உள்ளடக்கத்துக்குச் செல்

யுகோசிலாவியப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுகோசிலாவியப் படையெடுப்பு
இரண்டாம் உலகப் போரின் பால்கன் போர்த்தொடரின் பகுதி

யுகோசிலாவியப் படையெடுப்பு வரைபடம்
நாள் ஏப்ரல் 6, 1941 – ஏப்ரல் 17, 1941
இடம் யுகோசிலாவியா
தெளிவான அச்சு வெற்றி;
  • யுகோசிலாவியா ஆக்கிரமிக்கபட்டது
  • யுகோசிலாவியா அச்சு நாடுகளால் பிரிவினை செய்யப்பட்டது
  • அச்சு ஆதரவு கைப்பாவை அரசுகள் உருவாக்கபட்டன
  • யுகோசிலாவிய களம் உருவானது
பிரிவினர்
அச்சு நாடுகள்:

 Germany
 இத்தாலி

அங்கேரி அங்கேரி
பல்காரியா பல்கேரியா
உருமேனியா ரொமேனியா

நேச நாடுகள்:
 யுகோசுலாவியா
தளபதிகள், தலைவர்கள்
நாட்சி ஜெர்மனி மேக்சிமிலியான் வோன் வெய்க்சு
நாட்சி ஜெர்மனி வில்லெம் லிஸ்ட்
இத்தாலி விட்டோரியோ அம்புரோசியோ
அங்கேரி எலிமீர் கோரோண்டி-நொவாக்
யூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு டுசான் சிமோவிக் (மற்றும் பலர்)
பலம்
700,000 850,000
இழப்புகள்
ஜெர்மனி: 151 மாண்டவர்
392 காயமடைந்தவர்
15 காணாமல் போனவர்.
60+ வானூர்திகள்
இத்தாலி: 3,324 மாண்டவர் / காயமடைந்தவர், 10+ வானூர்திகள்.
Hungary: 350 பேர்
ஆயிரக்கணக்கான போர் வீரர்களும் பொதுமக்களும் மரணமடைந்தனர்
254,000-345,000 போர்க்கைதிகள், 49 வானூர்திகள் நாசம், 211 வானூர்திகள், 3 டெஸ்டிராயர்கள் மற்றும் 3 நீர்மூழ்கிக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டன.

யுகோசிலாவியப் படையெடுப்பு (Invasion of Yugoslavia) என்பது இரண்டாம் உலகப் போரின் போது அச்சு நாடுகள் யூகோசிலாவிய நாட்டின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிய நிகழ்வினைக் குறிக்கிறது. பால்கன் போர்த்தொடரின் ஒரு பகுதியான இது ஏப்ரல் போர் (April war) என்றும் நடவடிக்கை 25 (Unternehmen 25) அழைக்கப்படுகிறது.

1940ல் அச்சு நாடுகளில் ஒன்றான இத்தாலி கிரீசு மீது படையெடுத்தது. ஆனால் கிரேக்கப்படைகளின் கடுமையான எதிர்ப்பை அதனால் சமாளிக்க முடியவில்லை. இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி தனக்கு உதவுமாறு நாசி ஜெர்மனியின் சர்வாதிகாரி இட்லரிடம் முறையிட்டார். இத்தாலிக்குத் துணையாக பால்கன் குடா பகுதியில் தலையிட இட்லர் முடிவு செய்தார். மேலும் கிரீசிலுள்ள வானூர்தி ஓடுதளங்களில் இருந்து நேச நாட்டு வான்படைகள் ரொமேனியா நாட்டு எண்ணெய்க் கிணறுகளைத் தாக்கும் சாத்தியக் கூறு இருந்தது. அந்த எண்ணெய்க் கிணறுகளில் இருந்து தான் ஜெர்மனியின் போர்த் தேவைகளுக்கான எரிபொருள் கிடைத்துக் கொண்டிருந்தது. எனவே அவற்றைப் பாதுகாக்க கிரீசைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஜெர்மானியர்கள் விரும்பினர். கிரீசுக்கு வடகே உள்ள நாடுகளில் ரொமேனியா, பல்கேரியா, அங்கேரி ஆகிய மூன்று நாடுகளும் முன்னரே அச்சு நாட்டுக் கூட்டணியில் இணைந்து விட்டன. ஆனால் யுகோசிலாவியா மட்டும் தொடக்கத்தில் அவற்றுடன் இணைய மறுத்து வந்தது. ஜெர்மானிய வற்புறுத்தலால், மார்ச் 25, 1941 ல் யுகோசிலாவியின் அரசாட்சி பொறுப்பிலிருந்த இளவரசர் இரண்டாம் பால் அச்சுக் கூட்டணியில் இணைய ஒப்புக் கொண்டார். இதனை எதிர்த்த யுகோசிலாவிய இராணுவத்தினர் ஒரு புரட்சி ஒன்றை நடத்தி அவரைப் பதவியிலிருந்து இறக்கினர். இப்புரட்சியால் கோபம் கொண்ட இட்லர் யுகோசிலாவியா மீது படையெடுக்க முடிவு செய்தார்.

ஏப்ரல் 6, 1941 அன்று ஜெர்மானியப் படைகள் யுகோசிலாவியா மீதும் கிரீசு மீதும் ஒரே நேரத்தில் படையெடுத்தன. அங்கேரி, பல்கேரியா, ரொமேனியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மூன்று புறங்களில் இருந்து ஜெர்மானியப் படைகள் யுகோசியாவியாவைத் தாக்கின. இத்தாக்குதலில் இத்தாலிய மற்றும் அங்கேரியப் படைப்பிரிவுகளும் பங்கேற்றன. திடீரென நிகழ்ந்த இத்தாக்குதலாலும், யுகோசிலாவிய மக்களிடையே ஜெர்மனியை எதிர்ப்பது குறித்து செர்பிய-குரோஷிய இனக்குழுக்களிடையே இரு வேறு கருத்துகள் நிலவியதாலும், யுகோசிலாவியப் படைகள் நிலைகுலைந்தன. படையெடுப்பின் முதல் நாள் ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே யுகோசிலாவியத் தலைநகர் பெல்கிரேட் மீது ஒரு பெரும் குண்டுவீச்சுத் தாக்குதல் நிகழ்த்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட இத்தாக்குதலில் பெல்கிரெட்டின் மையப் பகுதியும் இராணுவத் தலைமையகக் கட்டிடங்களும் நாசமாகின. இதனால் யுகோசிலாவியப் படைகளின் ஒருங்கிணைப்பு சீர்குலைந்தது. அடுத்த பதினோரு நாட்களில் யுகோசிலாவியப் படைகளை எளிதில் முறியடித்த அச்சுப் படைகள் பெல்கிரேடை சுற்றி வளைத்தன. ஏப்ரல் 17 அன்று யுகோசிலாவியா சரணடைந்தது. பின்னர் அந்நாட்டுப் பகுதிகள் ஜெர்மனி, இத்தாலி, அங்கேரி, மற்றும் பல்கேரிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஜெர்மனிக்கு ஆதரவான குரோவாசியா அச்சு ஆதரவுடன் தனி நாடானது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு (இரண்டாம் உலகப் போர் முடியும் வரை) யுகோசிலாவியா அச்சு நாடுகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஆக்கிரமிப்பு காலத்தில் யுகோசிலாவிய எதிர்ப்புப் படைகள் தொடர்ந்து அச்சுப் படைகளை எதிர்த்து கொரில்லாப் போர் புரிந்தன.

மேற்கோள்கள்

[தொகு]