சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்
| சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் | |
|---|---|
| பெயர் | |
| பெயர்: | சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் |
| அமைவிடம் | |
| அமைவு: | சேலம் , தமிழ்நாடு |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | கோட்டை ஸ்ரீ மாரியம்மன் |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | கோயில் |
கோட்டை மாரியம்மன் கோயில் தமிழ் நாடு, சேலம் மாநகரின் நடுப் பகுதியில் அமைந்துள்ள, வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பழைமையான கோயில் ஆகும். [1][2][3][4][5]
பெரிய மாரியம்மன்
[தொகு]சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு மாரியம்மன் கோயில்களில் கோட்டை மாரியம்மன் கோயிலே முதன்மையானது. அதனால் இந்தக் கோயில் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப் பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்னும் சிறப்புப் பெயர் இந்த மாரியம்மனுக்கு உண்டு. [6]
கோவில் வரலாறு
[தொகு]சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, சேர நாட்டைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் ஆட்சி நடத்திய கோட்டை அமைந்திருந்த இடம் இது. கோட்டையை வடிவமைத்துக் கட்டும் பொழுது, இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள். கோட்டை வீரர்கள் எல்லாரும் இந்த மாரியம்மனைத் தமது காவல் தெய்வமாக வணங்கி வந்தனர். போர் புரியச் செல்லும் பொழுது மாரியம்மனை வணக்கி விட்டுச் செல்வர். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறே, அக்காலத்தில் நடந்த போர்களில் வெற்றியும் பெற்றனர். ஒரு சமயம், ஓர் எதிரிப்படை வந்து கோட்டையை முற்றுகையிட்டது. எதிரிப்படையை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்த "கோட்டை வீரர்கள்" வழக்கம் போல் மாரியம்மனை வணங்கி விட்டுப் போர் புரிந்தனர். கோட்டை வீரர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் எதிரிப்படை பின்வாங்கிச் சென்றது. அந்த வியத்தகு வெற்றி மாரியம்மன் அருளால் தான் கிடைத்தது என்று வீரர்கள் சொன்னார்கள். அரசரும் வீரர்களும் தமது உயிர்க்கும் உடைமைக்கும் நாட்டிற்கும் இந்த மாரியம்மனே காவல் என்று நம்பினர் என்று சொல்லப்படுகின்றது.
கோட்டைக்குக் காவல் தெய்வமாக இந்தப் பெரிய மாரியம்மன் இருந்ததாகப் புலவர்களும் தமது பாடல்களில் பாடியுள்ளனர். அதற்குச் சான்றாக கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி என்னும் சின்னப்பக்கவுண்டரின் பாடல்வரிகள் இருக்கின்றன.
அந்தக் காலத்தில், இந்தக் கோட்டைக்குள் அமைந்திருந்த புகழ் பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலை, சேலம் திருமணிமுத்தாற்றின் அருகில் கணக்கர் தெருவில் வாழ்ந்த, தி. கனகசபை முதலியார், சிவசங்கர முதலியார் ஆகியோர் இப்பொழுதிருக்கும் இடத்திற்கு இடம் மாற்றம் செய்து, புதிய கோயில் அமைத்துக் கும்பாபிசேகம் செய்தனர். நாள்தோறும் திருமணிமுத்தாற்றின் நீரை எடுத்து அம்மனுக்கு அபிசேகம் செய்வது நடைமுறையாக இருந்தது.
கோட்டை மாரியம்மனை வணங்குவதற்காக, வெளியூர்களிலிருந்து வருகின்ற மக்கள் தங்குவதற்கு வசதியாக 1876 தாது வருடம் சித்திரை மாதம் தர்ம சத்திரம் ஒன்று கட்டப்பட்டது. அந்தச் தர்ம சத்திரமே கோயிலின் அலுவலகமாகவும் செயல்பட்டு வந்தது. நாளடைவில் அந்தக்கட்டடம் பழுதடைந்ததால் அறநிலையத்துறை ஆணையரின் ஒப்புதல் பெற்று அதை இடித்துவிட்டு, பிற்காலத்தில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
1982 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளிலும் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு, 81 அடி உயர இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, 1993 சூலை 1 அன்று திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது. [7][8][9][10][11][12]
மாரியம்மனின் திருக்கோலம்
[தொகு]கோட்டை பெரிய மாரியம்மனின் தலையில் இருக்கின்ற மகுடம், அக்கினி சுவாலையுடன் ஒளி வீசிக்கொண்டு இருக்கின்றது. படமெடுத்து ஆடுவது போன்ற நாகத்தின் உருவம் அம்மனின் மகுடத்தில் அமைந்துள்ளது. நான்கு கரங்கள் கொண்டவரான அன்னை, வலது மேற்கரத்தில் நாக உடுக்கையும், வலது கீழ்க்கரத்தில் திரிசூலமும், இடது மேற்கரத்தில் பாசமும், இடது கீழ்க்கரத்தில் கபாலமும் ஏந்தி வீற்றிருக்கிறார். வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக்கொண்டு, சிவசக்தியாக ஈசான திசை நோக்கி, அன்பும் கருணையும் ததும்பும் வடிவமாய், ஆனந்தம் பொங்கும் புன்முறுவல் முகத்தினை உடையவராகக் காட்சி தந்து, பக்தர்களுக்கு அருளாசி செய்து வருகின்றார். [13][14][15]
ஆடித்திருவிழா
[தொகு]ஆடிப்பெருந்திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சேலம் மாநகரத்தில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவாகும். ஆடி மாதத்தில் அம்மனுக்குப் பூச்சாற்றும் நிகழ்வுடன் விழா தொடங்கி, தொடர்ந்து 22 நாட்கள் நடைபெறும். கோட்டை பெரிய மாரியம்மனுக்குப் பூச்சாற்றிய பின், பெரிய மாரியம்மனுக்குச் சாற்றிய அந்தப் பூக்களை எடுத்துச் சென்று, சேலத்தின் மற்ற ஏழு மாரியம்மன்களுக்கும் பூச்சாற்றுவது நடைமுறையாக இருந்து வருகின்றது.
திருவிழாவின் பொழுது "கோட்டை பெருமாள்" என்று அழைக்கப்படும் அழகிரிநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து தமது தங்கையான கோட்டை மாரியம்மனுக்குச் சீர்வரிசைகள் கொண்டு வந்து சிறப்பிக்கும் நிகழ்வு என்பது, தொன்றுதொட்டு நடந்து வருகின்ற மிக அருமையான நெகிழ்வான நிகழ்வு ஆகும்.
ஓர் அன்னையாக அனைவருக்கும் அருளை அள்ளி ஊட்டிவிடும் கோட்டை பெரிய மாரியம்மனுக்கு, நைவேத்தியம் படைக்கப்படுவதற்கு மாறாக ஊட்டிவிடப்படுகிறது என்பது இன்னொரு சிறப்பம்சமாக உள்ளது.
ஆடிப் பெருந்திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெறுகின்ற, கோட்டை பெரிய மாரியம்மன் திருவிழாவின் "மாரியம்மன் பொங்கல்" நாளில் சேலம் மாவட்டத்திற்கு 'உள்ளூர் விடுமுறை' விடப்படுகின்றது. [16][17][18][19][20]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கோடி நன்மைகள் தரும் சேலம் கோட்டை மாரியம்மன்". Retrieved 18 December 2025.
- ↑ "அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் விவரம்". Retrieved 18 December 2025.
- ↑ "கோட்டை மாரியம்மன் கோயில் சேலம்". Retrieved 18 December 2025.
- ↑ "கோட்டை மாரியம்மன் கோயில் சேலம்". Retrieved 18 December 2025.
- ↑ "அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில்,சேலம்". Retrieved 18 December 2025.
- ↑ "சேலம் என்னும் கோயில் நகரம் கோட்டை மாரியம்மன் கதை". Retrieved 18 December 2025.
- ↑ "கோயில் வரலாறு". Retrieved 18 December 2025.
- ↑ "அருள் தந்து காக்கும் அன்னை சேலம் கோட்டை மாரியம்மன்". Retrieved 18 December 2025.
- ↑ "விழாகோலமாக காட்சியளிக்கும் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கணபதி வழிபாடு". Retrieved 18 December 2025.
- ↑ "சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் முதல் முறையாக நடைபெற்ற தேரோட்டம்". Retrieved 18 December 2025.
- ↑ "சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம்". Retrieved 18 December 2025.
- ↑ "சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்". Retrieved 18 December 2025.
- ↑ "அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில்". Retrieved 18 December 2025.
- ↑ "sri kottai mari amman temple". Retrieved 18 December 2025.
- ↑ "சேலம் கோட்டை மாரியம்மன் சிறப்புகள்". Retrieved 18 December 2025.
- ↑ "சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா பூச்சாட்டுதலுடன் ஆரம்பம்". Retrieved 18 December 2025.
- ↑ "சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா". Retrieved 18 December 2025.
- ↑ "சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா". Retrieved 18 December 2025.
- ↑ "ஆடி மாதமும் அம்மன் திருவருளும்". Retrieved 18 December 2025.
- ↑ "சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூ.11 லட்சம் உண்டியல் காணிக்கை". Retrieved 18 December 2025.
வெளி இணைப்புகள்
[தொகு]- அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம் மாவட்டம்."hrce.tn.gov.in".
- சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் வரலாறு."hrce.tn.gov.in".