நாபொலியின் நான்கு நாட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாபொலியின் நான்கு நாட்கள் (Four days of Naples, இத்தாலியம்: Quattro giornate di Napoli) என்னும் தொடர் இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியின் நாபொலி நகரின் மக்கள் நாசி ஜெர்மனியின் படைகளுக்கு எதிராக நடத்திய எழுச்சியைக் குறிக்கிறது. செப்டம்பர் 27-30, 1943 ஆகிய நான்கு நாட்களில் ஜெர்மானியர்களுடன் மோதிய நகர மக்களும் இத்தாலிய எதிர்ப்புப்படையினரும், ஜெர்மானியப் படைகளை நகரத்திலிருந்து வெளியேற்றினர். இத்தீரச் செயலுக்காக படைத்துறை வீரத்துக்கான தங்கப்பதக்கத்தை இத்தாலியின் அரசர் மூன்றாம் விக்டர் எமானுவேல் நாபொலி நகரத்துக்கு வழங்கி சிறப்பித்தார். எழுச்சி வெற்றி பெற்ற மறுநாள் (அக்டோபர் 1) நேச நாட்டுப் படைகள் நாபொலி நகருக்குள் நுழைந்தன.

செப்டம்பர் 3, 1943ல் [நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு]] ஆரம்பமானது. அதே நாள் இத்தாலி நேச நாடுகளிடம் சரணடைந்தது. இந்த சரணடைவு செப்டம்பர் 8ம் தேதி இத்தாலிய மக்களுக்கும் படைகளுக்கும் அறிவிக்கப்பட்டது. உடனடியாக ஜெர்மானியர்கள் இத்தாலியை ஆக்கிரமித்தனர். இத்தாலியர்களிடையே சரணடைவை ஏற்று அணி மாறுவதா அல்லது ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக அச்சுக் கூட்டணியில் நீடிப்பதா என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்நாட்டுப் போர் மூண்டு. நாபொலி நகர மக்கள் நேச நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்பட முடிவெடுத்தனர். சரணடைவுக்குப் பின் ஏற்பட்ட குழப்பத்தால், நாபொலியிலிருந்த இத்தாலியப் படைப்பிரிவுகள் நிலை குலைந்து சிதறின. ஜெர்மானியப் படைகள் அந்ந்கரை ஆக்கிரமித்தன. ஜெர்மானியப் படைகளுக்கும் நாபொலி மக்களுக்கும் இடையே சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டு நிலை மோசமானது. செப்டம்பர் 13ம் நாபொலியிலிருந்த ஜெர்மானியப் படைகளின் தளபதி வால்டர் ஸ்கோல் இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். நாபொலி மக்கள் ஜெர்மானிய படைவீரர்களைத் தாக்கினால், கொல்லப்படும் ஒவ்வொரு ஜெர்மானியருக்குப் பழியாக நூறு நாபொலியர்கள் கொல்லப்படுவார்கள் என அச்சுறுத்தினார். முற்றுகை நிலை அமலில் இருப்பதாகவும், அதனால் மக்கள் தங்களிடமுள்ள ஆயுதங்கள் அனைத்தையும் தன் படைகளிடம் ஒப்படைக்கும்படியும் ஆணையிட்டார். அவரது ஆணைகளை எதிர்த்தவர்கள் பொதுவிடங்களில் கொல்லப்பட்டனர். இதனால் நாபொலியர்களின் கோபம் அதிகமானது. வெளிப்படையாக ஜெர்மானியர்களுடன் மோத அவர்கள் தயாராகினர். ஆயுதங்களும், அவற்றுக்கான குண்டுகளும் திருடப்பட்டு சேகரிக்கபபட்டன. செப்டம்பர் 22ம் தேதி 18 முதல் 33 வயது வரை உள்ள அனைத்து இத்தாலியர்களும் கட்டாய உழைப்பில் ஈடுபட வேண்டுமென்று ஸ்கோல் ஆணையிட்டார். மேலும் கடற்கரையிலிருந்து 300மீ தொலைவுக்குள் வாழும் அனைத்து நாபொலியர்களும் தங்கள் வீடுகளைக் காலி செய்து இடம் பெயர உத்தரவிட்டார். நாபொலி துறைமுகப் பாதுகாப்பாக இடப்பட்ட இந்த ஆணையால் 2,40,000 பேர் பாதிக்கப்பட்டனர். கட்டாய உழைப்புக்காக ஜெர்மனிக்குச் செல்ல மறுத்த இத்தாலியர்களுக்கு மரண தண்டனை விதித்தார். இச்செயல்பாடுகள் நாபொலியில் ஆயுதப் புரட்சி வெடிக்க இறுதித் தூண்டுகோலாக அமைந்தன.

செப்டம்பர் 26ம் நாள் பெரும் மக்கள் கூட்டமொன்று ஜெர்மானியர்களால் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தது. மறுநாள் முதல் வெளிப்படையாக புரட்சி வெடித்து, “நாபொலியின் நான்கு நாட்கள்” துவங்கின. செப்டம்பர் 27 அன்று சுமார் 8000 நாபொலியர்களை ஜெர்மானியர்கள் கைது செய்தனர். ஆயுதமேந்திய எதிர்ப்புப் படைகள் கைதிகளை விடுவிக்கவும், ஆயுதங்களைக் கைப்பற்றவும் ஜெர்மானிய படைநிலைகளைத் தாக்கத் தொடங்கின. மறுநாள் எழுச்சி நாபொலியில் அனைத்து பகுதிகளுக்கும் பரவி, மேலும் பல நாபொலியர்கள் கிளர்ச்சியாளர்களோடு சேர்ந்து கொண்டனர். ஜெர்மானிய ரோந்துக் குழுக்கள் தாக்கப்பட்டன. துறைமுகத்தையும் வானூர்தி நிலையத்தையும் கைப்பற்ற இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். செப்டம்பர் 29 அன்று கிளர்ச்சி மேலும் தீவிரமடைந்தது; ஜெர்மானியர்கள் பீரங்கிகளைக் கொண்டும் கண்மூடித்தனமாகவும் தாக்கியதால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 30ம் தேதி நேச நாட்டுப் படைகள் நாபொலி நகரை அணுகும் செய்தி கிட்டியவுடன் ஜெர்மானியர்கள் பின்வாங்கத் தொடங்கினர். காலி செய்து செல்லும்போதும் நாபொலியின் பல பகுதிகள் மீதி பீரங்கித் தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்தனர். அக்டோபர் 1 அன்று காலை 9.30 மணியளவில் நேச நாட்டுப் படைகள் நாபொலியில் நுழைந்த பின்னர் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.

நான்கு நாட்கள் நடந்த போராட்டங்களிலும் மோதல்களிலும் நூற்றுக்கணக்கான நாபொலியர்கள் கொல்லப்பட்டனர். மாண்டவர்கள் எத்தனை பேர் என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. இக்கிளர்ச்சியால் நாபொலியை நேச நாட்டுப் படைகளுக்கு எதிரான அரண்நிலையாக பயன்படுத்த ஜெர்மானியர்கள் வகுத்திருந்த திட்டம் பாழானது. நாபொலி மக்களின் தீரத்தைப் பாராட்டி படைத்துறை வீரத்துக்கான தங்கப்பதக்கத்தை இத்தாலியின் அரசர் மூன்றாம் விக்டர் எமானுவேல் நாபொலி நகரத்துக்கு வழங்கி சிறப்பித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]