உள்ளடக்கத்துக்குச் செல்

நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இத்தாலியப் படையெடுப்பு
இத்தாலியப் போர்த்தொடரின் பகுதி

சலேர்னோ கடற்கரையில் பீரங்கித் தாக்குதலுக்கிடையே தரையிறங்கும் நேச நாட்டுப் படைகள்
நாள் செப்டம்பர் 3 – 16, 1943
இடம் சலேர்னோ, கலபிரியா & டாரண்டோ, இத்தாலி
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய இராச்சியம்
 கனடா
 டென்மார்க்
 நோர்வே
 சுதந்திர பிரான்ஸ்
 ஜெர்மனி
 இத்தாலி
(செப்டம்பர் 8 வரை)
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ஹரால்ட் அலெக்சாந்தர்
ஐக்கிய இராச்சியம் பெர்னார்ட் மோண்ட்கோமரி
ஐக்கிய அமெரிக்கா மார்க் கிளார்க்
நாட்சி ஜெர்மனி ஆல்பர்ட் கெஸ்சல்ரிங்
நாட்சி ஜெர்மனி ஹைன்ரிக் வோன் வெய்டிங்கோஃப்
பலம்
189,000 (செப்டம்பர் 16) 100,000
இழப்புகள்
2,009 கொல்லப்பட்டனர்
7,050 காயமடைந்தனர்
3,501 காணாமல் போயினர்
3,500 பேர்

நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு (Allied invasion of Italy) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு பெரும் படையெடுப்பு. இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேச நாட்டுப் படைகள் பாசிச இத்தாலியின் மீது படையெடுத்தன. இப்படையெடுப்பு மூன்று பெரும் கட்டங்களாக நடைபெற்றது. அவலான்ச் நடவடிக்கை (Operation Avalanche) என்று குறிப்பெயரிடப்பட்ட முதன்மைத் தாக்குதலில் இத்தாலியின் மேற்கு கடற்கரையில் சலேர்னோ நகரருகே நேச நாட்டுப் படைகள் தரையிறங்கின. அவற்றுக்குத் துணையாக கலபிரியா பகுதியில், டாரண்டோ நகரத்தின் அருகிலும் மேலும் இரு தரையிறக்கங்கள் நடைபெற்றன.

இப்படையெடுப்பால், இத்தாலி நேச நாடுகளிடம் சரணடைந்தது. ஆனால் இத்தாலியர்கள் அணிமாறிவிடுவார்கள் என்பதை எதிர்பார்த்த ஜெர்மானியர்கள் இத்தாலியை ஆக்கிரமித்து, இத்தாலியப் படைகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். முன்னாள் பாசிச சர்வாதிகாரி முசோலினி தலைமையில் ஒரு கைப்பாவை இத்தாலிய அரசையும் தோற்றுவித்தனர். இப்படையெடுப்பின் முடிவில் தெற்கு இத்தாலி முழுவதும் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

பின்புலம்

[தொகு]

மே 1943ல் வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடரில் நேச நாடுகள் முழுவெற்றி கண்டன. வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து அச்சுப் படைகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டுவிட்டன. போரின் அடுத்த கட்டமாக இத்தாலி மீது படையெடுக்க நேச நாட்டு மேல்நிலை உத்தியாளர்கள் முடிவு செய்தனர். பாசிச சர்வாதிகாரி முசோலினியின் ஆட்சியின் கீழிலிருந்த இத்தாலி அச்சு நாட்டுக் கூட்டணியில் இட்லரின் நாசி ஜெர்மனிக்கு அடுத்த முக்கிய அங்க நாடாக இருந்தது. இத்தாலியைக் கைப்பற்றுவது அச்சுக் கூட்டணியை வெகுவாக பலவீனப்படுத்துவதுடன், பரப்புரையளவில் மிகப்பெரும் வெற்றியாக அமையும் என அவர்கள் கருதினர். மேலும் இத்தாலியின் வீழ்ச்சி நடுநிலக் கடலில் நேச நாட்டு சரக்குக்கப்பல் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக விளங்கிய அச்சு வான்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளை செயலிழக்கச் செய்யும் என்பது நேச நாட்டு உத்தியாளர்களின் கணிப்பு.

நடுநிலக்கடல் பகுதியில் கடல் மற்றும் வான் ஆளுமை கிட்டினால் மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் போர்முனைகளுக்கு தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம், அவற்றை சோவிய ஒன்றியத்துக்கு தளவாடங்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தலாம் என கருதினார். அதோடு இத்தாலியில் போர் குறித்து மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வந்தது. அந்நாடு மீது படையெடுத்தால் மக்கள் பாசிச ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள் என்றும் கருதப்பட்டது. மேலும் இப்படையெடுப்பால் கிழக்குப் போர்முனைக்குச் செல்ல வேண்டிய பல ஜெர்மானிய படைப்பிரிவுகளை இத்தாலியில் முடக்கி விடலாம் எனவும் கருதப்பட்டது.

இத்தாலியப் படையெடுப்பு வரைபடம்
இத்தாலியப் படையெடுப்பு வரைபடம்

இத்தாலி மீதான படையெடுப்பின் முதல் கட்டமாக, அதன் தெற்கில் உள்ள சிசிலி மீது ஜூலை 1943ம் தேதி நேச நாட்டுப் படைகள் படையெடுத்தன. ஒன்றரை மாத காலத்துக்குள் சிசிலி கைப்பற்றப்பட்டுவிட்டது. இத்த எளிதான வெற்றியால் இத்தாலியினையும் எளிதில் கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணம் வலுப்பட்டது. மேலும் சிசிலிப் படையெடுப்பால் இத்தாலிய ஆட்சியாளர்களிடையே மோதல் ஏற்பட்டு முசோலினி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இத்தாலி மீது படையெடுத்தால், அந்நாட்டு அரசு பயந்து போய் அச்சுக் கூட்டணியிலிருந்து விலகிவிடும் எனவும் கருதினர்.

அவலான்ச் நடவடிக்கை என்ற குறிப்பெயரிடப்பட்டிருந்த இப்படையெடுப்பில் சாலர்னோ நகர் அருகே முக்கியத் தாக்குதல் நிகழ்த்த திட்டமிடப்பட்டது. இங்கு அமெரிக்க 5வது ஆர்மி, அமெரிக்க 6வது கோர் மற்றும் பிரித்தானிய 10வது கோரில் இடம்பெற்றிருந்த எட்டு டிவிசன்களும் இரண்டு பிரிகேட்களும் பங்கேற்றன. அமெரிக்க 82வது வான்குடை டிவிசன் இத்தாக்குதலுக்கான இருப்பு படைப்பிரிவாக இருந்தது. தரையிறங்கி பாலமுகப்புகளைப் பலப்படுத்தியபின் நாபொலி துறைமுக நகரைக் கைப்பற்றுவது இத்தாக்குதலின் முக்கிய இலக்கு. இந்த முதன்மைத் தாக்குதலுக்குத் துணையாக இத்தாலியில் மேலும் இரு இடங்களில் படைகளைத் தரையிறக்கத் திட்டமிடப்பட்டது. பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையிலான பிரித்தானிய 8வது ஆர்மி இத்தாலியின் “பெருவிரல்” என வர்ணிக்கப்பட்ட கலபிரியா நகர் அருகேயும், பிரித்தானிய 1வது வான்குடை டிவிசன் இத்தாலியின் குதிங்கால் என வர்ணிக்கப்பட்ட டாரண்டோ துறைமுகத்திலும் தரையிறங்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இப்படையெடுப்பை எதிர்கொள்ள தெற்கு இத்தாலியில் ஆகஸ்ட் 22, 1943ல் ஆறு டிவிசன்களைக் கொண்ட புதிய ஜெர்மானிய 10வது ஆர்மி உருவாக்கப்பட்டது. ஜெனரல் ஹைன்ரிக் வோன் வெய்ட்டிங்கோஃப் தலைமையிலான இப்படைப்பிரிவு ஃபீல்டு மார்சல் ஆல்பர்ட் கெஸ்சல்ரிங் தலைமையிலான ஜெர்மானியத் தெற்குத் தரைப்படைத் தலைமையகத்தின் கீழ் செயல்பட்டது. வடக்கு இத்தாலியில் இருந்த ஜெர்மானியப் படைகள் எர்வின் ரோம்மல் தலைமையிலான ஆர்மி குரூப் பி இன் கட்டுப்பாட்டில் இருந்தன.

சண்டையின் போக்கு

[தொகு]

தெற்கு இத்தாலியக் களம்

[தொகு]
சலேர்னோ தரையிறக்கத்தின் போது அமெரிக்க 5வது ஆர்மியின் தளபதி மார்க் கிளார்க்

செப்டம்பர் 3, 1943ல் பெர்னார்ட் மோண்ட்கோமரியின் பிரித்தானிய 8வது ஆர்மி கலபிரியா அருகே தரையிறங்கியது. கனடிய மற்றும் பிரித்தானியப் படைப்பிரிவுகள் இடம்பெற்றிருந்த இந்த படைப்பிரிவு, சிசிலியிலிருந்து நேரடியாக தரையிறங்கு படகுகள் மூலம் இத்தாலியை அடைந்தன. பயணதூரம் மிகக்குறைவு என்பதால் கப்பல்களில் ஏறி பின் மீண்டும் தரையிறங்கு படகுகளுக்கு மாறி தரையிறங்க வில்லை. இவற்றின் தரையிறக்கத்துக்கு அச்சுப் படைகளிடமிருந்து பெரும் எதிர்ப்பு எதுவும் இல்லை. முதன்மை தரையிறக்கம் சலேர்னோவில் தான் நிகழப்போகிறது என்பதை ஊகித்து விட்ட கெஸ்சல்ரிங் தனது படைகளைப் பின்வாங்க உத்தரவிட்டார். நேரடியாக மோதாமல் பாலங்களைத் தகர்த்தும், சாலைகளை மறித்தும் பிரித்தானியப் படை முன்னேற்றத்தை ஜெர்மானியர்கள் தாமதப்படுத்தினர். மேலும் தெற்கு இத்தாலியின் கரடுமுரடான புவியியல் அமைப்பு இது போன்ற தாமதப்படுத்தும் உத்திகளுக்கு சாதகமாக அமைந்தது. பின்வாங்கிய ஜெர்மானியப் படைகள் சலேர்னோவில் நிகழவிருந்த முக்கியத் தரையிறக்கத்தை எதிர்க்கத் தயாராகின.

சலேர்னோ தரையிறக்கம் ஆரம்பமாவதற்கு சற்று முன்னால், இத்தாலிய அரசு நேச நாடுகளிடம் சரணடைந்ததது. இத்தாலியுடனான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், பெரும்பாலான இத்தாலியத் தரைப்படைப் பிரிவுகள் போரிடுவதை நிறுத்தின; கடற்படைக் கப்பல்கள் நேச நாட்டுத் துறைமுகங்களுக்குச் சென்று சரணடைந்தன. இத்தாலி சரணடைந்துவிடும் என்பதை எதிர்பார்த்திருந்த ஜெர்மானியர்கள் ஆக்சே நடவடிக்கையின் மூலம் போரிட மறுத்த இத்தாலியப் படைப்பிரிவுகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். எனினும் இத்தாலியப் படைகளில் ஒரு சிறு பிரிவினர் தொடர்ந்து ஜெர்மனிக்கு ஆதரவாக நேச நாடுகளை எதிர்த்துப் போரிடுவதைத் தொடர்ந்தனர். செப்டம்பர் 9ம் தேதி பிரித்தானிய 1வது வான்குடை டிவிசன் டாரண்டோ துறைமுகத்தில் தரையிறங்கியது. எவ்வித எதிர்ப்புமின்றி எளிதாக டாரண்டோ நகரைக் கைப்பற்றின. இங்கும் ஜெர்மானியர்கள் தீவிரமாக எதிர்வினையாற்றாமல் பின்வாங்கிவிட்டனர். செப்டம்பர் 11ம் தேதிக்குள் பாரி மற்றும் பிரிண்டிசி துறைமுகங்களும் நேச நாட்டுப் படைகள் வசமாகின.

சலேர்னோ தரையிறக்கங்கள்

[தொகு]
சலேர்னோ தரையிறக்க வரைபடம்

செப்டம்பர் 9ம் தேதி சாலெர்னோவில் அமெரிக்க 5வது ஆர்மி மற்றும் பிரித்தானிய 10வது கோரின் தரையிறக்கம் ஆரம்பமானது. ஜெர்மானியர்கள் எச்சரிக்கையடையாதிருக்க தரையிறக்கத்துக்கு முன் வழக்கமாக நிகழும் வான்படை மற்றும் கடற்படை குண்டுவீச்சுகளை இம்முறை நேச நாட்டுப் படைகள் தவிர்த்துவிட்டன. எனினும் ஜெர்மானியர்கள் தரையிறக்கத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தனர். 56 கிமீ அகலமுள்ள கடற்கரைப் பகுதியில் மூன்று பெரும் பிரிவுகளாக நேச நாட்டுப் படைகள் தரையிறங்கின. கடுமையான ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்களுக்கிடையே முதல் நாள் இரவுக்குள் திட்டமிட்டபடி அனைத்து நேச நாட்டுப் படைப்பிரிவுகளும் தரையிறங்கிவிட்டன. அடுத்த மூன்று நாட்களுக்கு அவை சாலெர்னோ கடற்கரை முகப்பிலிருந்து உடைத்து வெளியேற முயற்சி செய்தன. இத்தரையிறக்கத்தை முறியடிக்க அருகிலுள்ள பகுதிகளிலிருந்து கூடுதல் ஜெர்மானியப் படைப்பிரிவுகள் சாலெர்னோவுக்கு வரத்தொடங்கின. நேச நாட்டுப் படைகள் கடல்வழியாக புதியப் படைப்பிரிவுகளை தரையிறக்கிய வண்ணம் இருந்தன. செப்டம்பர் 13ம் தேதி ஜெர்மானிய எதிர்த்தாக்குதல் ஆரம்பமானது.

ஜெர்மானிய எதிர்தாக்குதல்கள்

[தொகு]
செப்டம்பர் 11ம் தேதி சலேர்னோ கடற்கரை முகப்பு போர்நிலைகள்
செப்டம்பர் 11ம் தேதி சலேர்னோ கடற்கரை முகப்பு போர்நிலைகள்

ஜெர்மானியப் படைப்பிரிவுகள் நேச நாட்டு கடற்கரை முகப்புக்கு வடக்கிலும், நேச நாட்டுப் படைப்பிரிவுகளுக்கு இடையே இருந்த இடைவெளியிலும் ஒரே நேரத்தில் தாக்கின. அதிரடியான இத்தாக்குதலால், நேச நாட்டு அரண்நிலைகள் கைப்பற்றப்பட்டு, சாலெர்னோ கடற்கரை முகப்பு வீழும் நிலை உருவானது. நேச நாட்டுத் தளபதிகள் அவசரமாக புதிய வான்குடைப் படைப்பிரிவுகளை சாலெர்னோவுக்கு அனுப்பி வைத்தனர். புதிய படைப்பிரிவுகளின் துணையுடன் ஜெர்மானிய முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு கடற்கரையருகே நிறுத்தப்பட்டிருந்த நேச நாட்டுப் போர்க்கப்பல்களின் பீரங்கித் தாக்குதல்களும் பேருதவியாக இருந்தன. செப்டம்பர் 14ம் தேதி முதல் நேச நாட்டு வான்படை குண்டுவீசிகளும் தாக்குதலில் இணைந்து ஜெர்மானியப் படைநிலைகளின் மீது குண்டு வீசத் தொடங்கின. செப்டம்பர் 16ம் தேதி ஜெர்மானியர்கள் சலேர்னோ தரையிறக்கத்தை முறியடிக்க இறுதியாக ஒரு பெரும் தாக்குதலை மேற்கொண்டனர். அதுவும் தோற்கடிக்கப்பட்டது. சலேர்னோவில் ஜெர்மானியத் தாக்குதல் தொடங்கியபின்னர், கலபிரியாவில் தரையிறங்கியிருந்த பிரித்தானிய 8வது ஆர்மியினை வடக்கு திசையில் சலேர்னோ நோக்கி முன்னேறும் படி நேச நாட்டுத் தளபதிகள் ஆணையிட்டனர். இத்தாலியின் தெற்குக் கடற்கரையெங்கும் சிதறிக்கிடந்த தன் படைப்பிரிவுகளை அவசரமாக ஒருங்கிணைத்த மோண்ட்கோமரி சலேர்னோவிலிருந்த படைகளின் உதவிக்கு வடக்கு நோக்கி விரைந்தார்.

இறுதிகட்டம்

[தொகு]
சலேர்னோ அருகே ஜெர்மானிய பீரங்கிக் குழு

செப்டம்பர் 16ம் தேதி மோண்ட்கோமரியின் படைப்பிரிவுகள் சலேர்னோவை அடைந்து அங்கிருந்த நேச நாட்டுப் படைப்பிரிவுகளுடன் கை கோர்த்து விட்டன. புதிய படைப்பிரிவுகளின் வரவு, நேச நாட்டு வான்படைகளின் வான் ஆளுமை, போர்க்கப்பல்களின் பீரங்கி குண்டு வீச்சு ஆகியவற்றால், ஜெர்மானியர்கள் தங்களின் எதிர்த்தாக்குதலின் தோல்வி உறுதி என்பதை உணர்ந்தனர். செப்டம்பர் 18ம் தேதி அவர்கள் தங்கள் தாக்குதலைக் கைவிட்டு பின்வாங்கத் தொடங்கினர். சலேர்னோ கடற்கரை முகப்புக்கு இருந்த ஆபத்து விலகியவுடன், அமெரிக்க 5வது ஆர்மி நாபொலி துறைமுகத்தை நோக்கி முன்னேறத் தொடங்கியது. 22ம் தேதி அசேர்னோ நகரும் 28ம் தேதி அவெலீனோ நகரும் நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டன. அவை நாபொலி நகரை நெருங்கிய போது செப்டம்பர் 27ம் தேதி அந்நகர மக்களும் எதிர்ப்புப் படைகளும் ஜெர்மானியப் படைகளுக்கு எதிராக பெரும் கிளர்ச்சி ஒன்றைத் தொடங்கினர். அக்டோபர் 1ம் தேதி நேச நாட்டுப் படைப்பிரிவுகள் நாபொலி நகருக்குள் நுழைந்தன. அக்டோபர் 6ம் தேதி 5வது ஆர்மி வல்ட்டூர்னோ ஆற்றை அடைந்து விட்டது.

தாக்கம்

[தொகு]

இப்படையெடுப்பின் முடிவில் தெற்கு இத்தாலி முழுவதும் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தது. இதற்கு முன்பு நிகழ்ந்த சிசிலி படையெடுப்பின் போது இத்தாலியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சர்வாதிகாரி முசோலினி பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இத்தாலியப் படையெடுப்புத் தொடங்கி சில நாட்களுக்குள் இத்தாலியின் ஆட்சியாளர்கள் நேச நாடுகளிடம் சரணடைய முடிவெடுத்தனர். இதனால் அச்சுக் கூட்டணியிலிருந்து இத்தாலி விலகியது. இத்தாலியர்கள் அணி மாறிவிடுவார்கள் என்பதை எதிர்பார்த்திருந்த ஜெர்மானியர்கள், இத்தாலியப் படைவீரர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு, இத்தாலியினை ஆக்கிரமித்தனர். இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்த பால்கன் குடா மற்றும் கிரேக்கப் பகுதிகளும் ஜெர்மானியர்களால் கைப்பற்றப்பட்டன. முசோலினியின் தலைமையின் கீழ் இத்தாலிய நாடு கடந்த அரசொன்றும் நிறுவப்பட்டது. ஜெர்மானியின் கைப்பாவையாக செயல்பட்ட இது இத்தாலிய சமூக அரசு (Italian Social State) என்று அறியப்பட்டது.

எர்வின் ரோம்மல் இத்தாலியப் போர்முனையிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டு பிரான்சு போர்முனைக்கு அனுப்பபட்டார். கெஸ்சல்ரிங் இத்தாலிய முனையின் முதன்மை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் நேரடியாக நேச நாட்டுப் படைகளுடன் மோதாமல், பலமான அரண்கோடுகளை உருவாக்கி நேச நாட்டு முன்னேற்றத்தைத் தடை செய்யும் உத்தியினைப் பின்பற்றத் தொடங்கினார். இதனால் இத்தாலியப் போர்முனையில் தொடர் அரைப்பழிவுப் போர்நிலை உருவானது. வொல்டுர்னோ, பார்பரா, பெர்னார்ட் போன்ற பலமான அரண்கோடுகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கைப்பற்றி ரோம் நகரைப் பாதுகாத்த மிகப் பலமான குளிர்கால அரண்கோட்டினை அடைய நேச நாட்டுப் படைகளுக்கு ஜனவரி 1944 வரை பிடித்தது.

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]