கெடிலம் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெடிலம் ஆறு நீரோட்டம் இல்லாத காலத்தில்

கெடிலம் ஆறு (Gadilam River) என்பது இந்தியாவின், தமிழகத்தின் கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாகப் பாயக்கூடிய ஆறு ஆகும். [1] இது ஒப்பீட்டளவில் சிறிய ஆறு ஆகும். சங்கராபுரம் மையனூரில் உற்பத்தியாகி, மலட்டாற்றுடன் சேர்ந்து கடலூர் அருகே, வங்கக்கடலில் ஐக்கியமாகிறது, மழைக்காலங்களில் பெருக்கெடுத்தோடும் இந்த ஆறு இதன் சுற்றுப்புறத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர உதவுகிறது. இது தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] இந்த ஆற்றின் குறுக்கே முகலாற்று அணை, புத்தனேந்தல் அணை, கெடிலம் அணை, திருவமூர் அணை, திருவதிகை அணை, வானமாதேவி அணை, திருவயிந்திரபுரம் அணை போன்ற அணைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த ஆற்றில் பொதுவாக பருவ மழைக்காலத்தில் நீர் வரத்து இருக்கும். இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டமானது உயர்வதோடு, இதன் படுகையில் உள்ள நீர் நிலைகளும் நிரம்புகின்றன. இந்த ஆற்றின் கரையில் திருவதிகை வீரட்டேஸ்வர் கோயில், திருவந்திபுரம் தேவநாதன் பெருமாள் கோயில் போன்ற புகழ்பெற்ற சில கோயில்கள் அமைந்துள்ளன. தேவரம் போன்ற இடைக்கால பக்தி இலக்கியங்களிலும் இந்த ஆறு குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. புனித டேவிட் கோட்டையின் இடிபாடுகள் ஆற்றின் முகப்பில் அமைந்துள்ளன. [3]

கிளை ஆறுகள்[தொகு]

இதற்கு இரு கிளை ஆறுகள் உள்ளது

  1. தாழனோடை ஆறு அல்லது சேஷநதி இது எறையூர் அருகே வீரமங்கலம் ஏரியில் உருவாகி ஆதனூர், செல்லூர்,களவனூர் வழியே பாதுரை அடைந்து எரியை நிரப்பி வண்டிபாளையம் அருகே கெடிலம் ஆறுடன் கலக்கிறது இதற்கு சின்னாறு என்றபெயர் அப்பகுதியில் வழங்கப்படுகிறது.
  2. மலட்டாறு தென்பெண்ணையில் இருந்து சித்தலிங்கமடம் அருகே பிரிந்து அரசூர் வழியே திருவாமூருக்கு முன் கெடிலம் நதியுடன் இணைகிறது.
கெடிலம் ஆறு நீரோட்ட காலத்தில் பழைய பாலம்

ஆற்றின் போக்கு[தொகு]

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தோற்றமெடுக்கும் கெடிலம் அவ்வட்டத்தின் கிழக்கு நோக்கி 8 கி.மீ தொலைவு ஓடி திருக்கோவிலூர் வட்டத்தில் புகுந்து அரியூர், ஆலூர் வரை கிழக்கு நோக்கி பாய்ந்து பின்னர் வடகிழக்கு வளைந்து செல்கிறது. 10 கி.மீ. வடகிழக்காய் பாய்ந்த பின் பரிக்கலுக்கும் பாதூர் என்ற ஊர்களுக்கும் இடையில் மாரனோடையில் மீண்டும் கிழக்கு நோக்கி பாய்கிறது. சேந்தநாடு எனும் ஊருக்கருகே 3 கி.மீ. தொலைவில் கடலூர் வட்டத்தில் புகுகிறது. பின்னர் சிறிது தொலைவு தென்கிழக்காகவும் மாறி மாறி வளைந்து கடலூர் நகரத்தின் ஊடாக ஓடி பழைய நகரத்தை திருப்பதிரிபுலியூரிலிருந்து பிரிக்கிறது. [4] இதன்பிறகு வங்ககடலில் கலக்கிறது இதன் பயணத் தொலைவின் மொத்த நீளம் 112 கி.மீ. இது மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் ஒரு ஆறாகும்.

கெடிலக்கரை நாகரீகம்[தொகு]

தொண்டை மண்டல நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடைப்பட்ட இந்நிலப்பகுதியை சங்க மறுவிய காலத்திலும் பக்தி இலக்கிய காலங்களிலும் நடுநாடு என்றழைக்கப்பட்டது. இது தற்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும். நாகரீக செயலமைக்கு காரணமாய் அமைந்த இந்நதியை பற்றி பேராசிரியர் புலவர் சுந்தர சண்முகனார் கெடிலக்கரை நாகரீகம் மற்றும் கெடில வளம் என்ற நூல்களை எழுதியுள்ளார்.

வரலாற்றில் கெடிலம்[தொகு]

மூன்றாம் இராசராசனை சிறை வைத்து சோழப் பேரரசனை வியக்க வைத்த கோப்பெருஞ்சிங்கன் சேந்தமங்கலம் கோட்டைக்கட்டி ஆண்டது இந்நதிக்கரையில்தான். தமிழ், மண்ணில் கால்பதித்த ஆங்கிலேயர்கள் முதன் முதலில் கோட்டை கட்டியது இந்த நதியின் முகத்துவாரத்தில்தான், வைணவப் புகழ் பாடும் திருவந்திபுரமும் இந்நதிக்கரையில் அமைந்துள்ளன. தேவாரம் பாடிய ஆசிரியர்களான தம்பிரான் தோழன் என சிறப்பித்து கூறப்படும் சைவ சமய நாயன்மாரான சுந்தரமூர்த்தி நாயனாரும், அப்பர் பெருமான் என அழைக்கப்படும் அப்பர் திருநாவுகரசரரும் பிறந்தது இக்கெடில நதிக்கரையின் திருநாவலூர் மற்றும் திருவாமூர் கிராமங்களில்தான்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெடிலம்_ஆறு&oldid=3638838" இருந்து மீள்விக்கப்பட்டது