பாலக்காடு
பாலக்காடு | |
---|---|
ஆள்கூறுகள்: 10°46′30″N 76°39′04″E / 10.775°N 76.651°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பாலக்காடு நகராட்சி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 678 XXX |
தொலைபேசி | +91-(0)491 |
இந்திய அனுமதி இலக்கத்தகடுகள் | KL-09 |
பாலக்காடு தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே பாலக்காடு மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காட்டுக் கணவாயின் அருகே அமைந்துள்ளது. இங்கு பேசப்படும் மொழி மலையாளம். எனினும் தமிழும் பரவலாக மக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது.
இந்நகரம் தமிழக கேரள எல்லையில் கோயம்புத்தூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு இந்திய தென்னக ரயில்வேயின் கோட்டம் ஒன்று அமைந்துள்ளது. பாரதப்புழா ஆறு இந்நகரின் வழியே செல்லுகிறது. சேலத்தை கன்னியாகுமரியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 47 இதன் வழியே செல்லுகிறது.
சொற்பிறப்பியல்
[தொகு]இதன் பெயர்க்காரணம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவை:
1.முற்காலத் தமிழர் தம் கடவுள் வழிபாட்டில் மரங்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. பாலை, நெல்லி, வேம்பு, காஞ்சிரம், பனை போன்ற மரங்களின் கீழ் அம்மனைப் பிரதிஷ்டை செய்து வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. காலப்போக்கில் அந்த அம்மனுடன் சேர்த்து அந்த மரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வழிபடும் நிலை உருவானது.
அத்தகைய வழிபாட்டின் மூலம்தான் இம்மாவட்டத்திற்கு இப்பெயர்வந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. பாலக்காடு மாவட்டத்திலுள்ள 'நெல்லியாம்பதி எனுமிடத்தின் தென்பகுதியிலுள்ள வெங்கலமுடிக்கும், கல்யாணப் பந்தலுக்கும் இடையிலுள்ள வனப்பகுதியில் பாலக்கடவம்மன் கோவில்' எனும் பழம்பெரும் கோயில் ஒன்று உள்ளது. பாலை மரத்தின் கீழ் அமர்ந்த நிலையில் அங்கே அம்மன் அருள் பாலிக்கிறாள். அம்மன் அருளால் பிரசித்திப் பெற்ற அவ்விடத்தின் பெருமை பக்கத்திலுள்ள ஊர்களிலெல்லாம் பரவியிருந்தது. அதன் மூலமாகத்தான் பாலக்காடு மாவட்டத்திற்கு இப்பெயர் வந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.[1]
2.பண்டையத் தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கிய இன்றைய கேரளத்தில் முற்காலத்தில் சமணமும், பௌத்தமும் செல்வாக்குப் பெற்றிருந்தன. அதற்கான வரலாற்றுச் சான்றுகளும் பண்பாட்டுச் சான்றுகளும் ஏராளம் உள்ளன. இச்சமயங்கள் பாலி மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தன. "சமணமும் பௌத்தமும் இங்குச் செல்வாக்குப் பெற்றிருந்ததால், பாலி மொழியும் இங்கு வழக்கில் இருந்துள்ளது. பாலி மொழி வழங்கி வந்த இடமாதலால் 'பாலிக்காடு' எனப் பெயர் பெற்றதாகவும், காலப்போக்கில் அது 'பாலக்காடு' என்று மாற்றம் பெற்றதாகவும் கூறப்படுகிறது".
தமிழர் மரபில் ஐந்திணைகளில் ஒன்று பாலைத்திணையாகும். 'பாலை' என்பதற்கு வறண்ட நிலப்பகுதி' என்று பொருள் கூறப்படுகிறது.
“ | முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்" |
” |
என்று சிலப்பதிகாரம் விளக்கம் கூறுகிறது.
"பாலக்காடு மாவட்டம் வறண்ட நிலப்பகுதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்டிருப்பதால் 'பாலை+காடு பாலைக்காடு' எனப் பெயர் வந்திருக்கலாம் என்றும், காலப்போக்கில் ஐகாரம் மறைந்து 'பாலக்காடு' ஆகியிருக்கலாம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்". ஆனால் பாரதப்புழையும், அதன் கிளைநதிகளும், ஏராளமான ஏரிகளும், குளங்களும். பசுமையான வயல்களும் நிறைந்த பாலக்காடு மாவட்டம் வளம் மிக்க பகுதியாக இருப்பதால் இக்கூற்றுப் பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது. [2]
3.பாலை மரங்கள் அதிகமாக நிறைந்தும் வனப்பகுதிகள் அடர்ந்தும் காணப்படுவதால் பாலை மரங்கள் நிறைந்த காடு' எனும் பொருளில் பாலைக்காடு' எனப் பெயர் பெற்று, பின்னா; அது பாலக்காடு' ஆகியிருக்கலாம் என்னும் ஒரு கருத்தும் கூறப்படுகிறது". ஐகாரஒலியை இறுதியாகக் கொண்ட தமிழ்ச் சொற்களின் ஐகாரம் மலையாளத்தில் 'அ'கரமாக மாறுவது இயல்பு. (உதா: மலை-மல, தலை-தல, கரை-கர). இம்மாற்றத்தைப் பேச்சு வழக்கிலும் காண இயலும். அது போல 'பாலைக்காடு' என்று வழங்கப்பட்ட தமிழ்ச் சொல்லிலுள்ள ஐகாரம் திரிந்து அகரமாகி 'பாலக்காடு' எனும் பெயராக மாற்றம் பெற்றதாகக்கொள்ள முடியும்.[3]
4.பாறைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் 'பாறக்காடு' எனப் பெயர் பெற்றதாகவும், பின்னாளில் அச்சொல் 'பாலக்காடு' என மாறியதாகவும் கெ.வி. கிருஷ்ணய்யர் என்பார் கூறுகிறார்". பாலை மரத்தின் கீழ் வீற்றிருந்து அருள்புரியும் அம்மனை 'பாலி' என்றும், 'பாலாரி' என்றும் முற்காலத்தில் அழைத்தனா;". 'பாலி' அல்லது 'பாலாரி' அம்மனின் அருள் பெற்ற காடு ஆனதாலும், 'பாலை மரங்கள் நிறைந்த காடு' எனும் பொருளிலும், 'பாலக்காடு' எனும் பெயர் உருவாகியிருக்கலாம் எனக் கருதுவதுதான் பொருத்தமாக அமையும் என எண்ணத் தோன்றுகிறது.[4]
பாலைக் கௌதமனார்
[தொகு]- சங்ககாலப் பார்ப்பனப் புலவர் பாலைக் கௌதமனார் இவ்வூரில் வாழ்ந்தவர். சேரமன்னன் பல்யானைச் செல்கெழு குட்டுவனைச் சிறப்பித்துப் பாடிய 10 பாடல்கள் பதிற்றுப்பத்து என்னும் நூலில் மூன்றாம் பத்தாக இடம்பெற்றுள்ளது. இவர் விருப்பப்படி இந்தக் குட்டுவன் செய்த வேள்வியில் தன் மனைவியுடன் சுவர்க்கம் புகுந்தார் என்று அப் பதிற்றுப்பத்தின் பதிகம் குறிப்பிடுகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 130,736 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பாலக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாலக்காடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
சுற்றுலா இடங்கள்
[தொகு]- பாலக்காட்டுக் கோட்டை
- மலம்புழா அணை
- பரம்பிக்குளம்
- அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா
- நெல்லியம்பதி
- விக்டோரியா அரசினர் கல்லூரி -1887 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட, கேரளத்தின் பழைமையானக் கல்லூரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பாலக்காடு மாவட்டமும் பெயர்க்காரணமும்". International Research Journal of Tamil 1 (1). doi:10.34256/irjt191 3. பன்னாட்டுத் தர தொடர் எண்:2582-1113.
- ↑ "பாலக்காடு மாவட்டமும் பெயர்க்காரணமும்". International Research Journal of Tamil 1 (1). doi:10.34256/irjt191 3. பன்னாட்டுத் தர தொடர் எண்:2582-1113.
- ↑ "பாலக்காடு மாவட்டமும் பெயர்க்காரணமும்". International Research Journal of Tamil 1 (1). doi:10.34256/irjt191 3. பன்னாட்டுத் தர தொடர் எண்:2582-1113.
- ↑ "பாலக்காடு மாவட்டமும் பெயர்க்காரணமும்". International Research Journal of Tamil 1 (1). doi:10.34256/irjt191 3. பன்னாட்டுத் தர தொடர் எண்:2582-1113.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: பாலக்காடு
- [1] – Official Website of Palakkad District Administration
- Palakkad District Tourism information – Palakkad District Tourism-Information
இந்தக் கட்டுரை கட்டற்ற ஆக்கம் ஒன்றின் உரைக் பகுதியைக் கொண்டுள்ளது. Licensed under CC-BY-4.0 License statement: பாலக்காடு மாவட்டமும் பெயர்க்காரணமும், C. Aruchamy, International Research Journal of Tamil. https://irjt.iorpress.org/index.php/irjt/article/view/3/3.