உள்ளடக்கத்துக்குச் செல்

இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு
பசிபிக் போர்முனை, இரண்டாம் உலகப் போர் பகுதி
Two photos of atomic bomb mushroom clouds, over two Japanese cities in 1945.
அணுகுண்டு வீச்சின் விளைவாக ஹிரோஷிமா நகருக்கு மேலே எழுகின்ற காளான் மேகமூட்டம் (இடது); நாகசாக்கி நகருக்கு மேலே எழுகின்ற காளான் மேகமூட்டம் (வலது)
நாள் 6–9 ஆகத்து, 1945
இடம் ஹிரோஷிமா; நாகசாக்கி. - சப்பான் நாடு
அணுகுண்டு வீச்சின் விளைவு விவாதத்துக்கு உரியது. சப்பான் சரணடைய தூண்டுதலாக இருந்திருக்கலாம்.
பிரிவினர்
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்க நாடுகள்
 ஐக்கிய இராச்சியம்
சப்பான் சப்பான் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
வில்லியம்.எஸ்.பார்சன்ஸ்
பவுல் டபிள்யு. டிப்பெட்சு, ஜூனியர்
ஷுன்ரோக்கு ஹதா
படைப் பிரிவுகள்
மான்ஹாட்டன் மாவட்டம்
509ஆம் கூட்டுக் குழு
இரண்டாம் பொதுப் படை
இழப்புகள்
இல்லை 90,000–166,000 பேர் ஹிரோஷிமாவிலும்[1]
60,000–80,000 பேர் நாகசாக்கியிலும் கொல்லப்பட்டனர்[1]

1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் நேச நாடுகள் சப்பான் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு நகர்களாகிய இரோசிமா, நாகசாக்கி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்தின. இந்த இரு அணுகுண்டு வீச்சுகள் மட்டுமே இன்றுவரை போர்ச் செயல்பாட்டில் நிகழ்ந்தவை ஆகும். அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை யப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும். அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் இறந்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கின்றது.

இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்கள்

[தொகு]

இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது ஜப்பான், தானும் ஒரு வல்லரசாக மாறும் முனைப்பில் மிக உக்கிரமாகப் போரில் குதித்திருந்தது. வெற்றிபெற்றுக்கொண்டே வந்த ஜப்பான், பசிபிக் கடல் பிராந்தியத்தின் பேர்ள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. அதன்பின்னரே போரின் போக்கு முற்றாகத் திசைதிரும்பியது. முடிவில், அமெரிக்கா, தான் புதிதாகக் கண்டுபிடித்திருந்த அணுகுண்டுகளை வெடிக்கவைத்துப் பார்க்கும் பரிசோதனைக்கூடமாக ஜப்பானைப் பயன்படுத்திக் கொண்டது. ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய ஜப்பானிய நகரங்களின் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் மூலம் அணுகுண்டுகள் வீசியெறியப்பட்டன.

சரணடைய சப்பானுக்கு இறுதி எச்சரிக்கை

[தொகு]

நேச நாடுகள் முதலில் சப்பான்மீது தீக்குண்டுகளை வீசித் தாக்குதல் நிகழ்த்தின. இதனால் பல நகரங்கள் அழிந்தன. பின்னர், தாக்குதல்களின் தீவீரம் அதிகரித்தது. ஐரோப்பிய போர்முனையில் நாசி செருமனி 1945, மே 8ஆம் நாள் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. அதே நாளில் "சரண் ஆவணம்" (instrument of surrender) கையெழுத்தானது. ஆனால் பசிபிக் போர்முனையில் போர் தொடர்ந்து நடந்தது.

பின்னர், 1945, சூலை 26ஆம் நாள், ஐக்கிய அமெரிக்கா, சீனக் குடியரசு மற்றும் ஐக்கிய இராச்சியத்தோடு இணைந்து, "பாட்சுடம் அறிக்கை" (Potsdam Statement) வெளியிட்டது அந்த அறிக்கையில் சப்பானின் அரசு தோல்வியை ஏற்று, "நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்" என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் "உடனடி, முழு அழிவு"க்கு அணியமாக வேண்டும் கூறப்பட்டிருந்தது. அதற்குப் பத்து நாட்களுக்கு முன்னர் அணுகுண்டு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருந்ததால் "உடனடி, முழு அழிவு" என்னும் சொற்கள் சப்பான் மீது நேச நாடுகள் அணுகுண்டு வீச்சு நிகழ்த்த வேண்டிய சூழ்நிலை எழலாம் என்று கடைசி எச்சரிக்கை கொடுத்தது போல் ஆயிற்று.

அணுகுண்டு வீச்சு

[தொகு]

இந்த எச்சரிக்கையை சப்பான் அரசு கண்டுகொள்ளவில்லை. "மான்ஹாட்டன் செயல்திட்டம்" என்பதின் கீழ் உருவாக்கப்பட்ட இரு அணு ஆயுதங்கள் சப்பானின் மீது வீசப்பட்டன. "சிறு பையன்" (Little Boy) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமா நகர்மீது 1945, ஆகத்து 6ஆம் நாளும், "பருத்த மனிதன்" (Fat Man) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு நாகசாக்கி நகர்மீது மூன்று நாட்களுக்குப் பிறகு ஆகத்து 9ஆம் நாளும் வீசப்பட்டன. நினைத்துப் பார்க்கவும் முடியாத பேரழிவுகளை ஜப்பான் சந்திக்க நேர்ந்தது. அந்த அழிவின் சாட்சியங்கள் இன்றும் அந்த நாட்டில் நிலைத்துள்ளன.

விளைவு

[தொகு]

இதுவே வரலாற்றில் முதல்முறையாக அணுகுண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த இரு குண்டுவீச்சுகளின் விளைவு மிகப் பயங்கரமாக இருந்தது. குண்டுகள் வீசப்பட்ட 2-4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90,000-166,000 மக்களும், நாகசாக்கியில் 60,000-80,000 மக்களும் குண்டுவெடிப்பின் காரணமாக உயிர் இழந்தார்கள். இவ்வாறு உயிர் இழந்தவர்களுள் பாதிப்பேர் இரு நகரங்களிலும் குண்டு வீசப்பட்ட முதல் நாளிலேயே கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிரோஷிமா நகரின் நலத்துறை கணிப்புப்படி, குண்டுவீச்சு நிகழ்ந்த நாளில் இறந்தோரில் 60% பேர் தீக்காயங்களாலும், 30% பேர் இடிமானங்கள் தங்கள்மேல் விழுந்ததாலும், 10% பிற காரணங்களாலும் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சைத் தொடர்ந்த மாதங்களில் ஏராளமான மக்கள் தீக்காயங்களின் விளைவாலும், கதிர்வீச்சு நோயாலும், வேறு காயங்களால் நோய் தீவிரமாகியும் இறந்தனர். ஐக்கிய அமெரிக்கா, குண்டுவீச்சைத் தொடர்ந்த சாவுகளுக்கு உடனடியான மற்றும் குறுகிய காலக் காரணங்களைக் கீழ்வருமாறு கணித்தது: 15-20% பேர் கதிர்வீச்சு நோயால் இறந்தனர்; 20-30% தீக்காயங்களால் இறந்தனர்; 50-60% பேர் வேறு காயங்களால் நோய் தீவிரமாகி இறந்தனர். ஹிரோஷிமாவிலும் நாகசாக்கியிலும் கொல்லப்பட்டவர்களுள் மிகப் பெரும்பான்மையோர் போர்வீரர்கள் அல்ல, சாதாரண குடிமக்களே ஆவர். ஹிரோஷிமாவில் மட்டும் இராணுவ முகாம்கள் பல இருந்தன.

அணுகுண்டுகளின் பெயர்கள்

[தொகு]

ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு அமெரிக்கா வைத்த குறிப்பெயர் ”சின்னப் பையன்” (little boy) என்பதாகும். மூன்று நாட்கள் கழித்து நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு ”கொழுத்த மனிதன்” (Fat man) என்ற குறுப்பெயர் சூட்டினர்.

சின்னப்பையன் (லிட்டில் பாய்)

[தொகு]

‘எனோலாகே’ என்ற விமானம் ‘’ என்ற அணுகுண்டை காலை 8.15 மணிக்கு இரோசிமா நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் போட்டது. அணுகுண்டைத் தாங்கி வந்த விமானத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான ‘பால்டிப்பெட்ஸ்’ என்பவரின் தாயார் பெயர்தான் ‘எனோலாகே’ என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டடங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை.

ஜப்பான் இராணுவத்தின் தலைமையகம் இரோசிமா நகரத்திலுள்ள இராணுவப் பிரிவை திரும்பத் திரும்ப அழைக்க முயன்றது. மறுபக்கத்தில் எந்தப் பதிலும் கிடைக்காமல் முழு அமைதி நிலவியதால் ஜப்பான் நாட்டின் இராணுவத் தலைமையகம் குழப்பம் மேலிட்டு பதற்றமடைந்தது. ஏற்பட்ட பயங்கர பாதிப்பை ஜப்பான் தலைமை முழுமையாக உணர முடியாத காரணத்தினால் தலைமையிலிருந்து ஓர் இளம் அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்துவரப் பணிக்கப்பட்டார். அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா விரைந்தார். மூன்று மணி நேரம் பறந்ததற்குப் பிறகு இன்னும் ஹிரோஷிமா சென்றடைய நூறு கிலோ மீட்டர் தூரமே இருந்த போது அவரும் அந்த விமானத்தின் பைலட்டும் வானமண்டலமே புகை கக்கும் மேக மண்டலங்களாக உருவெடுத்திருப்பதைப் பார்த்தனர். மிகுந்த சிரமப்பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தை வேறு ஒரு பகுதிக்குச் செலுத்தி பத்திரமாக இறக்கினர். அந்த இளம் அதிகாரி, ஏற்பட்ட பேரழிவைப் பற்றித் திரும்பி வந்து சொன்ன பிறகுதான் உலகமே இக்கொடுமை குறித்துத் தெரிந்தது.

ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது. 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளிப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.

குண்டுமனிதன் (ஃபேட்மேன்)

[தொகு]

நாகசாகி மீது போடப்பட்ட’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தெரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.

மூன்று குண்டுகள் செப்டம்பரிலும், முன்று குண்டுகளை அக்டோபரிலும் போட அமெரிக்கா திட்டமிட்டது. இந்தக் குண்டுகள் அனைத்தையும் அன்றைய குடியரசுத் தலைவரின் எழுத்துப்பூர்வமான உத்தரவில்லாமல் போட இயலாது என உயர்மட்ட இராணுவ அதிகாரிகளே தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் படிப்படியாக சூழல் மாற்றம் ஏற்பட்டு இத்திட்டங்களைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சப்பான் சரணடைதல்

[தொகு]

1945, ஆகத்து 15ஆம் நாள், அதாவது, நாகசாக்கியில் அணுகுண்டு வீசப்பட்ட ஆறாம் நாள், சப்பான் போரில் தோல்வியை ஏற்று நேசநாடுகளின் முன் சரணடைந்தது. அதே ஆண்டு, செப்டம்பர் மாதம் சப்பான் "சரண் ஆவணத்தில்" (Japanese Instrument of Surrender) கையெழுத்திட்டது. இவ்வாறு இரண்டாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.

அணுகுண்டு வீச்சு அறநெறிக்கு உகந்ததா?

[தொகு]

இரண்டாம் உலகப் போருக்குப் பின் சப்பான் நாடு உலக அமைதியைப் பேண உறுதிபூண்டது. 1967இல் சப்பான் "அணு ஆயுத விலக்கு பற்றிய மூன்று தத்துவங்கள்" (Three Non-Nuclear Principles - சப்பானிய மொழியில்: Hikaku San Gensoku) என்னும் கொள்கையைத் தனக்கென்று வகுத்துக்கொண்டது. போரில் சப்பான் அணுகுண்டு அழிவைச் சந்தித்ததும் அக்கொள்கை உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. சப்பான் ஏற்ற மூன்று தத்துவங்கள் பின்வருமாறு:

  • சப்பான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாது.
  • அணு ஆயுதங்களைக் கைவசம் கொண்டிராது.
  • அணு ஆயுதங்கள் சப்பானுக்குள் வர இசையாது.

இக்கொள்கைகள் சப்பானிய மக்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை எதிரொலித்தன. அவை நாடாளுமன்றத்தால் சட்டமாகப் பிரகடனம் செய்யப்படாவிட்டாலும், "தீர்மானங்களாக" (Resolutions) நிறைவேற்றப்பட்டன.

இரண்டாம் உலகப் போரில் சப்பான் தோல்வியை ஏற்று சரணடைந்ததற்கு நேச நாடுகள் அணுகுண்டு வீசியதுதான் காரணமா என்னும் கேள்வி தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. அதுபோலவே, போர் நிகழ்கையில் நேச நாடுகள் பயங்கர அழிவுகளையும் உயிர்ச்சேதத்தையும் விளைவித்த அணுகுண்டுகளை வீசியது அறநெறிக்கு உகந்ததா என்னும் கேள்வியும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.

அணுகுண்டு வீச்சின் பின்புலம்

[தொகு]

பசிபிக் போர்

[தொகு]
சப்பானுக்கு எதிரான விளம்பரம் - நேச நாடுகள் போரின் முதல் கட்டத்தில் தங்களுக்கு ஏற்பட்ட தோல்விகளை வலியுறுத்தின.

1945இல் நேச நாடுகளுக்கும் சப்பான் பேரரசுக்கும் இடையே நிகழ்ந்த போர் நான்காம் ஆண்டை எட்டியது. இரண்டாம் உலகப் போர் முடிவதற்கான அறிகுறிகளும் இருந்தபாடில்லை. மாறாக, சண்டையின் மும்முரம் அதிகரித்துக்கொண்டே போனது. இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்க போர்வீரர்கள் 1.25 மில்லியன் பேர் இராணுவத் தளத்தில் இறந்தார்கள்; அவர்களுள் ஏறத்தாழ 1 மில்லியன் பேர் சூன் 1944க்கும் சூன் 1945க்கும் இடைப்பட்ட 12 மாதங்களில் இறந்தார்கள் என்பதிலிருந்து சண்டையின் மும்முரம் தெளிவாகிறது.

1944 திசம்பர் மாதத்தில் மட்டுமே செருமானிய துருப்புகள் "ஆர்டேன் தாக்குதல்" என்று அழைக்கப்படுகின்ற பல்ஜ் சண்டையில் 88,000 அமெரிக்க போர்வீரர்களைக் கொன்றுகுவித்தன. ஒரே மாதத்தில் மிக அதிகமான போர்வீரர் இறந்தது அச்சண்டையில்தான்.[2]

அதே காலகட்டத்தில், பசிபிக் முனையில் நடந்த போரில் நேச நாடுகளின் படைகள் மரியானா தீவைகளையும் பலாவு தீவையும் கைப்பற்றிவிட்டு,[3] பிலிப்பீன்சுக்குச் சென்று,[4] அதன்பின் போர்னியோவைத் தாக்கின.[5] சப்பானின் படைகளை விட்டுவைக்கும் கொள்கை கைவிடப்பட்டது. தம் போர்வீரர்களை சண்டை நிகழ்ந்த பிற பகுதிகளுக்குக் கொண்டுபோவதற்காக, பூகேய்ன்வில், நியூ கினி, பிலிப்பீன்சு ஆகிய முனைகளில் சண்டையைத் தொடர்ந்துகொண்டிருந்த சப்பானின் படைகளைக் குறைக்கும் நோக்குடன் நேச நாடுகள் தாக்குதல்கள் நிகழ்த்தின.[6] 1945 ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க படைகள் ஓக்கினாவாவில் களமிறங்கி சூன் மாதம் வரையிலும் கடுமையான சண்டையில் ஈடுபட்டன. அக்கட்டத்தில் சப்பானிய படைகளில் பிலிப்பீன்சில் ஐந்துக்கு ஒன்று என்றிருந்த சாவு விகிதம் ஓக்கினாவாவில் இரண்டுக்கு ஒன்று என்று கணிசமாகக் குறைந்தது. [2]

சப்பானை ஆக்கிரமிக்க நிகழ்ந்த தயாரிப்பு

[தொகு]
ஐக்கிய அமெரிக்காவின் போர் விளம்பரம் சப்பான் ஆக்கிரமிக்கப்படப் போவதை மக்களுக்கு அறிவிக்கிறது. "சாம் மாமா" (Uncle Sam) சட்டைக்கையைச் சுருட்டி, திருகிகைக் கையிலெடுத்து சப்பானியரைத் தாக்க அணியமாகிறார்.

1945, மே 8ஆம் நாள் நாசி செருமனி சரணடைந்தது. அதற்கு முன்னரே, பசிபிக் மாக்கடல் பகுதியில் மிகப் பெரிய அளவில் போர் நிகழ்த்துவதற்கும், சப்பான் நாட்டை ஆக்கிரமிப்பதற்கும் நேச நாடுகள் திட்டம் தீட்டி, தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டிருந்தன.[7] "வீழ்ச்சி நடவடிக்கை" (Operation Downfall) என்று பெயரிடப்பட்ட அந்தப் போர்த்திட்டம் இரு பகுதிகளாக அமைந்தது: 1) "ஒலிம்பிக் நடவடிக்கை"; 2) "மகுட நடவடிக்கை".

"ஒலிம்பிக் நடவடிக்கை" 1945 அக்டோபர் மாதம் தொடங்குவதாகவும், அதன்படி ஐக்கிய அமெரிக்காவின் 6வது படைப்பிரிவு பகுதிபகுதியாகக் களமிறங்கி, சப்பானின் நான்கு பெரிய தீவுகளில் தெற்கே அமைந்த கியூஷூ என்னும் தீவின் தென்புறமாக மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. [8]அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, 1946 மார்ச் மாதம் "மகுட நடவடிக்கை" தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, ஐக்கிய அமெரிக்காவின் முதல் படைப்பிரிவு, எட்டாம் படைப்பிரிவு, பத்தாம் படைப்பிரிவு ஆகியவை சப்பானின் நான்கு முக்கிய தீவுகளில் மிகப்பெரியதாகிய ஹொன்ஷூ தீவில் தலைநகராகிய டோக்கியோவின் அருகில் அமைந்த கான்டோ வெளி (Kantō Plain) என்னும் பகுதியை ஆக்கிரமிப்பதாகத் திட்டம் போடப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்புக்கான நாளைக் குறித்தபோது, "ஒலிம்பிக் நடவடிக்கை" தன் குறிக்கோளை எய்துவதற்கும், அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட போர்ப்படைகளை ஐரோப்பாவிலிருந்து சப்பானுக்குக் கொண்டுவருவதற்கும், சப்பான் பகுதியில் பனிபெய்கின்ற குளிர்காலம் கடப்பதற்கும் போதிய ஐந்து மாத கால இடைவெளி இடப்பட்டிருந்தது.[9]

நேச நாடுகள் தன்னை ஆக்கிரமிக்க திட்டம் தீட்டியதை சப்பான் எளிதில் அறிந்துகொண்டது. அதன் நில அமைப்பு அதற்கு சாதகமாய் இருந்தது. நேச நாடுகளின் ஆக்கிரமிப்புத் திட்டத்தை சப்பான் துல்லியமாக முன்னறிந்து, அந்த ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள திட்டம் வகுத்தது. சப்பானின் போர்த்திட்டத்திற்கு "கெத்சுகோ நடவடிக்கை" (Operation Ketsugō) என்று பெயர். அதன்படி, சப்பானியர் கியூஷூ தீவைப் பாதுகாக்கும்படி தம் போர்ப்படையின் மிகப்பெரும் பகுதியைத் தயாராக அங்கு நிறுத்தினர். இதனால் தொடர் பாதுகாப்புக்கு அழைக்கக் கூடுமான படைப்பிரிவு சிறிதளவே எஞ்சியது. [10]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Frequently Asked Questions #1". Radiation Effects Research Foundation. Archived from the original on 19 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 18 September 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 Giangreco 2009, ப. 2–3, 49–51.
  3. Williams 1960, ப. 211, 274.
  4. Williams 1960, ப. 307.
  5. Williams 1960, ப. 527.
  6. Long 1963, ப. 48–49.
  7. Giangreco 2009, ப. 32–34.
  8. Giangreco 2009, ப. 125–130.
  9. Giangreco 2009, ப. 169–171.
  10. Giangreco 2009, ப. 45–48.

ஆதாரங்கள்

[தொகு]

மேல் ஆய்வுக்கு

[தொகு]

There is an extensive body of literature concerning the bombings, the decision to use the bombs, and the surrender of Japan. The following sources provide a sampling of prominent works on this subject matter.

வெளி இணைப்புகள்

[தொகு]

ஆவணக் காப்பகம்

[தொகு]

நினைவு நிகழ்ச்சிகள்

[தொகு]