நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு
சிசிலியப் படையெடுப்பு | |||||||
---|---|---|---|---|---|---|---|
இத்தாலியப் போர்த்தொடரின் பகுதி | |||||||
ஜெர்மானிய குண்டுவீசி வானூர்திகளால் தாக்கப்பட்ட அமெரிக்க சரக்குக் கப்பல் ராபர்ட் ரோவான் வெடித்து சிதறுகிறது (கேலா கடற்கரை; சிசிலி, ஜூலை 11, 1943) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நேச நாடுகள்: ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா கனடா சுதந்திர பிரான்ஸ் | அச்சு நாடுகள்: இத்தாலி ஜெர்மனி |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
டுவைட் டி. ஐசனாவர் ஹரால்ட் அலெக்சாந்தர் பெர்னார்ட் மோண்ட்கோமரி ஆர்த்தர் டெட்டர் ஜார்ஜ் பேட்டன் | ஆல்பர்ட் கெஸ்சல்ரிங் அல்ஃபிரட் குசோனி ஃபிரிடோலின் வோன் செங்கர் ஹான்சு வாலெண்டின் வோன் ஹூபே |
||||||
பலம் | |||||||
160,000 பேர் 14,000 வண்டிகள் 600 டாங்குகள் 1,800 பீரங்கிகள் | 230,000 இத்தாலியர்கள் 40,000 ஜெர்மானியர்கள்[1] 260 டாங்குகள் 1,400 வானூர்திகள்[2] |
||||||
இழப்புகள் | |||||||
22,000 பேர்[nb 1] | ஜெர்மனி: 10,000 பேர் இத்தாலி: 132,000 பேர்(பெரும்பாலும் போர்க்கைதிகள்)[nb 2] |
நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு (Allied invasion of Sicily) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு பெரும் படையெடுப்பு. ஹஸ்கி நடவடிக்கை (Operation Husky) என்று குறிப்பெயரிடப்பட்ட இதில் நேச நாட்டுப் படைகள் பாசிச இத்தாலியின் ஒரு பகுதியான சிசிலி தீவின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றின. இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இது சிசிலியப் போர்த்தொடர் (Sicilian Campaign) என்றும் அழைக்கப்படுகிறது.
வான்வழியாகவும் கடல்வழியாகவும் ஜூலை 7, 1943ல் சிசிலியில் தரையிறங்கிய நேச நாட்டுப் படைகள், ஆறு வாரகால கடும் சண்டைக்குப் பின்னர் சிசிலித் தீவினை முழுதும் கைப்பற்றினர். ஆகஸ்ட் 17 அன்று சிசிலியில் இருந்த அச்சுப் படைகள் அனைத்தும் அத்தீவினைக் காலி செய்துவிட்டு இத்தாலிக்கு பின்வாங்கிவிட்டன. சிசிலியின் வீழ்ச்சியால், நடுநிலக்கடலின் கடல் வழிகள் அனைத்தும் நேச நாட்டுப் படைகளின் வசமாயின. சிசிலி அடுத்து நிகழ்ந்த இத்தாலியப் படையெடுப்புக்கு தளமாகப் பயன்பட்டது. மேலும் இத்தோல்வியின் விளைவாக, இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பின்புலம்
[தொகு]மே 1943ல் வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடரில் நேச நாடுகள் முழுவெற்றி கண்டன. வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து அச்சுப் படைகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டுவிட்டன. போரின் அடுத்த கட்டமாக இத்தாலி மீது படையெடுக்க நேச நாட்டு மேல்நிலை உத்தியாளர்கள் முடிவு செய்தனர். பாசிச சர்வாதிகாரி முசோலினியின் ஆட்சியின் கீழிலிருந்த இத்தாலி அச்சு நாட்டுக் கூட்டணியில் இட்லரின் நாசி ஜெர்மனிக்கு அடுத்த முக்கிய அங்க நாடாக இருந்தது. இத்தாலியைக் கைப்பற்றுவது அச்சுக் கூட்டணியை வெகுவாக பலவீனப்படுத்துவதுடன், பரப்புரையளவில் மிகப்பெரும் வெற்றியாக அமையும் என அவர்கள் கருதினர். இதற்கான திட்டமிடல் வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர் முடியுமுன்னரே ஜனவரி 1943ல் கேசாபிளாங்கா மாநாட்டில் தொடங்கி விட்டது.
இத்தாலி மீதான படையெடுப்பின் முதல் கட்டமாக, அதன் தெற்கில் உள்ள சிசிலி தீவினைக் கைப்பற்ற முடிவு செய்யப்பட்டது. சிசிலியின் வீழ்ச்சி நடுநிலக் கடலில் நேச நாட்டு சரக்குக்கப்பல் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக விளங்கிய அச்சு வான்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளைச் செயலிழக்கச் செய்யும் என்பது நேச நாட்டு உத்தியாளர்களின் கணிப்பு. சிசிலி மீதான தாக்குதலால், ஜெர்மானிய மற்றும் இத்தாலியப் படைப்பிரிவுகளை வேறு களங்களிலிருந்து திசை திருப்ப இயலும், சிசிலி கைப்பற்றப்பட்டால், படையெடுப்பு அச்சுறுத்தலைக் கொண்டே இத்தாலியை அச்சுக் கூட்டணியிலிருந்து பிரித்து விடலாம் என அவர்கள் கருதினர். இக்காரணங்களால் சிசிலி, இத்தாலியப் படையெடுப்பின் முதல் கட்ட இலக்காகியது. சிசிலியைத் தாக்க உருவாக்கப்பட்ட நேச நாட்டு பயணப்படைக்கு (expeditionary force) அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் முதன்மைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். துணைத் தளபதியாக பிரித்தானிய ஜெனரல் ஹரால்ட் அலெக்சாந்தர், கடற்படைப் பிரிவுகளின் தளபதியாக ஆண்ட்ரூ கன்னிங்காம், வான்படை தளபதியாக ஆர்த்தார் டெட்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
கடல்வழியாக சிசிலியின் இரு இடங்களில் தாக்க திட்டம் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தின்படி அமெரிக்க 7வது ஆர்மி சிசிலியின் தென் மத்தியப் பகுதியிலும், பிரித்தானிய 8வது ஆர்மி தென் கிழக்குப் பகுதியிலும் கடல்வழியாகத் தரையிறங்குவதாக இருந்தது. இவ்விரண்டு ஆர்மிகளும் முறையே மேற்கு மற்றும் கிழக்கு இலக்கு படைப்பிரிவுகள் (task force) என்று பெயரிடப்பட்டிருந்தன. இவ்விரு படைப்பிரிவுகளுக்கு உதவியாக வான்குடை வீரர்கள் வான்வழியாகத் தரையிறங்கி முக்கியப் பாலங்களையும் மேடான பகுதிகளையும் கைப்பற்ற திட்டமிடப்பட்டது. பிரித்தானிய 1வது வான்குடை டிவிசனுக்கு இப்பொறுப்பு தரப்பட்டது. தரைப்படைகளுக்குத் துணையாக பிரித்தானிய நடுநிலக்கடல் கடற்படைப்பிரிவும், அமெரிக்க 8வது கடற்படைப் பிரிவுக் இத்தாக்குதலில் பங்கேற்றன. இதில் பங்கேற்ற வான்படைப் பிரிவுகளை ஒருங்கிணைக்க ஏர் சீஃப் மார்சல் ஆர்த்தர் டெட்டரின் தலைமையில் நடுநிலக்கடல் வான் கட்டுப்பாட்டகம் உருவாக்கப்பட்டது.
நேச நாட்டுப் படையெடுப்பை எதிர்கொள்ள சிசிலியில் 6வது இத்தாலிய ஆர்மி நிறுத்தப்பட்டிருந்தது. சுமார் 2,00,000 படைவீரர்களைக் கொண்ட இதைத் தவிர ஜெர்மனியின் எர்மன் கோரிங் டிவிசன் மற்றும் 15வது பான்சர்கிரெனேடியர் டிவிசன் ஆகியவையும் சிசிலியில் இருந்தன. மொத்தம் சுமார் 32,000 ஜெர்மானியப் படைவீரர்கள் சிசிலியில் நிறுத்தப்பட்டிருந்தனர். இவை தவிர ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபேவின் வீரர்கள் சுமார் 30,000 பேர்களும் இருந்தனர். ஜூலை 1943ல் மேலும் இரு ஜெர்மானிய டிவிசன்கள் (1வது வான்குடை மற்றும் 29வது பான்சர் கிரேனேடியர்) சிசிலிக்கு அனுப்பப்பட்டன. ஆரம்பத்தில் சிசிலியிலிருந்த அச்சுப் படைகள் முழுவதும் இத்தாலிய ஜெனரல் ஆல்ஃபிரேடோ குசோனியின் தலைமையின் கீழ் செயல்பட்டன. ஆனால் ஜெர்மானியத் தளபதிகளுக்கு இத்தாலியர்களின் போர்த்திறமை மற்றும் தலைமைப் பண்பு குறித்து நல்ல மதிப்பீடு இல்லையென்பதால், அவை தன்னிச்சையாகவே செயல்பட்டன. படையெடுப்பு தொடங்கி சில வாரங்களில் சிசிலியப் போர்முனையில் அனைத்து அச்சு படைகளும் ஜெர்மானியக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. சிசிலியில் உள்ள ஜெர்மானியப் படைப்பிரிவுகள் ஜெர்மானியத் தெற்குத் தரைப்படைத் தலைமையகத்தின் முதன்மைத் தளபதி ஃபீல்டு மார்சல் ஆல்பர்ட் கெஸ்சல்ரிங்கின் மேற்பார்வையில் இருந்தன.
சண்டையின் போக்கு
[தொகு]வடக்கு ஆப்பிரிக்காவில் துனிசியப் போர்த்தொடர் மே 1943ல் முற்றுப் பெற்றவுடன் நேச நாட்டு மேல்நிலை உத்தி குண்டுவீசி வானூர்திப் படைப்பிரிவுகள் இத்தாலிய இலக்குகள் மீது குண்டு வீசத் தொடங்கின. சார்தீனியா, சிசிலி, தெற்கு இத்தாலியின் வான்படைத் தளங்கள், நகரங்கள், தொழில் மையங்கள், நேப்பொல், மெஸ்சினா, பாலெர்மோ, கால்கியாரி போன்ற துறைமுகங்கள் இடைவிடாது தாக்கப்பட்டன. ஜூலை முதல் வாரத்துக்குள், சிசிலியிலிருந்த வானூர்தி ஓடுதளங்களில் பெரும்பாலானவை செயலிழந்தன. பின்னர் இத்தாலியின் போக்குவரத்து, தொலைதொடர்பு கட்டமைப்புகள் நேச நாட்டு குண்டுவீசிகளுக்கு இலக்காகின. மேலும் பிரித்தானிய கடற்படைக் கப்பல்கள் சிசிலி அருகேயுள்ள சில சிறு தீவுகள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தி அவை அச்சு வான்படைகளுக்கு பயன்படாதவாறு செய்தன.
நேச நாட்டுப் படையெடுப்பு எங்கு நிகழப்போகிறது என்பதை அச்சு தளபதிகள் கணிக்காதவாறு செய்ய, நேச நாட்டு உத்தியாளர்கள் சில திசைதிருப்பு வேலைகளில் ஈடுபட்டனர். குண்டுவீசி வானுர்தித் தாக்குதல்கள், படை தரையிறக்கம் நிகழப்போகும் இடங்களில் மட்டுமல்லாமல் பரவலாக பலவேறு இடங்களில் நிகழுமாறு பார்த்துக் கொண்டனர். மேலும் படையெடுப்பு சிசிலிக்கு பதில் கிரீசு மற்றும் சார்தீனியாவில் நிகழப்போகிறதென அச்சு தலைவர்களை நம்பவைக்க மின்சுமீட் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனை உண்மையென நம்பிய ஜெர்மானியத் தளபதிகள், பல படைப்பிரிவுகளை சிசிலியிலுருந்து கிரீசுக்கு நகர்த்தினர்.
தரையிறக்கம்
[தொகு]ஜூலை 9, 1943 அன்று இரவில் சிசிலி மீதான நேச நாட்டுத் தாக்குதல் தொடங்கியது. அமெரிக்க மற்றும் பிரித்தானிய வான்குடைப் படைப்பிரிவுகள், வான் வழியாக சிறு சிறு குழுக்களாக சிசிலியில் குதித்துத் தரையிறங்கின. பல முக்கிய பாலங்கள், அரண்நிலைகள், கடற்கரைப் பகுதிகளைக் கைப்பற்றி அச்சு படைகளிடையே குழப்பம் விளைவித்தனர். அன்றிரவு வானிலை சாதகமாக அல்லாமல் வேகமான காற்றடித்துக் கொண்டிருந்ததால், வான்குடைப் படைப்பிரிவுகள் தங்கள் தாக்குதல்களைத் திட்டமிட்டபடி ஒருங்கிணைக்கவில்லை. எனினும் சாதகமற்ற வானிலையின் போது நிகழ்ந்த தாக்குதலை அச்சு பாதுகாவல் படைகள் சற்றும் எதிர்பாராததல், அவர்களது எதிர்வினை மெல்லவும், ஒருங்கிணைப்பின்றியும் ஆரம்பமானது. இக்குழப்பம் கடல்வழியே தரையிறங்கிய நேச நாட்டுத் தரைப்படைகளுக்கு சாதகமாக அமைந்தது.
ஜூலை 10 அன்று அதிகாலையில் கடல்வழி படையிறக்கம் ஆரம்பமானது. கிழக்கில் பிரித்தானிய மற்றும் கனடியப் படைகளும், மேற்கில் அமெரிக்கப் படைகளும் கடற்கரையோரமாக மொத்தம் 26 இடங்களில் தரையிறங்கினர். வானிலை மோசமாக இருந்ததால், தரையிறக்க ஒருங்கிணைப்பில் சிறிது குழப்பம் நிலவியது. ஆனால் நேச நாட்டுப் படைகளைக் கடற்கரைகளில் எதிர்க்க அச்சு பாதுகாவல் படைகள் திட்டமிடவில்லையென்பதால், பெரிய எதிர்ப்பு எதுவுமின்றி பல நேச நாட்டுப் படைப்பிரிவுகள் கரையேறின. இப்படையிறக்கம் அதுவரை வரலாற்றில் நிகழ்ந்திருந்த நீர்நிலத் தாக்குதல்களில் மிகப்பெரியதாகும். ஆங்காங்கு நிகழ்ந்த இத்தாலியப் பாதுகாவல் படைகளின் எதிர்த்தாக்குதல்கள் நேச நாட்டுப் படைகளால் எளிதில் முறியடிக்கப்பட்டுவிட்டன. படையெடுப்புக்கு முந்தைய வான்வழி குண்டுவீச்சினால் பெரும் சேதமடைந்திருந்த அச்சு வான்படைகளால் சிறிய தாக்குதலகளை மட்டுமே நிகழ்த்த இயன்றது. இத்தாக்குதல்களில் பல நேச நாட்டு கப்பல்களும், தரையிறங்கு படகுகளும் சேதமடைந்தன. ஜூலை 10 அன்று இரவில் நேச நாட்டு தரையிறக்கம் வெற்றிகரமாக முடிவடைந்தது. ஏழு டிவிசன்கள் - 3 அமெரிக்க, 3 பிரித்தானிய மற்றும் 1 கனடிய டிவிசன்கள் - சிசிலியின் கடற்கரையில் தரையிறங்கியிருந்தன. படையெடுப்பின் அடுத்த கட்டமாக அவை சிசிலியின் உட்பகுதியை நோக்கி முன்னேறத் தொடங்கின.
கடற்கரை முகப்புகளிலிருந்து முன்னேற்றம்
[தொகு]நேசநாட்டுத் தரைப்படை களத் தளபதி ஹரால்ட் அலெக்சாந்தர் தரையிறக்கத்துக்கு அடுத்த கட்டமாக மேற்கில் லிக்காட்டா துறைமுகம் முதல் மேற்கே கட்டானியா துறைமுகம் வரையுள்ள பகுதிகளைக் கைப்பற்ற திட்டமிட்டிருந்தார். கிழக்கு குறிக்கோள் படைப்பிரிவின் பிரித்தானிய 8வது ஆர்மிக்கு பச்சீனோ வான்படைத் தளம், சிரக்கியூசு துறைமுகம், ஆகியவற்றைக் கைப்பற்றிய பின் அகசுட்டா மற்றும் கட்டானிய துறைமுகங்களைக் கைப்பற்றும் இலக்கு தரப்பட்டது. மேற்கில் அமெரிக்க 7வது ஆர்மிக்கு போண்ட்டே ஓலிவியோ, பிசுக்காரி, கோமிசுக்கோ ஆகிய வான்படைத் தளங்களையும், லிக்காட்டா துறைமுகத்தையும் கைப்பற்றும் பொறுப்பு தரப்பட்டது. மேலும் பிரித்தானிய 8வது ஆர்மியின் கிழக்குதிசைப் பக்கவாட்டில் அச்சுப் படைகள் தாக்காவண்ணம் பாதுகாப்பும் பொறுப்பும் அதற்கு இருந்தது.
ஜூலை 11ம் தேதி கடற்கரை முகப்புகளிலிருந்து இரு ஆர்மிகளும் அச்சுப் பாதுகாவல் படைகளை முறியடித்து முன்னேறத் தொடங்கின. மேற்கில் ஜூலை 12 அன்று போண்டே போலிவியோ கைப்பற்றப்பட்டது. கிழக்கில் ஜூலை 14 அன்று அகசுட்டா துறைமுகம் பிரித்தானிய 8வது ஆர்மியால் கைப்பற்றப்பட்டது. இரு குறிக்கோள் படைகளின் படைப்பிரிவுகளும் கைகோர்த்து சிசிலியில் தென்கிழக்கு பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன. இரு படைப்பிரிவுகளும் கைகோர்த்த பின்னர், சிசிலியின் நடுப்பகுதியில் முன்னேறி வடக்கிலிருந்த சான் ஸ்டீபானோ துறைமுகத்தைக் கைப்பற்ற அலெக்சாந்தர் திட்டமிட்டிருந்தார். இதன்மூலம் சிசிலியை கிழக்கு-மேற்காக இரண்டாகப் பிளப்பது அவர் எண்ணியிருந்தார். ஆனால் கட்டானியாவை உடனடியாக பிரித்தானிய 8வது ஆர்மியால் கைப்பற்ற இயலவில்லையென்பதால், மேற்கு கரையோரமாக முன்னேறி சிசிலியின் வடமேற்கிலிருந்த பாலெர்மோ துறைமுகத்தைக் கைப்பற்ற அமெரிக்க 7வது ஆர்மிக்கு உத்தரவிட்டார். ஜெர்மானியத் தரப்பில் சிசிலியின் மேற்கு பகுதியிலிருந்து பின்வாங்கி வடகிழக்கை மட்டும் பாதுகாக்க முடிவு செய்யபப்ட்டது. இத்தாலியப் படைப்பிரிவுகள் போர்த் திறனின்றி இருந்ததால், ஜெர்மானியத் தளபதி கெஸ்சல்ரிங் இந்த முடிவினை எடுத்தார். இதனால் சிசிலின் மேற்கு பகுதியிலிருந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகள் அமெரிக்க 7வது ஆர்மியின் முன்னேற்றத்தை எதிர்க்கவில்லை. வேகமாகப் பின்வாங்கி வடகிழக்குப் பகுதிகளுக்குச் சென்று விட்டன. எதிர்ப்பின்றி வேகமாக முன்னேறிய அமெரிக்கபப்டைகள் ஜூலை 22ம் தேதி பாலெர்மோ துறைமுகத்தைக் கைப்பற்றின. மேற்கு சிசிலியின் பெரும்பகுதி அமெரிக்கர் வசமானது.
எட்னா மோதல்கள்
[தொகு]மேற்கு சிசிலி எளிதில் வீழ்ந்துவிட்டாலும், கிழக்கு சிசிலியில் அச்சுப் படைகள் நேச நாட்டு முன்னேற்றத்தைக் கடுமையாக எதிர்த்தன. பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையிலான 8வது ஆர்மி அச்சுப்படைகளின் எட்னா அரண்கோட்டை ஊடுருவ முடியாமல் திணறியது. எட்னா சிகரத்தை ஒட்டி அமைந்திருந்த இந்த அரண்கோட்டை பலமான ஜெர்மானிய மற்றும் இத்தாலியப் படைப்பிரிவுகள் பாதுகாத்து வந்தன. ஜுலை மாதம் இறுதிவரை எட்னா அரண்கோடு மீதான பிரித்தானியத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன. மேற்கு சிசிலி முழுவதையும் கைப்பற்றிய அமெரிக்கப் படைகள் பின் கிழக்கு நோக்கி திரும்பின. எட்னாவைத் தாக்கிக் கொண்டிருந்த பிரித்தானியப் படைகளுக்குத் துணையாக இரு டிவிசன்களை கிழக்கே அனுப்பினார் அமெரிக்க 7வது கோரின் தளபதி ஜார்ஜ் பேட்டன். அவை டுரோய்னா நகரருகே எட்னா அரண்கோட்டைத் தாக்கின. ஆறு நாட்கள் கடும் சண்டைக்குப் பின் டுரோய்னா நகரம் வீழ்ந்து எட்னா கோடு ஊடுருவப்பட்டது. ஆகஸ்ட் 7ம் தேதி எட்னா அரண்கோட்டை விட்டு பின்வாங்கிய அச்சுப்படைகள் அடுத்த அரண்நிலையான டோர்டொரீசி அரண்கோட்டை அடைந்து அங்கு நேச நாட்டுப் படைகளை எதிர்க்கத் தொடங்கின. இதற்குள் சிசிலியில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்திருந்த கெஸ்சல்ரிங், தன் படைப்பிரிவுகளை இத்தாலிக்கு பின்வாங்க உத்தரவிட்டார்.
அச்சு பின்வாங்கல்
[தொகு]ஜூலை இறுதி வாரத்திலேயே சிசிலி போர்த்தொடரில் தோல்வி உறுதி என்பது ஜெர்மானிய போர்த்தலைமையகத்துக்கு தெளிவாகி விட்டது. எனவே மெஸ்சினா துறைமுகம் வழியாக இத்தாலிக்கு தங்களது படைப்பிரிவுகளைக் காலி செய்ய திட்டங்களை வகுக்கத் தொடங்கினர். ஆனால் உடன் போரிட்டு வந்த இத்தாலியப் படைகளுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை. ஒரு வாரம் கழித்தே ஜெர்மானியர்களின் பின்வாங்கல் திட்டம் இத்தாலிய தளபதி குசோனிக்குத் தெரியவந்தது. ஜெர்மானியர்கள் காலி செய்துவிட்டால் தனது படைகளால் தனித்து சமாளிக்க முடியாதென்று குசோனி இத்தாலியப் போர்த் தலைமையகதுக்குத் தெரிவித்து விட்டார். இதனால் இத்தாலியர்களும் சிசிலியிலிருந்து பின்வாங்க முடிவு செய்தனர்.
ஆகஸ்ட் இரண்டாம் வாரம் நேச நாட்டுப் படைகள் எட்னா அரண்நிலைகளை முழுவதுமாகக் கைப்பற்றி ஊடுருவி விட்டன. ஒவ்வொரு நாளும் சில கிலோமீட்டர்கள் முன்னேறின. சிசிலியின் வடகிழக்கு முனையில் அச்சுக்கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் சுருங்கி வந்தன. ஆகஸ்ட் 11ல் திட்டமிட்டபடி அச்சு காலி செய்தல் ஆரம்பமானது. அச்சுப் படைகள் படிப்படியாகப் பின்வாங்கின; ஒவ்வொரு நாளும் பகல் வேளையில் 5-15 கிமீ பின்வாங்கி, இரவு நேரத்தில் சில படைப்பிரிவுகள் இத்தாலிக்கு காலி செய்யப்பட்டன. இதனைத் தடுத்து எஞ்சியிருந்த படைப்பிரிவுகளை கடல்வழியாக சுற்றி வளைக்க நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட இரு முயற்சிகள் தோல்வியடைந்தன. காலிசெய்தல் நிகழ்ந்து கொண்டிருந்த மெஸ்சினா நீரிணை (இத்தாலிக்கும் சிசிலிக்கு இடைப்பட்ட கடற்பகுதி) பலமான அச்சு பீரங்கிப் படைப்பிரிவுகளால் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதனால் நேச நாட்டு வான்படை வானூர்திகளும், கடற்படைக் கப்பல்களும் இக்காலி செய்தலைத் தடுக்க இயலவில்லை. ஆகஸ்ட் 17ம் தேதி இக்காலி செய்தல் முடிவடைந்தது. சுமார் 60,000 ஜெர்மானிய வீரர்களும் 75,000 இத்தாலிய வீரர்களும் நேச நாட்டுப் பிடியிலிருந்து தப்பி விட்டனர். அன்றே மெஸ்சினாத் துறைமுகத்தை நேச நாட்டுப் படைகள் கைப்பற்றின; சிசிலியப் படையெடுப்பு முற்றுப்பெற்றது.
தாக்கம்
[தொகு]சிசிலியப் படையெடுப்பில் அச்சு படையினருக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டன. ஆறுவார கால சண்டையில் சுமார் 30,000 ஜெர்மானிய இத்தாலியப் படையினர் மாண்டனர் அல்லது காயமடைந்தனர். சுமார் 1,30,000 இத்தாலிய வீரர்கள் போர்க்கைதிகளாயினர். அமெரிக்க தரப்பில் 2,572 பேர் கொல்லப்பட்டனர், 5,946 பேர் காயமடைந்தனர் மற்றும் 1,012 பேர் கைதுசெய்யப்பட்டனர் அல்லது காணாமல் போயினர். பிரித்தானிய தரப்பில் மாண்டவர்கள் 2,721 பேர்; காயமடைந்தவர் 10,122 பேர்; கனடியர்களுள் 562 பேர் இறந்தனர்; 1,848 பேர் காயமடைந்தனர் அல்லது கைப்பற்றப்பட்டனர். இப்படையெடுப்பின் போது பிசுக்காரி வான்களத்தில் அமெரிக்க வீரர்கள் இத்தாலிய மற்றும் ஜெர்மானியப் போர்க்கைதிகளைச் சுட்டுக் கொன்றது பிசுக்காரி படுகொலை என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டாம் உலகப் போரில் நேச நாட்டு தரப்பினர் நிகழ்த்திய போர்க்குற்றச் செயல்களில் ஒன்றாகும்.
படையெடுப்பின் முதல் நாள் படைகளின் தரையிறக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட குழப்பங்கள் நேச நாட்டுப் படைகளுக்கு படிப்பினையாக அமைந்தன. வான்குடை படைப்பிரிவுகளையும் தரைப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவதின் அவசியம் நேச நாட்டு உத்தியாளர்களுக்குப் புலனானது. சிசிலியத் தரையிறக்கத்தின் பாடங்களை அவர்கள் மறு ஆண்டு நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். சிசிலியில் தோல்வி உறுதியானவுடன், சர்வாதிகாரி முசோலினி மீது இத்தாலிய மக்களும் ஆளும் வர்க்கமும் கடும் அதிருப்தி கொண்டனர். இத்தாலியின் ஆளும் பாசிசப் பெருங்குழு முசோலினி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அவரை சர்வாதிகாரி பதவியில் இருந்து நீக்கியது. மேலும் சிசிலி அடுத்து நிகழ்ந்த இத்தாலியப் படையெடுப்புக்கு தளமாகப் பயன்பட்டது.
குறிப்புகள்
[தொகு]- ↑ The U.S. and British forces had suffered 7,000 fatalities and 15,000 men had been wounded.[3]
- ↑ Around 10,000 Germans had been killed, wounded or captured during the campaign. The Italians had lost 132,000 men, mainly prisoners.[3]
மேற்கோள்கள்
[தொகு]நூல்கள்
[தொகு]- Alexander, Harold (12 February 1948). The Conquest of Sicily from 10 July 1943 to 17 August 1943. Alexander's Despatches. published in "No. 38205". இலண்டன் கசெட் (invalid
|supp=
(help)). 10 February 1948. - Atkinson, Rick (2007). Volume II: The Day of Battle, The War in Sicily and Italy, 1943-1944. The Liberation Trilogy. New York: Henry Holt. pp. 816 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0805062892.
- Bimberg, Edward L. (1999). The Moroccan Goums. Westport, Conn.: Greenwood Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0313309132.
- Birtle, Andrew J. (1993). Sicily 1943. The U.S. Army WWII Campaigns. Washington: United States Army Center of Military History. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-16-042081-4. CMH Pub 72-16.
- Carver, Field Marshal Lord (2001). The Imperial War Museum Book of the War in Italy 1943-1945. London: Sidgwick & Jackson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0330482300.
- Costanzo, Ezio (2003). Sicilia 1943 : breve storia dello sbarco alleato (in Italian). Catania, Italy: Le Nove Muse. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 888782021X.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - D'Este, Carlo (2008). Bitter Victory: The Battle for Sicily 1943. London: Arum Press Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781845133290.
- Dickson, Keith (2001). World War II for Dummies. New York, New York.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - Ferguson, Gregor (1984). The Paras 1940-1984: British airborne forces 1940-1984. Oxford: Osprey. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0850455731.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு] - Follain, John (2005). Mussolini's Island: The Invasion of Sicily Through The Eyes Of Those Who Witnessed The Campaign. Hodder & Stoughton.
- Grigg, John (1982). 1943: The Victory that Never Was. Kensington Pub Corp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8217-1596-8.
- Hoyt, Edwin P. (2007) [2002]. Backwater War: The Allied Campaign in Italy, 1943-45. Mechanicsburg, PA: Stackpole Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978 0 8117 9982 3.
{{cite book}}
: Check|isbn=
value: checksum (help) - Jowett, Philip S. (2001). The Italian Army 1940-45. Oxford: Osprey Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1855328666.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|origdate=
(help); Unknown parameter|coauthors=
ignored (help) - Mitcham, Samuel W. (2007) [1991]. The Battle of Sicily: How the Allies Lost Their Chance for Total Victory. Mechanicsberg, PA: Stackpole Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 081173403X.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Molony, Brigadier C.J.C.; with Flynn, Captain F.C. (R.N.); Davies, Major-General H.L.; Gleave, Group Captain T.P. (2004) [1st. pub. HMSO:1973]. Butler, Sir James (ed.). The Mediterranean and Middle East, Volume V: The Campaign in Sicily 1943 and The Campaign in Italy 3 September 1943 to 31 March 1944. History of the Second World War, United Kingdom Military Series. Uckfield, UK: Naval & Military Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-845740-69-6.
{{cite book}}
: Unknown parameter|lastauthoramp=
ignored (help) - Tomblin, Barbara (2004). With Utmost Spirit: Allied Naval Operations in the Mediterranean, 1942-1945. Lexington: University Press of Kentucky. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0813123380.
- Shaw, A (2002) [2000]. World War II: Day by Day. Hoo: Grange. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1840133635.
- Zuehlke, Mark (2010) Operation husky : the canadian invasion of sicily, july 10-august 7, 1943, Douglas & McIntyre பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55365-539-7