உள்ளடக்கத்துக்குச் செல்

போனிப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போலிப் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
போலிப் போரின் போது பிரித்தானிய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சரகம் வெளியிட்ட சுவரொட்டிகளுள் ஒன்று. நாசி ஜெர்மனி நச்சுப்புகைத் தாக்குதல் நடத்தக் கூடுமென மக்களை எச்சரிக்கின்றது

போனிப் போர் (Phoney War) என்பது இரண்டாம் உலகப் போரின் ஒரு கட்டத்தைக் குறிக்கும். செப்டம்பர் 1939 முதல் மே 1940 வரையுள்ள காலகட்டத்தில் ஐரோப்பா கண்டத்தில் நடந்த நிகழ்வுகள் போலிப் போர் என்றழைக்கப்படுகின்றன. நேச நாடுகளும் அச்சு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக போர் பிரகடனம் செய்திருந்தாலும் ராணுவ ரீதியாக எந்த முக்கிய நடவடிக்கையையும் இக்காலகட்டத்தில் ஐரோப்பாவின் மைய நிலப்பரப்பில் (காண்டினன்டல் ஐரோப்பா) மேற்கொள்ளவில்லை.

பின்புலம்

[தொகு]

1930களின் இறுதியில் நாசி ஜெர்மனிக்கும் நேசநாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்சிற்கும் இடையே போர் மூளுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகியது. நேசநாட்டுக் கூட்டணியில் ஜெர்மனியின் கிழக்கெல்லையில் அமைந்திருந்த போலந்து நாடும் இடம் பெற்றிருந்தது. ஜெர்மனி போலந்தைத் தாக்கினால் பிரிட்டனும், பிரான்சும் அதன் உதவிக்கு வர வேண்டும் என்று அவை ஒப்பந்தம் செய்திருந்தன. செப்டம்பர் 1930ல் ஹிட்லரின் ஆணைப்படி ஜெர்மானியப் படைகள் போலந்தைத் தாக்கின. முன் செய்திருந்தத ஒப்பந்ததின்படி பிரான்சும், பிரிட்டனும் ஜெர்ம்னியின் மீது போர் பிரகடனம் செய்தன. ஆனால் ஜெர்மனியைத் தாக்க எந்தவொரு பெருமுயற்சியும் மேற்கொள்ளவில்லை.

ஐரோப்பாவில் மந்த நிலை

[தொகு]
மேற்குப் போர்முனையில் ஓய்வாக அமர்ந்திருக்கும் பிரிட்டானிய மற்றும் பிரெஞ்சு விமானப்படையினர்

ஜெர்மானியப் படைகளின் பெரும்பகுதி கிழக்கில் போலந்தில் போரிட்டுக் கொண்டிருந்த போது அந்நாட்டின் மேற்கெல்லையை குறைந்த அளவு படைகளே பாதுகாத்து வந்தன. பிரான்சு அரைமனதாக ஜெர்மனியின் மேற்கு எல்லையில் ஒரு தாக்குதல் நிகழ்த்தியது. சார் படையெடுப்பு என்றழைக்கப்படும் இத்தாக்குதலை பிரான்சு சீக்கிரம் நிறுத்திக் கொண்டதால் ஜெர்மனிக்கு இழப்பேதும் ஏற்படவில்லை. ஒரே மாதத்தில் ஜெர்மானியப் படைகள் போலந்தை வீழ்த்தின. அக்டோபர் 6ம் தேதி போலந்து ஜெர்மனியாலும் சோவியத் யூனியனாலும் முழுதும் ஆக்கிரமிக்கப் பட்டது. இதன் பின்னர் மேற்குப் போர்முனையில் ஏழு மாதங்கள் இழுபறிநிலை நீடித்தது. நேசநாடுகள் தங்கள் போர் ஆயத்தங்களை விரிவு படுத்தின. பிரிட்டன் அமெரிக்காவுடன் கடன்-குத்தகை ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் அமெரிக்காவிலிருந்து பெருமளவில் தளவாடங்களை வாங்கத் தொடங்கியது. அமெரிக்காவிலிருந்து இந்த தளவாடங்களை ஏற்றி வரும் கப்பல் கூட்டங்களைத் தாக்கி மூழ்கடிக்க ஜெர்மன் கடற்படை முயன்றதால் அட்லாண்டிக் சண்டை ஆரம்பமாகியது. ஆனால் ஐரோப்பிய மேற்குப் போர்முனையில் இரு தரப்பினருக்கும் அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் நிகழ்ந்தாலும் பெரிய அளவில் ஒன்றும் நடக்கவில்லை.

ஐரோப்பாவின் மையப் பிரதேசத்தில் இழுபறி நிலை நீடித்தாலும், பிற இடங்களில் போர்கள் மூண்டு கொண்டிருந்தன. நவம்பர் 30ம் நாள் சோவியத் யூனியன் ஃபின்லாந்தைத் தாக்கியது. இதனால் குளிர்காலப் போர் ஆரம்பமாகியது. மார்ச் 20, 1940 வரை நடைபெற்ற இப்போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்று பின்லாந்தின் பல பகுதிகள் அதன் வசமாகின. இப்போரில் பின்லாந்துக்கு உதவலாமா வேண்டாமா என்று நேசநாட்டுத் தலைவர்களால் தெளிவான முடிவெடுக்க முடியவில்லை. இது முடிந்து சில வாரங்களில் ஜெர்மனி டென்மார்க் மற்றும் நார்வே நாடுகளைத் தாக்கியது. ஏப்ரல் 9, 1940ல் தொடங்கிய ஜெர்மனியின் நார்வே படையெடுப்பை எதிர்கொள்ள நேசநாட்டுப் படைகள் நார்வேக்கு சென்றன. ஆனால் அவற்றால் ஜெர்மானியப் படைகளை முறியடிக்க இயலவில்லை. இந்தச் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே மே 10 அன்று ஜெர்மனி மேற்கு போர்முனையில் பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் பிரான்சின் மீது தாக்குதல் தொடுத்தது. ஜூன் மாத இறுதிக்குள் மேற்குறிப்பிட்ட அனைத்து நாடுகளும் நாசி போர்எந்திரத்தின் வலிமையைச் சமாளிக்க முடியாமல் சரணடைந்தன.

பெயர் விளக்கம்

[தொகு]
பிரான்சில் ஒரு சிறு கிராமத்திலுள்ள பண்ணையொன்றில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு கவச வண்டி.

இவ்வாறு செப்டம்பர் 1939 முதல் மே 1940 வரை ஐரோப்பாவில் பல இடங்களில் போர்கள் நடந்து கொண்டிருந்தாலும், முக்கியமான மையப் பிரதேசங்களில் இரு தரப்புகளும் பெரிய சண்டைகளில் ஈடுபடவில்லை. இதனால் அனைத்து நாடுகளின் ஊடகங்களும் இந்த மந்தநிலையைக் கேலி செய்ய பல பெயர்களை இதற்குச் சூட்டின. “போலிப் போர்” என்ற பெயரைத் தவிர ”மங்கியஒளிப் போர்” (சர்ச்சில் வைத்த பெயர்), “அமர்ந்த நிலைப் போர்” (சிட்ஸ்கிரெய்க், ஜெர்மானிய ஊடகங்கள் வைத்த பெயர்), ”போரடிக்கும் போர்” (போயர் போரை வைத்து கேலி செய்ய), “விசித்திரப் போர்” (போலந்திலும் பிரான்சிலும் வைத்த பெயர்) என பல்வேறு பெயர்கள் இக்கட்டத்துக்கு வழங்கப்பட்டன.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
போலிப்போர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போனிப்_போர்&oldid=3925473" இலிருந்து மீள்விக்கப்பட்டது