உள்ளடக்கத்துக்குச் செல்

இத்தாலியப் போர்த்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இத்தாலியப் போர்த்தொடர்
இரண்டாம் உலகப் போரில் நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி

ஜெர்மானிய எந்திரத் துப்பாக்கி நிலையைத் தாக்கும் அமெரிக்க வீரர்கள் (1944)
நாள் ஜூலை 10, 1943 – மே 2, 1945
இடம் இத்தாலி
நேச நாட்டு வெற்றி; பாசிச இத்தாலி வீழ்ந்தது
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்

 கனடா
 ஆத்திரேலியா
 இந்தியா
 நியூசிலாந்து
 தென்னாப்பிரிக்கா
 ஐக்கிய அமெரிக்கா
 இத்தாலி (செப்டம்பர் 8, 1943 முதல்)
 போலந்து
 பிரேசில்
 சுதந்திர பிரான்ஸ்
 கிரேக்க நாடு

 ஜெர்மனி
 இத்தாலி
 (செப்டம்பர் 8, 1943 வரை)
இத்தாலிய சமூக அரசு(ஏப்ரல் 25, 1945 வரை)
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா டுவைட் டி. ஐசனாவர் (ஜனவரி 1944 வரை)
ஐக்கிய இராச்சியம் ஹென்ரி வில்சன் (ஜனவரி-டிசம்பர் 1944)
ஐக்கிய இராச்சியம் ஹரால்ட் அலெக்சாந்தர்
 (டிசம்பர் 1944 முதல்)
நாட்சி ஜெர்மனி ஆல்பெர்ட் கெஸ்சல்ரிங்
நாட்சி ஜெர்மனி ஹைன்ரிக் வோன் வெய்ட்டிங்கோஃப் (கைதி)
முசொலினி 
ரொடோல்ஃபோ கிராசியானி (கைதி)
இழப்புகள்
சிசிலி: 22,000 பேர்[1]
இத்தாலி: 310,000[nb 1] – 313,495 பேர் [nb 2]
8,011 வானூர்திகள்[5]
சிசிலி:
இத்தாலி: 336,650 பேர் [nb 3]

இரண்டாம் உலகப் போரில் இத்தாலியப் போர்த்தொடர் (Italian Campaign) என்பது அச்சு நாடுகளிடமிருந்து இத்தாலியைக் கைப்பற்ற நேச நாடுகள் நடத்திய ஒரு பெரும் போர்த்தொடர். ஜூலை 10, 1943 - மே 2, 1945 காலகட்டத்தில் நிகழ்ந்த இப்போர்த்தொடர், நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும்.

சர்வாதிகாரி முசோலினியின் ஆட்சியின் கீழிலிருந்த இத்தாலி அச்சு நாட்டுக் கூட்டணியில் இட்லரின் நாசி ஜெர்மனிக்கு அடுத்த முக்கிய அங்க நாடாக இருந்தது. வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் வெற்றி பெற்ற நேச நாட்டு படைகள் அடுத்து நடுநிலக்கடல் பகுதி முழுவதிலும் ஆதிக்கம் செலுத்த விரும்பின. இதற்காக இத்தாலி மீது படையெடுத்தன. ஜூலை 1943ல் இத்தாலிக்கு தெற்கே உள்ள சிசிலி தீவு மீதான படையெடுப்புடன் இத்தாலியப் போர்த்தொடர் ஆரம்பமானது. சிசிலி கைப்பற்றப்பட்டவுடன் இத்தாலிய மூவலந்தீவின் மீது செப்டமப்ர் 1943ல் படையெடுப்பு நிகழ்ந்தது. இப்படையெடுப்பால் இத்தாலியில் பெரும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. போரில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் இத்தாலிய மக்கள் முசோலினி மீது அதிருப்தி கொண்டிருந்தனர். அவரது சக பாசிச அதிகாரிகள் அவரை முதலில் சர்வாதிகாரிப் பதவியில் இருந்து நீக்கினர். பின்பு அச்சுக் கூட்டணியிலிருந்து விலகி நேச நாட்டுக் கூட்டணியில் இத்தாலியை இணைத்து விட்டனர். எனினும் ஜெர்மனி முசோலினி தலைமையில் “இத்தாலிய சமூக அரசு” என்ற நாடு கடந்த கைப்பாவை அரசை உருவாக்கியது. இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்து பகுதிகளை ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்தன. இத்தாலியர்கள் இரு தரப்புகளாகப் பிளவுண்டு முசோலினி தலைமையில் ஒரு சிறு படை ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக நேச நாட்டுப் படைகளையும், இத்தாலிய அரசுப் படைகளையும் எதிர்த்துப் போரிட்டது.

படையெடுப்பு தொடங்கி சில மாதங்களுள் தெற்கு இத்தாலியைக் கைப்பற்றிய நேச நாட்டுப் படைகள் மெதுவாக வடக்கு நோக்கி முன்னேறின. சுமார் இரு ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்த மோதல்களில் மத்திய மற்றும் வடக்கு இத்தாலியின் பெரும் பகுதி நேச நாட்டு வசமானது. ஜெர்மானியர்கள் வரிசையாகப் பல அரண்கோடுகளை அமைத்து பாதுகாவல் போர் உத்திகளைக் கையாண்டதால் நேச நாட்டுப் படை முன்னேற்றம் மெதுவாக நடைபெற்றது. மே 1945ல் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து ஜெர்மனி சரணடைந்த போது இத்தாலியில் எஞ்சியிருந்த ஜெர்மானியப் படைகளும் சரணடைந்தன.

பின்புலம்[தொகு]

மே 1943ல் வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடரில் நேச நாடுகள் முழுவெற்றி கண்டன. வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து அச்சுப் படைகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டுவிட்டன. போரின் அடுத்த கட்டமாக இத்தாலி மீது படையெடுக்க நேச நாட்டு மேல்நிலை உத்தியாளர்கள் முடிவு செய்தனர். பாசிச சர்வாதிகாரி முசோலினியின் ஆட்சியின் கீழிலிருந்த இத்தாலி அச்சு நாட்டுக் கூட்டணியில் இட்லரின் நாசி ஜெர்மனிக்கு அடுத்த முக்கிய அங்க நாடாக இருந்தது. இத்தாலியைக் கைப்பற்றுவது அச்சுக் கூட்டணியை வெகுவாக பலவீனப்படுத்துவதுடன், பரப்புரையளவில் மிகப்பெரும் வெற்றியாக அமையும் என அவர்கள் கருதினர். மேலும் இத்தாலியின் வீழ்ச்சி நடுநிலக் கடலில் நேச நாட்டு சரக்குக்கப்பல் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக விளங்கிய அச்சு வான்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளை செயலிழக்கச் செய்யும் என்பது நேச நாட்டு உத்தியாளர்களின் கணிப்பு.

நடுநிலக்கடல் பகுதியில் கடல் மற்றும் வான் ஆளுமை கிட்டினால் மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் போர்முனைகளுக்கு தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம், அவற்றை சோவிய ஒன்றியத்துக்கு தளவாடங்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தலாம் என கருதினார். அதோடு இத்தாலியில் போர் குறித்து மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வந்தது. அந்நாடு மீது படையெடுத்தால் மக்கள் பாசிச ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள் என்றும் கருதப்பட்டது. மேலும் இப்படையெடுப்பால் கிழக்குப் போர்முனைக்குச் செல்ல வேண்டிய பல ஜெர்மானிய படைப்பிரிவுகளை இத்தாலியில் முடக்கி விடலாம் எனவும் கருதப்பட்டது. இத்தாலி மீதான படையெடுப்பின் முதல் கட்டமாக, அதன் தெற்கில் உள்ள சிசிலி மீது ஜூலை 1943ம் தேதி நேச நாட்டுப் படைகள் படையெடுத்தன.

சிசிலியப் படையெடுப்பு[தொகு]

சிசிலியப் படையெடுப்பின் போது ஜெர்மானிய வான்படையால் தாக்கப்பட்டு வெடித்து சிதறும் அமெரிக்க சரக்குக் கப்பல்

சிசிலியப் படையெடுப்புக்கு ஹஸ்கி நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. வான்வழியாகவும் கடல்வழியாகவும் ஜூலை 7, 1943ல் சிசிலியில் நேச நாட்டுப் படைகள் தரையிறங்கின. அமெரிக்க 7வது ஆர்மி சிசிலியின் தென் மத்தியப் பகுதியிலும், பிரித்தானிய 8வது ஆர்மி தென் கிழக்குப் பகுதியிலும் கடல்வழியாகத் தரையிறங்கின. இவை போக முக்கிய அரண்நிலைகளையும் பாலங்களையும் கைப்பற்ற வான்குடை வீரரகள் வான்வழியாகத் தரையிறங்கினர். ஜூலை 10 அன்று இரவில் நேச நாட்டு தரையிறக்கம் வெற்றிகரமாக முடிவடைந்தது. படையெடுப்பின் அடுத்த கட்டமாக அவை சிசிலியின் உட்பகுதியை நோக்கி முன்னேறத் தொடங்கின. ஆறு வார காலம் சிசிலியில் கடும் சண்டை நிகழ்ந்தது. தென் கிழக்கு முனையிலிருந்து முன்னேறிய நேச நாட்டு படைகள் விரைவில் சிசிலியின் மேற்குப் பகுதியைக் கைப்பற்றின. சிசிலியின் கிழக்கு முனையில் மட்டும் அச்சுப் படைகளின் எதிர்ப்பு பலமாக இருந்தது. கிழக்குப் பகுதியும் படிப்படியாகக் கைப்பற்றப்பட்டது. ஆகஸ்ட் 17 அன்று சிசிலியில் இருந்த அச்சுப் படைகள் அனைத்தும் அத்தீவினைக் காலி செய்துவிட்டு இத்தாலிக்கு பின்வாங்கிவிட்டன. சிசிலி முழுவதும் நேச நாடுகள் வசமானது. சிசிலியின் வீழ்ச்சியால், நடுநிலக்கடலின் கடல் வழிகள் அனைத்தும் நேச நாட்டுப் படைகளின் வசமாயின. சிசிலி அடுத்து நிகழ்ந்த இத்தாலியப் படையெடுப்புக்கு தளமாகப் பயன்பட்டது. மேலும் இத்தோல்வியின் விளைவாக, இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இத்தாலியப் படையெடுப்பு[தொகு]

சலேர்னோவில் தரையிங்கும் நேச நாட்டுப் படைகள்

சிசிலுக்கு அடுத்து இத்தாலிய மூவலந்தீவின் மீது நேச நாடுகள் படையெடுத்தன. நடுநிலக்கடல் பகுதியில் கடல் மற்றும் வான் ஆளுமை கிட்டினால் மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் போர்முனைகளுக்கு தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம், அவற்றை சோவிய ஒன்றியத்துக்கு தளவாடங்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தலாம் என நேச நாட்டு உத்தியாளர்கள் கருதினார். அதோடு இத்தாலியில் போர் குறித்து மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வந்தது. அந்நாடு மீது படையெடுத்தால் மக்கள் பாசிச ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள் என்றும் கருதப்பட்டது. மேலும் இப்படையெடுப்பால் கிழக்குப் போர்முனைக்குச் செல்ல வேண்டிய பல ஜெர்மானிய படைப்பிரிவுகளை இத்தாலியில் முடக்கி விடலாம் எனவும் கருதப்பட்டது.

இப்படையெடுப்பு மூன்று பெரும் கட்டங்களாக நடைபெற்றது. அவலான்ச் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்ட முதன்மைத் தாக்குதலில் இத்தாலியின் மேற்கு கடற்கரையில் சலேர்னோ நகரருகே நேச நாட்டுப் படைகள் தரையிறங்கின. அவற்றுக்குத் துணையாக கலபிரியா பகுதியில், டாரண்டோ நகரத்தின் அருகிலும் மேலும் இரு தரையிறக்கங்கள் நடைபெற்றன. சலேர்னோ தாக்குதலில் அமெரிக்க 5வது ஆர்மி, அமெரிக்க 6வது கோர் மற்றும் பிரித்தானிய 10வது கோரில் இடம்பெற்றிருந்த எட்டு டிவிசன்களும் இரண்டு பிரிகேட்களும் பங்கேற்றன. அமெரிக்க 82வது வான்குடை டிவிசன் இத்தாக்குதலுக்கான இருப்பு படைப்பிரிவாக இருந்தது. தரையிறங்கி பாலமுகப்புகளைப் பலப்படுத்தியபின் நாபொலி துறைமுக நகரைக் கைப்பற்றுவது இத்தாக்குதலின் முக்கிய இலக்கு. மேலும் பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையிலான பிரித்தானிய 8வது ஆர்மி இத்தாலியின் “பெருவிரல்” என வர்ணிக்கப்பட்ட கலபிரியா நகர் அருகேயும், பிரித்தானிய 1வது வான்குடை டிவிசன் இத்தாலியின் குதிங்கால் என வர்ணிக்கப்பட்ட டாரண்டோ துறைமுகத்திலும் தரையிறங்கின.

இத்தாலியப் படையெடுப்பு வரைபடம்

செப்டம்பர் 3, 1943ல் பெர்னார்ட் மோண்ட்கோமரியின் பிரித்தானிய 8வது ஆர்மி கலபிரியா அருகே தரையிறங்கியது. இதற்கு அச்சுப் படைகளிடமிருந்து பெரும் எதிர்ப்பு எதுவும் இல்லை. சலேர்னோ தரையிறக்கம் ஆரம்பமாவதற்கு சற்று முன்னால், இத்தாலிய அரசு நேச நாடுகளிடம் சரணடைந்ததது. இத்தாலியுடனான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், பெரும்பாலான இத்தாலியத் தரைப்படைப் பிரிவுகள் போரிடுவதை நிறுத்தின; கடற்படைக் கப்பல்கள் நேச நாட்டுத் துறைமுகங்களுக்குச் சென்று சரணடைந்தன. இத்தாலி சரணடைந்துவிடும் என்பதை எதிர்பார்த்திருந்த ஜெர்மானியர்கள் ஆக்சே நடவடிக்கையின் மூலம் போரிட மறுத்த இத்தாலியப் படைப்பிரிவுகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். முசோலினியின் தலைமையின் கீழ் இத்தாலிய நாடு கடந்த அரசொன்றையும் நிறுவினர். ஜெர்மானியின் கைப்பாவையாக செயல்பட்ட இது இத்தாலிய சமூக அரசு (Italian Social State) என்று அறியப்பட்டது. எனினும் இத்தாலியப் படைகளில் ஒரு சிறு பிரிவினர் தொடர்ந்து ஜெர்மனிக்கு ஆதரவாக நேச நாடுகளை எதிர்த்துப் போரிடுவதைத் தொடர்ந்தனர். செப்டம்பர் 9ம் தேதி பிரித்தானிய 1வது வான்குடை டிவிசன் டாரண்டோ துறைமுகத்தில் தரையிறங்கியது. எவ்வித எதிர்ப்புமின்றி எளிதாக டாரண்டோ நகரைக் கைப்பற்றின. இங்கும் ஜெர்மானியர்கள் தீவிரமாக எதிர்வினையாற்றாமல் பின்வாங்கிவிட்டனர். செப்டம்பர் 11ம் தேதிக்குள் பாரி மற்றும் பிரிண்டிசி துறைமுகங்களும் நேச நாட்டுப் படைகள் வசமாகின.

சலேர்னோ அருகே ஜெர்மானிய பீரங்கிக் குழு

செப்டம்பர் 9ம் தேதி சாலெர்னோவில் அமெரிக்க 5வது ஆர்மி மற்றும் பிரித்தானிய 10வது கோரின் தரையிறக்கம் ஆரம்பமானது. ஜெர்மானியர்கள் தரையிறக்கத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தனர். 56 கிமீ அகலமுள்ள கடற்கரைப் பகுதியில் மூன்று பெரும் பிரிவுகளாக நேச நாட்டுப் படைகள் தரையிறங்கின. கடுமையான ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்களுக்கிடையே முதல் நாள் இரவுக்குள் திட்டமிட்டபடி அனைத்து நேச நாட்டுப் படைப்பிரிவுகளும் தரையிறங்கிவிட்டன. இத்தரையிறக்கத்தை முறியடிக்க அருகிலுள்ள பகுதிகளிலிருந்து கூடுதல் ஜெர்மானியப் படைப்பிரிவுகள் சாலெர்னோவுக்கு அனுப்பப்பட்டன. செப்டம்பர் 13ம் தேதி ஜெர்மானிய எதிர்த்தாக்குதல் ஆரம்பமானது. அதிரடியான இத்தாக்குதலால், நேச நாட்டு அரண்நிலைகள் கைப்பற்றப்பட்டு, சாலெர்னோ கடற்கரை முகப்பு வீழும் நிலை உருவானது. நேச நாட்டுத் தளபதிகள் அவசரமாக புதிய வான்குடைப் படைப்பிரிவுகளை சாலெர்னோவுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கலபிரியாவில் தரையிறங்கியிருந்த பிரித்தானிய 8வது ஆர்மி சலேர்னோவிலிருந்த படைகளின் உதவிக்கு வடக்கு நோக்கி விரைந்தது. செப்டம்பர் 16ம் தேதி சலேர்னோவை அடைந்து அங்கிருந்த பிற நேச நாட்டுப் படைப்பிரிவுகளுடன் கை கோர்த்து விட்டது. புதிய படைப்பிரிவுகளின் வரவு, நேச நாட்டு வான்படைகளின் வான் ஆளுமை, போர்க்கப்பல்களின் தொடர் பீரங்கி குண்டு வீச்சு ஆகியவற்றால், ஜெர்மானியர்கள் தங்களின் எதிர்த்தாக்குதலின் தோல்வி உறுதி என்பதை உணர்ந்தனர். செப்டம்பர் 18ம் தேதி அவர்கள் தங்கள் தாக்குதலைக் கைவிட்டு பின்வாங்கத் தொடங்கினர். சலேர்னோ கடற்கரை முகப்புக்கு இருந்த ஆபத்து விலகியவுடன், அமெரிக்க 5வது ஆர்மி நாபொலி துறைமுகத்தை நோக்கி முன்னேறத் தொடங்கியது. 22ம் தேதி அசேர்னோ நகரும் 28ம் தேதி அவெலீனோ நகரும் நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டன. அவை நாபொலி நகரை நெருங்கிய போது செப்டம்பர் 27ம் தேதி அந்நகர மக்களும் எதிர்ப்புப் படைகளும் ஜெர்மானியப் படைகளுக்கு எதிராக பெரும் கிளர்ச்சி ஒன்றைத் தொடங்கினர். அக்டோபர் 1ம் தேதி நேச நாட்டுப் படைப்பிரிவுகள் நாபொலி நகருக்குள் நுழைந்தன. அக்டோபர் 6ம் தேதி 5வது ஆர்மி வல்ட்டூர்னோ ஆற்றை அடைந்து விட்டது.

ரோம் நகருக்குத் தெற்கே[தொகு]

ரோம் நகருக்குத் தெற்கே ஜெர்மானிய அரண்கோடுகள்

தெற்கு இத்தாலி நேச நாட்டுப் படைகள் வசமான பின்னர், ஜெர்மானிய போர் உத்திகள் மாற்றியமைக்கப்பட்டன. ஃபீல்டு மார்சல் ஆல்பர்ட் கெஸ்சல்ரிங் இத்தாலிய முனையின் முதன்மை ஜெர்மானியத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் நேரடியாக நேச நாட்டுப் படைகளுடன் மோதாமல், பலமான அரண்கோடுகளை உருவாக்கி நேச நாட்டு முன்னேற்றத்தைத் தடை செய்யும் உத்தியினைப் பின்பற்றத் தொடங்கினார். இந்த பாதுகாவல் போர் உத்தியால் இத்தாலியப் போர்முனையில் தொடர் அரைப்பழிவுப் போர்நிலை உருவானது. வொல்டுர்னோ, பார்பரா, பெர்னார்ட். இட்லர், சீசர் போன்ற பலமான அரண்கோடுகளை அமைத்திருந்தார். இவற்றுள் மிக முக்கியமானதும் வலிமையானதுமாக குளிர்கால அரண்கோடு அமைந்திருந்தது.

அக்டோபர் 1943ல் நேச நாட்டுப் படைகள் இரு பெரும் பிரிவுகளாக (கிழக்கில் பிரித்தானிய 8வது ஆர்மி; மேற்கில் அமெரிக்க 5வது ஆர்மி) வடக்கு நோக்கி முன்னேறின. ஜெர்மனிய அரண்கோடுகளை ஒவ்வொன்றாக ஊடுருவின. கெஸ்சல்ரிங்கின் கவனமான திட்டமிடுதலால், ஒவ்வொரு கோடு வீழ்ந்த போதும் அவரது படைப்பிரிவுகள் பெரும் இழப்புகள் ஏதுமின்றி ஒழுங்கான முறையில் பின் வாங்கி அடுத்த கோட்டினை அடைந்தன. ஜெர்மானியர்களின் பாதுகாவல் போர் உத்திகளால், குளிர்காலக் கோட்டினை ஊடுருவ நேச நாட்டுப் படைகள் நவம்பர் 1943 முதல் மே 1944 இறுதி வரை கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. லா டிஃபென்சா குன்று சண்டை, மோரோ ஆறு போர்த்தொடர், சான் பியேத்ரோ இன்ஃபைன் சண்டை, ஒர்ட்டோனா சண்டை, அன்சியோ சண்டை, சிசுட்டேர்னா சண்டை, மோண்டே கசீனோ சண்டை ஆகிய மோதல்கள் இக்காலகட்டத்தில் குளிர்காலக் கோட்டினை உடைக்க நிகழ்ந்தன. தரை மூலமாக முன்னேறுவதோடு அன்சியோ நகர் அருகே கோட்டுக்குப் பின்புறமாக நீர்நிலத் தாக்குதலையும் நேச நாட்டுப் படைகள் நடத்தின. இத்தாக்குதல்களின் பலனாக மே 1944 இறுதியில் ஜெர்மானியப் படைகள் முறியடிக்கபப்ட்டு பின்வாங்கின. ஜூன் 4-5, 1944ல் ரோம் நகரம் கைப்பற்றப்பட்டது.

ரோம் நகருக்கு வடக்கே[தொகு]

ரோமுக்குத் தெற்கே அரண்கோடுகளை அமைத்திருந்தது போலவே நகருக்கு வடக்கிலும் ரோம மாற்றுக் கோடு, டிராசிமீன் கோடு மற்றும் காத்திக் கோடு ஆகிய அரண்கோடுகளை ஜெர்மானியர்கள் அமைத்திருந்தனர். ரோம் வீழ்ந்தபின் இந்த அரண்கோடுகளுக்குப் பின்வாங்கினர். இவற்றுள் முதல் இரு கோடுகளும் நேச நாட்டுப் படைகளால் எளிதில் தகர்க்கப்பட்டன. ஆனால் காத்திக் கோட்டினை எளிதாக ஊடுருவ இயலவில்லை. இத்தாலியின் கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு கடற்கரை வரை அமைந்திருந்த காத்திக் கோடு, அப்பென்னைன் மலைத் தொடரை ஒட்டி அமைந்திருந்ததால், செயற்கை அரண்களோடு இயற்கை அரண்களும் அதற்கு பலம் கூட்டின. சில இடங்களில் 10 கிமீ அகலத்துக்கு பாதுகாவல் நிலைகள் அமைக்கப்பட்டிருந்த அரண்கோட்டினை ஆகஸ்ட் 1944ல் நேச நாட்டுப் படைகள் தாக்கின. கிழக்குப் பகுதியில் பிரித்தானிய 8வது ஆர்மியும் மேற்கிலும் மத்தியிலும், அமெரிக்க 5வது ஆர்மியும் இத்தாக்குதலில் ஈடுபட்டன. ஆனால் இப்படைப்பிரிவுகளின் பலம் முந்தைய மாதங்களைக் காட்டிலும் வெகுவாகக் குறைந்திருந்தது. பிரான்சு மீதான படையெடுப்பில் பங்கேற்க பல படைப்பிரிவுகள் இத்தாலியிலிருந்து அங்கு அனுப்பப்பட்டிருந்தன.

வடக்கு இத்தாலியப் போர்முனை - 1944

இருமாத கால கடுமையான சண்டைக்குப் பின்னர் பல இடங்களில் நேச நாட்டுப் படைகள் காத்திக் அரண்நிலைகளை ஊடுருவி விட்டன. ஆனால் பலத்த ஜெர்மானிய எதிர்ப்பு, சாதகமற்ற புவியியல் நிலை போன்ற காரணங்களால், அவ்வெற்றிகளை தக்கவாறு பயன்படுத்தி ஜெர்மானியப் படைகளை முறியடிக்க இயலவில்லை. அக்டோபர் 1944 முதல் போர்க்களத்தில் தேக்க நிலை ஏற்பட்டு விட்டது. விரைவில் குளிர்காலம் ஆரம்பமானதால் நேச நாட்டுப் படைகள் தங்கள் தாக்குதலைக் கைவிட்டனர். இதன்பின் பல மாதங்களுக்கு இத்தாலியப் போர்முனையில் பெரிய மோதல்கள் எதுவும் நிகழவில்லை. ஜனவரி 1945 முதல் மீண்டும் இத்தாலியப் போர்முனையில் போர் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. பிரான்சில் நடைபெறும் சண்டைகளுக்காகத் திருப்பி விடப்பட்டிருந்த படைப்பிரிவுகளுக்கு பதில் புதிய படைப்பிரிவுகள் இத்தாலிக்கு அனுப்பப்பட்டன. ஏப்ரல் 6ம் தேதி நேச நாட்டு படைகளின் வசந்தகாலத் தாக்குதல் ஆரம்பமானது. கடும் வான்வழி குண்டுவீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதலுக்குப் பின்னர் பிரித்தானிய 8வது ஆர்மி சீனியோ ஆற்றைக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டது. சீனியோவைக் கடந்து முன்னேறிய 8வது ஆர்மி படைப்பிரிவுகள் ஏப்ரல் 11ம் தேதி சாண்ட்டெர்னோ ஆற்றங்கரையை அடைந்தன. ஏப்ரல் 12ம் தேதி சாண்ட்டெர்னோ ஆற்றைக் கடந்து முன்னேறி, ஏப்ரல் 14ம் தேதி அர்ஜெண்ட்டா கணவாயைக் கைப்பற்ற முயன்றன. கிழக்கில் கடும் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது ஏப்ரல் 14 அன்று மத்தியப் பகுதியில் அமெரிக்க 5வது ஆர்மி தனது தாக்குதலைத் தொடங்கியது. ஒரு வார சண்டைக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகள் முறியடிக்கப்பட்டு அமெரிக்கப் படைகள் போ ஆற்று சமவெளிக்குள் ஊடுருவி விட்டன. அதே காலகட்டத்தில் கிழக்கில் அர்ஜெண்ட்டா கணவாயும் கைப்பற்றப்பட்டது. அடுத்த சில நாட்களில் பல வடக்கு இத்தாலிய நகரங்கள் நேச நாட்டுப் படைகள் வசமாகின. ஏப்ரல் 21ல் போலோக்னா, 23ல் பொண்டேனோ, 26ல் வெரோனா, 29ல் படுவா ஆகியவை வீழ்ந்தன. மேலும் பல நகரங்களில் இத்தாலிய எதிர்ப்புப் படைகள் ஜெர்மானியர்களுக்கு எதிராக வெளிப்படையாக எழுச்சிகளைத் தொடங்கின. நிலைமை கைமீறியதை உணர்ந்த ஜெர்மானியத் தளபதி வெய்ட்டிங்காஃப் நேச நாட்டுப் படைகளுடன் சரணடைவுப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தைகளின் விளைவாக மே 2, 1945 அன்று இத்தாலியில் இருந்த ஜெர்மானியப் படைகள் சரணடைந்தன. இத்துடன் இத்தாலியப் போர்த்தொடர் முடிவடைந்தது.

தாக்கம்[தொகு]

இத்தாலியப் போர்த்தொடரின் விளைவாக இத்தாலி முழுவதும் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தது. இத்தாலியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சர்வாதிகாரி முசோலினி பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆட்சியைக் கைப்பற்றிய பிற பாசிச கட்சி உறுப்பினர்கள் போரின் போக்கு மாறுவதை உணர்ந்து நேச நாடுகளுடன் அணி சேர்ந்துவிட்டனர். ஆனால் முசோலினியின் ஆதரவாளர்களைக் கொண்டு நாடு கடந்த அரசொன்றை ஜெர்மானியர்கள் நிறுவினர். ஜெர்மனியின் கைப்பாவை அரசாகச் செயல்பட்ட அது, ஜெர்மானியர்களுடன் இணைந்து நேச நாட்டுப் படைகளுக்கு எதிராகப் போரிட்டது. இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்த பால்கன் குடா மற்றும் கிரேக்கப் பகுதிகளும் ஜெர்மானியர்களால் கைப்பற்றப்பட்டன.

தெற்கு இத்தாலி வெகு விரைவாகக் கைப்பற்றப் பட்டாலும், மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்ற நேச நாடுகளுக்கு மேலும் ஈராண்டுகள் தேவைப்பட்டன. இத்தாலியின் புவியியல் அமைப்பு, ஜெர்மானியர்களின் பாதுகாவல் போர் உத்தி, 1944ல் பிரான்சு படையெடுப்பு நிகழ்ந்ததால், நேச நாடுகளின் கவனம் அங்கு திரும்பியமை போன்ற காரணங்களால், நேச நாட்டு முன்னேற்றம் மெதுவாக நடைபெற்றது. ஏப்ரல் 1945ல் ஜெர்மனி நேச நாட்டுப் படைகள் வசமாகும் நிலை உருவான பின்னரே இத்தாலியில் இருந்த ஜெர்மானியப் படைகள் சரணடைந்து இத்தாலியப் போர்த்தொடர் முற்றுப்பெற்றது. சுமார் 22 மாதகாலம் நடைபெற்ற இத்தொடரில் இரு தரப்பிலும் தலா மூன்று லட்சம் பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். இதன் இறுதியில் முசோலினி இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் கொல்லப்பட்டார்; இத்தாலிய பாசிச கட்சியும் ஒழிக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

அடிக்குறிப்புகள்
  1. United States: 114,000 casualties;[2] British Commonwealth: 198,000 casualties;[3] Total Allied casualties: 59,151 killed,[4] 30,849 missing and 230,000 wounded.
  2. American: 119,279 casualties; Brazilian: 2,211 casualties; British: 89,436 casualties; British Colonial troops: 448 casualties; Canadian: 25,889 casualties; French: 27,625 casualties; Greeks: 452 casualties; Indian, 19,373 casualties; Italian: 4,729 casualties; New Zealand; 8,668 casualties; Polish: 11,217 casualties; South African: 4,168 casualties.[5]
  3. Between 1 September 1943 – 10 May 1944: 87,579 casualties. Between 11 May 1944 – 31 January 1945: 194,330 casualties. Between February and March 1945: 13,741 casualties. British estimates for 1–22 April 1945: 41,000 casualties. This total excludes Axis forces that surrendered at the end of the campaign[6]
மேற்கோள்கள்
  1. Shaw, p. 120.
  2. European Theater
  3. The Italian Campaign
  4. Blaxland (1979), p. 11
  5. 5.0 5.1 Jackson, p. 335
  6. Jackson, p. 400

நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்தாலியப்_போர்த்தொடர்&oldid=3583645" இலிருந்து மீள்விக்கப்பட்டது