கமிட்டவாறே சிறைப்பட்டனர். தங்களது செயலுக்கான நியாயமான விளக்கத்தை டு மேக் தி டெஃப் ஹியர் (செவிடர்களைக் கேட்க வைப்பதற்கு) என்ற தலைப்பிட்ட துண்டுப்பிரசுரத்தில் அச்சிட்டு சட்ட மன்றத்துக்குள் வீசி எறிந்தனர். அடுத்த நாள் அந்த துண்டுப்பிரசுரம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியானது. வெறும் பிரச்சாரத்திற்காக மட்டுமே இந்த நடவடிக்கை தீட்டப்பட்டதால் குண்டு வீச்சில் யாரும் இறந்து போகவில்லை. ஏப்ரல் 15, 1929ல் லாகூரிலிருந்த இ.சோ.கு.அ வின் வெடிகுண்டுத் தொழிந்சாலையின்மீது காவல்துறை தீடீர்த்தாக்குதல் நடத்தி கிஷோரி லால், சுக்தேவ், ஜெய் கோபால் மூவரையும் கைது செய்தது. சட்டமன்ற குண்டுவீச்சு வழக்கு விசாரணை நடந்தது. மார்ச் 23, 1931ல் பகத் சிங், சுக்தேவ். ராஜ்குரு மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.
பிற்கால செயற்பாடுகள்
டிசம்பர், 1929ல் இந்திய வைசிராய் இர்வின் பிரபு பயணம் செய்த சிறப்பு ரயிலை குண்டு வைத்துத் தகர்த்தது இ.சோ.கு.அ. ஆனால் இர்வின் காயமேதும் படாமல் தப்பித்து விட்டார். பின்னர் இ.சோ.கு.அ வின் லாகூர் பிரிவு பிளவுபட்டு, ஹன்ஸ்ராஜ் ”வயர்லெஸ்” தலைமையில் அதிசி சக்கர்(தீ வளையம்) அமைப்பு உருவானது. ஜூன், 1930ல் அக்கட்சி பஞ்சாபில் தொடர்ச்சியாக பல வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியது. செப்டம்பர் 1, 1930ல் ராவல்பிண்டிப் பிரிவு தலைமை ராணுவக் கணக்கு அதிகாரி அலுவலகத்தைக் கொள்ளையிட முயற்சி செய்து தோல்வியடைந்தது. அப்போது ஆசாத், யாஷ்பால், பகவதி சரன் வோரா, கைலாஷ் பதி ஆகியோர் இ.சோ.கு.அ வின் முன்னணி உறுப்பினர்களாக இருந்தார்கள். ஜூலை 1930ல் புது டெல்லி, கடோடியா அங்காடியில் 14,000 ரூபாயைக் கொள்ளையடித்தது இ.சோ.கு.அ. அப்பணம் பின்னர் வெடிகுண்டு தொழிற்சாலை ஒன்றை அமைக்க செலவிடப்பட்டது. டிசம்பர், 1930ல் பஞ்சாப் ஆளுனரைக் கொலை செய்ய முயற்சித்தனர். அவர் கையில்பட்ட காயத்தோடு உயிர் தப்பினார்.
வீழ்ச்சி
1931ம் ஆண்டு பெரும்பாலான இ.சோ.கு.அ தலைவர்கள் இறந்து போயிருந்தார்கள் அல்லது சிறையில் இருந்தனர். அக்டோபர் 1930ல் கைதான கைலாஷ் பதி அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறிவிட்டார். பெப்ரவரி 27, 1931ல் காவல்துறையுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் (பிடிபடுவதைத் தவிர்க்க) சந்திரசேகர ஆசாத் தம்மைத்தாமே சுட்டுக்கொண்டு இறந்து போனார். மார்ச் 1931ல் பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு தூக்கிலிடப்பட்டனர். ஆசாத்தின் மரணத்துக்குப்பின் இ.சோ.கு.அவை நடத்திச் செல்ல சரியான தலைவர்கள் இல்லை. வட்டாரவாரியாக நிறைய கருத்து வேற்றுமைகள் எழுந்தன. எனவே இவ்வமைப்பு வட்டார அளவில் சிறு சிறு பிரிவுகளாகப் பிரிந்தது. ஒவ்வொரு பிரிவும் மத்திய அளவில் எந்தவொரு இணைப்பும் திட்டமிடலுமின்றி தனித்தனியே இந்திய அதிகாரிகள் மீது குண்டுவீச்சுகளையும் தாக்குதல்களையும் நடத்தின. டிசம்பர் 1931ல் மீரட்டில் நடந்த கூட்டத்தில் இ.சோ.கு.அ வை மீண்டும் ஒருங்கிணைத்துத் தூக்கி நிறுத்த முயற்சியெடுக்கப்பட்டது. ஆனால் யஷ்பால் மற்றும் தார்யாவ் சிங் இருவரும் 1932ல் கைது செய்யப்பட்டதால் அம்முயற்சிக்குப் பலனில்லாமல் போனது. தனித்தனி வட்டாரக் குழுக்களாக 1936 வரை தங்களது ஆயுதப் புரட்சியை நடத்தினாலும் இத்துடன் இ.சோ.கு.அ ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாகச் செயல்பட்ட நிலைமை முடிவுக்கு வந்தது.
மூவரின் தூக்குதண்டனை
பகத்சிங், சுக்தேவ் தபார், சிவராம் ராஜகுரு ஆகிய மூவரின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார். தி லெசன்ட் ஆஃப் பகத் சிங் என்ற இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது.[3]
இந்திய தேசிய ராணுவம்
[தொகு]இந்திய தேசிய ராணுவம் (Indian National Army – INA, Azad Hind Fauj) என்பது இரண்டம் உலகப் போரின் போது பிரித்தானிய இந்திய அரசினை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு படை. இது சப்பானியப் பேரரசின் உதவியுடன் இந்தியாவின் காலனிய அரசை எதிர்த்துப் போரிட்டது. ஆரம்ப காலத்தில் சப்பானியர்களால் கைது செய்யப்பட்ட பிரித்தானிய இந்திய ராணுவத்தின் இந்திய போர்க்கைதிகள் இதில் இடம் பெற்றிருந்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்த சென்றவர்கள் ஆகிய தன்னார்வலப் படைவீரர்களும் இதில் இடம் பெற்றனர்.
1942 இல் சிங்கப்பூர் சப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், ராஷ் பிஹாரி போஸ் என்பவரால் இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. இதன் படைத்தலைவர் மோகன் சிங் ஆவார். ஆனால் விரைவில் அது ஆதரவின்றி கலைந்து போனது. மீண்டும் 1943 இல் சுபாஷ் சந்திர போஸ் நேதாஜி சுபாஷ் சந்திர போசினால் புத்துயிர் அளிக்கப்பட்டு மீட்டுருவாக்கப்பட்டது. போசின் இந்திய இடைக்கால அரசின் படைத்துறையாக செயலாற்றியது. சப்பானியப் படைகளுக்குத் துணையாக மலேசியா மற்றும் பர்மா போர்த்தொடர்களில் பிரித்தானியப் படைகளுக்கு எதிராகப் போரிட்டது. சப்பானிய மற்றும் பிரித்தானியத் தரப்புகள் தங்களது பரப்புரைத் தேவைகளுக்கு இப்படையினை பெரிய அளவில் பயன்படுத்துக்கொண்டன. சுமார் 43,000 உறுப்பினர்களைக் கொண்ட இப்படை போர்க்களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் இதன் உறுப்பினர்கள் மீது பிரித்தானிய அரசு சாட்டிய குற்றங்களும், அது தொடர்பான வழக்குகளும் இந்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, இந்திய தேசிய ராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை, அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரிட்டிஷாரின் வெளியேறுவது என்ற திட்டத்தை உருவாக்கியது, இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு சிப்பாய்களின் விசுவாசத்தை இனிமேனும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும்.
வெளி இணைப்புகள்
[தொகு]- சுதந்திரப் போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்கு – 1 - காணொலி (தமிழில்)
- சுதந்திரப் போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்கு - 2 - காணொலி (தமிழில்)
- சுதந்திரப் போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்கு – 3 - - காணொலி (தமிழில்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shah, Mohammad. "Jugantar Party". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 26 July 2015.
- ↑ Misra, Chitta Ranjan; Shah, Mohammad. "Anushilan Samiti". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 26 July 2015.
- ↑ The major charge... during the trial (1910–1911) was "conspiracy to wage war against the King-Emperor" and "tampering with the loyalty of the Indian soldiers" (mainly with the 10th Jats Regiment) (cf: Sedition Committee Report, 1918)
- ↑ 4.0 4.1 Bapu 2013, ப. 96.
- ↑ "Nasik Conspiracy Case - 1910". Bombay High Court. Archived from the original on 9 ஏப்பிரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச்சு 2015.