உள்ளடக்கத்துக்குச் செல்

சேலம் சுகவனேசுவர் கோயில்

ஆள்கூறுகள்: 11°39′25.3″N 78°09′35.4″E / 11.657028°N 78.159833°E / 11.657028; 78.159833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சேலம் அருள்மிகு சுகவனேஸ்வர் திருக்கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சேலம் சுகவனேசுவர் கோயில்
புவியியல் ஆள்கூற்று:11°39′25.3″N 78°09′35.4″E / 11.657028°N 78.159833°E / 11.657028; 78.159833
பெயர்
பெயர்:சேலம் சுகவனேசுவர் கோயில்
அமைவிடம்
ஊர்:சேலம்
மாவட்டம்:சேலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சுகவனேசுவர்
தாயார்:சொர்ணாம்பிகை
சுகவனேஸ்வரர் கோயில்

சேலம் சுகவனேஸ்வர் கோயில் என்ற சிவன் கோயில், தமிழ்நாட்டில் சேலம் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. சுகமுனிவர் வழிபட்டதால் 'சுகவனம்' என்றும், தேவர்கள் பாவம் நீங்கியதால் 'பாபநாசம்' என்றும், காமதேனு வழிபட்டதால் 'பட்டீஸ்வரம்' என்றும் இப்பகுதி அழைக்கப்படுகிறது. இக்கோயில் தீர்த்தம் அமண்டுக தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது.

மூலவர், இறைவி

[தொகு]

சுகவன முனிவர் கிளியின் உருவத்தில் இங்கு உள்ள மூர்த்தியை வழிபட்டதால் இக்கோயிலின் இறைவன் சுகவனேசுவர பெருமான் என அழைக்கப்படுகிறார். திரு செம்பொன் நாயகி என்றும் சொர்ணாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்.

பிற தெய்வங்கள்

[தொகு]

விநாயகர்

[தொகு]

இக்கோயிலில் மதவடி விநாயகர், வலம்புரி விநாயகர், சுகவன கணபதி, க்ஷிப்த கணபதி, ந்ருத கணபதி, விகடசக்ர கணபதி என்ற வகையில் தனித்தனிச் சிறப்புகள் கொண்ட பல கணபதி சிலைகள் காணப்படுகின்றன.

முருகன்

[தொகு]

முருகனுக்கு தனிச்சன்னதி உள்ளது. அறுபடை வீடுகளில் உள்ள அனைத்து முருகப்பெருமான் அவதாரங்களும் சிற்பமாய் செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

தல புராணம்

[தொகு]

தலபுராணம், அட்டாவதான சொக்கலிங்கப் புலவரால் இயற்றப்பட்ட 'பாபநாச புராணம்' என்ற நூலில் உள்ளது. 2022-ல் இதன் வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.

திருப்புகழ்

[தொகு]

"திருவளர் சேலத் தமர்வோனே" என்பது அருணகிரிநாதர் பாடிய ஒரு புகழ்பெற்ற திருப்புகழ் பாடலின் (பரிவுறு நாரற்று - பாடல் எண் 934) வரிகள். இதன் பொருள், "சேலம் (சுகவனம்) தலத்தில் வீற்றிருக்கும் இறைவனே" (முருகப்பெருமானை நோக்கி), "வளர்ச்சியுற்ற, செல்வங்கள் நிறைந்த" சேலத்து மண்ணில் வசிப்பவனே என்று பொருள்படும்; இது முருகனைத் துதிக்கும் ஒரு சிறப்புப் பெயராகும்.

பரிவுறு நாரற்று

[தொகு]

தனதன தானத் தனதன தானத்

    தனதன தானத் ...... தனதான

பரிவுறு நாரற் றழல்மதி வீசச்

    சிலைபொரு காலுற் ...... றதனாலே

பனிபடு சோலைக் குயிலது கூவக்

    குழல்தனி யோசைத் ...... தரலாலே

மருவியல் மாதுக் கிருகயல் சோரத்

    தனிமிக வாடித் ...... தளராதே

மனமுற வாழத் திருமணி மார்பத்

    தருள்முரு காவுற் ...... றணைவாயே

கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்

    தொடுகும ராமுத் ...... தமிழோனே

கிளரொளி நாதர்க் கொருமக னாகித்

    திருவளர் சேலத் ...... தமர்வோனே

பொருகிரி சூரக் கிளையது மாளத்

    தனிமயி லேறித் ...... திரிவோனே

புகர்முக வேழக் கணபதி யாருக்

    கிளையவி நோதப் ...... பெருமாளே.

எளிய விளக்கம்

[தொகு]

பரிவுறு நார் அற்று அழல்மதி வீச சிலைபொரு காலுற்று அதனாலே பனிபடு சோலைக் குயிலது கூவ குழல்தனி யோசைத் தரலாலே மருவியல் மாதுக்கு இருகயல் சோர தனிமிக வாடித் தளராதே மனமுற வாழத் திருமணி மார்பத்து அருள்முருகா உற்று அணைவாயே கிரிதனில் வேல்விட்டு இருதொளை யாகத் தொடுகுமரா முத்தமிழோனே கிளரொளி நாதர்க்கு ஒருமகனாகி திருவளர் சேலத்து அமர்வோனே பொருகிரி சூரக் கிளையது மாள தனிமயி லேறித் திரிவோனே புகர்முக வேழக் கணபதி யாருக்கு இளைய விநோதப் பெருமாளே.

பொருள் விளக்கம்

[தொகு]

திருவளர்: செல்வம், அழகு, சிறப்பு வளர்ந்த; செழிப்பான. சேலம்: சேலம் (சுகவனம்) என்னும் தலத்தைக் குறிக்கிறது. இது சுகவனேசுவரர் கோயில் அமைந்துள்ள இடம். தமர்வோனே: தமர்ந்து வாழ்பவனே, வீற்றிருப்பவனே, உறவு கொண்டவனே.

பரிவுறு நார் அற்று அழல்மதி வீச ... இரக்கம் கலந்த அன்பு சிறிதும் இல்லாமல் நெருப்பை நிலவு வீசுவதாலும், சிலைபொரு காலுற்று அதனாலே ... பொதிய மலையினின்று பொருந்தவரும் தென்றல் காற்று (சூடாக) மேலே படுவதனாலும், பனிபடு சோலைக் குயிலது கூவ ... குளிர்ச்சியுள்ள சோலையில் குயில் ஒன்று சோகமாய்க் கூவுவதாலும், குழல்தனி யோசைத் தரலாலே ... புல்லாங்குழல் ஒப்பற்ற (சோக) ஓசையைத் தருவதாலும், மருவியல் மாதுக்கு இருகயல் சோர ... உன்னைப் பிரிந்து தனிமையில் இருக்கும் இந்தப் பெண் தன் இரண்டு கயல் மீன் போன்ற கண்கள் சோர்வடைய, தனிமிக வாடித் தளராதே ... தனியே கிடந்து மிகவும் வாட்டமுற்று தளர்ச்சியுறாமல், மனமுற வாழத் திருமணி மார்பத்து ... அவளின் நொந்த மனம் ஒருநிலைப்பட்டு நிம்மதியுடன் வாழ, உன் அழகிய ரத்ன மணிமாலை அணிந்த மார்பிடத்தே, அருள்முருகா உற்று அணைவாயே ... அருளே உருவான முருகனே, நீ வந்து அவளை இறுக்க அணைவாயாக. கிரிதனில் வேல்விட்டு இருதொளை யாகத் தொடுகுமரா ... கிரெளஞ்ச மலைமீது வேலைச் செலுத்தி, அது பெருந் தொளைபட்டு அழியும்படிச் செய்த குமரனே, முத்தமிழோனே ... இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைகள் உள்ள தமிழுக்குப் பெருமானே, கிளரொளி நாதர்க்கு ஒருமகனாகி ... பெரும் ஜோதி ஸ்வரூபனான சிவபிரானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி, திருவளர் சேலத்து அமர்வோனே ... லக்ஷ்மிகரம் பொருந்திய சேலம் என்ற பதியில் வீற்றிருப்பவனே, பொருகிரி சூரக் கிளையது மாள ... போருக்கு எழுந்த ஏழு கிரிகளும், சூரனும், அவன் சுற்றத்தாரும் இறக்க, தனிமயி லேறித் திரிவோனே ... ஒப்பற்ற மயில் வாகனத்தில் ஏறி உலகை வலம் வந்தவனே, புகர்முக வேழக் கணபதி யாருக்கு ... புள்ளியை உடைய யானையின் முகத்தவரான கணபதிப் பெருமானுக்கு இளைய விநோதப் பெருமாளே. ... இளையவனாகிய அற்புதப் பெருமாளே.

முழுப் பாடலின் சூழல்

[தொகு]

இந்த வரிகள், முருகப்பெருமான் சேலத்தில் உள்ள சுகவனேசுவரர் கோயிலில் வீற்றிருந்து, சூரனை வெல்லும் வீரத்தையும், மயிலில் ஏறி வரும் அழகையும், கணபதிக்கு அண்ணனாக இருப்பதையும் போற்றிப் பாடும் பாடலின் ஒரு பகுதியாகும்.

சிறப்புகள்

[தொகு]

இந்த கோவில் நான்கு யுகங்களாக உள்ளது. ராகு, கேது, செவ்வாய் கிரகங்களால் ஏற்படும் தோஷங்களுக்கு இங்குப் பரிகாரம் செய்யலாம்; திருமணத் தடைகள் நீங்கி, நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. சுகமுனிவர், கிளியாக மாறி, சேலத்தில் உள்ள இந்த இடத்தில் சிவபெருமானை வழிபட்டு, தனது சாபத்தைப் போக்கிக் கொண்டார். இன்றும், முனிவர் மற்றும் வேட்டைக்காரனின் சிலைகள் கோவிலில் உள்ளன. இங்குள்ள கால பைரவர் சன்னதியில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அமைவிடம்

[தொகு]

Sri Sugavaneswarar Swamy Temple, Mettu Agraharam, I Agraharam, Salem, Tamil Nadu 636001 | 11.65721960838395, 78.15984570842649

https://www.google.com/maps/place/Sri+Sugavaneswarar+Swamy+Temple/@11.6572616,78.1576195,1182m/data=!3m1!1e3!4m10!1m2!2m1!1sSalem+sugavaneshwarar+temple!3m6!1s0x3babf1cc4d9ea4f5:0xa5c6c1b82d483c5b!8m2!3d11.6570436!4d78.1597507!15sChxTYWxlbSBzdWdhdmFuZXNod2FyYXIgdGVtcGxlWh4iHHNhbGVtIHN1Z2F2YW5lc2h3YXJhciB0ZW1wbGWSAQxoaW5kdV90ZW1wbGXgAQA!16s%2Fg%2F1tfk2wcn?entry=ttu&g_ep=EgoyMDI1MTIwOS4wIKXMDSoKLDEwMDc5MjA3M0gBUAM%3D

வெளி இணைப்புகள்

[தொகு]