கோலாலம்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோலாலம்பூர்
Kuala Lumpur
மாநகரம்
கடிகாரச் சுற்றில் மேலிருந்து இடதுபுறமாக: பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள், பெட்டாலிங் தெரு, மாஸ்ஜித் ஜாமிக் மற்றும் கோம்பாக்/கிள்ளான் ஆற்றுச் சங்கமம், துகு நெகரா, நெகாரா பள்ளிவாசல், படத்தின் மையம்: கேஎல் கோபுரம்
கடிகாரச் சுற்றில் மேலிருந்து இடதுபுறமாக: பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள், பெட்டாலிங் தெரு, மாஸ்ஜித் ஜாமிக் மற்றும் கோம்பாக்/கிள்ளான் ஆற்றுச் சங்கமம், துகு நெகரா, நெகாரா பள்ளிவாசல், படத்தின் மையம்: கேஎல் கோபுரம்
கோலாலம்பூர் Kuala Lumpur -இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கோலாலம்பூர் Kuala Lumpur
சின்னம்
அடைபெயர்(கள்): கேஎல், ஒளிமிக்க பூங்கா நகரம்
குறிக்கோளுரை: Maju dan Makmur
(தமிழ்: முன்னேறு,வளம் பெறு)
நாடுமலேசியா
மாநிலம்கூட்டாட்சிப் பகுதி
தோற்றம்1857
நகர அந்தஸ்து பெற்றது1.2.1972
கூட்டாட்சி பகுதி நிலை வழங்கப்பட்டது1.2.1974
அரசு
 • மேயர் (Datuk Bandar)அகமது பவுத் இசுமாயில்[1][2]
திசம்பர் 14, 2008 முதல்
பரப்பளவு[3]
 • மாநகரம்243 km2 (94 sq mi)
ஏற்றம்21.95 m (72 ft)
மக்கள்தொகை (2010)[4]
 • மாநகரம்1,627,172 (முதல்)
 • அடர்த்தி6,696/km2 (18,912/sq mi)
 • பெருநகர்7,239,871
 • மக்கள்கேஎல் லைட் / கோலாலம்பூரியர்
மனித மேம்பாட்டுக் குறியீடு
 • HDI (2010)0.795 (very high) (2வது)
நேர வலயம்ம.சீ.நே (ஒசநே+8)
 • கோடை (பசேநே)வழக்கில் இல்லை (ஒசநே+8)
அஞ்சல் குறியீடு5xxxx
Mean solar timeUTC + 06:46:48
தொலைபேசிக் குறியீடு03
License plate prefixW (வாடகையுந்துகளைத் தவிர்த்த அனைத்து வண்டிகளுக்கும்)
HW (வாடகையுந்துக்களுக்கு மட்டும் taxis)
ISO 3166-2MY-14
இணையதளம்www.dbkl.gov.my

கோலாலம்பூர் (Kuala Lumpur, மலாய் மொழி ஒலிப்பு: குவாலா லும்பூர்) மலேசியாவின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் ஆகும்[5]. 243 km2 (94 sq mi) பரப்பளவுள்ள இந்த நகரின் மக்கள் தொகை, 2010 ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 1.5 மில்லியன் ஆகும்; 2012 மதிப்பீட்டின்படி 1.6 மில்லியன் ஆகும்.[5] பெரும் கோலாலம்பூர், அல்லது கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் 7.2 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.[6] மலேசியாவில் மக்கள் தொகையிலும் பொருளாதாரத்திலும் மிக விரைவாக வளர்ந்து வரும் பெருநகரப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. உலகத் தரவரிசையில் 48வதாக பாரின் பாலிசி நிறுவனமும் [7] 67வதாக 2திங்க் நவ் நிறுவனமும்[8] மதிப்பிட்டுள்ளன.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ள தமிழ்ப் பாதகை

மலேசியாவின் நாடாளுமன்றம் இங்கு அமைந்து உள்ளது. நாட்டின் நிருவாக மற்றும் நீதித்துறை தலைமையகங்கள் இங்கிருந்து 1999ஆம் ஆண்டில் புத்ராஜெயாவிற்கு மாற்றப்பட்டன.[9] இருப்பினும் சில நீதித்துறை அலுவலகங்கள் இன்னும் இங்கு இயங்கி வருகின்றன. கோலாலம்பூரில் மலேசியப் பேரரசர் யாங் டி-பெர்துவான் அகோங்கின் அரண்மனை இஸ்தானா நெகாரா உள்ளது.

இது மலேசியாவின் மூன்று நடுவண் ஆட்சி பிரதேசங்களில் ஒன்று.[10] மலேசியத் தீபகற்பத்தின் மத்திய மேற்குக் கடலோரத்தில் அமைந்துள்ள கோலாலம்பூர் சிலாங்கூர் மாநிலத்தால் சுற்றிவர சூழப்பட்டுள்ளது.[11] கோலாலம்பூர் நகரவாசிகள் கேலைட்சுகள் என பொதுவழக்கில் குறிப்பிடப்படுகின்றனர்.[12]

1990கள் முதல், இந்த நகரில் பல பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள், அரசியல் மாநாடுகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 1998ஆம் ஆண்டு இங்கு பொதுநலவாய விளையாட்டுக்கள் நடந்தேறின. பார்முலா 1 உலகப் போட்டிகளின் அங்கமாக இங்கு நடைபெறும் தானுந்து பந்தயம் விளங்குகிறது.

இங்குள்ள பெட்ரோனாஸ் கோபுரங்கள் உலகின் அதி உயரமான இரட்டைக் கோபுரங்களாக இருந்து வருகின்றன. மேலும் 20 ஆம் நூற்றாண்டின் அதியுயர்ந்த கட்டிடமாகவும் பதிவு பெற்றன.

வரலாறு[தொகு]

கிள்ளான் ஆறும் கோம்பாக் ஆறும் கூடும் இடத்திலுள்ள ஜமாய்க் மசூதி

1850களில், கிள்ளானில் மலாய் மன்னராக இருந்த ராஜா அப்துல்லா, வெள்ளீயச் சுரங்கங்களை அமைக்கும் பணிக்குச் சீனத் தொழிலாளர்களைக் கொண்டு வந்ததில் இருந்து, கோலாலம்பூரின் வரலாறு தொடங்குகிறது.[13] இந்தத் தொழிலாளர்கள் அம்பாங், புடு, பத்து எனும் இடங்கில் சுரங்கங்களை அமைக்க, கோம்பாக் ஆறும் (முன்னதாக லும்பூர் ஆறு - கலங்கிய ஆறு) கிள்ளான் ஆறும் கலக்கும் இடத்தில் தங்கினர். பின்னர், இந்தச் சுரங்கங்கள் வணிக மையங்களாக மாறின. அவையே பெரிய நகரமாக உருவெடுக்க வழி வகுத்தது.[14]

வெள்ளீயம் எடுப்பவர்கள் அம்பாங்கில் தங்கி[15] தங்களுக்குள் அதிகார மையங்களை உருவாக்கிக் கொண்டனர்.[16] அவர்களுக்குள் இருபெரும் சீன கோஷ்டிகள் உருவாகின. பெரும்பான்மை ஹக்காக்கள் கொண்ட ஹை சான் இரகசிய சமூகமும், ஹொக்கைன் பிரிவைச் சேர்ந்த கீ ஹின் சமூகமும் வெள்ளீய உற்பத்தியை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சண்டையிட்டு வந்தன.[16] அடிக்கடி நடைபெற்ற இந்தச் சண்டைகளால் உற்பத்தி பாதிப்படைந்தது. அப்போது மலாயாக் கூட்டமைப்பை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் கோலாலம்பூரை ஆட்சி செய்வதற்கு காப்பித்தான் சீனா எனும் ஒரு சீனத் தலைவரை நியமித்தனர்.[17] முதல் காப்பித்தானாக லுக்குட் சுரங்கத்தின் முதலாளியாக இருந்த ஹியு சியு என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்

துவக்க காலங்களில் கோலாலம்பூர் சிலாங்கூர் உள்நாட்டுப் போர், தொடர்ந்த நோய்த்தொற்றுக்கள், தீ மற்றும் வெள்ளக் கேடுகள் என பல சிக்கல்களை சந்தித்தது.[15] 1870களில் மூன்றாவது சீன காபிடனாக விளங்கிய யாப் ஆ லோய் முறையான, சீரான வளர்ச்சிக்கு வித்திட்டார். ஓர் சிற்றூராக விளங்கிய கோலாலம்பூரை வளர்முக சுரங்க நகரமாக மாற்றினார்.[18] 1880இல் சிலாங்கூர் மாநிலத் தலைநகர் உத்திகளுக்காக கிளாங்கிலிருந்து கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது.[19]

தற்கால கோலாலம்பூரின் மீள்மேம்பாடு[தொகு]

கப்பித்தான் யாப் ஆ லோய், தற்கால கோலாலம்பூரின் நிறுவனர்

1881ஆம் ஆண்டில் முன்னதாக சேதப்படுத்திய தீ விபத்தினை அடுத்து வெள்ளம் சூழ்ந்து நகரைச் சேதப்படுத்தியது. இவற்றால் நகரின் மரத்தினாலும் அடப் என்ற தென்னக்கீற்றுகளாலும் ஆன கட்டமைப்புக்கள் பலவும் முற்றிலும் அழிந்தன. இதனையடுத்து சிலாங்கூரின் பிரித்தானிய ஆட்சியர், பிராங்க் ஸ்வெட்டன்ஹாம், கட்டிடங்களை செங்கற்கள்,ஓடுகள் கொண்டு கட்ட விரும்பினார்.[20] எனவே கோலாலம்பூரின் மீளமைப்பை முடுக்கிவிட காபிடன் யாப் ஆ லோய் செங்கற் சூலைகள் அமைக்க பெரும் நிலப்பகுதியை வாங்கினார். இந்த இடமே இன்று பிரிக்பீல்ட்சு (லிட்டில் இந்தியா) என்று வழங்கப்படுகிறது. நகரத்தின் வடிவமைப்பை அவர் மீண்டும் சீராக்கினார். அப்போது கட்டப்பட்ட பல செங்கற் கட்டிடங்களும் தென் சீனத்தின் கடைக் கட்டிடங்களைப் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன;வீடுகளின் முதல்தள முகப்பு தெருவோர நடைபயணிகளுக்கு நிழல் தருமாறு தரைத்தளம் உள்ளடங்கியும் (ஐந்தடி வழி) திறன்மிக்க தச்சு வேலைப்பாடுகளுடனும் அமைந்திருந்தன.இவையே இந்தப் பகுதியின் தனித்துவமிக்க கட்டிட வடிவமைப்பாக திகழ்ந்தது. தொடர்வண்டி நிலையம் வளரும் நகருக்கான அணுக்கத்தைக் கூட்டியது. 1890களில் விரைவாக கண்ட வளர்ச்சியால் சுகாதார வாரியம் உருவானது. வெள்ளீயச் சுரங்கங்களை நகருடன் இணைத்து யாப் ஆ லோய் $20,000 செலவில் பல சாலைகளை கட்டமைத்தார். அம்பங் சாலை, புடு சாலை, பெடலிங் தெரு என்பன முதன்மைச் சாலைகளாக அமைந்தன.

சீன காபிடன் என்ற பதவியால் யாப் ஆ லோய்க்கு மலாய் தலைவர்களுக்கு இணையான அதிகாரங்கள் இருந்தன. இதனைக்கொண்டு சட்ட சீர்திருத்தங்களையும் புதிய சட்ட முறைமையையும் கொணர்ந்தார். ஆறு பேர் கொண்ட காவல்துறை கொண்டு சட்ட ஒழுங்கை நிலை நாட்டினார். 60 பேர் வரை இருக்கக்கூடிய சிறைச்சாலையைக் கட்டினார். கோலாலம்பூரின் முதல் பாடசாலையையும், பெடலிங் சாலையில் மரவள்ளிக்கிழங்கு ஆலையையும் நிறுவினார்.

1896இல் புதியதாக உருவாக்கப்பட்ட மலாய் கூட்டாட்சி மாநிலங்களின் தலைநகரமாக கோலாலம்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டது.[21] மெதுவாக பல்வேறு சமூகங்கள் பல்வேறு பகுதிகளில் குடியேறத் துவங்கினர். சீனர்கள் பெரும்பாலும் கிளாங் ஆற்றின் கிழக்கே சீனாடவுனை ஒட்டிய வணிக மையமான சந்தைச் சதுக்கத்தில் குடியேறினர். மலாய் மக்கள், தமிழ் செட்டியார்கள், இந்திய இசுலாமியர் ஜாவா தெருவினை (இன்றைய ஜாலன் துன் பெராக்) ஒட்டி குடியேறினர். படாங் என்றழைக்கப்பட்ட இன்றைய மெர்டேக்கா சதுக்கத்தில் பிரித்தானிய நிர்வாக அலுவலகங்கள் அமைந்திருந்தன.[15]

இரண்டாம் உலகப் போர்[தொகு]

இரண்டாம் உலகப்போரின் போது கோலாலம்பூரிலுள்ள தெருவில் சப்பானிய படைகள். சப்பானிய படைகள் ஹை தெருவில் உள்ள இடையூறுகளை களையும் காட்சி

இரண்டாம் உலகப் போரின்போது, சனவரி 11, 1942 அன்று கோலாலம்பூர் சப்பானியர்களால் கைப்பற்றப்பட்டது. ஆகத்து 15, 1945 வரை நகரம் அவர்களின் வசம் இருந்தது.[22] இந்தப் போர்க் காலத்தில் இரப்பர், வெள்ளீயம் பண்டச்சந்தைச் சரிவு, மலேசிய அவசரநிலை முதலிய நிகழ்வுகளை எதிர்கொண்டது. மேலும் பொதுவுடமைக் கொள்கைசார் போராட்டங்கள் மிகுந்திருந்தன.[20] 1957இல் பிரித்தானியர்களிடமிருந்து மலேயக் கூட்டாட்சி விடுதலை பெற்றது.[23] மலேசியா உருவான செப்டம்பர் 16, 1963 வரை தலைநகரமாக தொடர்ந்தது.

1969, மே 13 இனச்சண்டைகள்[தொகு]

மே 13, 1969 அன்று மலேசியாவின் மோசமான இனச்சண்டைகள் கோலாலம்பூரில் நடந்தேறின.[24] தங்கள் சமூக-அரசியல் நிலை குறித்து அதிருப்தி அடைந்திருந்த மலாயர்களுக்கும் அரசியல் செல்வாக்கு மிக்க சீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்தக் கலவரங்களில் 196 நபர்கள் உயிரிழந்தனர்.[24] இதன் பின்னணியில் சீனர்களின் ஏகபோகத்தைக் குறைக்கும் வகையில் நாட்டின் பொருளியல் கொள்கைகளில் பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தற்கால கோலாலம்பூர்[தொகு]

கோலாலம்பூர் 1972இல் நகரமாக தகுதிபெற்றது; விடுதலையடைந்த மலேசியாவில் ஒரு குடியேற்றத்திற்கு வழங்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.[25] பின்னர், பெப்பிரவரி 1, 1974 அன்று கூட்டாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.[26] 1978ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்திற்கு ஷா ஆலம் புதிய மாநிலத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.[27] மே 14, 1990இல் நூற்றாண்டு நகராட்சி சாதனையைக் கொண்டாடியது. புதிய கொடியும் நகரப்பண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டன.

1998இல் ரிபார்மசி என்ற அரசியல் இயக்கம் கோலாலம்பூரில் துவங்கியது.[28] முன்னாள் மலேசிய துணைப் பிரதமர் அன்வர் இப்ராகிமின் வெளியேற்றம் மற்றும் கைதைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் அவரது ஆதரவாளர்களால் 1999இல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. அவரது விடுதலையைக் கோரியும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கூட்டும் சீர்திருத்தங்களைக் கோரியும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் அரசு நிர்வாகச் செயல்பாட்டில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.[28]

பெப்பிரவரி 1, 2001 அன்று புத்ரஜெயா கூட்டாட்சிப் பகுதியாகவும் கூட்டாட்சி அரசின் தலைநகரமாகவும் அறிவிக்கப்பட்டது.[29] கோலாலம்பூரிலிருந்து அரசு நிர்வாக அலுவலகங்களும் நீதித்துறை அலுவலகங்களும் புத்ரஜெயாவிற்கு மாற்றப்பட்டன. இருப்பினும் நாடாளுமன்றத்தை கோலாலம்பூர் தக்க வைத்துக் கொண்டது.[30] அரசியலமைப்பின் தலைவரான மன்னரின் இருப்பிடமும் இங்கேயே உள்ளது.[31]

புவியியல்[தொகு]

கோலாலம்பூர் நகரம் கிளாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளத்தாக்கின் கிழக்கில் டிடிவாங்சா மலைகளும், வடக்கிலும் தெற்கிலும் பல சிறு குன்றுத் தொடர்களும், மேற்கில் மலாக்கா நீரிணையும் அமைந்துள்ளன. குவாலா லும்பூர் என்ற மலாய் மொழிச் சொல்லிற்கான "கலங்கிய சங்கமம்" என்ற பொருளுக்கேற்ப இந்த நகரம் கிளாங் ஆறும் கொம்பக் ஆறும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.[32]

சிலாங்கூர் மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோலாலம்பூர் சிலாங்கூர் மாநில அரசாட்சியின் கீழ் இருந்து வந்தது. 1974ஆம் ஆண்டில் செலாங்கூர் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு முதல் மலேசிய கூட்டாட்சி அரசின் நேரடி ஆட்சியில் அமைந்த கூட்டாட்சிப் பிரதேசமாக உருவானது. மலேசியத் தீபகற்பத்தின் சமதளமான மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளதால் மலேசியாவின் மற்ற நகரங்களை விட விரைவாக வளர்ச்சி கண்டுள்ளது. நகராட்சியின் பரப்பளவு 243 km2 (94 sq mi)ஆகவும்[3], சராசரி உயரம் 21.95 m (72.0 ft)ஆகவும் உள்ளது.[33]

பருவநிலையும் காலநிலையும்[தொகு]

கிழக்கில் டிடிவாங்சா மலைகளாலும் மேற்கில் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவினாலும் பாதுகாக்கப்பட்டுள்ள கோலாலம்பூரில் வெப்பமண்டல மழைக்காடுகள் வானிலை நிலவுகிறது. சூரிய ஒளி மற்றும் வெப்பத்துடன் கூடிய அளவு மழைவீழ்ச்சியுடன் காணப்படுகிறது. முக்கியமாக அக்டோபர் முதல் மார்ச்சு வரையான வடகிழக்குப் பருவ காலத்தில் மிகுந்த மழை பெய்கிறது. வெப்பநிலை எப்போதும் ஒரே சீராக கூடுதல் ஏற்ற இறக்கமின்றி காணப்படுகின்றது. கூடுதல் வெப்பநிலை 31 மற்றும் 33 °C (88 மற்றும் 91 °F) ஆகவும் குறைந்த வெப்பநிலை 22 மற்றும் 23.5 °C (71.6 மற்றும் 74.3 °F)ஆகவும் விளங்குகிறது.[34][35] இங்கு ஆண்டுக்கு குறைந்தளவு மழையாக 2,600 mm (100 in)ஆவது பெய்கிறது; சூன், சூலை மாதங்களில் மழை குறைவு என்றபோதும் அப்போதும் மாதத்திற்கு 133 மில்லிமீட்டர்கள் (5.2 in) கூடுதலாக மழை பெய்கிறது.[34][36]

பெருமழைக் காலங்களில் நகர மையத்திலும் கீழ்ப்பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படுவது வழமையாக உள்ளது.[37] அண்மையிலுள்ள சுமாத்திராவின் காட்டுத்தீயினால் ஏற்படும் தூசுத் துகள்கள் இங்கு சிலநேரங்களில் மூட்டம் ஏற்பட ஏதுவாகின்றன. இதனுடன் கட்டுமானப் பணிகள், வாகனப்புகை உமிழ்வுகள் மற்றும் திறந்தவெளி எரித்தல்கள் இணைந்து சுற்றுப்புறத் தூய்மை கேட்டிற்கு வழிவகுக்கின்றன.[38]

தட்பவெப்ப நிலைத் தகவல், சுபங் ஜயா (கோலாலம்பூர் நகர மையத்திலிருந்து ஏறத்தாழ 8 கிமீ தொலைவில்)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 36
(97)
37
(99)
37
(99)
36
(97)
36
(97)
36
(97)
36
(97)
36
(97)
35
(95)
35
(95)
35
(95)
35
(95)
37
(99)
உயர் சராசரி °C (°F) 32.1
(89.8)
32.9
(91.2)
33.2
(91.8)
33.1
(91.6)
32.9
(91.2)
32.7
(90.9)
32.3
(90.1)
32.3
(90.1)
32.1
(89.8)
32.1
(89.8)
31.6
(88.9)
31.5
(88.7)
32.4
(90.3)
தாழ் சராசரி °C (°F) 22.5
(72.5)
22.8
(73)
23.2
(73.8)
23.7
(74.7)
23.9
(75)
23.6
(74.5)
23.2
(73.8)
23.1
(73.6)
23.2
(73.8)
23.2
(73.8)
23.2
(73.8)
22.9
(73.2)
23.2
(73.8)
பதியப்பட்ட தாழ் °C (°F) 18
(64)
20
(68)
20
(68)
21
(70)
21
(70)
20
(68)
19
(66)
20
(68)
20
(68)
21
(70)
21
(70)
19
(66)
18
(64)
மழைப்பொழிவுmm (inches) 192
(7.56)
181
(7.13)
251
(9.88)
292
(11.5)
191
(7.52)
133
(5.24)
136
(5.35)
155
(6.1)
197
(7.76)
258.5
(10.177)
297
(11.69)
246.9
(9.72)
2,530.4
(99.622)
சராசரி மழை நாட்கள் (≥ 1.0 mm) 11 12 14 16 13 9 10 11 13 16 18 15 158
சூரியஒளி நேரம் 186.0 194.9 207.7 198.0 207.7 195.0 201.5 189.1 165.0 170.5 153.0 161.2 2,229.6
Source #1: Jabatan Meteorologi Malaysia – Subang 1961–2010
Source #2: World Meteorological Organisation (UN, 1971–2000)[34]

ஆளுகை[தொகு]

கோலாலம்பூர் நகர அரங்கம்

கோலாலம்பூரை ஏப்ரல் 1, 1961 முதல் 1972ஆம் ஆண்டில் நகரமாக அறிவிக்கும் வரை தனியாள் நிறுவன அமைப்பில் கூட்டாட்சி தலைநகர் ஆணையர் நிர்வகித்து வந்தார். நகராட்சி அமைந்தபிறகு இந்த அதிகாரம் மேயர் (தாடுக் பண்டார்) வசம் சென்றது.[39] இதுவரை ஒன்பது மேயர்கள் பதவியேற்றுள்ளனர். தற்போதைய மேயராக அகமது புயாத் இஸ்லாமி திசம்பர் 14, 2008 முதல் ஆட்சி புரிந்து வருகிறார்.[40]

உள்ளாட்சி அமைப்பு[தொகு]

மலேசியாவின்கூட்டாட்சிப் பகுதிகளின் அமைச்சகத்தின் கீழியங்கும் கோலாலம்பூர் நகர அரங்கம் (கோலாலம்பூர் சிடி ஹால்) உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொள்கிறது.[39] இது பொதுச் சுகாதாரம், கழிவு அகற்றல் மற்றும் மேலாண்மை, நகரமைப்புத் திட்டமிடல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கட்டுமானப் பணிகள் கட்டுப்பாடு, சமூக பொருளியல் வளர்ச்சி மற்றும் ஊரக கட்டமைப்பின் பொதுப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது. இதன் செயல் அதிகாரியாக விளங்கும் மேயர் துறை அமைச்சரால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறார். 1970இல் உள்ளாட்சித் தேர்தல்கள் இடைநிறுத்தம் செய்தபிறகு இவ்வாறு மேயரை நியமிப்பதே வழமையாக உள்ளது.[41]

அரசியல்[தொகு]

மலேசியாவின் நாடாளுமன்றம் கோலாலம்பூரில் இயங்குகிறது. மலேசிய அரசியலமைப்பின்படி செயலாக்கம், நீதி மற்றும் சட்டமாக்கல் என மூன்று பிரிவுகள் ஆளுகையின் அங்கமாக விளங்குகின்றன.நாடாளுமன்றம் இரு அவைகளைக் கொண்டுள்ளது. மேலவை தேவான் நெகரா என்றும் கீழவை தேவான் ரக்யாத் என்றும் அழைக்கப்படுகின்றன.[10]

கோலாலம்பூர் நகரத்திலிருந்து கீழவைக்கு பதினோரு உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்[42]. 2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் முதன்முறையாக எதிர்கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பகாதன் ரக்யாத் கட்சிக்கூட்டணிக்கு ஐந்து இடங்களும் மக்கள் நீதிக்கட்சிக்கு நான்கு இடங்களும் அனைத்து மலேசிய இசுலாமிய கட்சிக்கு ஓரிடமும் கிடைத்துள்ளன. ஆளும் கட்சியான தேசிய முன்னணிக்கு ஓரிடமே கிடைத்துள்ளது.

பொருளியல்[தொகு]

பழைய சந்தைச் சதுக்கத்தின் (Medan Pasar) காட்சி
கோலாலம்பூரின் மையச் சந்தையில் உள்ள ஓர் நடைபாதை அங்காடி வளாகம்

மலேசியாவில் பொருளியல் மற்றும் தொழில்துறையில் விரைவாக முன்னேறிவரும் பகுதியாக கோலாலம்பூரும் அதன் சுற்றுப் பகுதிகளும் அமைந்துள்ளன.[43] அரசு அலுவலகங்கள் புத்ரஜெயாவிற்கு மாற்றப்பட்டபோதும் பாங்க் நெகரா மலேசியா (மலேசியத் தேசிய வங்கி), மலேசிய கம்பனிகள் ஆணையம், பங்குச்சந்தை ஆணையம் போன்ற சில அரசுத்துறை நிறுவனங்கள், பெரும்பாலான வெளிநாட்டுத் தூதரகங்கள் இங்கிருந்து மாறவில்லை.[44]

நாட்டின் பொருளியல் மற்றும் வணிக மையமாக இந்த நகரம் விளங்குகிறது. மேலும் நிதி, காப்புறுதி, நில முதலீடுகள், ஊடகங்கள் மற்றும் கலைகளுக்கு இது முதன்மை இடமாக அமைந்துள்ளது. உலக நாடுகளை உலகமயமாக்கல் அளவீட்டில் மதிப்பிடும் அமைப்பு (GaWC) மலேசியாவின் ஒரே உலகமயமாக்கல் நகரமாக கோலாலம்பூரை ஆல்ஃபா உலக நகரம் என அறிவித்துள்ளது.[45] இந்தப் பொருளியல் முன்னேற்றத்திற்கு சிபாங்கில் உள்ள கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், பல்லூடக சூப்பர் காரிடர் உருவாக்கம், கிளாங் துறைமுக விரிவாக்கம் போன்ற சுற்றுபகுதிகளில் மேற்கோண்ட கட்டுமானப் பணிகள் பெரிதும் தூண்டுதலாக அமைந்தன.

மலேசியாவின் பங்குச்சந்தையான புர்சா மலேசியா இங்கு அமைந்துள்ளது; நவம்பர்20, 2007 அன்று சந்தை முதலீடு $ 318.65 பில்லியனாக இருந்தது.[46]

2008இல் கோலாலம்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) RM73,536 மில்லியனாகவும் ஆண்டுக்கு 5.9 விழுக்காடாக வளர்வதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[47][48] தனிநபர் மொத்த உற்பத்தி RM48,556 ஆக இருந்தது.[47][49] இங்கு பணிக்கு அமர்த்தப்படுவோர் எண்ணிக்கை மதிப்பீடு 838,400 ஆகும்.[50] நிதி, காப்பீடு, நில முதலீடு, வணிக சேவைகள், மொத்த மற்றும் சில்லறை வணிகம், உணவகங்களும் தங்குவிடுதிகளும், போக்குவரத்து, சேமிப்பகங்கள், தொலைதொடர்பு, பொதுப் பயனுடமை சேவைகள், அரசு சேவைகள் என சேவைதுறை பொருளாதாரம் மொத்த பணிகளில் 83 விழுக்காடு இடங்களை அளித்துள்ளது.[50] ஏனைய 17 விழுகாட்டை தயாரிப்பு மற்றும் கட்டமைப்பு துறைகள் பங்களிக்கின்றன.

கோலாலம்பூரின் சராசரி வீட்டு மாத வருமானம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்த RM3,371 (USD 1,087)இலிருந்து 1999ஆம் ஆண்டில் RM4,105 (USD 1,324) ஆக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியை விட 66% கூடுதலாகும்.[51]

புகிட் பின்டாங்கில் தென்கத் டோங் சின் வழியே போருக்கு முந்தைய மேற்கூரையிட்ட வீடுகள் மீளமைக்கப்பட்டு உணவகங்களாகவும் குடியகங்களாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

பல பன்னாட்டு வங்கிகளும் காப்பீடு நிறுவனங்களும் கோலாலம்பூரிலிருந்து இயங்குகின்றன. உலகளாவிய இசுலாமிய நிதி அமைப்பு மையமாகவும் முன்னேறி வருகிறது.[52] உலகின் மிகப்பெரும் இசுலாமிய வங்கியான அல்-ராஜி வங்கி [53] மற்றும் குவைத் நிதி இல்லம் போன்ற வளைகுடா வங்கிகளும் பிற இசுலாமிய நிறுவனங்களும் கோலாலம்பூரில் பெருமளவில் இசுலாமிய விதியொட்டிய வங்கித்துறையை வளர்த்து வருகின்றன. மேலும் புர்சா மலேசியாவுடன் இணைந்து டௌ ஜோன்சு நிறுவனம் இசுலாமிய பங்குச்சந்தைப் பரிமாற்ற நிதியத்தை உருவாக்க முனைந்துள்ளது.[54] பல பன்னாட்டு நிறுவனங்களின் கிளை மற்றும் மண்டல அலுவலகங்கள் இங்கு இயங்குகின்றன.திசம்பர் 2007 நிலவரப்படி, பெட்ரோனாஸ் தவிர, 14 ஃபோர்ப்ஸ் 2000 நிறுவனங்கள் கோலாலம்பூரைத் தலைமையகமாகக் கொண்டுள்ளன.[55]

கல்வியும் மருத்துவத்துறையும் இந்த நகரின் மற்ற முக்கியமான பொருளியல் செயல்பாடுகளாகும். பல கல்வி நிறுவனங்கள் கோலாலம்பூரின் பரந்த பரப்பில் பன்முக கல்வித்திட்டங்களை வழங்கி வருகின்றன. பல தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகள் பொது உடல்நலம் மற்றும் பலதரப்பட்ட சிறப்பு மருத்துவ சிகிட்சைகளை வழங்கி வருகின்றன. மருத்துவச் சுற்றுலாவும் வளர்ந்து வரும் ஓர் பொருளியல் செயல்பாடாகும்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மூலம் பொருளாதாரத்தை வளர்க்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாகவே இங்கு மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிலையமும் மலேசிய வன ஆராய்ச்சி நிறுவனமும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும்[56] இயங்கி வருகின்றன. வரும் ஆண்டுகளில் மேலும் பல சிறப்பு ஆய்வகங்களை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுற்றுலா[தொகு]

1907இல் கட்டப்பட்ட ஜாமிஃ பள்ளிவாசல்
கோலாலம்பூரின் சுறுசுறுப்பான சீனநகர், பெடலிங் தெரு

நகரின் சேவைசார் பொருளியலில் சுற்றுலாத்துறை முக்கிய இடம் வகிக்கிறது. உலகின் பல பெரிய தங்குவிடுதி பிணைப்புகள் இங்கு தங்கள் தங்குவிடுதிகளை கொண்டுள்ளன. 2008ஆம் ஆண்டில் 8.94 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்த கோலாலம்பூர் உலகின் ஆறாவது மிகவும் வருகை புரிந்த நகரமாக விளங்குகிறது.[57] நகரத்தின் பன்முக பண்பாடு, ஒப்பீட்டளவில் குறைந்த செலவினங்கள், பலதரப்பட்ட உணவகங்கள் மற்றும் அங்காடிகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. சந்திப்புகள், ஊக்கிகள்,மாநாட்டு வசதிகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சார்ந்த சுற்றுலா அண்மைக்காலங்களில் இத்தொழிலின் வலிமை மிக்க கூறாக விளங்குகிறது. இங்குள்ள கூடிவரும் குறைந்த வாடகை தங்குவிடுதிகள் இத்துறையின் மற்றுமொரு போக்காக உள்ளது.

கோலாலம்பூரின் முதன்மை சுற்றுலாத் தலங்களாக மெர்டெக்கா சதுக்கம், மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம், பெடலிங் தெரு, இஸ்தானா நெகரா (தேசிய அரண்மனை), கோலாலம்பூர் கோபுரம், தேசிய அருங்காட்சியகம், மத்திய சந்தை, தேசிய நினைவுச் சின்னம் என்பனவாகும். சமயச் சுற்றுலாவிற்கு ஜாமிஃ பள்ளிவாசல், பத்துமலை போன்ற தலங்கள் உள்ளன.[58] கோலாலம்பூரில் மகாமாரியம்மன் கோவிலின் தைப்பூசம் ஊர்வலம் போன்ற பன்முக பண்பாட்டு திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

நகரத்தின் மனமகிழ்வு மையங்கள் ஜாலன் பி. ராம்லீ, ஜாலன் சுல்தான் இசுமாயில், அம்பங் சாலையால் அமைந்த தங்க முக்கோணத்திற்குள் அமைந்துள்ளன. பீச் கிளப், எஸபனடா, ஹக்கா ரிபப்ளிக் வைன் பார் மற்றும் உணவகம், ஹார்ட் ராக் கஃபே, லூனா பார், நுவோவோ, ரம் ஜங்கிள், தாய் கிளப், சூக் போன்ற இரவுமன்றங்கள், குடியகங்கள், உணவகங்கள் இங்கு அமைந்துள்ளன.

நுகர்வோர் விற்பனை[தொகு]

சூரியா கேஎல்சிசி
புக்கிட் பிந்தாங் நுகர்வோர் அங்காடிக் கொத்து

மலேசியாவின் நுகர்வோர் வணிக மற்றும் புதுப்பாங்கு மையமாக விளங்கும் கோலாலம்பூரில் 66 அங்காடி வளாகங்கள் அமைந்துள்ளன.[59] 2006ஆம் ஆண்டு நிலவரப்படி மலேசியாவின் நுகர்வோர் வணிகம் RM7.7 பில்லியன் (USD 2.26 பில்லியன்) மதிப்புடையதாக இருந்தது. இது மொத்த சுற்றுலா கொள்முதலில் 20.8 விழுக்காடு ஆகும்.[60]

பெட்ரோனாஸ் கோபுரங்களின் அடியில் அமைந்துள்ள சூரியா கேஎல்சிசி மலேசியாவின் முதன்மையான அங்காடி வளாகமாகத் திகழ்கிறது. இதைத் தவிர, தங்க முக்கோணத்தில் அமைந்துள்ள புக்கிட் பிந்தாங் மாவட்டத்தில் கோலாலம்பூரின் பெரும்பாலான அங்காடி வளாகங்கள் அமைந்துள்ளன. இங்கு பல உணவகங்கள், தெருவோர அல்பிரெஸ்கோக்கள், நுகர்வோர் வளாகங்கள் அமைந்துள்ளன. பங்சார் மாவட்டத்திலும் சில அங்காடி வளாகங்கள் அமைந்துள்ளன. சிலாங்கூரின் டாமன்சாராவில் நாட்டின் ஒரே 'ஐக்கியா' பன்னாட்டு அறைகலன் அங்காடி அமைந்துள்ளது.

அங்காடி வளாகங்களைத் தவிர கோலாலம்பூரில் துணிமணிகள், கைவினைப் பொருட்கள் போன்ற உள்ளூர்த் தயாரிப்புகளை விற்க பல பகுதிகள் பரவலாக அறியப்பட்டுள்ளன. பெட்டாலிங் தெரு எனப்படும் சீனநகர் இவ்வாறு புகழ்பெற்றது. இங்கு விடுதலைக்கு முந்தைய சீன மற்றும் குடிமைப்பட்ட கால கட்டிடங்களைக் காணலாம்.[61][62] பசார் செனி எனப்படும் கோலாலம்பூரின் மத்திய சந்தையில் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

2000 ஆண்டு முதல் மலேசிய சுற்றுலாத்துறை அமைச்சகம் பெரும் விற்பனை விழாவினை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்டுக்கு மூன்றுமுறை - மார்ச்சு, மே, திசம்பர் - நடத்தபடும் இந்த விழாவில் அனைத்து வணிக வளாகங்களும் பங்கேற்று கோலாலம்பூரை முதன்மை பொருள் வாங்கச் செல்லுமிடமாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.[63]

மக்கள்தொகையியல்[தொகு]

கோலாலம்பூரின் மக்கள் தொகையியல்[64]
மக்கள் இனம் விழுக்காடு
மலாய்கள்
47.2%
சீனர்கள்
40.2%
இந்தியர்கள்
10.3%
மற்ற பூமிபுத்திரா மற்றும் பிறர்
1.8%

கோலாலம்பூர் நகர்ப்பகுதியில் மட்டும் 2010இல் 1.6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.[4] மக்கள்தொகை அடர்த்தி சதுர கிமீக்கு 6,696 (2585 மைல்2)ஆக மலேசியாவின் மிகவும் அடர்ந்த நிர்வாக மாவட்டமாக விளங்குகிறது.[3] கோலாலம்பூர் பெருநகரில் மக்கள்தொகை 6.9 மில்லியனாக உள்ளது.[65][66]

கோலாலம்பூரில் பன்முக இன மக்கள் வாழ்ந்துவருகின்றனர்;முதன்மையான மூன்று இனங்களாக மலாய்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் உள்ளனர். இவர்களைத் தவிர ஆங்கிலோ இந்தியர்கள், மலேசியத் தீபகற்பம் மற்றும் கிழக்கு மலேசியாவின் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.[50][67]

1883இல் கட்டப்பட்ட புனித. ஜான் தேவாலயம்.

பிறப்பு விகிதங்கள் இறங்குமுகமானதை அடுத்து 15 அகவைக்கு குறைந்தோர் எண்ணிக்கை 1980இல் இருந்த 33%இலிருந்து 2000இல் 27%ஆக குறைந்துவிட்டது.[50] அதேநேரம் வேலைக்குச் செல்லும் 15–59 வயதுடையோர் எண்ணிக்கை அதே காலகட்டத்தில் 63%இலிருந்து 67% ஆக உயர்ந்துள்ளது.[50] வயதானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் விழுக்காடு 4%இலிருந்து 6% ஆக உயர்ந்துள்ளது.[50]

கோலாலம்பூரின் விரைவான வளர்ச்சியால் இந்தோனேசியா, நேபாளம், பர்மா, தாய்லாந்து, வங்காள தேசம், இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், மற்றும் வியட்நாம் நாடுகளிலிருந்து திறமைவேண்டா/குறைதிறன் தொழிலாளர்கள் மலேசியாவிற்கு வந்தனர். இவர்களில் பலருக்கு முறையான ஆவணங்கள் இருப்பதில்லை.[68][69]

ஸ்ரீமகாமாரியம்மன் கோவில் கோலாலம்பூரின் மிகப்பழமையான இந்து கோவிலாகும்.

கோலாலம்பூரில் பல சமயத்தவர்களும் இணைந்து வாழ்கின்றனர்.பல்வேறு சமயத்தினர்களுக்கும் வழிபட வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. மலாய்களும் இந்திய முசுலிம்களும் இசுலாமிய சமயத்தை கடைபிடிக்கின்றனர். சீனர்கள் பௌத்தம், கன்ஃபூசியசம், டௌவிசம் சமயங்களைப் பின்பற்றுகின்றனர். பெரும்பான்மையான இந்தியர்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். சில சீனர்களும் இந்தியர்களும் கிறித்தவத்தைப் பின்பற்றுகின்றனர்.[70]

பகாசா மலேசியா கோலாலம்பூரின் முதன்மை மொழியாக உள்ளது. பெரும்பாலோர் ஆங்கில அறிவு உடையவர்களாக உள்ளனர். வணிக மொழியாக விளங்கும் ஆங்கிலம் பள்ளிகளில் கட்டாயமாக கற்பிக்கப்படுகிறது.[67] கண்டோனீசு மற்றும் மண்டாரின் மொழிகள் மலேசியச் சீனர்களால் பேசப்படுகிறது.[71] மற்றுமொரு முதன்மை மொழியாக ஹக்கா மொழி உள்ளது. உள்ளூர் மலேசிய இந்தியர்களின் முதன்மை மொழியாக தமிழ் உள்ளது. பிற இந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் பஞ்சாபியும் இந்தியர்களால் பேசப்படுகிறது.

நகரக்காட்சிகள்[தொகு]

சங்காட் புக்கிட் பிந்தாங் பகுதியிலுள்ள ஓர் தங்குவிடுதியிலிருந்து எடுக்கப்பட்ட கோலாலம்பூரின் காட்சி.
Panorama of city with mixture of five- to ten-story buildings
மேற்பார்வை தளமொன்றிலிருந்து
இரவில் கோலாலம்பூரின் வான்வெளி - ஜெனடிங் ஹைலாண்டிலிருந்து

பூங்காக்கள்[தொகு]

மலேசிய நாடாளுமன்ற கட்டிடத்தை அடுத்து 92 எக்டேர் பரப்பளவில் நேர்த்தியாகப் பராமரிக்கப்படும் ஏரிப் பூங்கா முன்னர் பிரித்தானிய குடியேற்ற அலுவலரின் இல்லமாக இருந்தது. இந்தப் பூங்காவில் பட்டாம்பூச்சி பூங்கா, மான் பூங்கா, மந்தாரைத் தோட்டம் (Orchid Garden), செம்பருத்தித் தோட்டம் ஆகியனவுடன் தெற்காசியாவிலேயே பெரிய பறவைகள் பூங்காவான கோலாலம்பூர் பறவைப் பூங்காவும் அமைந்துள்ளது.[72] இதைத் தவிர, ஆசியான் சிற்பப்பூங்கா, கேஎல்சிசி பூங்கா, டிடிவாங்சா ஏரிப் பூங்கா, கெபோங்கிலுள்ள மெட்ரோபொலிடன் ஏரிப் பூங்கா, வன ஆராய்ச்சி கழகம், தமன் டாசிக் பெர்மைசூரி (அரசி ஏரிப் பூங்கா), புகிட் கியாரா தாவரப் பூங்கா, குதிரைச்சவாரிப் பூங்கா, மேற்கு பள்ளத்தாக்குப் பூங்கா மற்றும் புகிட் ஜலீல் பன்னாட்டுப் பூங்கா என பல பூங்காக்கள் அமைந்துள்ளன.

நகரத்தினுள்ளேயே மூன்று வனக் காப்பகங்கள் உள்ளன: நகரமையத்தில் உள்ள நாட்டின் பழைமையான 10.52 ha (26.0 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ள புகிட் நானாஸ் வனக் காப்பகம், 7.41 ha (18.3 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ள புகிட் சுங்கை புடி வனக் காப்பகம், 42.11 ha (104.1 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ள புகிட் சுங்கை பேசி வனக் காப்பகம். ஒரு நகரத்தின் உள்ளே அமைந்துள்ள உலகின் பழைமையான மாசுபடா வனப் பகுதியாக புகிட் நானாஸ் விளங்குகிறது.[73] இந்த வனப்பகுதிகள் பல விலங்குகள், குறிப்பாக குரங்குகள், மரச் சுண்டெலிகள்,அணில்கள் மற்றும் பறவைகள் தங்குமிடமாக உள்ளன.

கோலாலம்பூருக்கு அண்மையில் டெம்ப்ளர் பூங்கா உள்ளது;இதனை 1954ஆம் ஆண்டில் நெருக்கடி காலத்தில் சேர் ஜெரால்டு டெம்ப்ளர் உருவாக்கினார்.[74]

பண்பாடு[தொகு]

கலை[தொகு]

தேசிய அருங்காட்சியகத்தில் மலேசிய வரலாற்றைக் காட்டும் பட்டை

கோலாலம்பூர் மலேசியாவின் பண்பாட்டு நிகழ்வுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் மையமாக விளங்குகிறது. மகாமேரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நாடு முழுமையிலிருந்தும் சேகரிக்கப்பட்ட ஓவியங்களும் கலைப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[75] ஏழாயிரம் இசுலாமிய கலைப்பொருட்களும் அரிய சில காட்சிப்பொருட்களும் கொண்ட இசுலாமிய கலை அருங்காட்சியகத்தில் இசுலாமிய கலை குறித்த நூலகமும் உள்ளது.[76]

இரவில் கோலாலம்பூர் நகரமையம்

நிகழ்த்துகலைகளுக்கான முதன்மையான அரங்கமாக பெட்ரோனாஸ் பிலார்மானிக் மண்டபம் விளங்குகிறது. இங்கு மலேசிய பிலார்மானிக் ஆர்ச்செஸ்ட்ரா தன் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.[77] செந்துல் மேற்கில் அமைந்துள்ள கோலாம்பூர் நிகழ்த்துகலைகள் மையத்தில் (KLPac) பல நாடகங்கள், இசைக்கச்சேரிகள், திரைப்படக் காட்சிகள் அரங்கேறியுள்ளன.[78]

மலேசிய பன்னாட்டு உயர்தர உணவு விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாலம்பூரில் நடத்தப்படுகிறது.[79] இதேபோல ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு ஆடை வடிவமைப்பாளர்களுடன் உள்நாட்டு வல்லுனர்கள் போட்டியிடும் கோலாலம்பூர் புதுப்பாங்கு வாரம் நடத்தப்படுகிறது.[80]

விளையாட்டுகளும் மனமகிழ்வும்[தொகு]

புகிட் ஜலீலில் உள்ள தேசிய விளையாட்டரங்கம்

கோலாலம்பூர் பார்முலா 1 [81] திறந்த சக்கர தானுந்து போட்டிகள் ஏ1 கிராண்ட்பிரீ[82] மற்றும் விசையுந்து கிராண்ட் பிரீ[83] உலகப் போட்டிகள் நடக்கும் நகரங்களில் ஒன்றாகும். இவை சிலாங்கூர் மாநிலத்தில் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அடுத்த செபாங் பன்னாட்டு சுற்றுகையில் நடைபெறுகின்றன.

கேஎல் கிராண்ட் பிரீ சிஎஸ்ஐ 5*,[84] என்ற பன்னாட்டு குதிரைச் சவாரி நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறுகிறது.

கேஎல் கோபுரம் ஓட்டம்[85] மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு மராத்தான் ஓட்டம் ஆகியனவும் டூர் டெ லங்காவி என்ற மிதிவண்டி போட்டியும் [86] மற்றபிற விளையாட்டுக்களாகும்.

பாட்மின்டனுக்கான வருடாந்திர மலேசியா ஓப்பன் முக்கியமான மற்றொரு விளையாட்டு நிகழ்வாகும்.

1998ஆம் ஆண்டில் பொதுநலவாய விளையாட்டுக்களை நடத்திபிறகு பன்னாட்டுத் தரமுள்ள பல விளையாட்டு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கோலாலம்பூரில் பல குழிப்பந்தாட்ட மைதானங்கள் உள்ளன. 2015ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 127வது பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அமர்வு கோலாலம்பூரில் நடக்கவுள்ளது. இந்த அமர்வில் 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறும் இடம் தேர்ந்தெடுக்கப்படும்.[87]

ஊடகங்கள்[தொகு]

நாட்டின் முக்கியமான அலைபரப்பு மையமாக கோலாலம்பூர் கோபுரம் விளங்குகிறது.

கோலாலம்பூரில் நாளிதழ்கள்,வணிக இதழ்கள், எண்ணிம இதழ்கள் என பல செய்தித்தாள்கள் வெளியாகின்றன. நாளிதழ்களில் த ஸ்டார், நியூ ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ், த சன், மலாய் மெயில், கோஸ்மோ!, உடுசான் மலேசியா, பெரிடா அரியான், அரியான் மெட்ரோ ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும். குவாங் மிங் நாளிதழ், சின் சூ நாளிதழ், சைனா பிரெஸ், நன்யங் சியாங் பௌ போன்ற மண்டாரின் மொழி நாளிதழ்களும் தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை போன்ற தமிழ் நாளிதழ்களும் வெளியாகின்றன. எதிர்கட்சிகளின் கருத்துக்களை தாங்கி ஹராகா, சுயாரா கேடிலன், சியாசா, வாசிலா நாளிதழ்கள் வெளியாகின்றன. மலேசியாவின் தேசிய வானொலியான ரேடியோ டெலிவிசன் மலேசியாவின் (RTM) தலைமையகம் இங்குள்ளது. வணிகமய தொலைக்காட்சி அலைவரிசைகளான டிவி 3, 8டிவி, டிவி 9 போன்றவை கோலாலம்பூரைத் தலைநகராகக் கொண்ட மீடியா பிரைமா என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. நிகழ்ச்சிகள் மலாய் மொழி, ஆங்கிலம், தமிழ் மற்றும் சீன மொழிகளில் அலைபரப்பப்படுகின்றன.

மலேசியாவின் முதன்மை தொலைதொடர்பு சேவை வழங்குனர் டெலிகோம் மலேசியாவின் தலைமையகம் டிஎம் கோபுரத்தில் இயங்குகிறது.

அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் செயற்கைக் கோள் வழியாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளை பரப்பி வருகிறது.[88] தோகாவைச் சேர்ந்த அராபிய செய்தி தொலைக்காட்சி நிறுவனம் அல்-ஜசீரா கோலாலம்பூஇல் தனது ஆங்கிலச் செய்தி அலைவரிசையை நிறுவியுள்ளது.[89]

திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், இசை மற்றும் நூல்களில் கோலாலம்பூரை மையப்படுத்தி புனையப்பட்டுள்ளன. சியான் கானரி நடித்த என்ட்ராப்மென்ட், பெட்ரோனாஸ் கோபுரங்கள் தீயால் சூழப்பட்டதாக காட்டப்பட்ட சில்ட்ரன் ஆப் மென் ஆகியத் திரைப்படங்கள் கோலாலம்பூரை மையமாகக் கொண்டவை.[90] த சிம்ப்ஸ்சன்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளது.[91] கோலாலம்பூரை மையப்படுத்திய நூல்களாக கேஎல் 24/7,[92] மை லைப் அஸ் அ ஃபேக், மற்றும் டெமோக்ரசி [93] ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

கல்வி[தொகு]

அரசு புள்ளிவிவரங்களின்படி கோலாலம்பூரின் படிப்பறிவு பெற்றோர் வீதம் 2000 ஆம் ஆண்டில் 97.5% ஆக இருந்தது; இது மலேசியாவின் வேறெந்த மாநிலம் அல்லது ஆட்சிப்பகுதியை விடக் கூடுதலானதாகும்.[94] இங்கு மலாய் மொழி பயிற்றுமொழியாக உள்ளது. ஆங்கிலம் கட்டாயப் பாடமாகவும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு பயிற்றுமொழியாகவும் உள்ளது. சில பாடங்களுக்கு தமிழ் அல்லது மண்டாரினில் பயிற்றுவிக்கும் பள்ளிகளும் உள்ளன.

கோலாலம்பூரில் 13 மூன்றாம்நிலை கல்வி நிறுவனங்களும் 79 உயர்நிலைப் பள்ளிகளும் 155 துவக்கப்பள்ளிகளும் 136 கிண்டர்கார்டன் பள்ளிகளும் உள்ளன.[95] நூறாண்டுகளுக்கும் மேலாக புகிட் பின்தாங் பெண்கள் பள்ளி (1893–2000, பின்னர் தமன் சாமெலின் பெர்காசாவிற்கு மாற்றப்பட்டது),விக்டோரியா கல்விநிலையம் (1893), மெதாடிஸ்ட் பெண்கள் பள்ளி (1896), மெதாடிஸ்ட் ஆண்கள் பள்ளி (1897), புகிட் நானாஸ் கன்னிமாடம் (1899), புனி ஜான் கல்விநிலையம் (1904) போன்ற கல்வி நிலையங்கள் இருந்துள்ளன.

1949ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மலாயாப் பல்கலைக்கழகம் மலேசியாவின் மிகப்பழமையானப் பல்கலைக்கழகமாகும்.[96][97] இங்குள்ள பிற பல்கலைக்கழகங்கள்: மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம், துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம், யூசிஎஸ்ஐ பல்கலைக்கழகம், பன்னாட்டு மருத்துவ பல்கலைக்கழகம், மலேசியா திறந்தநிலைப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர் பல்கலைக்கழகம், வாவாசன் திறந்தநிலைப் பல்கலைக்கழகம்.

போக்குவரத்து[தொகு]

1910ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோலாலம்பூர் தொடர்வண்டி நிலையம்.

மற்ற ஆசிய நகரங்களைப் போலன்றி கோலாலம்பூரில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வண்டி ஓட்ட வேண்டியுள்ளது[98]. எனவே இந்த நகரத்தில் சாலைகள் மிகவும் நேர்த்தியாகப் பின்னப்பட்டுள்ளன. மலேசியத் தீபகற்பத்தின் பிற இடங்களுடன் நெடுஞ்சாலைகளால் பிணைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோனாஸ் கோபுரங்களுக்கு நேராகச் செல்லும் ஜாலன் அம்பங் இரவு நேரத்தில்

கோலாலம்பூரில் இரண்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன. முதன்மையான கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (KLIA) சிலாங்கூர் மாநிலத்தின் செபாங் என்ற இடத்தில் அமைந்துள்ளது. மலேசியாவின் வான்வெளிப்பயணங்களுக்கு மையவிடமாக உள்ள[99] இந்த வானூர்தி நிலையம் நகரத்திலிருந்து தெற்கே 50 கிலோமீட்டர்கள் (31 mi) தொலைவில் உள்ளது. சுல்தான் அப்துல் அசீசு ஷா வானூர்தி நிலையம் அல்லது சுபாங் ஸ்கைபார்க் என அறியப்படும் இரண்டாவது வானூர்தி நிலையம் 1998இல் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னர் வெளிநாட்டு பயணங்களுக்கான வாயிலாக இருந்தது. தற்போது இது தனியார் மற்றும் டர்போபிராப் வானூர்திகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[100] கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் மலேசிய ஏயர்லைன்ஸ், குறைந்த கட்டண சேவை வழங்கும் ஏர் ஏசியா ஆகியவற்றின் முதன்மை இருப்பிடமாக விளங்குகிறது. கேஎல் சென்ட்ரலிலிருந்து இந்த பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அடைய மிகவிரைவு தொடர்வண்டி அமைக்கப்பட்டுள்ளது. இது 28 நிமிடங்களில் சென்றடைகிறது.[101] ஏர் ஆசியா இயங்கும் குறைந்த கட்டண முனையத்திற்கு கேஎல் சென்ட்ரலிலிருந்து பேருந்துகள் செல்கின்றன.

படிமம்:KL Sentral at Night.jpg
இரவில் கேஎல் சென்ட்ரல்

பொதுப்போக்குவரத்திற்கு பேருந்துகள், தொடர்வண்டிகள் மற்றும் வாடகைவண்டிகள் இருந்தபோதும் இவற்றைப் பயன்படுத்துவோர் வீதம் 16 விழுக்காட்டிற்கும் கீழாக இருப்பதாக 2006ஆம் ஆண்டு கணக்கெடுப்பு ஒன்று மதிப்பிடுகிறது.[98] தொடர்வண்டிப் போக்குவரத்தில் லைட் ரெயில், ராபிட் டிரான்சிட், மோனோரெயில், கம்யூட்டர் ரெயில் என்று பலவகை தொடர்வண்டி அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்துவகை தொடர்வண்டிகளுக்கும் சந்திப்பு நிலையமாக கேஎல் சென்ட்ரல் உள்ளது. இங்கிருந்து தெற்கில் சிங்கப்பூர் வரையும் வடக்கில் தாய்லாந்தின் ஹாத் யை வரையும் தொடர்வண்டி இணைப்புகள் உள்ளன.[102]

கோலாலம்பூரில் உள்ள வாடகைவண்டிகள் வேறுபடுத்தும் வண்ணம் வெள்ளை மற்றும் சிவப்பு தோற்றத்தைக் கொண்டுள்ளன. இங்குள்ள வண்டிகள் பெரும்பாலும் இயற்கை எரிவளியில் இயங்குகின்றன. வெளிநாட்டுப் பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் கோருவதாக முறையீடுகள் உள்ளன.

நகரத்திலிருந்து தென்மேற்கே ஏறத்தாழ 64 km (40 mi) தொலைவில் கிளாங் துறைமுகம் அமைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரியதும் போக்குவரத்து மிகுந்ததுமான இந்த துறைமுகம் 2006ஆம் ஆண்டில் 6.3 மில்லியன் இருபது அடி நிகர் அலகு (TEU) சரக்குகளை கையாண்டுள்ளது.[103]

பன்னாட்டுத் தொடர்புகள்[தொகு]

கோலாம்பூரிலுள்ள இஸ்ஃபாஹன் தெரு

கோலாலம்பூர் பல வெளிநாட்டு நகரங்களுடன் இரட்டை நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு நகரம் கூட்டின் நிலை ஆதாரங்கள்
 இந்தியா சென்னை சகோதரி நகரம் [104]
 இந்தியா தில்லி சகோதரி நகரம் [105]
 ஈரான் இஸ்ஃபாஹன் சகோதரி நகரம் [106][107]
 ஈரான் மாஷ்ஹத் சகோதரி நகரம் [108]
 சப்பான் ஒசாகா வணிக கூட்டாளி நகரம் [107][109]
 மலேசியா மலாக்கா நகரம் சகோதரி நகரம் [107]
 மொரோக்கோ கசபிளாங்கா சகோதரி நகரம் [107]
 துருக்கி அங்காரா சகோதரி நகரம் [107][110]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Mayor's Welcome Message". Kuala Lumpur City Hall. மூல முகவரியிலிருந்து 2010-09-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-01-25.
 2. M, Bavani. "Ahmad Fuad is new mayor of KL". The Star Online. Archived from the original on 2012-10-12. https://web.archive.org/web/20121012015946/http://thestar.com.my/news/story.asp?file=%2F2008%2F12%2F12%2Fnation%2F20081212190323&sec=nation. பார்த்த நாள்: 2010-03-27. 
 3. 3.0 3.1 3.2 "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia. பார்த்த நாள் 2011-01-24.
 4. 4.0 4.1 "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia. பார்த்த நாள் 2011-01-24.
 5. 5.0 5.1 "Malaysia: largest cities and towns and statistics of their population". மூல முகவரியிலிருந்து 2012-12-16 அன்று பரணிடப்பட்டது.
 6. Helders, Stefan. "World: metropolitan areas". World Gazetteer. மூல முகவரியிலிருந்து 2007-09-30 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-13.
 7. Kearney, Inc., A.T.. "The 2010 Global Cities Index". Foreign Policy. மூல முகவரியிலிருந்து 2012-02-02 அன்று பரணிடப்பட்டது.
 8.  Print!  Email! Author: 2thinknow (1 September 2010). "Innovation Cities™ Top 100 Index | 2010 | Innovation Cities Program – Analyst Reports, Index Rankings, Benchmarking Data, Workshops". Innovation-cities.com. பார்த்த நாள் 14 January 2012.
 9. "Putrajaya – Administrative Capital of Malaysia". Government of Malaysia. மூல முகவரியிலிருந்து 2007-10-21 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-11.
 10. 10.0 10.1 Jeong Chun Hai @Ibrahim, & Nor Fadzlina Nawi. (2007). Principles of Public Administration: An Introduction. Kuala Lumpur: Karisma Publications. ISBN 978-983-195-2532 பிழையான ISBN
 11. "Territorial extent". States of Malaysia. statoids.com. பார்த்த நாள் 2007-12-11.
 12. Aziz, Su. "Far from the madding crowd". The New Straits Times Online. Archived from the original on 2007-12-18. https://web.archive.org/web/20071218214424/http://www.nst.com.my/Current_News/NST/Friday/Features/20071101171139/Article. பார்த்த நாள்: 2007-12-04. "...one of the many 30-something KLites seeking.." 
 13. "Kuala Lumpur History". All Malaysia. மூல முகவரியிலிருந்து 2009-10-18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-09-15.
 14. "Yap Ah Loy's Administration". Yapahloy.tripod.com (2000-09-12). பார்த்த நாள் 2011-10-05.
 15. 15.0 15.1 15.2 "Old-World Charm". Virtual Malaysia Magazine. மூல முகவரியிலிருந்து 2008-01-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-18.
 16. 16.0 16.1 "From tin town to tower city". kiat.net. மூல முகவரியிலிருந்து 2010-07-27 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-09-28.
 17. "Kuala Lumpur History". Kuala-Lumpur.ws. பார்த்த நாள் 2010-09-28.
 18. "Sejarah Malaysia". Sejarah Malaysia. மூல முகவரியிலிருந்து 2002-09-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-15.
 19. name="Britannica">"Kuala Lumpur". Encyclopædia Britannica. பார்த்த நாள் 2007-12-06.
 20. 20.0 20.1 "Kuala Lumpur". Encyclopædia Britannica. பார்த்த நாள் 2007-12-06.
 21. "The Federated Malay States (1896)". Nation History. National Library of Malaysia. மூல முகவரியிலிருந்து 2004-01-08 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-06.
 22. "On This Day". The Australian Army. பார்த்த நாள் 2007-12-17.
 23. "1957: Malaya celebrates independence". On This Day: 31 August (BBC). 1957-08-31. http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/31/newsid_3534000/3534340.stm. பார்த்த நாள்: 2007-12-06. 
 24. 24.0 24.1 Official figure, "New book on 1969 race riots in Malaysia may be banned, officials warn". International Herald Tribune. 2007-05-16. Archived from the original on 2007-10-11. https://web.archive.org/web/20071011030700/http://www.iht.com/articles/ap/2007/05/16/asia/AS-GEN-Malaysia-Race-Riot-Book.php. பார்த்த நாள்: 2007-12-08. 
 25. "Destinations: Kuala Lumpur". Tourism Malaysia. மூல முகவரியிலிருந்து 2008-01-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-16.
 26. "Kuala Lumpur". Columbia Encyclopedia, Sixth Edition 2007. Columbia University Press. பார்த்த நாள் 2007-12-06.
 27. "Sejarah Shah Alam" (Malay). Shah Alam City Council. மூல முகவரியிலிருந்து 2007-10-26 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-14.
 28. 28.0 28.1 Harrison, Frances (1999-11-16). "Analysis: The challenge for Malaysia's reformers". BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/517644.stm. பார்த்த நாள்: 2007-12-13. 
 29. Geetha Krishnan. "PJC turns focus on maintenance issues". The Malaysian Bar. மூல முகவரியிலிருந்து 2007-12-18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-14.
 30. "Attractions". Ministry of Science Technology and Innovation. மூல முகவரியிலிருந்து 2007-10-30 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-11.
 31. "National Palace". National Library of Malaysia. மூல முகவரியிலிருந்து 2007-12-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-11.
 32. "Kuala Lumpur: Growing Pains". Asia's Best Cities 2000 (Asiaweek). http://www.asiaweek.com/asiaweek/asiacities/kualalumpur.html. பார்த்த நாள்: 2007-12-04. 
 33. "Kuala Lumpur Location". Malaysia Travel. பார்த்த நாள் 2010-09-18.
 34. 34.0 34.1 34.2 "World Weather Information Service – Kuala Lumpur" (August 2010). பார்த்த நாள் 2010-09-18.
 35. "Extreme Temperatures Around the World". Maximiliano Herrera. பார்த்த நாள் 2010-09-18.
 36. "Climate in Kuala Lumpur". Healism.com. மூல முகவரியிலிருந்து 2011-07-11 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-09-18.
 37. "Kuala Lumpur Environment". Kuala Lumpur City Hall. மூல முகவரியிலிருந்து 2008-05-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-12.
 38. "Hazardous haze shrouds Kuala Lumpur". MSNBC. 2005-08-11. Archived from the original on 2007-12-04. https://web.archive.org/web/20071204144711/http://www.msnbc.msn.com/id/8908221/. பார்த்த நாள்: 2007-12-13. 
 39. 39.0 39.1 "Kuala Lumpur City Hall". Ministry of Federal Territories and Urban Wellbeing. பார்த்த நாள் 2010-09-18.[தொடர்பிழந்த இணைப்பு]
 40. "About KL City Hall – History". Kuala Lumpur City Hall. மூல முகவரியிலிருந்து 2010-08-31 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-09-18.
 41. "Malaysia's towns and cities are governed by appointed mayors". City Mayors. 2006. http://www.citymayors.com/government/malaysia_government.html. பார்த்த நாள்: 2006-10-09. 
 42. "House of Representatives". Parliament of Malaysia. மூல முகவரியிலிருந்து 2007-12-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-18.
 43. Ng, Angie. "New growth corridors added". The Star Online. http://biz.thestar.com.my/news/story.asp?file=/2007/8/13/business/18553100&sec=business. பார்த்த நாள்: 2007-12-14. 
 44. "Foreign Embassies and Consulates Directory in Malaysia". GoAbroad.com. Embassies located in Malaysia மூல முகவரியிலிருந்து 2010-05-09 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-19.
 45. "The World According to GaWC 2008". Globalization and World Cities Study Group and Network (GaWC). Loughborough University. பார்த்த நாள் 2009-05-16.
 46. "Key Economic Indicators" (PDF). Economic Planning Unit, Prime Minister's Department, Malaysia. மூல முகவரியிலிருந்து 2008-02-27 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-10.
 47. 47.0 47.1 "Gross Domestic Product (GDP) by State, 2008". Department of Statistics Malaysia. மூல முகவரியிலிருந்து 2010-11-13 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-09-15.
 48. "GDP by State and Kind of Economic Activity, 2008". Department of Statistics Malaysia. மூல முகவரியிலிருந்து 2010-11-13 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-09-15.
 49. "GDP Per Capita by State, Annual Percentage Growth and Percentage Share to Malaysia GDP, 2008". Department of Statistics Malaysia. பார்த்த நாள் 2010-09-15.
 50. 50.0 50.1 50.2 50.3 50.4 50.5 "Kuala Lumpur Economic Base". Kuala Lumpur City Hall. மூல முகவரியிலிருந்து 2008-08-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-10.
 51. "Kuala Lumpur Structure Plan 2020: Introduction". Kuala Lumpur City Hall. மூல முகவரியிலிருந்து 2008-03-27 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-10-11.
 52. Sy, Amadou (2007-09-18). "Malaysia: An Islamic Capital Market Hub". Survey Magazine. International Monetary Fund. பார்த்த நாள் 2007-12-12.
 53. "World Largest Islamic Bank opens branch in Malaysia". ClickPress. 2006-02-13. http://www.clickpress.com/releases/Detailed/9053005cp.shtml. பார்த்த நாள்: 2007-12-12. 
 54. Tam, Susan (2007-04-10). "Malaysia needs to look beyond being hub for Islamic finance". The Star Malaysia. http://biz.thestar.com.my/news/story.asp?file=/2007/4/10/business/17319333&sec=business. பார்த்த நாள்: 2007-12-12. 
 55. "The Global 2000 (Malaysia)". Forbes. http://www.forbes.com/lists/2007/18/biz_07forbes2000_The-Global-2000-Malaysia_10Rank.html. பார்த்த நாள்: 2010-09-15. 
 56. "Main page". Institute for Medical Research, Malaysia. பார்த்த நாள் 2007-12-12.
 57. Bremner, Caroline (10 January 2010). "Trend Watch: Euromonitor International's Top City Destination Ranking". Euromonitor International. பார்த்த நாள் 2010-08-27.
 58. "Kuala Lumpur Travel". மூல முகவரியிலிருந்து 2009-08-27 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-09-15.
 59. Chuang Peck Ming (2007-10-18). "Malaysia's vibrant retail scene". The Business Times. Archived from the original on 2008-05-24. https://web.archive.org/web/20080524050212/http://business.asiaone.com/Business/SME+Central/Dollars+%2526+Sense/Story/A1Story20071025-32117.html. பார்த்த நாள்: 2007-12-04. 
 60. Shanti Gunaratnam. "Wooing Indonesian shoppers". New Straits Times, Travel News. மூல முகவரியிலிருந்து 2007-12-18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-18.
 61. Gurstien, P (1985) Malaysia Architecture Heritage Survey – A Handbook, Malaysia Heritage Trust. Page 65
 62. "Google Cache Of 'Historical Buildings In Malaysia'". 72.14.235.104. பார்த்த நாள் 2010-09-18.
 63. "Malaysia Hotels Blog". Malaysiahotelnews.blogspot.com (2006-10-19). பார்த்த நாள் 2010-09-18.
 64. "Taburan Penduduk dan Ciri-ciri Asas Demografi". Jabatan Perangkaan Malaysia. பார்த்த நாள் 12 October 2011.
 65. Helders, Stefan. "Malaysia:Metropolitan areas". World Gazetteer. மூல முகவரியிலிருந்து 2012-12-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-04.
 66. Josh, Krist. "Kuala Lumpur: The Heart of Malaysia". Meetings AsiaPacific. Meetings Media. பார்த்த நாள் 2007-12-13.
 67. 67.0 67.1 "Kuala Lumpur Culture & Heritage". AsiaWebDirect. பார்த்த நாள் 2007-12-04.
 68. "Malaysia to reduce number of foreign workers to 1.5 mln". People's Daily Online. September 2, 2006. http://english.peopledaily.com.cn/200609/02/eng20060902_298925.html. பார்த்த நாள்: 2007-12-15. 
 69. Mydans, Seth (December 10, 2007). "A Growing Source of Fear for Migrants in Malaysia". International Herald Tribune. http://www.nytimes.com/2007/12/10/world/asia/10malaysia.html?ref=world. பார்த்த நாள்: 2007-12-15. 
 70. "Religion by Location: Malaysia". Adherents.com. மூல முகவரியிலிருந்து 2007-11-28 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-15.
 71. "Kuala Lumpur Culture & Heritage: Traditions, Races, People". Kuala Lumpur Hotels & Travel Guide. பார்த்த நாள் 2008-02-16.
 72. "Top five ways to enjoy Kuala Lumpur". Melbourne: The Age. 2005-02-20. http://www.theage.com.au/news/take-five/top-five-ways-to-enjoy-kuala-lumpur/2005/02/19/1108709483546.html. பார்த்த நாள்: 2007-12-14. 
 73. "Oldest Primary Forest within a City". TargetWoman Directory. பார்த்த நாள் 2007-12-04.
 74. Ashlrigh Seow. A Man and his Park. // Senses of Malaysia, vol. 17 (January–February), 2011, p. 62-65
 75. "Main Page". Muzium Negara Malaysia. மூல முகவரியிலிருந்து 2008-01-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-11.
 76. "Main". Islamic Arts Museum Malaysia. மூல முகவரியிலிருந்து 2007-12-18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-11.
 77. "Meet the MPO". Malaysian Philharmonic Orchestra. மூல முகவரியிலிருந்து 2007-08-28 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-11.
 78. "Main page". Kuala Lumpur Performing Arts Centre. மூல முகவரியிலிருந்து 2007-12-25 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-18.
 79. "Main". Malaysia International Gourmet Festival. மூல முகவரியிலிருந்து 2007-10-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-13.
 80. "Kuala Lumpur Fashion Week 2005". People's Daily Online. பார்த்த நாள் 2007-12-13.
 81. "Circuit Guide: Sepang, Malaysia". BBC Sport. 2006-02-17. http://news.bbc.co.uk/sport1/hi/motorsport/formula_one/circuit_guide/4244253.stm. பார்த்த நாள்: 2007-12-13. 
 82. "Season 2007/08". A1GP. மூல முகவரியிலிருந்து 2007-12-21 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-13.
 83. "Rossi wins Sepang". MotorcycleUSA. 2004-10-10. Archived from the original on 2007-12-23. https://web.archive.org/web/20071223120021/http://www.motorcycle-usa.com/Article_Page.aspx?ArticleID=1463. பார்த்த நாள்: 2007-12-13. 
 84. "Main page". Kuala Lumpur Grand Prix 2007. மூல முகவரியிலிருந்து 2008-05-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-12.
 85. "KL Tower International BASE Jump 2007". பார்த்த நாள் 2007-12-12.
 86. "Tour de Langkawi". Ministry of Youth and Sports, Malaysia. பார்த்த நாள் 2007-12-12.
 87. Kuala Lumpur set to be city where 2022 Winter Olympics decided
 88. "Astro official website". Astro.com.my. பார்த்த நாள் 2010-09-18.
 89. "Al-Jazeera English hits airwaves". BBC. 2006-11-15. http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/6149310.stm. பார்த்த நாள்: 2007-12-11. 
 90. "Apocalypse Now". Campus Progress. மூல முகவரியிலிருந்து 2007-06-21 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-11.
 91. "Bart Gets Famous Trivia and Quotes". TV.com. மூல முகவரியிலிருந்து 2009-04-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-08-12.
 92. Gunaratnam, Shanti (March 20, 2007). "KL pictorial handbook". New Straits Times online. Archived from the original on டிசம்பர் 18, 2007. https://web.archive.org/web/20071218215628/http://www.nst.com.my/Current_News/TravelTimes/article/TravelNews/20070320125856/Article/index_html. பார்த்த நாள்: 2007-12-14. 
 93. "Democracy (Plot Summary)". Answers.com. பார்த்த நாள் 2007-12-14.
 94. Department of Statistics, Malaysia(August 2002). "Education and Social Characteristics of the Population, Population and Housing Census 2000.". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2007-12-10.
 95. "Existing situation of Educational facilities". Kuala Lumpur Structure Plan 2020. Kuala Lumpur City Hall. மூல முகவரியிலிருந்து 2008-05-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-12.
 96. Carnegie Mellon University. "Carnegie Mellon University's Heinz School to Offer Professional Master's Degree at University of Malaya in Kuala Lumpur in New Collaboration". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2007-12-13.
 97. "World University Rankings 2004". மூல முகவரியிலிருந்து 2013-10-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-07.
 98. 98.0 98.1 "Prasarana to buy trains worth RM1.2bil". The Star. 2006-10-13. Archived from the original on 2007-09-30. https://web.archive.org/web/20070930190929/http://besonline.rtm.net.my/modules.php?op=modload&name=News&file=article&sid=65671. பார்த்த நாள்: 2006-10-22. 
 99. National Geographic. "Malaysia Airlines Takes Flight to MEGACITIES on National Geographic Channel". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2007-12-19. பரணிடப்பட்டது 2008-02-06 at the வந்தவழி இயந்திரம்
 100. "Subang only for turbo-props". Asian News Desk. 2007-11-27. http://www.asianewsdesk.com/2007/11/27/subang-only-for-turbo-props/. பார்த்த நாள்: 2007-12-13. 
 101. "KLIA Ekspres". Express Rail Link Sdn Bhd. மூல முகவரியிலிருந்து 2007-12-08 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-13.
 102. "Intercity services". Keretapi Tanah Melayu Berhad. மூல முகவரியிலிருந்து 2007-12-14 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-19.
 103. "Port Klang retains top ranking among Malaysia's ports". SchedNet (2007-05-24). மூல முகவரியிலிருந்து 2007-06-26 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-19.
 104. "Chennai, Kuala Lumpur sign sister city pact". The Hindu (Chennai, India). 2010-11-26. Archived from the original on 2010-11-29. https://web.archive.org/web/20101129155307/http://www.hindu.com/2010/11/26/stories/2010112661760300.htm. பார்த்த நாள்: 2010-11-26. 
 105. Kumar Das, Arun (2002-07-07). "Delhi to London, it’s a sister act". The Times of India. http://timesofindia.indiatimes.com/articleshow/15278423.cms. பார்த்த நாள்: 2008-08-30. 
 106. "Sisterhoods". Isfahan Islamic Council (2005). மூல முகவரியிலிருந்து 2007-10-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-04.
 107. 107.0 107.1 107.2 107.3 107.4 "About Members: Kuala Lumpur". Asian-Pacific City Summit. மூல முகவரியிலிருந்து 2011-04-25 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-11-03.
 108. "Mashad-Kuala Lumpur Become Sister cities". FARS News Agency. 2006-10-14. Archived from the original on 2011-07-14. https://web.archive.org/web/20110714174230/http://kuala-lumpur-news.newslib.com/story/453-3234431/. பார்த்த நாள்: 2007-12-04. 
 109. "ビジネスパートナー都市 (BPC)" (Japanese). Osaka City Government (2009-12-28). மூல முகவரியிலிருந்து 2013-01-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-09-23.
 110. "Kardeş Kentleri Listesi ve 5 Mayıs Avrupa Günü Kutlaması" (Turkish). Ankara Büyükşehir Belediyesi. மூல முகவரியிலிருந்து 2009-01-14 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-09-30.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலாலம்பூர்&oldid=3366710" இருந்து மீள்விக்கப்பட்டது