உள்ளடக்கத்துக்குச் செல்

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேர்மன் சரணடைய அறிவித்த மாண்ட்ரீல் டெய்லி ஸ்டார் முன் பக்கம். மே 7, 1945

மே 7, 1945ல் நாசி ஜெர்மனி நேச நாடுகளிடம் சரணடைந்தது. இதன் மூலம் ஏழு ஆண்டுகளாக ஐரோப்பாவில் நடைபெற்று வந்த இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஏப்ரல் மாத இறுதியிலும் மே மாத முதல் வாரத்திலும் இந்த சரணடைவு தொடர்பாக நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் கால வரிசையில் கீழே தரப்பட்டுள்ளன.

முக்கிய நிகழ்வுகளின் காலவரிசை

[தொகு]
ஹிட்லரின் மரணத்தை அறிவிக்கிறது அமெரிக்க படை இதழான ஸ்டார்ஸ் அண்ட் ஸ்டிரைப்ஸ்
  • இத்தாலியிலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு: மே 2ம் தேதி இத்தாலியில் போரிட்டுக் கொண்டிருந்த ஜெர்மானியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தன. சரணடையக் கூடாதென்று ஜெர்மானியப் போர்த் தலைமையகத்திலிருந்து கண்டிப்பான உத்தரவிருந்தாலும் அப்படைகளின் தளபதிகள் இதற்கு நெடு நாட்கள் முன்னரே நேச நாட்டு தளபதிகளுடன் ரகசிய சரணடைவுப் பேச்சு வார்த்தைகளை தொடங்கி விட்டனர். மே 1ம் தேதி போர் நிறுத்தம் அறிவித்து விட்டதற்கு மறுநாள் சரணடைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • பெர்லின் நகரம் சரணடைந்தது: மே 2ம் தேதி பெர்லின் சண்டை முடிவடைந்தது. பெர்லின் பாதுகாப்புப் பகுதியில் எஞ்சியிருந்த ஜெர்மானியப் படைகளின் தளபதி ஹெல்மத் வீல்டிங் சோவியத் படைகளிடம் சரணடைந்தார். அதே நாள் ஆர்மி குரூப் விஸ்துலாவின் முதன்மை தளபதிகளும் சோவியத் படைகளிடம் சரணடைந்தனர்.
பெர்லின் வீழ்ந்தபோது ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த ஐரோப்பியப் பகுதிகள்
  • வடமேற்கு ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நெதர்லாந்திலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு: மே 4ம் தேதி ஃபீல்டு மார்ஷல் பெர்னார்ட் மோண்ட்கோமரியிடம் நெதர்லாந்து (ஃபிரிசியத் தீவுகளில் எஞ்சியிருந்தவை), டென்மார்க், ஹெலிகோலாந்து ஆகிய பகுதியிலிருந்த ஜெர்மானிய தரைப்படைகளும், கடற்படைக் கப்பல்களும் சரணடைந்தன. மே 5ம் தேதி போர் நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு தளங்களுக்குத் திரும்புமாறு அனைத்து ஜெர்மானிய யு-போட்டுகளுக்கு கார்ல் டோனிட்ஸ் உத்தரவிட்டார். அன்று 4.00 மணியளவில் நெதர்லாந்தில் இருந்த ஜெர்மானியப் படைகளின் தலைமைத் தளபதி யொஹான்னஸ் பிளாஸ்கோவிட்ஸ் சரணடைந்தார்.
  • பவாரியா மாகாணத்திலிருந்த ஜெர்மானியப் படைகளின் சரணடைவு: மே 4ம் தேதி 14.30 மணியளவில் ஜெர்மானியின் பவாரியா மாகாணத்திலிருந்த ஜெர்மானியப் படைகளின் தளபதி ஹெர்மான் ஃபோர்ட்ஷ் அமெரிக்கத் தளபதி ஜேகப் டெவர்சிடம் சரணடைந்தார்.
  • பிரெஸ்லாவு நகரம் சரணடைந்தது: மே 6ம் தேதி ஜெர்மனியின் பலம் வாய்ந்த கோட்டை நகரான பிரெஸ்லாவு நகரம் சோவியத் படைகளிடம் சரணடைந்தது.
ரெய்ம்சில் கையெழுத்தாகிய சரணடைவு ஒப்பந்தம்
  • ஜெர்மனியின் சரணடைவு: மே 6ம் தேதி மேற்கத்திய நேச நாடுகளிடம் சரணடைவுப் பேச்சு வார்த்தைகளை நடத்த டோனிட்ஸ் ஜெனரல் யோடிலை அனுப்பினார். அவர்கள் முதலில் மேற்கத்திய நேச நாடுகளிடம் மட்டும் தான் ஜெர்மனி சரணடையும் என்ற நிலையைக் கொண்டிருந்தனர். சோவியத் படைகளிடம் சிக்கும் படைகள் மிகக் கடுமையாக நடத்தப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். மேலும், சரணடைவுப் பேச்சு வார்த்தைகளை இழுத்தடித்தால், ஜெர்மானிய வீரர்கள் மேற்கத்திய நேசநாட்டுப் படைகளிடம் சரணடைய வாய்ப்புக் கிட்டும் என்றும் எண்ணினர். ஆனால் முன்னரே யால்டா மாநாட்டில் ஜெர்மனி அனைத்து நேச நாடுகளிடமும் சமமாக சரணடைய வேண்டுமென்று சோவியத் யூனியனும் மேற்கத்திய நேச நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்தன. இதனால் ஐரோப்பாவில் நேசநாட்டுப் படைகளின் தலைமைத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் ஜெர்மனியின் தனிச்சரணடைவை ஏற்க மறுத்து விட்டார். பேச்சு வார்த்தகளை வேண்டுமென்று இழுத்தடித்தால், நேசநாட்டுப் படைகள் ஜெர்மானிய வீரர்களின் சரணை ஏற்க மறுத்துவிடும் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
வேறு வழியின்றி மே 7ம் தேதி அதிகாலை 2.41 மணிக்கு டோனிட்சின் உத்தரவின் பேரில் யோட்ல் நிபந்தனையற்ற சரணடைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சி பிரான்சின் ரெய்ம்சு நகரில் அமைந்திருந்த நேச நாட்டு ஐரோப்பிய போர்த் தளபதியின் தலைமையகத்தில் நடைபெற்றது. மறுநாள் இதே போன்று மற்றொரு சரணடைவு நிகழ்ச்சி பெர்லின் நகரில் நடைபெற்றது. ஜெர்மானியத் தளபதி வில்லெம் கெய்ட்டெல் சோவியத் தளபதி மார்ஷல் கிரகோரி சூக்கோவின் முன்னிலையில் சரணடைவு ஒப்பந்ததித்தில் கையெழுத்திட்டார். போர் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அனைத்து ஜெர்மானியப் படைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஐரோப்பாவில் வெற்றி நாள் வாழ்த்துச் செய்தி
  • ஐரோப்பாவில் வெற்றி: ஜெர்மனி சரணடைந்த செய்தி பரவி அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் மே 8ம் தேதி கொண்டாட்டங்கள் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் ”வி. ஈ தினம்“ (VE Day - Victory in Europe Day) என்று கொண்டாடப்படுகிறது. சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மே 9 ம் தேதி வி. ஈ தினம் என்று கொண்டாடப்படுகிறது. (கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள கால வித்தியாசக் காரணத்தால்)
  • போர் நிறுத்தம் ஐரோப்பாவில் எஞ்சியிருந்த ஜெர்மானியப் படைகளில் பெரும்பாலானவை தங்கள் போர்த் தலைமையகத்தின் போர் நிறுத்த ஒப்பந்ததை ஏற்றுக் கொண்டன. ஆனால சில படைப்பிரிவுகள் மட்டும் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. ஆர்மி குரூப் மத்தியின் தளபதி ஃபெர்டினான்ட் ஷோர்னர் இந்த சரணடைவு உத்தரவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் (ஹிடலரின் உயிலின்படி ஜெர்மானியப் படைகளின் முதன்மைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார் ஷோர்னர்). இதனால் சோவியத் படைகள் அவரது படைப்பிரிவை அழிக்க பிராக் தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கின. இதனால் அச்சம் கொண்டு அவர் ஆஸ்திரியா நாட்டுக்கு தப்பிவிட்டார். மே 11ம் தேதி ஆர்மி குரூப் மத்தி சோவியத் படைகளிடம் சரணடைந்தது.
எஞ்சியிருந்த படைப்பிரிவுகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தனித்தனியே சரணடைந்தன. மே 8ம் தேதி, டான்சிக் நகரம், சென் நசேர் துறைமுகம், கிரேக்கத் தீவுகள், விஸ்துலா வடிநிலம் ஆகிய பகுதிகளிலிருந்தவை சரணடைந்தன. மே 13ம் தேதி சோவியத் படைகள் ஐரோப்பாவில் தங்கள் போர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டன. மே 16ம் தேதி கால்வாய் தீவுகளில் ஒன்றான அல்டெர்னியில் இருந்த ஜெர்மானியப் படைகள் சரணடைந்தன. மே 20ம் தேதி ஐரோப்பாவில் கடைசி சண்டையும் முடிவுக்கு வந்தது. நெதர்லாந்தின் தீவுகளில் ஒன்றான டெக்சல் தீவில் சியார்சியாவின் போர்க்கைதிகளுக்கும் ஜெர்மானிய காவல்ப்படைகளுக்கும் ஏப்ரல் 5ம் தேதி முதல் நடைபெற்றுவந்த சண்டை முடிவுக்கு வந்தது. இத்துடன் ஐரோப்பாவில் அமைதி திரும்பியது.
  • டோனிட்சின் அரசு கலைப்பு: ஜெர்மனியின் படைகள் மே 8ம் தேதி அதிகாரப்பூர்வமாக சரணடைந்திருந்தாலும் அதன் குடிசார் அரசாங்கம் சரணடையாமல் இருந்தது. டோனிட்ஸ் தலைமையிலான இந்த அரசு ஃபிளன்ஸ்பெர்க் அரசு என்றழைக்கப்பட்டது. மே 8ம் தேதிக்குப் பின் இரு வாரங்களுக்கு இதனை நேசநாட்டுப் படைகள் கண்டுகொள்ளவில்லை. படைகள் சரணடைந்து, அரசு சரணடையவில்லையெனில் பிற்காலத்தில் சட்ட சிக்கல்கள் உருவாகும் என்பதை நேசநாட்டுப் போர்த் தலைமையகம் உணர்ந்தது. 1918ல் முதல் உலகப் போரில் இதே போன்று ஒரு நிலை உருவானதை பின்னாளில் ஹிட்லர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் (படைகள் துரோகம் செய்துவிட்டன, அரசு சரணடையவே இல்லையென்ற பிம்பத்தை உருவாக்கி). அதுபோல பிற்காலத்தில் மீண்டுமொரு நிலை உருவாகக் கூடாது என்று ஐசனாவர் கருதினார். இதனால் மே 23ம் தேதி டோனிட்சின் ஃபிளன்ஸ்பெர்க் அரசு அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டு அதன் அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெர்மனியின் நான்கு நேசநாட்டு ஆக்கிரமிப்புப் பகுதிகள்
  • நேச நாட்டு வெற்றிப் பிரகடனம்: ஜூன் 5ம் தேதி அமெரிக்கா, சோவியத் யூனியன், ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகிய நான்கு நாடுகளும் ”ஜெர்மனியின் தோல்வி மற்றும் நேச நாடுகள் ஜெர்மனி மீதான முழுப்பொறுப்பேற்பு”த் தீர்மானத்தில் கையெழுத்திட்டன. இத்துடன் அதிகாரகபூர்வமாக நேச நாட்டு வெற்றி சாற்றப் பட்டது.
  • போட்ஸ்டாம் ஒப்பந்தம்: ஆகஸ்ட் 2ம் தேதி போட்ஸ்டாம் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. மேற்குறிப்பிட்ட நான்கு நேசநாடுகளும் அதில் கையெழுத்திட்டன. இதன்படி, ஜெர்மனியின் பகுதிகள் இவற்றுள் பிரித்துக் கொள்ளப்பட்டன. நேசநாட்டு ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்த ஜெர்மானியக் குடிமக்களின் எதிர்காலம், படைகளகற்றம் (demilitirisation), நாசிசம் களைதல் (denazification), ஜெர்மனி தரவேண்டிய போர் நஷ்ட ஈடு (war reparations) போன்ற விஷயங்கள் இதில் முடிவாகின. நேச நாட்டுக் கட்டுப்பாட்டுக் குழுமம் (Allied Control Council) உருவாக்கப்பட்டு ஜெர்மனி நான்கு ஆக்கிரமிப்புப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 30 முதல் ஓவ்வொரு ஆக்கிரமிப்புப் பகுதியும் ஒரு நேசநாட்டின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
  • மேற்கு கிழக்கு ஜெர்மனிகள் உருவாக்கம் மேற்கத்திய நேசநாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு செப்டம்பர் 20, 1949ல் மேற்கு ஜெர்மனி குடியரசு உருவானது. அதே போல சோவியத் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் கிழக்கு ஜெர்மனியாக அக்டோபர் 7, 1949ல் மாறின.
  • அதிகாரப்பூர்வ போர் நிறுத்தம்: போர் 1945ல் முடிந்திருந்தாலும் சட்டபூர்வமாக அமெரிக்காவும், சோவியத் யூனியனும் போர் முடிந்ததாக அறிவிக்கவில்லை. ஜெர்மனியில் தங்களது படைகளை நிறுத்துவதற்கு பன்னாட்டு சட்டரீதியாக அங்கீகாரம் தேவையிருந்ததால், மேலும் பல ஆண்டுகள் ஜெர்மனியுடனான போர் நிலை தொடர்கின்ற நிலையை எடுத்திருந்தன. 1951ல் அமெரிக்காவும் பிற மேற்கத்திய நேசநாடுகளின் அரசுகளும் சட்ட ரீதியாக போர் நிலை முடிந்ததாக அறிவித்தன. 1955ல் சோவியத் யூனியனும் இதனைச் செய்தது.
  • இறுதி ஒப்பந்தம் 1991ல் மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மனிகள் மீண்டும் ஒருங்கிணைந்த பிறகு ஒருங்கிணைந்த ஜெர்மனிக்கான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. மார்ச் 15, 1991ல் அமலுக்கு வந்த இவ்வொப்பந்ததில், ஜெர்மனியின் பகுதிகள் மீது தாங்கள் நாற்பதாண்டுகளுக்கு மேலாகக் கோரி வந்த உரிமைகளை விட்டுத் தருவதாக நேசநாடுகள் அறிவித்தன. இதன் மூலம் ஒருங்கிணைந்த ஜெர்மனி முழு இறையாண்மை பெற்றது.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Daily Telegraph Story of the War, (January 1st to October 7th 1945) page 153
  2. 2.0 2.1 The Times, 1 May 1945, page 4
  3. Biddiscombe, Alexander Perry, (1998). Werwolf!: The History of the National Socialist Guerrilla Movement, 1944-1946. University of Toronto Press. p. 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8020-0862-3