நெய்வேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெய்வேலி
நெய்வேலி அனல்மின் நிலையம்
நெய்வேலி
இருப்பிடம்: நெய்வேலி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°58′N 78°33′E / 10.97°N 78.55°E / 10.97; 78.55ஆள்கூற்று: 10°58′N 78°33′E / 10.97°N 78.55°E / 10.97; 78.55
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் V.P. தண்டபாணி இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 1,28,133 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


87 metres (285 ft)

நெய்வேலி (ஆங்கிலம்:Neyveli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும். இங்கு நிலக்கரி சுரங்கங்களும் மின் சக்தி ஆலைகளும் அமைந்துள்ளன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தயாரிப்பதே இந்த நகரத்தின் பிரதான தொழில். 1956ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர் லால் நேரு அவர்களால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஆலயம் நிறுவப்பட்டு செயலுக்கு வந்தது.

நெய்வேலி நகரம் நிலக்கரிக்கு மட்டும் அல்லாது சிறந்த பள்ளிகளையும் கொண்டுள்ளது. இங்கு ஜவஹர் பள்ளி, செயின்ட்.பால் பள்ளி, கிளுனி பள்ளி மற்றும் நெய்வேலி நகர பள்ளிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

நெய்வேலியின் வரலாறு நெய்வேலி தமிழ் நாடு மாநிலம் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் அமைந்த்துள்ள தொழில் நகரமாகும்.இந்த நகரம் வடலூரிலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்திலும் பண்ருட்டியிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.நிலவியல் அமைப்புபடி 11.30 வடக்கு அட்சத்திலும் 79.29 கிழக்கு தீர்க்கத்திலும் இடம் பெற்றுள்ளது. சென்னை கும்பகோணம் 45 C தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கிலும் கடலூர் சேலம் நெடுஞ்சாலைக்கு வடக்கிலும் அமைந்துள்ளது.

1935 க்கு முன்[தொகு]

தற்பொழுது நெய்வேலி நகரியம் உள்ள இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ தூரம் தெற்கில்தான் உண்மையான நெய்வேலி கிராமம் இருந்தது.அங்கு வாழ்ந்த ஜம்புலிங்க முதலியார் என்பவர் 1935 ல் தன் நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். கிணற்றிலிருந்து கருமையான பொருள் வெளிப்பட்டது.அதை அரசுக்கு அனுப்பி வைத்தார்.அரசு அதனை ஆய்விற்கு அனுப்பியது. முடிவு பழுப்பு நிலக்கரி என முடிவு கிடைத்தது. அரசு நெய்வேலியை சுற்றிலும் உள்ள இடங்களில் ஆய்வு செய்து நிலத்தடியில் ஏராளமான நிலக்கரி படிவங்கள் இருப்பதை உறுதி செய்தது.மத்திய அரசு 1956 ல் நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயாரிக்க என்.எல்.சி நிறுவன அமைப்பை ஏற்படுத்தியது. இது ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். நெய்வேலி கிராமத் தில் முதன் முதலில் பழுப்பு நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டதால் நிறுவனத்திற்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என பெயர் சூட்டியது.

வெளியேற்றப்பட்ட கிராமங்கள்[தொகு]

நிலக்கரி வெட்டி எடுக்கவும் என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டவும் அலுவலகங்கள் கட்டவும் கீழ்க்கண்ட கிராமங்கள் வெளியேற்றப்பட்டன. 1.வெள்ளையங்குப்பம் 2.பெருமாத்தூர் 3.வேலுடையான் பட்டு 4.கூரைபேட்டை 5.வெண்ணெய்குழி 6.தாண்டவங்குப்பம் 7.நெய்வேலி 8.கெங்கைகொண்டான் 9.பாப்பனம்பட்டு 10.வேப்பங்குறிச்சி 11.தெற்கு வெள்ளூர் 12.வடக்கு வெள்ளூர் 13.மூலக்குப்பம் 14.காரக்குப்பம் 15.ஆதண்டார்கொல்லை 16.மந்தாரக்குப்பம் 17.சாணாரப்பேட்டை 18.அத்திபட்டு 19.வினை சமுட்டிக்குப்பம் 20.தெற்கு மேலூர் 21.இளவரசன் பட்டு 22.விளாங்குளம் 23.நொடுத்தாங்குப்பம்

வெளியேற்றப்பட்ட கிராம மக்களுக்கு விருத்தாசலத்திற்கு வடக்கில் உள்ள விஜயமா நகரம் என்ற ஊரில் மனைகள் வழங்கப்பட்டன.

நெய்வேலி நகரிய அமைப்பு[தொகு]

நெய்வேலி நகரியம் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டது. நெய்வேலி 32 வட்டங்களாகப்(Block) பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டம் என்பது 1 கி.மீ க்கு 1.கி.மீ என பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வட்டம் ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுள்ளது. ஒவ்வொரு வட்டத்தைச் சுற்றிலும் இரட்டைச் சாலைகள் போடபட்டுள்ளது. முதல் வட்டத்தில் என்.எல்.சி நிர்வாக அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இரண்டாவது வட்டம் முதல் முப்பதாவது வட்டம் வரை மக்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.வீடுகள் தனித்தனியாகவும் தோட்ட வசதியுடன் கட்டப்பட்டுள்ளன.மின் வசதி,குடி நீர் வசதி,கழிப்பறை வசதி ஆகியவை நல்ல முறையில் செய்து கொடுத்துள்ளனர்.மற்ற வட்டங்களில் அனல் மின் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது.வட்டம்-21, மற்றும் வட்டம்-30 ஆகிய இடங்களில் நெய்வேலியில் கூலி வேலை செய்வோர், சிறு வியாபாரிகள்,ஒப்பந்த தொழிலாளிகள் போன்றோர் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கின்றனர்.

நகரிய நிர்வாகம்[தொகு]

நகரிய நிர்வாக அலுவலகம் வட்டம் 10 ல் உள்ளது. மின் வசதியைக் கவனிக்க, நீர் வசதியைப் பராமரிக்க, கட்டிடங்களைப் பராமரிக்க, சாலைகளைப்போடவும் பராமரிக்கவும், நகர பேருந்துகளை ஓட்டுதல் மற்றும் பராமரித்தல்,தெரு விளக்குகளைப் போட்டு பராமரித்தல்,சாலை மற்றும் அலுவலகங்களின் சுகாதாரத்தைப்பாதுகாத்தல், நூலகங்களைப் பராமரித்தல்,நகர நிர்வாகத்தில் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்குதல் ஆகிய பணிகளைச் செய்ய அங்கு தனித்தனி அலுவகங்கள் உள்ளன.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°58′N 78°33′E / 10.97°N 78.55°E / 10.97; 78.55 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 87 மீட்டர் (285 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,28,133 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நெய்வேலி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நெய்வேலி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

குடி நீர்[தொகு]

ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல் நிலைத்தொட்டி மூலம் வீடுகளுக்கு தண்ணீர் வசதி செய்து தந்துள்ளனர்.

சுகாதாரம்[தொகு]

தெருக்களும் அலுவலகங்களும் தினசரி சுத்தம் செய்து சுகாதாரம் பேணப்படுகிறது.

நூலகம்[தொகு]

தொழிலாளர்களும் மாணவர்களும் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட வட்டம் 18ல் நூலகம் உள்ளது. வீடுகளுகே வந்து புத்தகங்களை வழங்கும் நடமாடும் நூலகமும் உள்ளது.

கல்வி நிலையங்கள்[தொகு]

மாணவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் நெய்வேலியில் உள்ளன.

 1. என்.எல்.சி பள்ளிகள்.
 2. ஜவகர் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி.வட்டம்-17
 3. ஜவகர் CBSE மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி.வட்டம்-17
 4. St..பால் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி வட்டம்-4
 5. St.குளூனி பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி.வட்டம்-25
 6. ஸ்ரீ அரபிந்தோ மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி.வட்டம்-19
 7. செவந்த் டே மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி.வட்டம்-13.
 8. தாகூர் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி. வட்டம்-28
 9. R.C உயர் நிலைப்பள்ளி, வட்டம்-4
 10. தொல்காப்பியனார் நடு நிலைப்பள்ளி,வட்டம்-16
 11. டேனிஷ்ன் நடு நிலைப்பள்ளி,வட்டம்-19
 12. காமராஜர் தொடக்கப்பள்ளி.வட்டம்-30
 13. NMJ மெட்ரிகுலேஷன். பள்ளி-வட்டம்-19
 14. ஜவகர் அறிவியல் கல்லூரி, வட்டம் -14

என்.எல்.சி. பள்ளிகள்[தொகு]

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்க என்.எல்.சி பள்ளிகள் தொடங்கினர். மொத்தம் 18 பள்ளிகள் இருந்தன. ஆரம்பகாலத்தில் இப்பள்ளிகளில் படித்தவர்கள் பொறியாளர்களாகவும்,மருத்துவர்களாகவும் பணியாற்றுகின்றனர்.நெய்வேலியில் ஆங்கில வழி பள்ளிகள் செயல்பட ஆரம்பித்தன. மக்கள் ஆங்கில வழி கல்வியின் மேல் மோகம் கொணடனர்.தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளிகளில் சேர்த்து வருகின்றனர். 1980 ஆம் ஆண்டுகளில் பழுப்பு நிலக்கரி நிறுவனப்பள்ளிகளில் சுமார் 600 ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். ஆங்கில வழிக்கல்வியின் மோகத்தால் நிறுவனப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. பல பள்ளிகளை மூடி விட்டனர். தற்பொழுது 13 பள்ளிகள் மட்டுமே செயல்படுகின்றன.இப்பள்ளிகளில் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும்,ஆங்கில வழிப்பள்ளிகளில் கற்று தேர்ச்சி பெறாமல் வெளியேற்றப்பட்ட மாணவர்களும்தான் பயில்கின்றனர்.இந்த பள்ளிகளுக்கான தாளாளர் அலுவலகம் வட்டம்-18 ல் அமைந்துள்ளது. 600 ஆசிரியர்கள் பணியாற்றியபோது தாளாளர் அலுவலகத்தில் 16 பேர் மட்டுமே பணியாற்றினர்.ஆனால் தற்பொழுது சுமார் 135 ஆசிரியர்கள் பணியாற்றும் பொழுது தாளாளர் அலுவகத்தில் 40 பேர் பணிபுரிகின்றனர்.

நிர்வாக அலுவலகம்[தொகு]

நெய்வேலி வட்டம் ஒன்றில் நிர்வாக அலுவலகம் உள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்ந்த அனைத்து செயல் பாடுகளும் இங்கிருக்கும் அலுவலகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

சுரங்கம்[தொகு]

ஆரம்பகாலத்தில் வட இந்தியாவில் உள்ள சுரங்கம் போன்று சுரங்கம் தோண்டினர்.ஆனால் பூமியின் நீர் ஊற்றால் சுரங்கம் நீரால் நிரம்பி விட்டது.பின் ரஷிய நாட்டு அரசின் உதவியால் திறந்த வெளிச்சுரங்கம் தோண்டி கரியை எடுக்கின்றனர்.

அனல்மிலையம்[தொகு]

சுரங்கங்களில் வெட்டி எடுக்கும் நிலககரி கன்வேயர் பட்டைகள் மூலம் அனல் மின் நிலையங்களுக்குக் கொண்டு சென்று எரித்து கொதிகலங்களைக் கொதிக்க வைக்கப்படுகிறது. கொதி கலங்களில் உருவாகும் நீராவி விசையைப் பயன்படுத்தி மின்னாற்றல் பெறப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ் நாடு,புதுச்சேரி,கேரளா,கர்னாடகா,ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு வழங்குகின்றனர்.

கோவில்கள்[தொகு]

1.வேலுடையான் பட்டு சிவசுப்பிரமணியர் ஸ்வாமி திருக்கோயில். இக்கோயில் மிகவும் பழமையானது.சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் சித்திர காடவ பல்லவர் என்கிற பல்லவ வம்சத்து மன்னனால் கட்டபட்டதாக வரலாறு கூறுகிறது.இக்கோயிலில் முருகனின் கையில் வேலுக்கு பதில் வில் காணப்படுகிறது.

வேலுடையான்பட்டு மக்களின் குலதெய்வமாக இக்கோயில் இருந்தது.கிராமம் வெளியேற்றப்பட்டாலும் கோயில் அகற்றப்படாமல் இருந்து வருகிறது.இந்த கோயிலில் பங்குனி உத்திரம் சிறப்பான விழாவாக கொண்டாடப்படுகிறது.2.வட்டம்-28 ல் உள்ள முருகன் கோயில் மிகவும் பழமையானதாகும்.3.வட்டம்-16ல் உள்ள நடராஜர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இக்கோயில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள நடராஜரின் சிலை வெண்கலத்தால் ஆனது. அது ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை எனக் கூறுகின்றனர். 4. வட்டம்-28 ல் விஷ்ணுப்பிரியா கோயில் உள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. "Neyveli". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
 5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்வேலி&oldid=2554663" இருந்து மீள்விக்கப்பட்டது