இரண்டாம் உலகப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரண்டாம் உலகப்போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
இரண்டாம் உலகப்போர்
Alliances during the Second World War
இரண்டாம் உலகப் போரின் கூட்டணிகள். அடர் பச்சை: பேர்ல் துறைமுகத் தாக்குதலுக்கு முன்னரான நேச நாடுகள்; இளம் பச்சை: பேர்ல் துறைமுகத் தாக்குதலுக்குப் பின் நேசநாடுகளாக இணைந்தவை; நீலம்: அச்சு அணி; சாம்பல்: நடுநிலை நாடுகள்.
நாள் செப்டம்பர் 1, 1939செப்டம்பர் 2, 1945
இடம் ஐரோப்பா, பசிபிக், தெற்கு-கிழக்கு ஆசியா, சீனா, மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல், ஆப்பிரிக்கா
நேச நாடுகள் வெற்றி. ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம். ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் உலக வல்லரசுகளாக வளர்ச்சி.ஐரோப்பாவின் பனிப் போருக்கான ஏதுநிலைகள் உருவாயின.
பிரிவினர்
நேச நாடுகள் அச்சு நாடுகள்
தளபதிகள், தலைவர்கள்
நேச நாட்டுத் தலைவர்கள் அச்சு நாட்டுத் தலைவர்கள்
இழப்புகள்
படைத்துறைச் சாவு:
14,000,000க்கும் மேல்
பொதுமக்கள் சாவு:
36,000,000க்கும் மேல்
மொத்தச் சாவு:
50,000,000க்கும் மேல்
...மேலதிக தகவல்கள்.
படைத்துறைச் சாவு:
8,000,000க்கும் மேல்
பொதுமக்கள் சாவு:
4,000,000க்கும் மேல்
மொத்தச் சாவு:
12,000,000க்கும் மேல்
...மேலதிக தகவல்கள்.
சீனப்படை(மேற்புறம்:இடது);ஆத்திரேலியப்படை(மேற்புறம்:வலது)
'ஸ்டாலின்கிரேடு' போர்களம்(நடு:இடது)
செருமானிய குண்டு விமானங்கள்(நடு:வலது)
செருமனிய சரணடை ஒப்பந்தம்(கீழ்:இடது)
அமெரிக்கப் போர்கப்பல்கள்(கீழ்:வலது)

இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப் போர் 2 (Second World War) என்பது 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர். இதில் அனைத்து பெரும் அரசுகள் (great powers) உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. இவை அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்திருந்தன. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். ஒட்டுமொத்த போர் என்னும் கோட்பாட்டிற்கு இணங்க, இப்போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழிக்க முயன்றன. இதனால் இராணுவ மற்றும் குடிசார் வளங்களுக் கிடையேயான வேறுபாடு மறைந்து போனது. பெரும் இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய போராகும்.[1]

செப்டம்பர் 1, 1939ல் நாசி ஜெர்மனியின் போலந்து படையெடுப்புடன் இப்போர் துவங்கியதாகப் பொதுவாக வரலாற்றாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு புறம் பிரிட்டன் அதன் பேரரசில் இடம் பெற்றிருந்த நாடுகள் பிரான்சு ஆகியவை நேச நாட்டு அணியிலிருந்தன. மறுபுறம் நாசி ஜெர்மனி மற்றும் பாசிச இத்தாலி ஆகியவை சேர்ந்து அச்சு அணியை உருவாக்கின. 1939–41ல் அச்சுப் படைகள் மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றின. பிரிட்டன் மட்டும் அவற்றின் பிடியிலிருந்து தப்பியது. பின் வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயன்றன. ஜூன் 1941ல் அச்சுப் படைகள் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்ததால் சோவியத் ஒன்றியம் நேச நாட்டு அணியில் இணைந்தது. 1930களின் துவக்கத்திலிருந்து சீனா மீது போர் தொடுத்து அதன் பல பகுதிகளைக் ஆக்கிரமித்திருந்த சப்பானியப் பேரரசும் அச்சு அணியில் இணைந்தது.

டிசம்பர் 1941ல் ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம் சப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. அதுவரை நேச நாடுகளுக்குத் தளவாட வழங்கலை மட்டும் செய்து வந்த அமெரிக்காவும் போரில் நேரடியாக ஈடுபட்டது. சப்பானியப் படைகள் விரைவில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவின் கிழக்கெல்லை வரை முன்னேறி விட்டன. 1942 வரை அச்சு நாடுகளுக்குச் சாதகமாக இருந்த போர் நிலவரம் அவ்வாண்டு நேரெதிரானது. ஐரோப்பாவின் கிழக்கு முனையில் அச்சு நாட்டு முன்னேற்றம் சோவியத் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆப்பிரிக்காவிலும் அச்சுப் படைகள் முறியடிக்கப்பட்டு பின்வாங்கின. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் நேச நாட்டு படைகள் இழந்த பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றத் தொடங்கின. 1943ல் இத்தாலி மீது நேச நாட்டுப் படைகள் படையெடுத்தன; விரைவில் அந்நாடு சரணடைந்தது. 1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்க நேச நாட்டுப் படைகள் கடல் வழியாகப் படையெடுத்தன. கிழக்கில் சோவியத் படைகளாலும் மேற்கில் பிரிட்டானிய, அமெரிக்க, பிரெஞ்சுப் படைகளாலும் தாக்கப்பட்ட ஜெர்மனி ஈராண்டுகளுக்குள்ளாகத் தோற்கடிக்கப்பட்டது. மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. 1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றிச் சப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் சப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள்மீது அணு குண்டுகளை வீசியது. இதன் விளைவாகச் சப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.

இப்போரின் விளைவாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய பேரரசுகள் தங்கள் வல்லமையை இழந்தன; ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காலனிமயமழித்தல் தொடங்கியது. அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் புதிய வல்லரசுகளாகின; அவற்றுக்கிடையே பனிப்போர் துவங்கியது. உலக அமைதிக்காகச் செயல்பட ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.

கால கட்டம்[தொகு]

இரண்டாம் உலகப் போரின் தொடக்கமாகப் போலந்தின் மீதான ஜெர்மன் படையெடுப்பு நடந்த செப்டம்பர் 1, 1939ம் ஆண்டு கருதப்படுகிறது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஜெர்மனி மீது போரை அறிவித்தன. பலர் போரின் தொடக்கமாக இரண்டாம் சீன-ஜப்பானிய போர் தொடங்கிய ஜூலை 7, 1937 நாளைக் குறிப்பிடுகின்றனர்.[2]

ஆங்கில வரலாற்றாசிரியர் ஏ.ஜே.பி. டெய்லர் (A.J.P. Taylor) கூற்றுப்படி, கிழக்காசியாவின் சீன-ஜப்பானிய போரும், ஐரோப்பிய மற்றும் அதன் காலனி நாடுகளை உள்ளடக்கிய இரண்டாம் ஐரோப்பிய போரும் தனித்தனியாக நடைபெற்று வந்தது. இந்த இரண்டு போர்களும் 1941ல் இணைந்து உலகளாவிய போராக உருவெடுத்து 1945 வரை தொடர்ந்தது.

இரண்டாம் உலகப்போரின் இறுதி நாள்குறித்து ஒத்த கருத்து எதுவும் எட்டப்படவில்லை. இரண்டாம் உலகப்போர், ஜப்பான் வீழ்ந்த, ஆகஸ்ட் 14, 1945 அன்று முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டாலும் ஜப்பான் செப்டம்பர் 2, 1945 அன்றுதான் அதிகாரப்பூர்வமாகச் சரணடைந்தது. சில ஐரோப்பிய வரலாற்று நூல்கள் ஜெர்மனி தோல்வியடைந்த, மே 8, 1945ம் நாளைக் குறிப்பிடுகின்றன. எனினும் ஜப்பான் உடனான நேச நாடுகளின் அமைதி ஒப்பந்தம் 1951ல்தான் கையெழுத்தானது.[3] அவ்வாறே செருமனியுடன் இறுதி தீர்வு ஒப்பந்தம் 1990 வரை மேற்கொள்ளப்படவில்லை.[4]

போரின் பின்னணி[தொகு]

முதல் உலகப்போரில் மைய சக்தி நாடுகளான ஆஸ்திரிய-ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சி, ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் மற்றும் ராஜதந்திர நிலவரங்களை வெகுவாக மாற்றியது. 1917ல் ரஷ்ய பொதுவுடைமைக் கட்சியின் போல்ஷெவிக் பிரிவு ரஷ்யாவில் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கிடையில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, செர்பியா, மற்றும் ருமேனியா ஆகிய நேச நாடுகளின் வெற்றி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் ரஷ்ய பேரரசின் சரிவால் உருவான புதிய நாடுகள் ஆகியவை கிழக்கு ஐரோப்பாவின் வரைபடத்தில் பெரிய மாற்றங்களை உண்டாக்கின. போருக்குப் பிறகு ஐரோப்பாவில் அமைதியின்மை நிலவியது. வெர்சாய் உடன்படிக்கையின்படி, ஜெர்மனி பொருளாதார, பிராந்திய மற்றும் காலனியாதிக்க ரீதியாக நிறைய இழப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஜெர்மனி தனது நிலப்பரப்பில் பதின்மூன்று சதவீதத்தையும் தனது அனைத்து காலனிகளையும் இழந்தது. மேலும் ஜெர்மனி மீது ராணுவ ரீதியான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையில் ரஷ்ய உள்நாட்டு போரின் விளைவாகச் சோவியத் யூனியன் உருவாகியது. 1924ல் லெனினின் மரணத்திற்கு பிறகு சோவியத் யூனியனின் அதிகாரத்திற்கு வந்த ஜோசப் ஸ்டாலின், புதிய பொருளாதார கொள்கைகளுக்குப் பதிலாக ஐந்தாண்டுத் திட்டங்களை அமல்படுத்த தொடங்கினார்.

ஜெர்மன் பேரரசு 1918–19 ஜெர்மன் புரட்சியில் கலைக்கப்பட்டு, ஒரு ஜனநாயக அரசு உருவானது. போர்களுக்கு இடையிலான காலத்தில், ஜெர்மனி தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இடையே உள்நாட்டு மோதல்கள் ஏற்பட்டது. இதே போன்ற நிலைமை இத்தாலியிலும் உருவானது. நேச நாடுகளின் அணியிலிருந்து இத்தாலி சில பிராந்திய வெற்றியை அடைந்தது என்றாலும், இத்தாலிய தேசியவாதிகள் இலண்டன் உடன்படிக்கை மீது கோபம் கொண்டிருந்தனர். 1922 முதல் 1925 வரை, பெனிட்டோ முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிச இயக்கம் புதிய ரோமானிய பேரரசை உருவாக்கும் உறுதியுடன் அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஜெர்மனியில், அடோல்ப் ஹிட்லர் தலைமையிலான நாட்சி கட்சி ஆட்சியைப் பிடித்து, 1933 இல், ஹிட்லர் அதிபர் ஆனார்.

சீனாவில் குவோமின்டாங் கட்சி 1920களில் சீன ஒருங்கிணைப்புக்கான ராணுவ நடவடிக்கையைக் குறுநில மன்னர்களுக்கு எதிராகத் தொடங்கியது. ஆனால் விரைவிலேயே அதன் முன்னாள் சீன கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு எதிராக உள்நாட்டு போரில் இறங்கியது. நீண்ட நாட்களாகச் சீனாவை ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் இருந்த ஜப்பான், 1931ல், மஞ்சூரியன் சம்பவத்தைக் காரணமாக வைத்து மஞ்சூரியாவை ஆக்கிரமித்து மஞ்சுகோ என்று அழைக்கப்பட்ட பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. ஜப்பானை எதிர்க்க வலு இல்லாத சீனா, உலக நாடுகள் சங்கத்திடம் உதவி கோரியது. உலக நாடுகள் சங்கம் ஜப்பானை மஞ்சூரிய ஆக்கிரமிப்புக்காகக் கண்டித்தது. அதனால் ஜப்பான், உலக நாடுகள் சங்கத்திலிருந்து விலகியது. பின்னர் இரண்டு நாடுகளும் 1933ல் Tanggu போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் வரை, ஷாங்காய், ரேஹே மற்றும் ஹெபெய் பகுதிகளில் பல சிறு மோதல்களில் இறங்கின. அதன் பின்னரும் சீன தன்னார்வ படைகள் மஞ்சூரியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்தன.

அடால்ஃப் ஹிட்லர், 1923ல் ஜெர்மன் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, 1933ல் ஜெர்மனின் அதிபர் ஆனார். அவர் சனநாயகத்தை ஒழித்து நாஜிக்கொள்கையை அறிமுகப்படுத்தினார். அதோடு வெர்சாய் உடன்படிக்கையை மீறும் விதமாக ராணுவ சீர்திருத்த நடவடிக்கைகளையும் ஆயுத கொள்வனவுகளையும் செய்யத் தொடங்கினார். இதற்கிடையில் பிரான்ஸ், இத்தாலியுடன் கூட்டணி வைக்கும் எண்ணத்துடன், இத்தாலிக்கு எதியோப்பியா மீதான காலனி ஆக்கிரமிப்பை அனுமதித்தது. 1935ல், ஜெர்மனி சார் பேசின் பகுதியை சட்டபூர்வமாகத் தன்னுடன் இணைத்துக் கொண்டதால் நிலைமை இன்னும் மோசமடைந்தது.

ஜெர்மனி கட்டுப்படுத்த நினைத்த, ஐக்கிய ராஜ்யம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகள் Stresa முன்னணி அமைப்பை உருவாக்கின. கிழக்கு ஐரோப்பாவின் பரந்த பகுதிகளைக் கைப்பற்றும் ஜெர்மனியின் நோக்கங்களால் கவலையடைந்த சோவியத் யூனியன், பிரான்ஸ் உடன் பரஸ்பர உதவி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் முன்பாக, உலக நாடுகள் சங்கத்தின் ஒப்புதலுக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவ்வளவாகப் பயன் தராமல் போனது. எனினும், ஜூன் 1935 ல், ஐக்கிய ராஜ்யம் ஜெர்மனி உடன் ஒரு சுயாதீன கடற்படை ஒப்பந்தம் செய்து, சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. ஐரோப்பா மற்றும் ஆசிய நிகழ்வுகளை பற்றிக் கவலை கொண்ட அமெரிக்கா, ஆகஸ்ட் மாதம் நடுநிலைத்தன்மை சட்டத்தை நிறைவேற்றியது. அக்டோபர் மாதம், இத்தாலி எத்தியோப்பியா மீது படையெடுத்தது. இந்தப் படையெடுப்புக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்ததால் அதற்குப் பிரதி பலனாக இத்தாலி, ஜெர்மனியின் ஆஸ்திரிய ஆக்கிரமிப்பு நோக்கத்தின் மீதான ஆட்சேபணைகளை திரும்பப் பெற்றது.

ஹிட்லர் வெர்சாய் மற்றும் லோகர்னோ உடன்படிக்கையை மீறி Rhineland பகுதியில் ராணுவத்தை குவித்தார். இதற்கு மற்ற ஐரோப்பிய வல்லரசுகளிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு வரவில்லை. ஜூலையில் ஸ்பெயின் உள்நாட்டு போர் தொடங்கிய போது, ஹிட்லரும் முசோலினியும் "பாசிச தேசியவாத படைகளையும்", சோவியத் யூனியன் ஸ்பானிய குடியரசையும் ஆதரித்தன. இரண்டு தரப்புமே இந்த சண்டையைத் தங்களது புதிய ஆயுதங்களையும் போர் தந்திரங்களையும் பரிசோதிக்கப் பயன்படுத்தி கொண்டன. 1939 ஆம் ஆண்டு தேசியவாதப்படைகள் போரை வென்றன. அக்டோபர் 1936 இல், ஜெர்மனியும் இத்தாலியும் அச்சு நாடுகள் அமைப்பை உருவாக்கின. ஒரு மாதம் கழித்து, ஜெர்மனியும் ஜப்பானும் அனைத்துலக பொதுவுடைமை இயக்க எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒரு வருடம் கழித்து இத்தாலியும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தது. சீனாவில் Xi'an சம்பவத்திற்கு பிறகு குவோமின்டாங் மற்றும் கம்யூனிச படைகள் ஜப்பானை எதிர்த்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கும் பொருட்டு யுத்த நிறுத்தத்தை அறிவித்தன.

போருக்கு முந்தைய நிகழ்வுகள்[தொகு]

இத்தாலியின் எத்தியோப்பிய ஆக்கிரமிப்பு[தொகு]

இரண்டாம் இத்தாலிய-அபிசீனிய போர், அக்டோபர் 1935 ல் தொடங்கி மே 1936 இல் முடிவடைந்த ஒரு சுருக்கமான காலனித்துவ போர். இந்தப் போர் இத்தாலிய பேரரசின் ஆயுதப்படைகளுக்கும் எத்தியோப்பிய பேரரசின் (அபிசீனியா) ஆயுதப்படைகளுக்கும் இடையே நடந்தது. போரின் முடிவில் இத்தாலி வெற்றி பெற்று எத்தியோப்பியாவில் தனது காலனியை நிறுவியது. இதனால் எத்தியோப்பியா கிழக்கு ஆப்பிரிக்க இத்தாலியில் இணைக்கப்பட்டது. இந்தப் போர் உலக நாடுகள் அமைப்பு அமைதியை நிலை நாட்டும் ஒரு வலுவான அமைப்பாக இல்லை என்பதை வெளிப்படுத்தியது. இத்தாலியும் எத்தியோப்பியாவும் உலக நாடுகள் அமைப்பின் அங்கத்தினர்களாக இருந்த போதிலும் அந்த அமைப்பு இத்தாலியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஸ்பானிய உள்நாட்டு போர்[தொகு]

ஸ்பானிய உள்நாட்டு போர், 1 ஏப்ரல் 1939 முதல் 17 ஜூலை 1939 வரை ஸ்பெயினில் நடந்த பெரிய உள்நாட்டு போர். ஜெர்மனி மற்றும் இத்தாலி, கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான தேசியவாத படைகளுக்கு ஆதரவு கொடுத்தன. சோவியத் யூனியன் தனது ஆதரவை இடதுசாரி சிந்தனை உடைய அங்கு ஏற்கனவே ஆட்சியில் இருந்த ஸ்பானிய குடியரசுக்குக் கொடுத்தது. ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் இந்த சண்டையைத் தங்களது புதிய ஆயுதங்களையும் போர் தந்திரங்களையும் பரிசோதிக்கப் பயன்படுத்தி கொண்டன. ஜெர்மனியின் கொண்டோர் லீஜியன் திட்டமிட்டு நிகழ்த்திய ஜெர்னீகா குண்டுவீச்சு அடுத்த பெரிய போர் பொதுமக்கள்மீது பயங்கரவாத குண்டு தாக்குதல்களை உள்ளடக்கலாம் என்ற பரவலான கவலைகளுக்குப் பங்களித்தது.

ஜப்பானின் சீன ஆக்கிரமிப்பு[தொகு]

ஜூலை 1937ல், ஜப்பான், மார்கோ போலோ பாலம் சம்பவம் நடந்த பிறகு, சீனாவின் முந்தைய தலை நகரான பெய்ஜிங்கை கைப்பற்றியது. இந்தச் சம்பவம் ஜப்பான் முழுமையான சீன ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வித்திட்டது. இந்த நேரத்தில் விரைவாகச் செயல்பட்ட சோவியத், சீனாவுக்கு தளவாடங்கள் வழங்கி உதவி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் சீன – ஜெர்மனி ஒத்துழைப்பு (1911–1941) முடிவுக்கு வந்தது. சீனப் போர்ப்படை தளபதி சங் கை செக் ஷாங்காய் நகரத்தைப் பாதுகாக்க ஜெர்மனியால் பயிற்றுவிக்கப்பட்ட தனது சிறந்த படைபிரிவை பயன்படுத்தியும் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஷாங்காய் நகரம் ஜப்பானியர்கள் வசம் வீழ்ந்தது. ஜப்பானிய படைகள் சீனப்படைகளை பின்தள்ளி முன்னேறி டிசம்பர் 1937ல் தலைநகர் நாஞ்சிங்கை கைப்பற்றின. இதன்பின் நடந்த நாஞ்சிங் படுகொலை சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் சரணடைந்த சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான சீனப்பெண்கள் ஜப்பானிய ராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டனர்.

ஜூன் 1938ல், சீன படைகள் ஜப்பானிய படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தின. இதன் மூலம் சீனப்படையினருக்கு வுஹன் (Wuhan) நகரத்தில் தற்காப்பு முயற்சிகள் எடுக்கச் சிறிது நேரம் கிடைத்தது. ஆனாலும் வுஹன் நகரம் அக்டோபர் மாதத்தில் ஜப்பானிய படையினரிடம் வீழ்ந்தது. ஜப்பானியர்கள் எதிர்பார்த்தது போல் இந்த வெற்றிகளால் சீனர்களின் எதிர்ப்பை முறியடிக்க முடியவில்லை. சீன அரசாங்கம் தனது இருப்பிடத்தை நாட்டின் உட்பகுதிக்கு மாற்றி அங்கிருந்து போரைத் தொடர்ந்தது.

ஜப்பானின் சோவியத் யூனியன் மற்றும் மங்கோலிய ஆக்கிரமிப்பு[தொகு]

1938 ம் ஆண்டு ஜூலை 29 அன்று, ஜப்பானிய படைகள் சோவியத் ஒன்றியத்தில் நுழைந்ததும் காசன் ஏரிப்போர் மூண்டது. இந்தச் சண்டையில் சோவியத் வெற்றி அடைந்தாலும் ஜப்பான் போரின் முடிவைத் தோல்வி என்று ஒப்புக்கொள்ளவில்லை. இதற்குப் பின்னும் ஜப்பானிய-மங்கோலியன் எல்லையை விரிவாக்க 11 மே 1939 அன்று கல்கின் கோல் நதிப்போரை தொடங்கியது. ஜப்பானிய தாக்குதல் முதலில் சிறிது வெற்றி அடைந்தாலும் பின் சோவியத் படைகளிடம் ஜப்பானிய படைகள் பெரிய தோல்வியைத் தழுவின.

இந்த மோதல்களின் முடிவுகளால் ஜப்பானிய அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் சீனப்போரில் சோவியத் ஒன்றியத்தின் தலையீட்டை தவிர்க்கச் சோவியத் ஒன்றியத்துடன் சமாதானமாகச் செல்ல வேண்டும் என்று கருதத் தொடங்கினர். அதற்குப் பதிலாக அவர்கள் ஜப்பானிய அரசாங்கம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் கவனம் செலுத்த விரும்பினர்.

ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள்[தொகு]

ஐரோப்பாவில், ஜெர்மனியும் இத்தாலியும், பல வெளிப்படையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தன. மார்ச் 1938 இல், ஜெர்மனி ஆஸ்திரியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது. ஆனாலும் பிற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து பெரிய அளவில் ஆட்சேபனைகள் எழவில்லை. இதனால் உந்தப்பட்ட ஹிட்லர் செக்கோஸ்லோவாக்கியாவின் ஜெர்மானியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியான சுதேண்டேன்லாந்துவை ஜெர்மனியின் ஒரு பகுதியாகக் கோர ஆரம்பித்தார். விரைவிலேயே பிரிட்டனும் பிரான்சும் செக்கோஸ்லோவாக்கியா அரசின் விருப்பத்திற்கு எதிராக இந்தப் பகுதியை ஜெர்மனுக்கு விட்டுக்கொடுத்தன. இதற்குப் பதிலாக ஜெர்மனியும் வேறெந்த நிலப்பகுதியின் மீதும் உரிமை கோரப்படாது என்று உறுதி அளித்தது. இதற்குப் பின்னும், ஜெர்மனியும் இத்தாலியும், செக்கோஸ்லோவாக்கியா தனது நிலப்பரப்பை ஹங்கேரிக்கும் போலந்திற்கும் விட்டுக் கொடுக்க வைத்தன. மார்ச் 1939 ல் ஜெர்மனி, செக்கோஸ்லோவாக்கியாவின் எஞ்சிய பகுதிகளை ஆக்கிரமித்தது. பின் நாட்டை இரண்டாகப் பிரித்து ஸ்லோவாக் குடியரசு எனும் பகுதியையும் பொஹிமியா மற்றும் மொராவியா பாதுகாக்கபட்ட பகுதியையும் உருவாக்கியது.

ஹிட்லர் டான்ஜிக் பகுதியின் மீது உரிமை கோர ஆரம்பித்தும் விழித்துக் கொண்ட பிரிட்டனும் பிரான்சும், போலந்தின் சுதந்திரத்திற்கு உதவி செய்வதாக உறுதி அளித்தன. இத்தாலி அல்பேனியாவை கைப்பற்றியதை தொடர்ந்து இதே உறுதி மொழி ருமேனியாவிற்கும் கிரீசுவிற்கும் அளிக்கப்பட்டது. போலந்திற்கு பிரிட்டன்-பிரெஞ்சு உறுதி மொழியைத் தொடர்ந்து ஜெர்மனியும் இத்தாலியும் நட்புறவு மற்றும் கூட்டணிக்கான இரும்பு ஒப்பந்தம் செய்து கொண்டன.

ஆகஸ்ட் 1939 இல், ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் தங்களின் மற்ற நாடுகளுடனான போர்களின் போது பரஸ்பரமாக நடுநிலை வகிக்கும் ரகசிய மொலோடோவ்-ரிப்பன்ட்ராப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான அரசியல் மற்றும் பிராந்திய உரிமைகளை வரையறுத்துக் கொண்டன. மேற்கு போலந்து (இரண்டாம் போலந்துக் குடியரசு) மற்றும் லித்துவேனியா மீது செல்வாக்கு செலுத்தும் உரிமை ஜெர்மனிக்கும் கிழக்கு போலந்து, பின்லாந்து, எசுத்தோனியா, லாத்வியா மற்றும் பெஸ்ஸரேபியா பகுதிகளின் மீதான உரிமை சோவியத் ஒன்றியத்துக்கும் கிடைத்தது. இதன் மூலம் போலந்து விடுதலை கேள்விக்குறியானது.

போரின் போக்கு[தொகு]

ஐரோப்பாவில் போர் வெடித்தது (1939–40)[தொகு]

செப்டம்பர் 1,1939ல், ஜெர்மனியும் ஸ்லோவாக் குடியரசும் போலந்து நாட்டின் மீது தாக்குதல் நடத்தின. செப்டம்பர் 3,1939ல், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பொதுநலவாய நாடுகள் ஜெர்மனியின் மீது போர்ப் பிரகடனம் செய்தன. ஆனாலும் பிரான்ஸ் நடத்திய சிறிய அளவிலான சார் படையெடுப்பு தவிர போலந்திற்கு வேறு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பிரான்சும் பிரிட்டனும் ஜெர்மனியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் போர் முயற்சிகளைக் கட்டுப்படுத்தவும் ஜெர்மனி மீது கடல் அடைப்பைத் தொடங்கின. செப்டம்பர் 17,1939ல் ஜப்பானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்ட சோவியத் ஒன்றியம் போலந்து நாட்டைத் தாக்கியது. இவ்வாறு ஜெர்மனி, சோவியத் ஒன்றியம், லிதுவேனியா மற்றும் ஸ்லோவாக் நாடுகளுக்கு இடையே போலந்து துண்டுகளாகச் சிதறினாலும், போலந்து நாட்டினர் சரணடைய மறுத்து நிழல் அரசாங்கத்தையும் புரட்சி படையையும் நிறுவி நேச நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து போரிட்டனர்.

மேற்கு ஐரோப்பாவில் (1940–41)[தொகு]

ஏப்ரல் 1940 இல், சுவீடனிலிருந்து செல்லும் இரும்புக்காகக் கப்பல் விநியோகத்தைப் பாதுகாக்கவும், இயற்கை நோர்வே நீரை எடுப்பதைத் தடுப்பதற்காக நேச நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராகவும் செருமனி வெசெரியூபங் நடவடிக்கைமூலம் டென்மார்க்கையும் நோர்வேயையும் ஆக்கிமித்தது.[5] டென்மார்க் உடனடியாகக் கீழ்ப்படிந்தது. நேச நாடுகளின் உதவியுடன் நார்வே போர்த்தொடர் மூலம் இரு மாதங்களுக்குச் சண்டையிட்ட நோர்வே செருமனியினால் வெற்றி கொள்ளப்பட்டது.[6]

மத்தியதரை (1940–41)[தொகு]

மத்தியதரையில் நடவடிக்கையைத் தொடங்கிய இத்தாலி முதற்கட்டமாகச் சூனில் மால்டாவை முற்றுகையிட்டது. பின்பு, ஆகஸ்த்தில் பிரித்தானிய சோமாலிலாந்துத்தை வெற்றி கொண்டு, செப்தம்பர் 1940 இல் பிரித்தானியாவின் வைத்திருந்த எகிப்து மீது இத்தாலி படையெடுத்தது. இட்லரின் வெற்றியைப் பார்த்துப் பொறாமை கொண்ட முசோலினியின் ஆசையால் ஒக்டோபர் 1940 இல், இத்தாலி கிரேக்கம் மீது போர் தொடுத்தது. ஆயினும் தாக்குதல் சில நாட்களில் பின்வாங்குதலுக்கு உள்ளாகி அல்பேனியா வரை இத்தாலியப் படைகள் பின்வாங்க நேரிட்டது.[7]

அச்சு நாடுகள் சோவியற் உரசியா மீது தாக்குதல் (1941)[தொகு]

செருமனிய காலாட்படை மற்றும் கவச வாகனங்கள் சோவியற் பாதுகாப்பாளர்களுடன் கார்க்கோவ் வீதிகளில் சண்டையிடுகின்றன, அக்டோபர் 1941.

ஒப்பீட்டளவில் ஐரோப்பா, ஆசியா சூழ்நிலை உறுதியாக இருக்கும்போது, செருமனி, சப்பான், சோவியத் உரசியா என்பன ஆயத்தங்களை மேற்கொண்டன. சோவியத்தின் செருமனியுடனான பதட்டம் அதிகரித்திருக்கையிலும், ஐரோப்பிய போரைச் சாதகமாக்கி தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஐரோப்பிய செல்வந்த வள உடைமைகளைக் கைப்பற்ற சப்பான் திட்டமிட்டிருக்கையிலும், 1941 ஏப்ரலில் சோவியற்–சப்பான் நடுநிலை ஓப்பந்தம் சோவியற்றுக்கும் சப்பானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டன.[8] இத்தருணத்தில் செருனி சோவியற் ஒன்றியம்மீது தாக்குதல் நடத்த மறைவாக ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்து, சோவிற் எல்லையில் படைகளைக் குவித்துக் கொண்டிருந்தது.[9]

பசிபிக்கில் போர் வெடித்தது (1941)[தொகு]

1931ம் ஆண்டில் சீனாவின் மன்சூரியன் பகுதியைக் கைப்பற்றி "மன்சுகோ" எனும் பொம்மை அரசாங்கத்தை உருவாக்கியதன் மூலம் பசிபிக் பகுதியில் போரைத் துவங்கி வைத்தது. இதனால் புருட்டல் (Burutal) என்ற இடத்தில் போர் நடந்தது. அச்சு நாடுகளான இத்தாலி, செர்மனி, மற்றும் சப்பானும் 1940 செப்டம்பர் 27ல் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பசிபிக் கடல் பகுதியில் கிடைக்கும் இயற்கை வளங்களை அவகரித்துக்கொள்ள ஜப்பான் கனவு கண்டது.

1941 டிசம்பர் 7 அன்று அமெரிக்காவின் அவாய் தீவில் அமைந்துள்ள முத்து துறைமுகத்தைச் சப்பான் தனது போர் விமானங்களால் தாக்குதல் நடத்தியதால் அமெரிக்காவின் போர் கப்பல்களும், விமானங்களும் நாசமாகியது. இத்தீவை சூறையாடியதன் மூலம் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதாகச் சப்பான் எண்ணியது. அமெரிக்கா தன்னை சுதாரித்துக் கொள்ளும் முன்னர் "இபா" விமானத்தளத்தையும் சூறையாடியது. இப்போதுதான் அமெரிக்கா செர்மனிக்கு எதிராகப் போர் தோடுக்க முடிவு செய்தது.

டிசம்பர் 1941ல் மேற்கு பசிபிக் கடல் பகுதியில் அமெரிக்காவின் இவான் மற்றும் வடக்கு பசிப்பிக்கில் அமைந்துள்ள வகெ தீவையும் கைப்பற்றியது. 1942 பாதியிலேயே அமெரிக்காவின் பிலிப்பைன்சு, டச்சுக் கிழக்கு இந்தியப் பகுதி, ஹாங்காங், மலேயா, சிங்கப்பூர், மற்றும் பர்மாவையும் கைப்பற்றியது. தாய்லாந்து நடுநிலை வகித்தது. 1942ல் இந்தோ-இங்கிலாங்து படைகள் இந்திய பகுதியிலும், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து படைகள் நியூ கினிப் பகுதியிலும் சப்பான் படைகளை எதிர்த்தன.

சாலமன் தீவில் நடந்த சண்டையால் அமெரிக்கா வெற்றியைத் தனதாக்கிக்கோண்டது.ஜப்பான் 43,000 படைவீரர்களைக் கொண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை கைப்பற்றியதால் அமெரிக்காவின் தளபதி மேக் ஆர்த்தர் ஆஸ்திரேலியாவிற்குத் தன் குடும்பத்துடன் தப்பி ஓடினார். 1944ல் மேக் ஆர்த்தர் பெரும்படையுடன் வந்து பிலிப்பைன்ஸை கைப்பற்றினார்.

1945 ஆகஸ்ட் 6 இல் காலை 7 மணிக்கு அமெரிக்காவின் பி-29 விமானம் சப்பானின் இரோசிமா மீது அணுகுண்டை வீசியது. இதனால் 78,000 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னரும் கதிர்வீச்சால் 12,000 பேர் மரணம் அடைந்தார்கள். மூன்று நாட்கள் கழித்து அமெரிக்கா – இங்கிலாந்து நாட்டவரால் தயாரிக்கப்பட்ட அணுக்குண்டை அமெரிக்கா சப்பானின் துறைமுக நகரமான நாகசாகி மீது வீசியது. இதனால் 38,000 பேர் மரணம் அடைந்தனர். 1945ல் ஆகஸ்ட் 15ல் சப்பான் சரணடைந்தது.

அச்சு நாடுகள் முன்னேற்றம் தடைபட்டது (1942–43)[தொகு]

நான்கு கவலர்களில் மூவரான சாங் கை ஷேக் (சீனா), பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் (ஐக்கிய நாடுகள்), வின்சன்ட் சர்ச்சில் (ஐக்கிய இராச்சியம்), 1943 ல் கெய்ரோ மாநாட்டில் இரண்டாம் உலகப்போருக்காக சந்தித்தபொழுது

1941 ஜூலை மாதவாக்கில் ஜெர்மனி மின்னல் போர் முறையில் பக்கத்து நாடுகள் அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்துகொண்டது. ஜெர்மனியின் போர் விமானங்கள் குண்டு மழை பொழியும் ராணுவ வீரர்கள் பாராசூட் மூலம் குதித்து பொதுமக்களைத் துப்பாக்கியால் சரமாரியாக் சுடுவார்கள், என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளக்கூட அவகாசம் கொடுக்கமாட்டர்கள்.

போலந்து,டென்மார்க்,நார்வே, நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பர்க், பிரான்ஸ் பொன்ற ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் போர் துடங்கிய இரண்டு ஆண்டுகளில் ஜெர்மனி ஆக்கிரமிப்பு செய்துகொண்டது. நெடுநாட்கள் நடுநிலையில் இருந்த அமெரிக்கா போர் அரிவிக்காத்துவரை ஜெர்மனி வெற்றிக்கழிப்பில் இருந்தது. ஜெர்மனியின் அகங்காரம்,'ஹிட்லர்' தன்னுடன் ஒப்பந்ததில் கையெழுத்திட்ட மற்ற நாடுகளான ஜப்பானுடனும், இத்தாலியுடனும் தான் படையெடுக்கும் செய்தியைக்கூட தெரிவிப்பதில்லை,யூதர்களையும், எதிரிகளையும் கொடுமைப்படுத்துவதில் காட்டிய ஆர்வத்தில் பாதிகூட தன் சிப்பாய்களின் மீது கவனம் செலுத்தவில்லை. ரஷ்யாவின் மீது ஜெர்மனி படையடுத்தபோது அங்கு குளிர் காலம் துவங்கியிருந்தது. ஹிட்லர் தன் சிப்பாய்களுக்குக் கம்பளி போன்ற அத்தியாவசிய பொருட்களைக்கூட கொடுக்க மனம் இல்லை. தலைமை தளபதிகளாக இருந்தவர்கள் யார் சொல்லும் கேட்டு நடக்கும் நிலையில் இல்லை. ஜெர்மனி வீரர்களால் குளிரில் தன் மனதையும், உடலையும் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.

1942 முதல் 1943 வரை நடந்த ரஷ்யா ஜெர்மனி போரில் 25 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள் எனப் பிபிசி [BBC] தெறிவித்தது. 1943 ஜூலை 5ல் துவங்கிய போரிலிருந்து துவண்டுபோயிருந்த ரஷ்யா செப்டம்பர் 25-ல் சோவியத்தின் சுமுலினிக் (Smolensk) என்ற நகரையும், நவம்பர் 6-ல் கேவிஎ (Kive) என்ற நகரையும், 1944 ஜனவரி 27ல் லெனின் கிராட் நகரையும் ஜெர்மனியிடமிருந்து மீட்டது. பின்னர் ஆபரேசன் பேக்ரசன் (Bagration) மூலம் ஜெர்மனியை அதிரடியாகத் தாக்கியது. ஜூலை 22ல் மிட்ச்ஸ் நகரம் விடுவிக்கப்பட்டது. ஜூலை 24ல் போலந்தின் மக்டனக் நகரமும் ரஷ்யாவின் படைகள் கைப்பற்றியது. ஆகையால் அச்சு நாடுகளின் முன்னேற்றமும் தடைப்பட்டது, மற்றும் அவர்கள் கனவும் தகர்ந்தது.

நேச நாடுகள் முன்னேற்றம் (1943–44)[தொகு]

1943ம் ஆண்டு மே மாதம் கவுடால்கேனல் பிரச்சாரத்தின் (Guadalcanal Campaign) நேச படைகள் ஜப்பான் அணிக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதில் முதன்மையானது மே 1943ல் அலூசியன் தீவுகளில் (Aleutians) நேச படைகள் ஜப்பன் படைகள் அகற்ற அனுப்பப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகப் பசுப்பிக்கடல் பகுதில் இருந்த ரசுல் தீவுகள் (Rabaul), மார்சல் தீவுகள் (Marshall Islands), மேற்கு ஆஸ்திரேலியா அருகில் உள்ள கில்பர்ட் தீவுகள் (Gilbert Islands) போன்ற பல தீவுக்கூட்டங்களைக் கைப்பற்ற படைகள் விரைந்தன. 1944 மார்ச் இறுதியில் நேச நாடுகளின் நோக்கங்கள் நிறைவு பெற்றதுடன் கூடுதலாகக் கரோலின் தீவுகளும் கைப்பற்றப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கு நியூ கினி படையேடுப்பு துவங்கியது.

1943 கோடை மற்றும் வசந்த காலங்களில் மத்திய ரஷ்யாவில் பெரிய தாக்குதல்களுக்கு ஜேர்மனியர்கள் ஆயத்தமானார்கள். குர்ஷ்க் (Battle of Kursk) என்னும் இடத்தில் ஜூலை 1943 4 அன்று ஜெர்மன் படைகள் தாக்குதல் நடத்தின. ஆனால் அந்த சூழ்நிலை சரியில்லாததால் படைகளின் ஹிட்லர் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. அந்த மாதம் (ஜூலை 9) முசோலினி கைது செய்து வெளியேற்றப்பட்டார். 1943 நவம்பர் மாதம் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில், ஜோசப் ஸ்டாலின் சீனக் குடியரசு பகுதியான கெய்ரோவில் சந்தித்தார்.

நேச நாடுகள் வெற்றியை நோக்கி (1944)[தொகு]

1944ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி நேச நாடுகளின் நார்மாண்டி படையெடுப்பு

1944ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மேற்கு போர் முனையில் நடந்த சண்டையில் பெல்ஜியம் நாட்டின் துறைமுக நகரமான ஆண்ட்வெர்ப் எனும் இடத்தில் ஜெர்மனி தனது கடைசி பெரும் முயற்சி எடுத்து தோழ்வியைத் தழுவியது.[10] இந்த வெற்றியின் காரணமாக பெரும் முயற்சி எடுக்காமலேயே நேச படைகள் முன்னேறின.[10] மேற்கத்திய படைகள் ஜெர்மனின் கூட்டுப்படைகளைச் சுற்றிவளைத்து தாக்கி வெற்றிகண்டது. இந்த நிகழ்வின் மூலம் இத்தாலி நாட்டின் படைகளிடம் போரின் போக்கில் தேக்க நிலை காணப்பட்டது. 1945ம் ஆண்டின் மத்தியப்பகுதியில் சோவியத் படையும் ஜெர்மன் படையும் ஓடர் (Oder river) ஆற்றில் மோதிக்கொண்டன. இந்த சண்டையின் மூலம் போலந்தும் தாக்கப்பட்டு கிழக்கு பிரஷ்யாவை நேச நாடுகள் கைப்பற்றின.[11] 1945ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி அமெரிக்கா, இங்கிலாந்து, சோவியத் போன்ற நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி கருங்கடல் பகுதியில் யால்ட்டா மாநாட்டில் கலந்து ஆலோசனை செய்தார்கள். இந்த மாநாட்டில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பை அகற்ற சோவியத் ஒன்றியம் ஜப்பானுக்கு எதிரான போரின் குதிக்க தயாரானது.[12]

1945ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐரோப்பிய ஆறான ரைன் ஆறு மூடப்பட்டபோது பால்டிக் கடல் தெற்கு கரை பகுதியில் ஜெர்மனியின் ஆதரவு படைகள் சைலேசியா மற்றும் போமெரேனியா மீது படையெடுப்பு நடத்தியது. அந்த வருடம் மார்ச் மாதம் நேச நாடுகளின் படைகளைச் சூழ்ந்து வடக்கில் ஜெர்மனியின் ரோம்கன் (Remagen) நகர் பகுதியிலும் தெற்கிலும் முற்றுகையிட்டன. அப்போது சோவியத் யூனியன் வியன்னா வரை முன்னேறியது.[13] ஏப்ரல் மாத துவக்கத்தில் சோவியத் படைகளும் போலந்து படைகளும் இத்தாலியின் பகுதிகளையும், மேற்கு ஜெர்மனியின் பெர்லின் பகுதியையும் குறுக்காக தாக்க ஆரம்பித்தார்கள். அதே ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி சோவியத் படைகளும் அமெரிக்க படைகளும் ஜெர்மனியில் ஓடும் எல்பா ஆற்றில் வைத்து சேர்ந்து கொண்டன. 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெர்மனியின் பாராளுமன்றக் கட்டிடமும் அந்த நாட்டின் பாரம்பரிய மாளிகையுமான ரெய்டாக் கைப்பற்றப்பட்டது.[14]

இந்த காலகட்டத்தில் ஏராளமான முக்கியப்பொறுப்பில் இருந்த அதிகாரிகளின் மாற்றம் நடந்தது. அமெரிக்க குடியரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் ஏப்ரல் 12ம் தேதி மரணமடைந்ததால் ஹாரி எஸ். ட்ரூமன் பதவி ஏற்றார். 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி இத்தாலிய எதிர்ப்பு இயக்கத்தால் முசோலினி கொல்லப்பட்டார்.[15] இரண்டு நாட்கள் கழித்து ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் (Death of Adolf Hitler) தற்கொலை செய்துகொண்டார்.[16]

ஜெர்மனியின் படைகள் ஏப்ரல் மாதம் 29ம் தேதி சரணடைவதாக ஒப்புக்கொண்டு (kamerad). மே மாதம் 7ம் தேதி ஜெர்மனி எந்த நிபந்தனையுமின்றி சரணடைந்தது,அதனால் இந்த ஒப்பந்தம் 8ம் தேதி நடைமுறைக்கு வந்தது.[17] அதன் பின்னரும் மே மாதம் 11ம் தேதி வரை ஜெர்மன் இராணுவ குழு மையம் செக் நாட்டின் பராகுவே நகரில் முகாமிட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.[18]

நேச நாடுகள் 1945 ஜூன் 3ம் தேதி ஜெர்மனியின் பாராளுமனத்தை கைப்பற்றிய போது எடுக்கப்பட்ட படம்

1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பிலிபைன்ஸ் நாட்டின் லெய்டி (Leyte) தீவிலிருந்து அமெரிக்க-பிலிபைன்ஸ் படைகளின் கூட்டு முயற்சியுடன் மற்ற படைகளை வெளியேற்றக்கோரப்பட்டது. 1945ம் ஆண்டு மார்ச் மாதம் பிலிபைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவை கைப்பற்ற லுசான் (Luzon) என்ற இடத்தில் படைகள் குவிக்கப்பட்டன. மணிலாவை கைப்பற்றும் வரை லுசான் (Luzon), மாண்டனோ (Mindanao) போன்ற இடங்களில் சண்டை நடந்து கொண்டு இருந்தது.[19] மார்ச் மாதம் 9ம் தேதி இரவு அமெரிக்க விமானப்படை விமானம் போயிங் B-29 சூப்பர்ஃபோர்ட்ரெஸ் தீயை உமிளும் அணுக்குண்டை ஜப்பானின் நகரின் மீது போட்டு கொஞ்ச நேரத்தில் 100,000 மக்களை கொன்று குவித்தது. அமெரிக்க-இங்கிலாந்தின் கூட்டு தாக்குதலால் அடுத்த ஐந்து மாதங்களில் ஜப்பானில் 66 நகரங்களில் பொதுமக்கள் 3,50,000 முதல் 5,00,000 பேர் தீக்கிரையாகி இறந்தனர்.[20]

1945ம் ஆண்டு மே மாதம் ஆஸ்திரலிய படைகள் இந்தோனேசியா, மலேசியா, புரூணை, போன்ற நாடுகளின் ஆட்சியின் கீழ் இருந்த போர்னியோ தீவில் உள்ள எண்ணெய் வயல்களை கைப்பற்ற தீவிரம் காட்டின. மார்ச் மாதத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, சீனா போன்ற கூட்டுப்படைகள் வடக்கு பர்மாவில் ஜப்பான் படைகளைத் தோற்கடித்தன. பின்னர் பிரித்தானியா படைகள் மியான்மர் நாட்டின் தலைநகரான ரங்னை அடைய மே மாதம் 3ம் தேதி ஆனது.[21] 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் மேற்கு ஹுனான் போரில் சீன படைகள் எதிர் தாக்குதல் நடத்தத் துவங்கின. அமெரிக்க படைகள் மார்ச் மாதம் இமோஜீமாவையும் ஜூன் மாத இறுதியில் ஒகினவாவையும் ஜப்பானை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்தது.[22] அமெரிக்கப்படைகள் ஜப்பானை அழித்துக்கொண்டிருந்த அதே வேளையில் நேச நாடுகளின் நீர்மூழ்கிக்கப்பல்கள் ஜப்பானுக்கு எந்த நாட்டின் உதவியும் கிடைக்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தது.[23]

1945ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஜப்பான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் மமெரொ சிகமெட்சு (Mamoru Shigemitsu) முன்னிலையில் போர் தளவாடங்களை அமெரிக்க போர் கப்பல் மிசொவ்ரியில் வைத்து ஒப்படைத்த காட்சி

1945ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நேச நாடுகளின் தலைவர்கள் ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரின் சந்தித்தார்கள். அப்போது எந்த விதமான நிபந்தனையுமின்றி சரணடைவதாக ஒப்பந்தம் (Potsdam Agreement)[24] செய்ய உறுதியளிக்கப்பட்டது. அதே வேளையில் ஐக்கிய ராஜ்யம் பொது தேர்தலை சந்தித்தது அதில் கிளமெண்ட் அட்லீ வெற்றிபெற்றார். இரண்டாம் உலகப்போரின் தலைவராக கருத்தப்பட்ட வின்ஸ்டன் சர்ச்சில் தோழ்வியடைந்தார்.[25]

ஜப்பான் நாடு 1945ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி செய்துகொண்ட ஒப்பந்ததை மீறுவது கண்டு அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து ஆகஸ்ட் மாத துவக்கத்தில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நகரங்களில் அடுத்தடுத்து அணுக்குண்டு மழைபொழிந்தது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சரணடைய ஒப்புக்கொண்டு, செப்டம்பர் மாதம் 2ம் தேதி நேசப்படைகளின் கப்பலான மிசோரியில் வைத்து சண்டைமுடி கையோப்பம் இட்டு சரண்டைந்தனர்.

இரஷ்யாவின் செஞ்சேனை கூரில் தீவுகளைப் கைப்பற்றியது.[26][27][28] 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் ஜப்பான் போரை விடுத்து சரணடைய ஒப்புக்கொண்டது, ஆனால் இறுதியாக செப்டம்பர் 2, 1945 அன்று அமெரிக்க போர் கப்பல் யுஎஸ்எஸ் மிசோரி கப்பலில் வைத்து சரணடைந்தனர்.[26][27][28][29]

அச்சு நாடுகள் வீழ்ச்சி - நேச நாடுகள் வெற்றி (1944–45)[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Sommerville 2008, p. 5.
 2. Förster & Gessler 2005, p. 64.
 3. Masaya 1990, p. 4.
 4. "History of German-American Relations » 1989–1994 – Reunification » "Two-plus-Four-Treaty": Treaty on the Final Settlement with Respect to Germany, September 12, 1990". usa.usembassy.de. 6 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
 5. Murray & Millett 2001, pp. 57–63.
 6. Commager 2004, p. 9.
 7. Clogg 2002, p. 118
 8. Garver 1988, p. 114.
 9. Weinberg 2005, p. 195
 10. 10.0 10.1 Parker 2004, pp. xiii–xiv, 6–8, 68–70, 329–330
 11. Glantz 2001, p. 85.
 12. Beevor 2012, pp. 709–22.
 13. Buchanan 2006, p. 21.
 14. Shepardson 1998.
 15. O'Reilly 2001, p. 244.
 16. Kershaw 2001, p. 823.
 17. Evans 2008, p. 737.
 18. Glantz 1998, p. 24.
 19. Chant, Christopher (1986). The Encyclopedia of Codenames of World War II. Routledge & Kegan Paul. பக். 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7102-0718-2. 
 20. John Dower (2007). "Lessons from Iwo Jima". Perspectives 45 (6): 54–56. http://www.historians.org/perspectives/issues/2007/0709/index.cfm. 
 21. Drea 2003, p. 57.
 22. Jowett & Andrew 2002, p. 6.
 23. Poirier, Michel Thomas (20 October 1999). "Results of the German and American Submarine Campaigns of World War II". U.S. Navy. 9 ஏப்ரல் 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 April 2008 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 24. Williams 2006, p. 90.
 25. Miscamble 2007, pp. 203–4.
 26. 26.0 26.1 Charles F. Brower (October 16, 2012). Defeating Japan: The Joint Chiefs of Staff and Strategy in the Pacific War, 1943-1945. Palgrave Macmillan. பக். 133–144. 
 27. 27.0 27.1 Glantz 2005.
 28. 28.0 28.1 Pape 1993.
 29. Beevor 2012, p. 776.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_உலகப்_போர்&oldid=3262262" இருந்து மீள்விக்கப்பட்டது