உள்ளடக்கத்துக்குச் செல்

இத்தாலியில் 1945 வசந்தகாலத் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1945 வசந்தகாலத் தாக்குதல்
இத்தாலியப் போர்த்தொடரின் பகுதி

வசந்தகாலத் தாக்குதல் வரைபடம்
நாள் ஏப்ரல் 6 – மே 2, 1945
இடம் எமீலியா-ரோமாக்னா, லொம்பார்டி மற்றும் வெனீட்டோ பகுதிகள் வடக்கு இத்தாலி
  • தெளிவான நெச நாட்டு வெற்றி
  • இத்தாலியிலிருந்த ஜெர்மானியப் படைகள் சரணடைந்தன
  • இத்தாலிய சமூகக் குடியரசு கலைக்கப்பட்டது
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய இராச்சியம்
போலந்து போலிய விடுதலைப் படைகள்
 இந்தியா
 பிரேசில்
 நியூசிலாந்து
 தென்னாப்பிரிக்கா
 இத்தாலி
 ஜெர்மனி
இத்தாலிய சமூக அரசு
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா மார்க் கிளார்க்
ஐக்கிய இராச்சியம்ரிச்சர்ட் மெக்ரீரி
ஐக்கிய அமெரிக்காலூசியன் டிரசுக்காட்
நாட்சி ஜெர்மனி ஹைன்ரிக் வோன் வெய்ட்டிங்காஃப் (கைதி)
நாட்சி ஜெர்மனி டிராகோட் ஹெர் (கைதி)
நாட்சி ஜெர்மனி யோக்கீம் லெமெல்சென் (கைதி)
பலம்
15வது ஆர்மி குரூப் [nb 1]
பிரித்தானிய 8வது ஆர்மி - 632,980 [2]
அமெரிக்க 5வது ஆர்மி - 266,883[1]
ஆர்மி குரூப் சி - 394,000 பேர்[3][nb 2]

கிரேப்ஷாட் நடவடிக்கை (Operation Grapeshot) என்பது என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு நேச நாட்டுத் தாக்குதல் நடவடிக்கை. இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இது 1945 வசந்தகாலத்தில் நிகழ்த்தப்பட்டதால் 1945 வசந்தகாலத் தாக்குதல் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தாலியில் நடந்த இறுதி மோதல் இதுவே.

செப்டம்பர் 1943ல் நேச நாட்டுப் படைகள் இத்தாலி மீது படையெடுத்தன. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இத்தாலியின் பெரும்பகுதியினைக் கைப்பற்றின. ஜூன் 1944ல் பிரான்சு மீதான் நேச நாட்டுப் படையெடுப்பு தொடங்கியதால் இத்தாலியப் போர்முனைக்கான முக்கியத்துவம் குறைந்துபோனது. பாதுகாவல் படைகளுக்கு சாதகமான இத்தாலியின் புவியியல் அமைப்பு, ஆல்பர்ட் கெஸ்சல்ரிங்க் தலைமையிலான ஜெர்மானியப் படைகளின் கடுமையான எதிர்ப்பு போன்ற காரணங்களாலும் நேச நாட்டு உத்தியாளர்கள் இத்தாலியப் போர்முனையின் முக்கியத்துவத்தைக் குறைத்து பிரான்சில் கவனம் செலுத்தத் தொடங்கினர். 1944இன் பிற்பகுதியில் காத்திக் கோடு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் இத்தாலியப் போர்முனையில் மந்தநிலை உருவானது.

ஜனவரி 1945 முதல் மீண்டும் இத்தாலியப் போர்முனையில் போர் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. பிரான்சில் நடைபெறும் சண்டைகளுக்காகத் திருப்பி விடப்பட்டிருந்த படைப்பிரிவுகளுக்கு பதில் புதிய படைப்பிரிவுகள் இத்தாலிக்கு அனுப்பப்பட்டன. மார்ச் 1945 இல் அமெரிக்க 5வது ஆர்மி மற்றும் பிரித்தானிய 8வது ஆர்மி இரண்டிலும் சேர்த்து 20 டிவிசன்கள் (சுமார் 13,34,000 பேர்). அச்சு தரப்பில் தொடர் போரால் பலவீனமடைந்த 21 ஜெர்மான்ய டிவிசன்களும், ஜெர்மனி ஆதரவு இத்தாலிய சமூக அரசின் 4 டிவிசன்களும் இருந்தன. கிழக்கு இத்தாலியில் பிரித்தானிய 8வது ஆர்மியும், மத்திய இத்தாலியில் அமெரிக்க 5வது ஆர்மியும் தாக்க திட்டமிடப்பட்டது. ஏப்ரல் 6ம் தேதி நேச நாட்டு படைகளின் வசந்தகாலத் தாக்குதல் ஆரம்பமானது. கடும் வான்வழி குண்டுவீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதலுக்குப் பின்னர் பிரித்தானிய 8வது ஆர்மி சீனியோ ஆற்றைக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டது. சீனியோவைக் கடந்து முன்னேறிய 8வது ஆர்மி படைப்பிரிவுகள் ஏப்ரல் 11ம் தேதி சாண்ட்டெர்னோ ஆற்றங்கரையை அடைந்தன. ஏப்ரல் 12ம் தேதி சாண்ட்டெர்னோ ஆற்றைக் கடந்து முன்னேறி, ஏப்ரல் 14ம் தேதி அர்ஜெண்ட்டா கணவாயைக் கைப்பற்ற முயன்றன. கிழக்கில் கடும் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது ஏப்ரல் 14 அன்று மத்தியப் பகுதியில் அமெரிக்க 5வது ஆர்மி தனது தாக்குதலைத் தொடங்கியது. ஒரு வார சண்டைக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகள் முறியடிக்கப்பட்டு அமெரிக்கப் படைகள் போ ஆற்று சமவெளிக்குள் ஊடுருவி விட்டன. அதே காலகட்டத்தில் கிழக்கில் அர்ஜெண்ட்டா கணவாயும் கைப்பற்றப்பட்டது. அடுத்த சில நாட்களில் பல வடக்கு இத்தாலிய நகரங்கள் நேச நாட்டுப் படைகள் வசமாகின. ஏப்ரல் 21ல் போலோக்னா, 23ல் பொண்டேனோ, 26ல் வெரோனா, 29ல் படுவா ஆகியவை வீழ்ந்தன. மேலும் பல நகரங்களில் இத்தாலிய எதிர்ப்புப் படைகள் ஜெர்மானியர்களுக்கு எதிராக வெளிப்படையாக எழுச்சிகளைத் தொடங்கின. நிலைமை கைமீறியதை உணர்ந்த ஜெர்மானியத் தளபதி வெய்ட்டிங்காஃப் நேச நாட்டுப் படைகளுடன் சரணடைவுப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தைகளின் விளைவாக மே 2, 1945 அன்று இத்தாலியில் இருந்த ஜெர்மானியப் படைகள் சரணடைந்தன.

குறிப்புகள்[தொகு]

அடிக்குறிப்புகள்
  1. Total army group strength including Lines of Communication and support troops totalled 1,333,856[1]
  2. In addition the army group had 91,000 Lines of Communication and anti-aircraft troops and controlled a further 100,000 local police[3]
மேற்கோள்கள்
  1. 1.0 1.1 Jackson, p. 230.
  2. Jackson, p. 223.
  3. 3.0 3.1 Jackson, p. 236.

நூல்கள்[தொகு]