ஒருங்கிணைந்த குண்டுவீச்சுத் தாக்குதல்
ஒருங்கிணைந்த குண்டுவீச்சுத் தாக்குதல் | |||||
---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் மேல்நிலை உத்தி குண்டுவீச்சுத் தாக்குதல்களின் பகுதி | |||||
அக்டோபர் 9, 1943ல் ஜெர்மானிய ஃபோக்கே வல்ஃப் விமானத் தொழிற்சாலை, அமெரிக்க பி-17 ரக விமானங்களால் அழிக்கப்பட்டது |
|||||
|
|||||
பிரிவினர் | |||||
ஐக்கிய இராச்சியம் | ஜெர்மனி |
ஒருங்கிணைந்த குண்டுவீச்சுத் தாக்குதல் (Combined Bomber Offensive) என்பது இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க-பிரிட்டானிய வான்படைகள் நாசி ஜெர்மனி மீது நிகழ்த்திய தொடர் குண்டுவீச்சுத் தாக்குதலைக் குறிக்கிறது. இது இரண்டாம் உலகப் போரின் மேல்நிலை உத்தி குண்டுவீச்சுத் தாக்குதல்களில் (Strategic Bombing) ஒன்றாகும்.
1943-44ல் ஜெர்மானிய வான்படையான லுஃப்ட்வாஃபேவை அழிப்பதற்காகத் தொடங்கப்பட்ட இத்தாக்குதல் நடவடிக்கைக்கு, பின்னர் ஜெர்மனியின் வி-ரக எறிகணைத் தளங்களை அழித்தல் (ஜூன் 1944), போக்குவரத்து கட்டமைப்பினை நாசமாக்குதல் (நார்மாண்டிப் படையெடுப்புக்கு முந்தைய மாதங்களில்), எரிபொருள் தொழிற்சாலைகளை அழித்தல் (செப்டம்பர் 1944) ஆகிய இலக்குகளும் அளிக்கப்பட்டன. போரின் இறுதி நாட்களில் ஜெர்மானியப் படைப் பிரிவுகளை அழிக்கவும் இந்த குண்டுவீச்சுத் தாக்குதல்கள் பயன்படுத்தப்பட்டன. இத்தாக்குதலில் பிரிட்டானிய வான்படை குண்டுவீசி விமானங்கள் ஆரம்பத்தில் இரவு நேரங்களில் மட்டும் தங்கள் தாக்குதல்களை நிகழ்த்தின. போரின் இறுதி காலத்தில் ஜெர்மானிய வான்படை பெரும்பாலும் அழிக்கப்பட்ட பின்னரே பகல் நேரத்தில் தங்கள் தாக்குதல்களை நிகழ்த்தின. ஆனால் துவக்கத்திலிருந்தே அமெரிக்க வான்படை குண்டுவீசிகள் பகலில் பெருங்கூட்டங்களாகச் சென்று ஜெர்மனியின் மீது குண்டுவீசின.
ஜெர்மனி மீதான குண்டுவீச்சுத் தாக்குதல் திட்டம் முதன் முதலில் 1943ம் ஆண்டு அமெரிக்க லெப்டினன்ட் ஜெனரல் ஐரா ஈக்கர் என்பவரால் முதலில் முன்வைக்கப்பட்டது. இதில் பின்வரும் இலக்குகள் வகுக்கப்பட்டிருந்தன:
உடனடி இலக்கு: ஜெர்மானிய வான்படையின் சண்டை வானூர்திகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் முதல் நிலை இலக்குகள் : ஜெர்மானிய வானூர்தி தொழிற்சாலைத் துறை, நீர்மூழ்கிக் கப்பல் கட்டுந்தளங்கள், எரிபொருள் கட்டமைப்பு, குண்டுப் பொதிகை தொழிற்சாலைகள் ஆகியவற்றை அழித்தல் இரண்டாம் நிலை இலக்குகள்: செயற்கை ரப்பர் தொழிற்சாலைகள், இராணுவ ஊர்தித் தொழிற்சாலைகள் ஆகியவற்றை அழித்தல்.
ஜூன் 10, 1943ம் ஆண்டு இந்த குண்டுவீச்சுத் தாக்குதல் தொடங்கியது. ஆரம்பத்தில் ஜெர்மானிய வான்படையினை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் 1944ல் நார்மாண்டிப் படையெடுப்புக்குத் துணையாக பிரான்சின் போக்குவரத்து கட்டமைப்பின் மீது பெரும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இத்தாக்குதலின் ஒரு பகுதியாக ஜெர்மானியத் தொலைதூரத் தாக்குதல் ஆயுதத் திட்டத்தை அழிக்க கிராஸ்போ நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.