ஸ்லாப்ஸ்டிக் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்லாப்ஸ்டிக் நடவடிக்கை
நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பின் பகுதி
நாள் செப்டம்பர் 9, 1943
இடம் தாரந்தோ, இத்தாலி
பிரித்தானிய வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்  இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஜார்ஜ் எஃப். ஹோப்கின்சன்
நேச நாட்டுப் படைகள் எதிர்ப்பின்றி தரையிறங்கின.

ஸ்லாப்ஸ்டிக் நடவடிக்கை (Operation Slapstick) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு படையெடுப்பு நடவடிக்கை. நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பின் ஒரு பகுதியான இதில் பிரித்தானிய 1வது வான்குடை டிவிசன் இத்தாலியின் தாரந்தோ நகரைத் தாக்கிக் கைப்பற்றியது.

இத்தாலி மீது படையெடுக்க நேச நாட்டுப் படைகள் முடிவு செய்த போது சலேர்னோ மற்றும் கலபிரியா பகுதிகளில் மட்டும் படைகளைத் தரையிறக்க முடிவு செய்தனர். ஆனால் செப்டம்பர் 3, 1943ல் இத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தம் கையெழுத்தாகி இத்தாலி சரணடைந்தது. இதனால் பிற இடங்களிலும் படைகளைத் தரையிறக்க வாய்ப்புகள் உருவாகின. இதனைப் பயன்படுத்தி தாரந்தோ துறைமுகத்தைக் கைப்பற்ற நேச நாட்டு உத்தியாளர்கள் திட்டமிட்டனர். செப்டம்பர் 9ம் தேதி பிரித்தானிய 1வது வான்குடை டிவிசனை ஏற்றிக் கொண்டு நான்கு பிரித்தானியக் கப்பல்கள் தாரந்தோவிற்குச் சென்றன. அவற்றுக்குத் துணையாக பல போர்க்கப்பல்களும் சென்றன. இத்தாலியப் படைகளின் சரணடைவுக்குப் பின் தராந்தோ பகுதியில் சில ஜெர்மானியப் படைப்பிரிவுகளே நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றின் தளபதி, தன்னிடம் உள்ள சொற்பப் படைகளைக் கொண்டு நேச நாட்டுத் தரையிறக்கத்தைத் தடுக்க இயலாது என்று உணர்ந்தார். எனவே தராந்தோ நகரிலிருந்து பின்வாங்கி விட்டார். தராந்தோவில் எந்த எதிர்ப்புமின்றி நேரடியாகத் துறைமுகத்திலேயே பிரித்தானியப் படைகள் தரையிறங்கின. எதிர்ப்பில்லையெனிலும் படைகளைத் தாங்கிச் சென்ற ஒரு கப்பல் துறைமுகத்திலிருந்த கண்ணிவெடி மீது மோதி மூழ்கியதில் நூற்றுக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 9ம் தேதி இரவுக்குள் தாரந்தோ நகரும் துறைமுகமும் பிரித்தானியர் வசமாகின.