சேலம்

ஆள்கூறுகள்: 11°39′51″N 78°08′46″E / 11.664300°N 78.146000°E / 11.664300; 78.146000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேலம்
பெருநகரம்
அடைபெயர்(கள்): எஃகு நகரம் (Steel City), மாங்கனி நகரம் (Mango City)[1]
சேலம் is located in தமிழ் நாடு
சேலம்
சேலம்
சேலம், தமிழ்நாடு
சேலம் is located in இந்தியா
சேலம்
சேலம்
சேலம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°39′51″N 78°08′46″E / 11.664300°N 78.146000°E / 11.664300; 78.146000
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
பகுதிமழவர் நாடு
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்சேலம் மாநகராட்சி
 • மக்களவை உறுப்பினர்எஸ். ஆர். பார்த்திபன்
 • சட்டமன்ற உறுப்பினர்ஆர். ராஜேந்திரன் (சேலம் வடக்கு)
ஆர். அருள் (சேலம் மேற்கு)
ஏ.இ. பாலசுப்பிரமணியன் (சேலம் தெற்கு)
 • மாநகர முதல்வர்காலியிடம்
 • மாவட்ட ஆட்சியர்செ. கார்மேகம், இ.ஆ.ப.
பரப்பளவு
 • பெருநகரம்124 km2 (48 sq mi)
பரப்பளவு தரவரிசை5
ஏற்றம்307 m (1,007 ft)
மக்கள்தொகை (2011)[2]
 • பெருநகரம்8,29,267
 • தரவரிசை5
 • அடர்த்தி9,079/km2 (23,510/sq mi)
 • பெருநகர்[3]9,17,414
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ் மொழி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு636 xxx
தொலைபேசி குறியீடு+91-427
வாகனப் பதிவுTN-27, TN-30, TN-54, TN-90
சென்னையிலிருந்து தொலைவு340 கி.மீ. (212 மைல்)
கோவையிலிருந்து தொலைவு168 கி.மீ. (105 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு140 கி.மீ. (87 மைல்)
மதுரையிலிருந்து தொலைவு235 கி.மீ. (145 மைல்)
இணையதளம்salem corporation

சேலம் (ஆங்கிலம்:Salem) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சேலம் மாநகராட்சி ஆகும். தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. மழவர் நாட்டில் அமைந்துள்ள இவ்வூர், மாம்பழத்திற்கு பெயர் பெற்றது. சேலம் மாநகராட்சி பரந்து விரிந்த ஓர் பெருநகரம் ஆகும். தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிக்கு அடுத்த ஐந்தாவது பெருநகரம் ஆகும். தென்னிந்தியாவை பொறுத்தவரையும், தமிழகத்தை பொறுத்தவரை இங்கு தான் தமிழக மக்கள் நுகர்வோர் பொருட்கள் விலை நிர்ணயிக்கப்படும். சேலம் மாநகர விலைதான் தமிழகத்தில் 38 மாவட்டங்களும் நிர்ணயிக்கப்படும். சேலம் மாநகராட்சியானது தென்னிந்திய இரயில்வே கோட்ட தலைமை இடமாகும். இந்த கோட்டத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்கள் அடங்கும். இதனால்தான் இது சேலம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

பெயர்க்காரணம்

சேரலம் என்பது சேலம் ஆனது என்பதற்கு ஏத்தாப்பூர் செப்பேட்டில் உள்ள ' சாலிய சேரமண்டலம் ' என்றத் தொடரை ஆதாரமாகக் கூறுவர். சேரவரையன் மலையும் இதற்கு இன்னொரு சான்றாக இருக்கிறது. சைலம் என்ற சொல்லிற்கு மலைகளால் சூழ்ந்த வாழிடம் என்பது பொருள். இதனால் சைலம் என்பதே திரிந்து சேலம் ஆனது என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. இவ்வூரை சைலம் எனக் குறிப்பிடும், ஆவணங்களோ கல்வெட்டுகளோ எதுமில்லை. ஆனால் சேலம் எனவே குறிப்பிடும் கல்வெட்டுகள் மாவட்டம் முழுவதும் கிடைக்கின்றன.

சேலத்தின் முதன்மை மலைத் தொடர் சேர்வராயன் மலை. சேர+அரையன் என்பதின் திரிபே சேர்வராயன் என்றாகும். அரையன் என்பதற்கு அரசன் என்று பொருள். எனவே சேரலம் என்பதின் திரிபு சேலம் என்றானது எனலாம். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் "சாலிய சேரமண்டலம்" எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது எனக் கூறுவதற்குச் சிறு ஆதாரங்கள் உண்டு. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள். சேலை நெசவில் பெயர்பெற்று சேலையூர் என்ற பெயர் சேலம் என காலப்போக்கில் மருவியது எனவும் கூறுவர். இலக்கண விதிப்படி சேல்+அம் = சேலம் என புணரும். சேல் ஆறும் ஏரிகளும் நிறைந்த பகுதிகளில் மீன்கள் நிறைய கிடைத்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் எனவும் கூறலாம் என்றாலும் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று என்பது போல சேரலம் என்பது 'சேலம்' ஆயிற்று என்பதே சரியாகத் தோன்றுகிறது.

வரலாறு

சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிற்பாடு பொ.ஊ. 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கியது. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது நகரின் மைய பகுதியாக உள்ளது.

சேலம் மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்து வந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் வரலாறு பழமையானது. இங்கு புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கோடரிகள், சுத்திகள், பானைகள், தேய்ப்புக் கற்கள், வளையல்கள் போன்றவை சேர்வராயன், கல்ராயன், வத்தலமலை, மேலகிரி, குட்டிராயன் மலை முதலிய பகுதியில் கிடைத்திருக்கிறது. எண்ணற்ற நடுகற்கள் கிடைத்திருக்கின்றது. இம்மாவட்டம் தர்மபுரி அதியமான்கள், சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி படைக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையே 1792இல் நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்புசுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு 'பாரமஹால் மற்றும் சேலம்' மாவட்டம் 1792இல் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டு பாரமஹால் (12 சமஸ்தானங்கள்) மற்றும் சேலம் மாவட்டத்தின் கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பார மஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. பின்னர் 1808இல் இ. ஆர். ஹார்கிரேவ் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது, இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டத் தலைநகர் தருமபுரியில் இருந்து சேலத்திற்கு 1830இல் மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஓசூருக்கு மாற்றப்பட்டாலும்கூட, 1860இல் ஆட்சித் தலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கு மாற்றப்பட்டது. 1965இல் சேலத்தில் இருந்து சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தர்மபுரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. 1996 மே மாதம் சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

சிறப்பு

கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக நடுவம் ஆகும். சேலம் மல்கோவா வகை, மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை "மாங்கனி நகரம்" என்றும் அழைப்பார்கள்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°39′N 78°10′E / 11.65°N 78.17°E / 11.65; 78.17 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 278 மீட்டர் (912 அடி) உயரத்தில் இருக்கின்றது. சேர்வராயன் மலைத்தொடரில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு சேலம் நகரின் ஊடாக செல்கிறது. சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற்காடு சேலத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நாம மலை, ஊத்து மலை, கஞ்ச மலை, சாமியார் குன்று ஆகியவை சேலத்தை சுற்றி அமைந்த சில மலைகள்.

ஏற்காட்டிலிருந்து தெரியும் இரவில் ஒளிரும் சேலம்
சேலம்

மக்கள் வகைப்பாடு

மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
89.79%
முஸ்லிம்கள்
7.48%
கிறிஸ்தவர்கள்
2.36%
சைனர்கள்
0.11%
சீக்கியர்கள்
0.02%
பௌத்தர்கள்
0.01%
மற்றவை
0.2%
சமயமில்லாதவர்கள்
0.02%

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 829,267 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சேலம் மக்களின் சராசரி கல்வியறிவு 84.42% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89.30%, பெண்களின் கல்வியறிவு 79.50% ஆகும்.

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, சேலத்தில் இந்துக்கள் 89.79%, முஸ்லிம்கள் 7.48%, கிறிஸ்தவர்கள் 2.36%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.11%, 0.2% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.02% பேர்களும் உள்ளனர்.

2011 இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின், மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 8,29,267 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 9,17,414 ஆகவும் உள்ளது.

நகரச் சிறப்புகள்

  • சேலம் சி. விஜயராகாவாச்சாரியார் இம்மாநகரத்தை சேர்ந்தவர்கள்.
  • 1937ல் சேலம் மாவட்டத்தில் தான் முதன் முதலில் மதுவிலக்கு அமுலுக்கு வந்தது.
  • இங்கு விளையும் மல்கோவா மாம்பழம் மிகவும் பிரசித்தி பெற்றது.
  • தென்னிந்திய திரைத்துறையில் முதன்முதலில் தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உலகத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்.
  • சேலம் என்ற பெயரில் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கூட நகரங்கள் உண்டு.
  • கைத்தறி, வணிக நிலையங்கள் நிறைந்தது இவ்வூர்.
  • சேலம் நகரத்தில் வாணிக வளத்தைப் பெருக்கும் இடம் 'லீபஜார்' என்னும் கடைவீதியிலுள்ள மொத்த வியாபார நிலையங்களாகிய பல்வேறு மண்டிகள், இந்நகரத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நடைபெறுகின்ற வாரச் சந்தை வியாபாரம் மிகவும் பெரியதாகும். இந்த வாரச் சந்தைக்கு, இம்மாவட்டத்திலிருந்தும் அடுத்த மாவட்டங்களிலிருந்தும் பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் ஏராளமான மக்கள் வந்து கூடுவார்கள்.
  • இந்தியாவிலேயே மிகவும் நீளமான - பெரிய இரயில்வே நடைமேடை சேலம் சந்திப்பு நிலையத்தில் உள்ள நடைமேடை ஆகும்.[சான்று தேவை]
  • சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஓமலூர் சாலையில் அமைந்துள்ளது.
  • சேலத்தைச் சுற்றி பார்க்கத்தக்க இடங்கள்: 24 கி.மீ. தொலைவிலுள்ள தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் கோவில், 5 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீகுமரகிரி கோயில், 10 கி.மீ. தொலைவிலுள்ள கந்தராஸ்ரமம், திப்புசுல்தான் கட்டிய ஜாமா மஜ்ஜிட், சேலம் ஸ்டீல் பிளாண்டை அனுமதியுடன் பார்க்கலாம். 10 கி.மீ. தொலைவிலுள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்கா - இது சேர்வராயன் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
  • சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு சேலத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

பொருளாதாரம்

  • சேலம் பல்வேறு கனிமவளங்கள் நிறைந்த இடம். இங்கு கிடைக்கும் இரும்பு தாதுவை பயன்படுத்தி இந்திய நடுவன் அரசின் செயில் (SAIL) நிறுவனம் சேலம் இரும்பாலையை அமைத்துள்ளது. இது தமிழ்நாட்டின் ஒரே உருக்கு ஆலை ஆகும்.
  • இந்தியாவில் மாக்னசைட் தாது பெருமளவு கிடைக்கும் இடங்களில் சேலமும் ஒன்று. டால்மியா மற்றும் தமிழக அரசின் டான்மாங் (TANMAG - TAMILNADU MAGNESITE LIMITED) நிறுவனங்கள் மாக்னசைட் சுரங்கங்களை இங்கு அமைத்துள்ளன.
சேலம் உருக்காலை
  • அதிக அளவில் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில் இங்கு நடைபெறுகிறது.
  • இது தவிர நூற்பாலை, வாகன உதிரிபாக ஆலை, சேகோ (சவ்வரிசி) ஆலை ஆகியவையும் உள்ளன.
  • இந்த மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளும் அதிக அளவில் உள்ளன.
  • இங்கு உள்ள லீ-பஜார், மஞ்சள், கடலை, தேங்காய், அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த சந்தைக்குப் பெயர் பெற்றது.
ஏற்காட்டிலிருந்து தெரியும் டான்மாங் மாக்னசைட் சுரங்கம்

பொது விபரம்

  • வங்கிகள்: 749 (கூட்டுறவு வங்கிகளையும் சேர்த்து)
  • காவல் நிலையம்: 31
  • அஞ்சல் நிலையங்கள்: தலைமை அஞ்சலகம் - 394
  • திரையரங்குகள்: 136
  • தொலைபேசிகள்: 96,564
  • மழையளவு: சராசரி 841 மி.மீ.; சில சமயம் 1,056 மி.மீ.
  • முக்கிய ஆறுகள்: காவிரி, மணிமுத்தாறு, வசிஷ்ட நதி
  • அணைகள்: மேட்டூர் (ஸ்டான்லி நீர்த்தேக்கம்) ஆனை மடுவு, கரிய கோவில்;

உள்ளாட்சி நிர்வாகம்

மாநகராட்சி - 1; நகரசபைகள் - 4; ஊராட்சி ஒன்றியங்கள் - 20; பேரூராட்சிகள் - 34; பஞ்சாயத்துகள் - 376; கிராமங்கள் - 3,100;

வருவாய் நிர்வாகம்

கோட்டங்கள் - 4; வட்டங்கள் - 9;

சட்ட சபை தொகுதிகள்

11 சட்ட சபை தொகுதிகள் உள்ளன:

1) கெங்கவள்ளி (தனி)

2) ஆத்தூர் (தனி)

3) ஏற்காடு (தனி - பழங்குடியினர்)

4) ஓமலூர்

5) மேட்டூர்

6) எடப்பாடி

7) சங்ககிரி

8) சேலம் மேற்கு

9) சேலம் வடக்கு

10) சேலம் தெற்கு

11) வீரபாண்டி

பாராளுமன்றத் தொகுதிகள் 4

(சேலம் மாவட்டத்தின் சங்ககிரி சட்டமன்ற தொகுதி)

  1. சேலம் மேற்கு
  2. சேலம் தெற்கு
  3. சேலம் வடக்கு
  4. எடப்பாடி
  5. ஓமலூர்
  6. வீரபாண்டி

(சட்டமன்ற தொகுதிகள்)

(சேலம் மாவட்டத்தின் ஆத்தூர், கெங்கவள்ளி , ஏற்காடு சட்டமன்ற தொகுதிகள்)

(சேலம் மாவட்டத்தின் மேட்டூர் சட்டமன்றத் தொகுதி)

(சேலம் மட்டும் முழுத்தொகுதி, மற்றவை வேறு மாவட்ட பகுதி)

ஆன்மீக தலங்கள்

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் கோவில்களை காணலாம். இங்கு உள்ள முக்கிய கோயில்கள் சில,

ஆடி மாதத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும் அதே சமயத்தில் சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவிலின் திருவிழாவும், சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவும், சேலம் குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவும், சேலம் அம்மாப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவும் நடக்கும்.

கல்வி

இங்கு பெரியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.

பல்கலைக்கழகம்

  • பெரியார் பல்கலைக்கழகம் - 1

பள்ளிகள்

  • தொடக்க நிலை - 1,254
  • நடுநிலை - 120
  • உயர்நிலை - 103
  • மேல்நிலை - 33

கல்லூரிகள்

  • மருத்துவம் - 3
  • பல் மருத்துவம் - 2
  • பொறியியல் - 19
  • தொழிற்நுட்பக் கல்லூரி - 13
  • சட்டக் கல்லூரி - 2
  • கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 23

தொழிற்சாலைகள்

  • விவசாயம் சார்ந்தவை - 125
  • காடு சார்ந்தவை - 31
  • கனிமப் பொருள் - 38
  • துணியாலைகள் - 393
  • பொறியியல் - 20
  • வேதிப்பொருள் - 95
  • ஸ்டார்ச் - 726
  • ஏனையவை - 410

சுற்றுலா இடங்கள்

ஏற்காடு (மலைவாழிடம் - கடல் மட்டத்திலிருந்து 5100 அடி உயரம்), மேட்டூர் அணை, தாரமங்கலம் கோவில், சேலம் உருக்காலை, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில், சேலம் கந்தாஸ்ரமம், குருவம்பட்டி உயிரியல் பூங்கா.

மாவட்டத்தில் குறிப்பிடத்தக்கோர்

  • சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி - சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்,
  • டாக்டர் சுப்பராயன் - முன்னாள் அமைச்சர்;
  • மோகன் குமாரமங்கலம் - அமைச்சர்;
  • சுதந்திரப் போராட்ட வீரர் மாம்பலக்கவிராயர்;
  • டாக்டர். குருபாதம் (ராஜாஜி அமைச்சரவை உறுப்பினர்);
  • எஸ். பி. ராமசாமி - (சுதந்திரத்திற்கு முன் மத்தியமைச்சர்)
  • இசையுலகில் புகழடைந்த நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்;
  • இசையரசி சேலம் ஜெயலட்சுமி;
  • முன்னாள் அமைச்சர் இராசாராம்;
  • புலவர் வரதநஞ்சப்ப பிள்ளை;
  • ஏ. மாரியப்பன் முதலியார்: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சுதந்திர போராட்டவீரர்,நெசவாளர்களின் காவலன்
  • வி.ஆர். தனபால்: சேலம் சட்டக்கல்லூரி
  • தியாகி நடேச முதலியார்: சுதந்திர போராட்ட வீரர்
  • இராமசாமி கவுண்டர்; சேலம் வழக்கறிஞர்
  • சேலம் சி. விஜயராகாவாச்சாரியார்
  • எடப்பாடி கே. பழனிசாமி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்
  • 'கலைமகள்' இதழ் கி.வா.ஜகன்னாதன்,
  • கவிஞர்கள் சி.மணி, உமாபதி, முருகுசுந்தரம்.

சேலம் மாவட்ட SALEM என்ற ஐந்தெழுத்தின் சிறப்புகளாவன:- S - Steel - எஃகு A - Aluminium - அலுமினியம் L - Limestone - சுண்ணாம்புக் கல் E - Electricity - மின்சாரம் M - Mangoes - மாம்பலம்

இயற்கை வளம்

இம்மாவட்டத்தில் பெரும்பகுதி செம்மண்,களிமண் மற்றும் கரிசல்மண் வகையைச் சார்ந்தது. இங்கு காவிரியும், வெள்ளாறும், வசிட்ட நதியும் , திருமணிமுத்தாறு இம்மாவட்டம் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. கல்வராயன், சேர்வராயன், நகரமலை, கஞ்சமலை, தீர்த்தலை, நைனாமலை, பச்சைமலை,கபிலமலை முதலியவை முக்கியமானவை.

கனிமவளம்

கஞ்சமலை, தீர்த்தலை ஆகிய மலையில் இரும்புத் தாது உள்ளது. கஞ்சமலையில் உள்ள இரும்புத்தாது எளிதில் வெட்டியெடுக்கும்படி அமைந்துள்ளது. இம்மலையில் சுமார் 45 கோடி டன் எடையுள்ள இரும்புத் தாது உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.[சான்று தேவை] அவற்றிலிருந்து எடுக்கக்கூடிய இரும்புத்தாதுவின் அளவு 304 மில்லியன் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சேர்வராயன் மலைப் பகுதியில் அலுமினியம் தயாரிப்பதற்கு அவசியமான பாக்சைட் என்ற தாது அதிக அளவில் கிடைக்கின்றது.

வேளாண்மை

ஆண்டு முழுவதும் இங்கு வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. நெல், கரும்பு, வாழை, பருத்தி, சோளம், மாம்பழமும் இதைத் தவிர காப்பி, பாக்கு, நிலக்கடலை, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு, பழவகைகள் ஆகியப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.[சான்று தேவை]

வசிட்ட நதியின் குறுக்கே 16 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து வெட்டப்பட்டுள்ள கால்வாய்களின் மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலங்கள் நீர்பாசனம் வசதி பெறுகின்றன. மேட்டூர் அணை கால்வாய் மூலம் ஓமலூர், சங்ககிரி வட்டங்கள் பயனடைகின்றன. சேலம் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து யூனியன் ஏரிகள் மொத்தம் 258 உள்ளன. இவ்வேரிகளால் மொத்தம் 23500 ஏக்கர் நிலங்கள் நீர்பாசன வசதி பெறுகின்றன.

நெசவுத்தொழில்

சேலம் மாவட்டத்தில் இரண்டாவது பெருந்தொழிலாக நெசவுத்தொழில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகமான கைத்தறிகள் உள்ள மாவட்டம் சேலம் மாவட்டமாகும். சேலம் நகரிலும், புதுப்பாளையம், வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஊர்களிலும் பருத்தி ஆடைகள் மிகுதியாக நெய்யப்படுகின்றன. சேலம், வெண்ணந்தூர் ஆகிய இடங்களிலும், ஜலகண்டபுரத்தில் இப்போது பவர்லும் தறிகள் மிகுதியாக உள்ளன. சேலம் நகரத்தில் அம்மாப்பேட்டைப் பருத்தி ஆடை நெய்வதில் சிறந்து விளங்குகின்றன. அம்மாப்பேட்டை கூட்டுறவு சங்கம் புகழ்பெற்றது. சேலம் நகரிலும், சேலம் நகரத்தைச் சார்ந்த கொண்டலாம்பட்டிப் பகுதியிலும் பட்டாடைகள் நெய்யப்படுகின்றன.

கால்நடை வளர்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள கால்நடைகளில் 7 சதவீதம் கால்நடைகள் சேலம் மாவட்டத்தில் வளர்க்கப்படுகின்றன. ஓமலூர் வட்டத்திலுள்ள மேச்சேரியில் நல்ல தரமான ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாடுகளின் மாமிசமும், தோலும் தரத்தில் உயர்ந்தவை. இவ்வாடுகளின் தரத்தை உயர்த்த கோயமுத்தூரிலுள்ள, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம், அரசாங்க நிதி உதவியோடு செயல்படுகிறது. சேலம் மாவட்டத்தில் காங்கேயம் மாடுகள், நெல்லூர் பசுக்கள், ஓசூர் பசுக்கள், சிந்திப் பசுக்கள் ஆகியவை அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. மேச்சேரியில் வாரந்தோறும் மாட்டுச் சந்தை கூடுகின்றது.

'தமிழ்நாடு பால்பண்ணைத் தொழில் வளர்ச்சிக் கழகம்' சேலத்தில் பெரிய அளவில் பாலைப் பாதுகாக்க குளிர்ப்பதன வசதி செய்து பல்வேறு இடங்களுக்கும் அனுப்புகிறது.

சேலம் மாவட்ட தொழில் வளம்

சேலம் மாவட்டத்திலுள்ள, மோகனுரில் சர்க்கரைத் தொழிற்சாலை நடைபெற்று வருகிறது. பள்ளிப் பாளையத்தில் பெரிய காகிதத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. சேலம் (உடையாபட்டி), சேலம், ஆத்தூர், (செல்லியம் பாளையம்), குமாரபாளையம், மேட்டூர் ஆகிய இடங்களில் பெரிய நூற்பு ஆலைகள் நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டத்திலுள்ள, சங்ககிரி துர்க்கத்தில் இந்தியா சிமெண்ட் தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேட்டூரில் இரசாயனப் பொருள் தொழிற்சாலை, அலுமினியத் தொழிற்சாலை, மூலாம் பூசும் தொழிற்சாலை, சந்தன எண்ணெய்த் தொழிற்சாலை, வனஸ்பதி தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே அதிகமான ஜவ்வரிசி இம்மாவட்டத்தில்தான் உற்பத்தியாகின்றது.

முக்கிய விளைபொருள்கள்

நெல், பருப்புவகைகள், பருத்தி, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, நிலக்கடலை, மாம்பழம் மற்றும் ரோஜா, மல்லிகை. 521 ஹெக்டேர் பரப்பு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

சுகவனேசுவரர் கோயில்

கல்வெட்டுக்களில் கிளிவண்ணமுடைய நாயனார், கிளிவனக் கோயில் பெருமான் அடிகள், கிளி வண்ணத் தேவர் என்னும் திருப்பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. இலக்கியச் சான்றுகளைக் கொண்டு பார்க்கும்போது பொ.ஊ. 7-8 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது எனலாம். இத்திருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், அந்தராளம், நிருத்த மண்டபம் என ஐந்து அமைப்புகளைக் கொண்டு விளங்குகின்றது. இக்கோயிலின் தென்பால் அறுபத்து மூவர் வீற்றிருக்கின்றனர். இக்கோயிலின் தென்மேற்குப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு வலம்புரி விநாயகர் தனித் திருச்சந்நிதி கொண்டு விளங்குகின்றார். வடமேற்குப் பிராகாரத்தில் முருகப்பெருமான் தனி திருச்சந்நிதியில் எழுந்தருளி காட்சி தருகிறார். திருக்கோயிலின் மேற்கு மதிற் சுவரையொட்டித் தென்பால் பஞ்சமுக லிங்கங்களையும், வடபால் சரசுவதி, கஜலட்சுமி ஆகியோரையும் கண்டு வழிபடலாம். இக்கோயிலின் கருவறையின் மேற்குக் கோட்டத்தில் அண்ணாமலையாரையும், வடக்குத் தேவகோட்டத்தில் காளியும், தெற்குக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், வடபால் கோமுகத்தை ஒட்டி சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளன. பிற கோயில்களில் சேலம் கோட்டை மாரியம்மனும், தேரடி இராஜகணபதியும் சிறந்த வரப்பிரசாதிகள்.

மேட்டூர்

சேலத்திலிருந்து 52 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வணையைக் கட்டியவர் ஜார்ஜ் என்னும் ஆங்கிலேயர். மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும். இரண்டு மலைகளுக்கு இடையே காவிரியாற்றை தடுத்து - குறுக்கே கட்டப்பட்ட அணையே மேட்டூர் அணையாகும். இந்த அணையின் மூலம் தஞ்சை, திருச்சி, சேலம், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 2,71,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகிறது. மேட்டூர் அணையிலிருந்து ஓடிவரும் நீரைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுரங்க மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அணையை ஒட்டி பூங்கா அமைந்துள்ளது. இந்நகரையொட்டி தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளன. இரசாயனப் பொருள் உற்பத்தி சாலையும், அலுமினியத் தொழிற்சாலையும் உள்ளன.

ஏற்காடு

'ஏழைகளின் ஊட்டி' என்று ஏற்காடு அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான தட்பவெப்பநிலையாகவே இருந்து வருகிறது. இது சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இவ்வூரானது 383 சதுர கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நில மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகையின்படி 36,863 பேர் இங்கு வாழ்கின்றனர். ஏற்காட்டின் தட்பவெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயராமலும், 13 டிகிரி செல்சியசுக்கு குறையாமலும் இருந்து வருகிறது. இது சேலத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் வந்தடையக் கூடிய தொலைவில் அமைந்துள்ளது. இங்கு 'ஏரி' மற்றும் அண்ணா பூங்கா அமைந்துள்ளது. 'லேடிசீட்' பகுதியிலிருந்து தொலைநோக்கியின் மூலம் இயற்கைக் காட்சிகளைக் காணலாம். 'பகோடா' முனை என்ற முகட்டிலிருந்தும் மலையின் இயற்கைக் காட்சிகளை காணலாம். 'கிள்ளியூர் அருவி' 3000 அடியிலிருந்து விழும் காட்சியைக் காணலாம். இங்கு பண்ணை வீட்டை சேலம் மாவட்ட ஆட்சியராக எம். டி. காக்பர்ன் இருந்தபோது கட்டினார். இவருடைய ஆட்சி காலமான கி.பி. 1820-1829இல் அரேபியா, தென்னாப்பிரிகா முதலிய இடங்களிலிருந்து காபி, பூ, பழம் வகைகளைக் கொண்டு வந்து பயிரிட்டார்.

தாரமங்கலம்

சேலத்திலிருந்து 24 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்குள்ள 'கைலாசநாதர் கோயில்' கெட்டி முதலியார்கள் என்று கூறப்படும் சிற்றரசரால் கட்டப்பட்டது. ஊரின் நடுவே கோயில் மேற்கு நோக்கி, ஐந்து நிலைகள் கொண்ட இராசகோபுரத்தின் ஏழு கலசங்களும், சுமார் 375 சுதைச் சிற்பங்களும் அமைந்து விளங்குகின்றன. திருக்கோயிலினுள்ளே முன் மண்டபத்து எட்டுத் தூண்கள் சிற்பக்கலை வடிவங்களாகவே திகழ்கின்றன. முதல் தூணும், கடைசித் தூணும் தளர்ந்து வளைந்துள்ளவை போன்று அமைக்கப்பெற்றுள்ளன.

தூண்களில் யாழி மீதும், இரு குதிரைகள் மீதும் வீரர்கள் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளன. யாழியின் வாயில் கல் உருண்டை உள்ளது. ஆனால் அதனுள் கை நுழையாது; விரல்கள் செல்லும் இடைவெளி உண்டு. அதன் மூலம் சிற்பி கல்லுருண்டையைக் கடைந்திருக்கிறான்.

மேச்சேரி

சேலத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், மேட்டூர் அணையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களும் உள்ளன.

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் அன்னையின் அஷ்டபுஜங்களில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரரூபமான சூலாயுதம், கபாலம், உடுக்கை, வாள், கேடயம், தலை, மணிகளை தாங்கிய தண்டையணி பொன்சலங்கை அணிந்து வலதுகால் மேலூன்றி, பொன் சலங்கை அணிந்த இடது காலை அசுரன் மீது ஊன்றி வீராசனத்தில் அமர்ந்து, மூக்கில் மின்னும் மூக்குத்தியும், பவளமாய் ஜொலிக்கும் புன்சிரிப் புடனும், அக்னி மகுடமும், குண்டலமும் அணிந்து தேவியாய், பத்ரகாளியாய் அனைவருக்கும் அருள்புரிகின்றாள்.

மாசி மாதம் திருவிழா நடைபெறும். அப்போது பூக்கரகம் எடுத்தல், அலகு குத்துதல், அக்னிக்குண்டம் இறங்குதல், தீச்சட்டி எடுத்தல் என பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.

தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.

தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, வைகாசி விசாகம், சித்ரா பெளர்ணமி, தை அமாவாசை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், மாசி மகம், கார்த்திகை தீபம், நவராத்திரிபெருவிழா, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பேளூர்

சேலத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. வசிட்ட நதிக்கரையில் அமைந்துள்ளது. சிதில மடைந்த இந்த சிவன் கோயிலுக்குப் பெயர் தான்தோன்றிநாதர் கோயில் ஆகும். இக்கோயிலிலுள்ள நிருத்த மண்டபம் உன்னதச் சிற்பக்கலையரங்கமாகத் திகழ்கின்றது. இம்மண்டபத்திலுள்ள தூண்கள் ஒவ்வொன்றும், தாரமங்கலத் தூண் சிற்பங்களை ஒத்துக் காணப்படுகின்றன. இங்கும் யாழியின் வாயில் கற்குண்டு உண்டு.

இக்கோயிலின் வடபால் சிங்கத்தின் வாயில் புகுந்து கிணற்றுக்குச் செல்லும் அமைப்பு வியப்புக்குரியது. தென்பாலுள்ள புனிதமரமான - தலவிருச்சமான பலாமரம் இலுப்பை மரமாகக் காட்சி தருவது வியப்புக்குரியது. இத்திருக்கோயிலிலுள்ள எட்டுத் திருக்கரங்களோடும், ஐம்படை ஆயுதங்களோடும் விளங்குவது கண்டு மகிழத்தக்கது. அவ்வாறே முருகப் பெருமான் அறுமுகங்களோடு விளங்குவது கண்டு மகிழத்தக்கது.

ஆத்தூர்

சேலத்திலிருந்து 51 கி.மீ. / 32 மைல் கல்தொலைவிலுள்ளது. இங்கு பெரும் கோட்டை ஒன்று நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. வசிஷ்ட நதிக் கரையில் அமைந்துள்ளது. அதனால் ஆற்றூர் - தற்போது ஆத்தூர் என்றாகி உள்ளது. இந்நகரம் நெல் வணிகத்தால் சிறப்புபெற்று - 'ஆத்தூர் கிச்சிடி சம்பா' என புகழ்பெற்றது. இந்நகரத்தில் பற்பல ஜவ்வரிசி உற்பத்திக் கூடங்கள் உள்ளன. கி.பி. 1559 -1585 காலத்தில் ஆண்ட கெட்டி முதலி என்ற சிற்றரசரால் இக்கோட்டைக் கட்டப்பட்டது. இக்கோட்டையிலுள்ள பெருமாள் கோயிலும் அக்காலத்தில் கட்டப்பட்டது. முதலியார் சிலை என ஒன்றும் இக்கோயிலில் உள்ளது. இக்கோட்டையின் முப்புறமும் அகன்ற அகழியும், தென்புறம் வசிஷ்ட நதியும், நாற்புறமும் உயர்ந்த கோட்டை மதிலும், பீரங்கி அமைக்கத் தக்க மதிற்குமிழிகளும், ஓய்வு மண்டபக் குமிழிகளும், பகைவர் எளிதில் நுழையாதவாறு குறுவாயில்களும் அமைந்துள்ளன. நான்கு நெற்களஞ்சியங்களும், பாழடைந்த மண்டபங்களும், இராணியின் அந்தப்புரமும், இரண்டு நீச்சல் குளங்களும், கிழக்கே இடிந்த மதிலும் என காணப்படுகின்றன. இக்கோட்டைக்குள் உள்ள சிவன் கோயில், காயநிர்மலேசுவரர் கோயில் என அழைக்கப்படுகின்றது. இக்கோயிலின் அமைப்பு ஆதித்தசோழன் பாணியில் காணப்படுகிறது.

ஆறகளூர்

சேலத்திலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. தலைவாசலில் இருந்து தென்கிழக்கில் 4.கி.மீ. தொலைவில் வசிட்ட நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. மாவலிவாண வம்சத்தவரான 'வாணர்' என்போர், சோழர்களின் கீழிருந்து இப்பகுதியை ஆண்டு வந்தனர். 'ஆறு அகழிகள்' இருந்த ஊர், ஆறகழூர் என்றும் சொல்லப்படுகிறது. ஏகாம்பரமுதலியார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டிய ஸ்ரீகாமேஸ்வரர் கோயில், கரிவரதபெருமாள் கோயிலும் உள்ளன. தியாகனுர் கிராமத்திலும், இவ்வூரிலும் புத்தர் சிலைகள் உள்ளன. காமேஸ்வரர் பேரில் 'காமநாத கோவை' என்ற இலக்கியம் இவ்வூருக்கு உண்டு.

சங்ககிரி

சேலத்திலிருந்து 35 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை சிதிலமடைந்து காணப்படுகிறது. பிற்காலத்தில் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் இக்கோட்டையை பயன்படுத்தினர்.

தம்மம்பட்டி

சேலத்திலிருந்து 59 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு சிற்ப வேலைபாடுகள் நிறைந்த கதலி நரசிம்மப்பெருமாள் கோயில் உள்ளது. உலக அளவில் தம்மம்பட்டி சிற்பக்கலை பெயர் வாய்ந்தது. பிரிட்டன் பிரதமர் விரும்பிப் புகைத்த சுருட்டும் தம்மம்பட்டியுடையதாகும். சேலம் மாவட்டத்தில் ஆத்தூரை அடுத்த பெரிய நகரம் இதுவே.

இளம்பிள்ளை

இப்பகுதியானது கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மலையில் பிரசித்தி பெற்ற சித்தர் கோவிலானது இளம்பிள்ளைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இளம்பிள்ளை அபூர்வா பட்டு நெசவுத் தொழில் பிரபலமானது. விரைவில் வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

இளம்பிள்ளை பேரூராட்சிக்கு கிழக்கில் சேலம் 20 கி.மீ; மேற்கில் தாரமங்கலம் 15 கி.மீ; வடக்கே ஓமலூர் 20 கி.மீ; தெற்கே சங்ககிரி 22 கி.மீ மற்றும் இடங்கணசாலை 1 கி.மீ தொலைவில் உள்ளது

போக்குவரத்து

சாலை

சேலம் மாநகரம் சாலை போக்குவரத்தின் முக்கிய சந்திப்பு ஆகும். மூன்று முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் இங்கு கடக்கின்றன.

ஆகையால் சென்னை, கோவை, பெங்களூர், மதுரை, திருச்சி, கொச்சி, பாண்டிச்சேரி ஆகிய ஊர்களுக்கு இடையே ஆன போக்குவரத்துக்கு இது ஒரு முக்கிய சந்திப்பாகும்.

பேருந்து போக்குவரத்து

தமிழகத்தில் மத்தியில் அமைந்துள்ள இந்நகரம் பெரும்பாலும் தமிழகம் மட்டுமின்றி கேரளம், கருநாடகம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களுடன் போக்குவரத்து இணைக்கிறது.

வழி சேருமிடம்
அரூர் மார்க்கம் அரூர், திருப்பத்தூர், வேலூர், திருப்பதி, ஆரணி, செங்கம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வந்தவாசி, சென்னை செல்லும் பேருந்துகள்
ஆத்தூர் மார்க்கம் ஆத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, சின்னசேலம், புதுச்சேரி, கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், கும்பகோணம், மயிலாடுதுறை, நெய்வேலி, திட்டக்குடி, பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்துகள்
ராசிபுரம் மார்க்கம் ராசிபுரம், நாமக்கல், பரமத்தி வேலூர், கரூர், துறையூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், மன்னார்குடி, இராமநாதபுரம், மணப்பாறை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், புதுக்கோட்டை, தேவக்கோட்டை, இராமேஸ்வரம், தூத்துக்குடி செல்லும் பேருந்துகள்
திருச்செங்கோடு மார்க்கம் திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், கரூர், அரவக்குறிச்சி, திண்டுக்கல், பழனி, வத்தலகுண்டு, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் செல்லும் பேருந்துகள்
சங்ககிரி மார்க்கம் சங்ககிரி, ஈரோடு, திருச்செங்கோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பழனி, கொடைக்கானல், செல்லும் பேருந்துகள்
பவானி மார்க்கம் பவானி, மேட்டுப்பாளையம், உதகமண்டலம், கோயம்புத்தூர், திருச்சூர், பாலக்காடு மற்றும் கேரளா செல்லும் பேருந்துகள்
எடப்பாடி மார்க்கம் எடப்பாடி மார்க்கம் செல்லும் பேருந்துகள்
மேட்டூர் மார்க்கம் மேட்டூர், பென்னாகரம், ஒகேனக்கல், மகாதேஸ்வரன் மலை செல்லும் பேருந்துகள்
ஏற்காடு மார்க்கம் ஏற்காடு செல்லும் பேருந்துகள்
தருமபுரி மார்க்கம் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, பாலக்கோடு, குப்பம், கர்நாடக மற்றும் ஆந்திரா மாநில பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்

தொடருந்து

சேலத்தில் மூன்று தொடருந்து நிலையங்கள் உள்ளன. அவை சேலம் டவுன், சேலம் மார்க்கெட், சேலம் சந்திப்பு ஆகும். சேலம் டவுன் என்ற தொடருந்து நிறுத்தம், சேலம் மாவட்டத்தின் கிழக்கு வட்ட மக்களுக்கு பெரிதும் பயனாகிறது. சேலம் மார்க்கெட் என்ற தொடருந்து நிறுத்தம், இந்தியாவின் வெளிமாநில சரக்குப் போக்குவரத்துக்கு பெரிதும் பயனாகிறது. சேலம் சந்திப்பானது சென்னை-கோவை, மற்றும் கேரள மாநிலம் செல்லும் அனைத்து ரெயில்களின் முக்கிய சந்திப்பு. 2007 ஆம் ஆண்டு முதல் சேலத்தை தலைமையிடமாக கொண்டு தனி இரயில்வே கோட்டம் செயல்பட தொடங்கியது. பாலக்காடு கோட்டத்தில் இருந்த தமிழக ரயில்வே பகுதிகள், இப்பொழுது சேலம் ரயில்வே கோட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

வானூர்தி நிலையம்

சேலத்திலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள கமலாபுரத்தில் வானூர்தி நிலையம் உள்ளது.

காட்சியகம்

இவற்றையும் பார்க்கவும்

ஆதாரங்கள்

  1. "My Salem - My Pride". இந்திய அரசு. 30 அக்டோபர் 2015. Archived from the original on 1 பெப்பிரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்பிரவரி 2018.
  2. 2.0 2.1 "2019 ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 10, 2019.
  3. "Primary Census Abstract - Urban Agglomeration" (XLS). தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். Archived from the original on 15 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2015.
  4. "Salem". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்&oldid=3867488" இலிருந்து மீள்விக்கப்பட்டது