மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)
மேற்குப் போர்முனை | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் பகுதி | |||||||||
ஒமாகா கடற்கரையில் தரையிறங்கும் அமெரிக்கப் படைகள் (1944) |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா பிரான்சு கனடா சுதந்திர போலந்தியப் படைகள் நெதர்லாந்து பெல்ஜியம் நோர்வே டென்மார்க் செக்கஸ்லொவாக்கியா ஆத்திரேலியா நியூசிலாந்து லக்சம்பர்க் | ஜெர்மனி இத்தாலி |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
1939–1940 மாரீஸ் கேமெலின் மாக்சீம் வெய்காண்ட் (கைதி) கோர்ட் பிரபு (பிரிட்டானிய பயணப்படை) ஹென்ரி விங்கெல்மான் மூன்றாம் லியபோல்டு (கைதி) ஓட்டோ ரூக் (கைதி) விளாடிஸ்லா சிகோர்ஸ்கி 1944–1945 டுவைட் டி. ஐசனாவர், (ஐரோப்பிய முதன்மைத் தளபதி) பெர்னார்ட் மோண்ட்கோமரி (21வது ஆர்மி கூரூப்) ஒமார் பிராட்லி (12வது ஆர்மி கூரூப்) ஜேக்கப் டேவர்ஸ் (6வது ஆர்மி கூரூப்) | 1939–1940 கெர்ட் வோன் ரன்ஸ்டெட் (ஆர்மி கூரூப் ஏ) ஃபெடோர் வோன் போக் (ஆர்மி கூரூப் பி) வில்லெம் வோன் லீப் (ஆர்மி கூரூப் சி) இரண்டாம் உம்பேர்த்தொ (ஆர்மி குரூப் மேற்கு) 1944–1945 அடால்ஃப் ஹிட்லர் எர்வின் ரோம்மல் (காயமடைந்தார்)]] |
||||||||
பலம் | |||||||||
1939–1940
1944–1945
| 1939–1940
1944–1945
|
இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய களத்தின் மேற்குப் போர்முனை (Western Front in World War II) டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், பிரிட்டன், பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் நாசி ஜெர்மனியின் மேற்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. இங்கு இரு கட்டங்களாகப் பெரும் போர் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 1939-40ல் ஜெர்மானியப் படைகள் பிரான்சு, பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து ஆகியவற்றைக் கைப்பற்றின. இக்கட்டம் பிரிட்டனுடனான வான்படை சண்டையில் ஜெர்மானியத் தோல்வியுடன் முடிவடைந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்போர்முனையில் பெரிய மோதல்கள் எதுவும் நிகழ வில்லை. இரண்டாம் கட்டம் ஜூன் 1944ல் பிரான்சு மீதான நேச நாட்டு படைகளின் கடல்வழிப் படையெடுப்புடன் தொடங்கியது. மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் முற்றுப்பெற்றது.
1939–40: அச்சு நாடுகளின் வெற்றிகள்
[தொகு]போலிப் போர்
[தொகு]1930களின் இறுதியில் நாசி ஜெர்மனிக்கும் நேசநாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்சிற்கும் இடையே போர் மூளுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகியது. நேசநாட்டுக் கூட்டணியில் ஜெர்மனியின் கிழக்கெல்லையில் அமைந்திருந்த போலந்து நாடும் இடம் பெற்றிருந்தது. ஜெர்மனி போலந்தைத் தாக்கினால் பிரிட்டனும், பிரான்சும் அதன் உதவிக்கு வர வேண்டும் என்று அவை ஒப்பந்தம் செய்திருந்தன. செப்டம்பர் 1930ல் ஹிட்லரின் ஆணைப்படி ஜெர்மானியப் படைகள் போலந்தைத் தாக்கின. முன் செய்திருந்த ஒப்பந்ததின்படி பிரான்சும், பிரிட்டனும் ஜெர்ம்னியின் மீது போர் சாற்றின. ஆனால் ஜெர்மனியைத் தாக்க எந்தவொரு பெருமுயற்சியும் மேற்கொள்ளவில்லை.
ஜெர்மானியப் படைகளின் பெரும்பகுதி கிழக்கில் போலந்தில் போரிட்டுக் கொண்டிருந்த போது அந்நாட்டின் மேற்கெல்லையை குறைந்த அளவு படைகளே பாதுகாத்து வந்தன. பிரான்சு அரைமனதாக ஜெர்மனியின் மேற்கு எல்லையில் ஒரு தாக்குதல் நிகழ்த்தியது. சார் படையெடுப்பு என்றழைக்கப்படும் இத்தாக்குதலை பிரான்சு சீக்கிரம் நிறுத்திக் கொண்டதால் ஜெர்மனிக்கு இழப்பேதும் ஏற்படவில்லை. இதன் பின்னர் மேற்குப் போர்முனையில் ஏழு மாதங்கள் இழுபறிநிலை நீடித்தது. நேசநாடுகள் தங்கள் போர் ஆயத்தங்களை விரிவு படுத்தின. பிரிட்டன் அமெரிக்காவுடன் கடன்-குத்தகை ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் அமெரிக்காவிலிருந்து பெருமளவில் தளவாடங்களை வாங்கத் தொடங்கியது. ஐரோப்பாவின் மையப் பிரதேசத்தில் இழுபறி நிலை நீடித்தாலும், பிற இடங்களில் போர்கள் மூண்டு கொண்டிருந்தன. செப்டம்பர் 1939 முதல் மே 1940 வரை நீடித்த இந்த மந்த நிலை “போலிப் போர்” என்று வர்ணிக்கப்படுகிறது.
நார்வே மற்றும் டென்மார்க்
[தொகு]மேற்கு ஐரோப்பாவில் போலிப் போரின் மந்தநிலை நிலவி வந்த போது இரு தரப்பினரும் வடக்கு ஐரோப்பாவில் ஸ்கான்டினாவியப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றன. நார்வே நாட்டிலுள்ள இயற்கை வளங்கள் ஜெர்மானியர் கையில் சிக்காமல் இருக்க அந்நாட்டிற்கு படைகளை அனுப்ப வேண்டுமென்று நேச நாடுகள் திட்டமிட்டன. ஆனால் அவற்றை முந்திக் கொண்டு நாசி ஜெர்மனி வெசெரியூபங் நடவடிக்கையின் மூலம் டென்மார்க் மற்றும் நார்வே நாடுகளின் மீது ஏப்ரல் 1940ல் படையெடுத்தது. ஆறு மணி நேரத் தாக்குதலுக்குப் பின்னர் டென்மார்க் சரணடைந்தது. ஆனால் ஜூன் மாதம் வரை நார்வேயில் இரு தரப்பினரும் சண்டை நீடித்தது. பிரான்சு முதலான பிற மேற்கு ஐரோப்பிய நாடுகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரே நார்வே சரணடைந்தது.
பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க்
[தொகு]மே 10, 1940ல் போலிப் போர் முடிவடைந்து ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் ஆரம்பமாகியது. இத்தாக்குதலுக்கான ஜெர்மானிய மேல்நிலை உத்தி ”மஞ்சள் திட்டம்” (ஜெர்மன்:Fall Gelb) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. அதன்படி ஜெர்மானியப் படைகள் மேற்கு எல்லையில் இரு இடங்களில் தாக்கின. பெல்ஜியத்தின் மீதான ஜெர்மானியத் தாக்குதலின் நோக்கம் நேச நாட்டுப் படைகளைத் திசை திருப்புவதாகும். பெல்ஜியத்தைப் பாதுகாக்க நேச நாட்டு முதன்மைப் படைகள் விரைந்து வந்தபின், அவற்றின் பின் பகுதியில் ஆர்டென் காடுகள் வழியாக ஜெர்மனியின் முக்கிய தாக்குதல் நடைபெற்றது. பெல்ஜியத்தைத் தாக்குவதோடு லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தையும் ஜெர்மானியப் படைகள் தாக்கின. பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க்கை தரைப்படைத் தாக்குதல்மூலம் கைப்பற்றினாலும், நெதர்லாந்தைத் தாக்க வான்குடை வீரரகளை பெருமளவில் ஜெர்மானியத் தளபதிகள் பயன்படுத்தினர். தாக்குதல் தொடங்கிய அன்றே லக்சம்பர்க் முழுவதும் ஜெர்மானிய வசமானது. அடுத்து மே 14ம் தேதி டச்சு அரசாங்கமும் 28ம் தேதி பெல்ஜிய அரசும் சரணடைந்தன.
இத்தாக்குதலில் ஜெர்மானிய திசை திருப்பு உத்தி வெற்றியடைந்து, பிரான்சிலிருந்து பெல்ஜியத்துக்கு விரைந்த நேச நாட்டு முதன்மைப் படைகளின் பெரும் பகுதி ஜெர்மானியக் கிடுக்கிப் பிடிக்குள் சிக்கிக் கொண்டது. ஜெர்மானியக் கிடுக்கியின் இரு கரங்களும் வேகமாக முன்னேறி மே மாத இறுதிக்குள் ஆங்கிலக் கால்வாயை அடைந்தன. ஜெர்மானியப் படைவளையம் வேகமாக இறுகினாலும் சிக்கிய நேசநாட்டுப் படைகளின் பெரும்பகுதி டன்கிர்க் துறைமுகம் வழியாக இங்கிலாந்துக்கு தப்பின. இத்துடன் (ஜூன் 4) பிரான்சு சண்டையின் முதல் கட்டம் பெரும் ஜெர்மானிய வெற்றியில் முடிவடைந்தது. அடுத்த கட்டமாகப் பிரான்சின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றும் ஜெர்மானிய நடவடிக்கை (சிவப்புத் திட்டம் - Fall Gelb). ஜூன் 5ம் தேதி தொடங்கியது. பிரான்சின் மையப்பகுதி மீது ஜெர்மானியப் படையெடுப்பு ஆரம்பமாகியது. ஜூன் 10ம் தேதி இத்தாலியும் பிரான்சைத் தாக்கியது. இருமுனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பிரான்சின் படைகள் பின்வாங்கத் தொடங்கின. ஜூன் 14ம் தேதி பிரான்சின் தலைநகர் பாரிஸ் ஜெர்மானியர் வசமானது. ஜூன் 22ல் போர் நிறுத்தம் கையெழுத்தாகி பிரான்சு சரணடைந்தது. ஒன்றரை மாத காலத்துக்குள் நான்கு நாடுகளை ஜெர்மனி வீழ்த்தி வெற்றி கண்டது.
மேற்கு ஐரோப்பா முழுவதையும் வென்ற ஜெர்மானியப் படைகள் அடுத்து பிரிட்டனைக் கைப்பற்ற திட்டமிட்டன. ஆனால் பிரிட்டானிய வான்பகுதியில் நடந்த வான்சண்டையில் ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே பிரிட்டானிய வான்படையிடம் தோற்றதால், அத்திட்டம் கைவிடப்பட்டது.
1941–43: இடைவெளி
[தொகு]1941ல் ஜெர்மனியின் பிரிட்டானியப் படையெடுப்புத் திட்டம் கைவிடப்பட்டவுடன் மேற்குப் போர்முனையில் மந்த நிலை தொடங்கியது. ஜெர்மனியின் கவனம் கிழக்கில் சோவியத் ஒன்றியத்தின் திசையில் திரும்பியது. மேலும் ஜெர்மானியப் படைகள் வடக்கு ஆப்பிரிக்கா மீது படையெடுத்தன. பிரிட்டன், பிரான்சில் ஏற்பட்ட தோல்விகளால் சிதறியிருந்த தன் படைகளைச் சீரமைக்கும் பணியினைத் தொடங்கியது. நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த ஐரோப்பியப் பகுதிகள்மீது அவ்வப்போது கமாண்டோ தாக்குதல்களை மட்டும் நடத்தி வந்தது. தரையில் அமைதி நிலவினாலும் வான்வழியாக ஜெர்மனி மீது நேச நாட்டு வான்படைகள் தொடர்ந்து குண்டு வீசித் தாக்கிவந்தன. அட்லாண்டிக் பெருங்கடலிலும் இரு தரப்பு கடற்படைகளுக்கும் இடையெ அட்லாண்டிக் சண்டை நடந்து வந்தது.
ஆனால் மீண்டும் ஆங்கிலக் கால்வாய் வழியாக மேற்கு ஐரோப்பா மீது படையெடுக்க வேண்டுமென்று நேச நாட்டுத் தலைவர்கள் முடிவு செய்தனர். அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினர். இந்தப் படையெடுப்புக்கு ஒரு ஒத்திகையாக டியப் திடீர்த்தாக்குதலை மேற்கொண்டனர். இது தோல்வியில் முடிவடைந்தாலும் பின்னாளில் நடக்கவிருந்த நார்மாண்டிப் படையெடுப்புக்கு படிப்பினையாக அமைந்தது. மேற்கிலிருந்து படையெடுப்பு நிகழக்கூடும் என்பதை உணர்ந்த ஜெர்மானியர்கள் மேற்கு ஐரோப்பிய கடற்கரையெங்கும் அரண்நிலைகளை உருவாக்கத் தொடங்கினர்.
1944–45: இரண்டாவது முனை
[தொகு]ஓவர்லார்ட்
[தொகு]நான்கு ஆண்டுகளாக நாசி ஜெர்மனியின் பிடியிலிருந்த மேற்கு ஐரோப்பாவை மீட்பதற்கு 1944ல் நேச நாடுகள் அதன்மீது படையெடுக்கத் திட்டமிட்டன. இது உலக வரலாற்றிலேயே நிகழ்ந்த மிகப்பெரும் நீர்நிலப் படையெடுப்பாகும். இதில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நேச நாடுகளின் படைகளுடன், ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து, நார்வே, போலந்து, லக்சம்பர்க், செக்கஸ்லோவாக்கியா போன்ற நாடுகளின் நாடு கடந்த அரசுப் படைகளும் (விடுதலைப் படைகள்) கலந்து கொண்டன. படையெடுப்பு நிகழும் இடம், நேரம் ஆகியவற்றை ஜெர்மானியர்கள் கணிக்காமல் இருக்க பல திசை திருப்பும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஜெர்மானியப் போர்த் தலைமையகத்துள் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டாலும், உத்தி முடிவுகளில் இட்லரின் தலையீட்டாலும் ஜெர்மானியர்களால் படையெடுப்பைத் தடுக்க சரியான முயற்சிகளை மேற்கொள்ள இயலவில்லை.
ஜூல் 6, 1944ல் இப்படையெடுப்பு தொடங்கியது. ஒன்றரை மாத கால கடும் சண்டைக்குப் பின்னர் நார்மாண்டி கடற்கரை முழுவதும் நேச நாட்டுப் படைகள் வசமாகின. இச்சண்டைகளில் அமெரிக்க படைகளுக்கான இலக்குப் பகுதிகள் எளிதில் கைப்பற்றப்பட்டுவிட்டன. ஆனால் பிரிட்டானிய/கனடிய இலக்குப் பகுதியான கான் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் கடுமையான சண்டை நிகழ்ந்தது. ஜூலை இறுதியில் அமெரிக்கப்படைகள் நார்மாண்டியைச் சுற்றியிருந்த ஜெர்மானியப் படை வளையத்தை உடைத்து பிரான்சின் உட்பகுதியை நோக்கி முன்னேறத் தொடங்கின. இதனைத் தடுக்க ஜெர்மானியர்கள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதல்கள் தோல்வியடைந்தன. செய்ன் ஆற்றுக்கு மேற்கிலிருந்த ஜெர்மானியப் படைகளில் பெரும்பகுதி ஃபலேசு இடைப்பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட்டது. ஆகஸ்ட் 25ல் பிரான்சுத் தலைநகர் பாரிசு விடுவிக்கப்பட்டது. மேற்கு பிரான்சில் எஞ்சிய ஜெர்மானியப் படைகள் செய்ன் ஆற்றைக் கடந்து பின்வாங்கின.
பாரிசிலிருந்து ரைன் வரை
[தொகு]கால்வாய்க் கடற்கரை
[தொகு]பாரிசு வீழ்ந்த பின்னர், அடுத்து பிரான்சின் பிற பகுதிகளை விடுவித்து ஜெர்மனியின் எல்லைக்கு முன்னேற நெச நாட்டுப் படைகள் திட்டமிட்டன. இது பல கட்டங்களாக நடந்தேறியது. இதில் ஒரு பகுதி கால்வாய்க் கடற்கரையை விடுவித்தல். கனடிய 1வது ஆர்மிக்கு ஆங்கிலக் கால்வாயோரமாக இருந்த துறைமுகங்களைக் கைப்பற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இத்துறைமுகங்கள் பிரான்சில் தரையிறங்கியிருந்த நேசநாட்டுப் படைகளுக்குத் தேவையான தளவாடங்களை இறக்குமதி செய்யத் தேவைப்பட்டன. இப்பகுதியிலிருந்த ஜெர்மானிய பீரங்கிக் குழுமங்கள் கால்வாயில் செல்லும் நேசநாட்டுக் கப்பல்களையும், இங்கிலாந்தின் டோவர் துறைமுகத்தையும் தாக்கி வந்தன. மேலும் இப்பகுதியிலிருந்த ஜெர்மானிய வி-1 எறிகணைத் தளங்கள் இங்கிலாந்து நகரங்கள்மீது எறிகணைத் தாக்குதல் நடத்தி வந்தன. இக்காரணங்களால் ஆங்கிலக் கால்வாய்க் கடற்கரையை ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது அவசியமானது. ஆகஸ்ட் 23ம் தேதி இந்த நடவடிக்கை தொடங்கியது. துவக்கத்தில் ஜெர்மானியப் படைகள் எதிர்க்காமல் பின்வாங்கின. கால்வாய்க் கரையோரமாக இருந்த துறைமுகங்கள் அனைத்தையும் “கோட்டைகள்” என ஹிட்லர் அறிவித்தார். அவற்றில் உள்ள ஜெர்மானியப் படைகள் சரணடையவோ காலி செய்யவோ கூடாதென்று உத்தரவிட்டார். இதனால் லே ஆவர், போலோன், கலே, டன்கிர்க் போன்ற துறைமுகங்களில் இரு தரப்புக்கும் சண்டைகள் நடந்தன. இவற்றுள் டன்கிர்க் தவிர பிற துறைமுகங்களைக் கனடியப் படைகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் கைப்பற்றிவிட்டன.
ஷெல்ட் முகத்துவாரம்
[தொகு]ஆங்கிலக் கால்வாய் கடற்கரைத் துறைமுகங்களைக் கைப்பற்றிய பின்னரும், நேசநாட்டுத் தளவாடப் பற்றாக்குறை சரியாகவில்லை. இதனால் பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைச் சரக்குப் போக்குவரத்துக்குத் திறந்து விடுவது அவசியமானது. ஆண்ட்வெர்ப் துறைமுகம் கைப்பற்றப்பட்டிருந்தாலும் அதனைச் சுற்றியிருந்த ஷெல்ட் முகத்துவாரப் பகுதி ஜெர்மானிய 15வது ஆர்மியின் வசமிருந்தது. இதனால் அக்டோபர் 2, 1944ல் கனடியப் படைகள் ஷெல்ட் பகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கின. அடுத்த ஐந்து வாரங்களுக்கு இப்பகுதியில் கடும் சண்டை நிகழ்ந்தது. நீர்நிலத் தாக்குதல்கள், கடும் ஜெர்மானிய எதிர்ப்பு, சீரற்ற நிலப்பரப்பில் முன்னேற்றம் எனப் பல கடினமான தடைகளை முறியடித்து நவம்பர் 8ம் தேதி ஷெல்ட் முகத்துவாரப்பகுதியை நேசநாட்டுப் படைகள் கைப்பற்றின. ஷெல்ட் பகுதி முழுவதும் கைப்பற்றப்பட்டு மூன்று வாரங்களுள் ஆண்ட்வெர்ப் துறைமுகம் நேச நாட்டு சரக்குக்கப்பல் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது. இதனால் நேசநாட்டு தளவாடப் பற்றாக்குறை பெருமளவு குறைந்தது.
மார்க்கெட் கார்டன்
[தொகு]பிரான்சு முழுவதும் மீட்கப்பட்ட பின்னர் ஜெர்மனியை நேரடியாகத் தாக்க நேச நாட்டுப் படைகள் திட்டமிட்டன. பிரான்சிலிருந்த் ஜெர்மானியப் படைகள் பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பின்வாங்கி விட்டன. ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையிலான எல்லைப்பகுதியை அவை மிகவும் பலப்படுத்தியிருந்தன. சிக்ஃப்ரைட் கோடு என்றழைக்கப்பட்ட இந்தப் பாதுகாப்பு அரணை நேரடியாகத் தாக்கினால் பெரும் சேதம் ஏற்படும் என்பதை நேச நாட்டுத் தளபதிகள் உணர்ந்திருந்தனர். இதனால் மார்க்கெட் கார்டன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் நோக்கம், மேற்குத் திசையில் சுற்றி சிக்ஃபிரைட் கோட்டைத் தவிர்த்து நெதர்லாந்து நாட்டின் வழியாக ஜெர்மனியை நேரடியாகத் தாக்குவதே. இதற்கு ரைன் மற்றும் மியூஸ் ஆற்றின் மீதுள்ள பல முக்கிய பாலங்களைக் கைப்பற்ற வேண்டும். பாலங்களைக் கைப்பற்றி விட்டால், பின்னர் அவற்றைப் பயன்படுத்தி ஜெர்மனியின் மையத் தொழில்பகுதியான ரூர் பிரதேசத்தைத் தாக்கப் படைகளை நகர்த்தலாம் என்பது திட்டம். இத்திட்டம் வெற்றிபெற இதற்கு ரைன் மற்றும் மியூஸ் ஆற்றின் மீதுள்ள பல முக்கிய பாலங்களைக் கைப்பற்ற நேசநாட்டுப் படைகள் முயன்றன.
மார்க்கெட் கார்டன் நடவடிக்கையில் இரு பெரும் உட்பிரிவுகள் இருந்தன. ”மார்க்கெட் நடவடிக்கை”யின் நோக்கம் வான்குடை வீரர்களைக் கொண்டு ஜெர்மனி படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பாலங்களைக் கைப்பற்றுவது. “கார்டன் நடவடிக்கை”யின் நோக்கம் கவசப் படைகளைக் கொண்டு ஜெர்மனி பாதுகாப்பு கோட்டை உடைத்து வான்குடை வீரர்கள் கைப்பற்றியிள்ள பாலங்களைச் சென்றடைவது. இத்தாக்குதல் செப்டம்பர் 17-25 காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்டது. தாக்குதல் பகுதியில் எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மானிய எஸ். எஸ் படைப்பிரிவுகள், பாலங்களைக் கைப்பற்றுவதில் ஏற்பட்ட தாமதம், ஜெர்மானிய எதிர்தாக்குதல் போன்ற காரணங்களால் மார்க்கெட் கார்டன் வெற்றி பெறவில்லை. கைப்பற்ற வேண்டிய நான்கு முக்கிய பாலங்களில் மூன்றினை நேச நாட்டு வான்குடை வீரர்கள் கைப்பற்றி விட்டனர். ஆனால் நானகாவது ஆர்னெம் பாலத்தை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அதற்கு முயன்ற பிரிட்டானிய 1வது வான்குடை டிவிசன் ஜெர்மானிய எதிர்த்தாக்குதலால் அழிக்கப்பட்டு விட்டது. மார்க்கெட் கார்டனின் தோல்வியால் சிக்ஃபிரைட் கோட்டை நேரடியாகத் தாக்குவது தவிர்க்க முடியாமல் போனது.
ஆஃகன் மற்றும் ஊர்ட்கென் காடு
[தொகு]சிக்ஃபிரைட் கோட்டினை அணுகுவதற்கு முன்னர் ஆஃகன் நகரை நேச நாட்டுப் படைகள் கைப்பற்ற வேண்டியிருந்தது. அக்டோபர் 2, 1944ல் அமெரிக்க 1வது ஆர்மி ஆஃகன் நகர் மீதான தாக்குதலைத் தொடங்கியது. அமெரிக்க 30வது டிவிசன் அக்டோபர் 2ம் தேதி வடதிசையிலிருந்து ஆஹன் நகரைத் தாக்கியது. ஐந்து நாட்கள் கடுமையான சண்டைக்குப் பின்னரே இரு படைப்பிரிவுகளும் கைக்கோர்த்தன. இச்சண்டை நடந்து கொண்டிருக்கும் போது அமெரிக்க பீரங்கிகள் ஆஹன் நகரின் மீது தொடர்ந்து குண்டு வீசின. அக்டோபர் 16ம் தேதி இரு அமெரிக்க டிவிசன்களும் சேர்ந்து நகருக்குள் முன்னேறத் தொடங்கின. அக்டோபர் 16-21ல் ஆகன் நகரத் தெருக்களில் இரு தரப்பினருக்கும் கடும் சண்டை நிகழ்ந்தது. நகரெங்கும் கட்டப்பட்டிருந்த அரண்நிலைகள், வீடுகளின் நிலவறைகள், பதுங்குகுழிகள், பாதாளச் சாக்கடைகள் போன்றவற்றிலிருந்து தாக்கும் ஜெர்மானியப் படைகளைச் சமாளித்து அமெரிக்கப் படைகள் மெல்ல நகரின் மையப்பகுதியை நோக்கி முன்னேறின. கடும் சண்டைக்குப்பின் 21ம் தேதி ஜெர்மானியத் தளபதி மில்க் ஆஹன் நகர் சரணடைவதாக அறிவித்தார். இச்சண்டையில் இரு தரப்பிலும் தலா 5,000 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 5,000 ஜெர்மானியப் படைவீரர்கள் கைது செய்யப்பட்டனர். ஆஹன் நகர் அமெரிக்கர் வசமானாலும், நேசநாட்டுப் படைகளின் இழப்புகளால் ஜெர்மனியின் உட்பகுதியுள் நேசநாட்டு முன்னேற்றம் தடைபட்டது.
ஆஃகன் சண்டையில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகளைப் பக்கவாட்டிலிருந்து ஜெர்மானியப் படைகள் தாக்காமல் காக்க, அமெரிக்கத் தளபதிகள் ஊர்ட்கென் காட்டுப் பிரதேசத்தைக் கைப்பற்ற முயன்றனர். ஊர்ட்கென் காட்டுப்பகுதி ஜெர்மானியர்களின் எதிர்கால உத்திக்கு மிக அவசியமானதாக இருந்தது. அவர்கள் அடுத்து நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த பல்ஜ் சண்டைக்கு இப்பகுதியே படைகளை ஒழுங்கமைக்கும் பகுதியாகத் (staging area) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. மேலும் ருர் ஏரியின் முகப்புப் பகுதியிலுள்ள ஷ்வாம்மானுவேல் அணைக்கட்டுக்குச் செல்லும் சாலைகள் ஊர்ட்கென் வழியாகச் சென்றன. அந்த அணைக்கட்டைத் திறந்து விட்டால் ருர் ஆற்றில் வெள்ளம் பாயச்செய்து ஆற்றைக் கடப்பதைத் தடுக்க முடியும். இவ்விரு காரணங்களால் ஊர்ட்கென் பகுதி ஜெர்மானியருக்கு அதிமுக்கியமானதாக இருந்தது. செப்டம்பர் 1944ல் அமெரிக்கப் படைகள் ஊர்ட்கன் காட்டைத் தாக்கின. ஜெர்மானியர்களின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் சண்டையில் யாருக்கும் வெற்றியில்லாமல் இழுபறி நிலை ஏற்ப்ட்டது. சிக்ஃபிரைட் கோட்டின் அரண்நிலைகளைப் பயன்படுத்தி ஜெர்மானியர்கள் அமெரிக்கப்படைகளுக்குப் பெரும் இழப்புகளை விளைவித்தனர். இச்சண்டையில் 33,000 அமெரிக்கர்களும் 28,000 ஜெர்மானியரும் மாண்டனர். ஆஃகன் சண்டையில் வெற்றி கிட்டினாலும், ரூர் ஆற்றைக் கடக்கும் அமெரிக்க முயற்சி தோல்வியடைந்தது. டிசம்பர் 17ம் தேதி பல்ஜ் சண்டை தொடங்கியதால் இழுபறி நிலை முடிவுக்கு வந்தது. அச்சண்டை முடிவு பெறும்வரை (பெப்ரவரி 1945) வரை ஊர்ட்கென் காடு அமெரிக்கர் வசமாகவில்லை
ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்
[தொகு]1944 ஆகஸ்டிலிருந்து மேற்குப் போர்முனையெங்கும் ஜெர்மானியப் படைகள் பின்வாங்கி வந்தன. கிழக்குப் போர்முனையிலும் சோவியத் யூனியனின் படைகள் ஜெர்மானியப்படைகளை முறியடித்து வேகமாக முன்னேறி வந்தன. இருமுனைப் போரில் வெகு காலம் தாக்குப்பிடிக்க முடியாதென்பதை உணர்ந்த ஹிட்லர் மேற்குப் போர் முனையில் வேகமாகப் போரை முடிக்க விரும்பினார். மேற்கத்திய நேச நாடுகள் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமெனில் அவர்களுக்குப் போர்களத்தில் ஒரு பெரும் தோல்வியைக் கொடுக்க வேண்டுமென்று உணர்ந்தார். இதற்காகப் பல்ஜ் சண்டைக்கான திட்டம் வகுக்கப்பட்டது.
ஆர்டென் பகுதியில் தாக்கி நேசநாட்டுப் படைநிலைகளை இரண்டாகப் பிளந்து, ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைக் கைப்பற்ற வேண்டும். பின்னர் வடக்கு நோக்கித் திரும்பி சுற்றி வளைக்கப்பட்ட நான்கு நேசநாட்டு ஆர்மிகளை அழிக்க வேண்டும். இவையே பல்ஜ் சண்டையில் ஜெர்மனியின் இலக்குகள். இவற்றை நிறைவேற்றிவிட்டால், சோர்வடைந்த மேற்கத்திய நாடுகள் போர் போதுமென்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்து விடுவார்கள் என்பது ஜெர்மானிய மேல்நிலை உத்தியாளர்களின் கணிப்பு. டிசம்பர் 16ல் தொடங்கிய இத்தாக்குதல் மேற்கத்தியப் படைகளைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பனிக்காலத்தில் வானிலை மோசமாக இருந்ததால் நேசநாட்டு வான்படைகள் தங்கள் பலத்தை ஜெர்மானியத் தரைப்படைகள் மீது பிரயோகிக்க முடியவில்லை.
ஆரம்பத்தில் ஜெர்மானியப் படைகள் நேசநாட்டு பாதுகாவல் நிலைகளை முறியடித்து வேகமாக முன்னேறின. ஆனால் முக்கிய இலக்கான பாஸ்டோன் நகரை அவைகளால் கைப்பற்ற முடியவில்லை. அவசரமாகப் போர்முனைக்கு அனுப்பப்பட்ட புதிய நேசநாட்டுத் துணைப்படைகளின் எதிர்த்தாக்குதல், வானிலை சீரடைந்ததால் தொடங்கிய நேசநாட்டு வான்படைத் தாக்குதல் போன்ற காரணங்களால் விரைவில் ஜெர்மானிய முன்னேற்றம் தடைபட்டு அறவே நின்று போனது. 1945 ஜனவரி மாத இறுதிக்குள் ஜெர்மானியர் இச்சண்டையில் கைப்பற்றிய பகுதிகள் அனைத்தும் மீண்டும் நேசநாடுகள் வசமாகின. மேற்குப் போர்முனையில் ஜெர்மனி மேற்கொண்ட இறுதிப் பெரும் தாக்குதல் இதுவே. இத்தாக்குதலில் ஜெர்மானியப்படைகளுக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகள் (சுமார் 1,00,000) மேற்குப் போர்முனையின் முக்கியப் படைப்பிரிவுகள் அனைத்தையும் வெகுவாகப் பலவீனப்படுத்தி விட்டன. மிஞ்சிய படைப்பிரிவுகள் சிக்ஃபிரைட் கோட்டிற்குப் பின் வாங்கின.
ஜெர்மனி மீதான படையெடுப்பு
[தொகு]பல்ஜ் தாக்குதலை முறியடித்த நேச நாட்டுப் படைகள் அடுத்து பெப்ரவரி 1945ல் ஜெர்மனி மீது படையெடுத்தன. ஐசனாவர் ஜெர்மனியின் மேற்கெல்லையில் ஒரு பரந்த முனையெங்கும் தாக்கத் திட்டமிட்டார். மேற்கு களம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - 1) வடக்கில் வட கடலிலிருந்து கோல்ன் நகர் வரையான எல்லை மோண்ட்கோமரியின் 21வது ஆர்மி குரூப்பின் பொறுப்பு 2) மத்தியில் மெயின்ஸ் நகரம் வரை லெப்டினன்ட் ஜெனரல் ஒமார் பிராட்லியின் 12வது அமெரிக்க ஆர்மி குரூப்பின் பொறுப்பு 3) தெற்கில் சுவிட்சர்லாந்து எல்லை வரை லெப்டினன்ட் ஜெனரல் ஜேகப் டெவர்சின் 6வது ஆர்மி குரூப்பின் பொறுப்பு.
பெப்ரவரி மாதம் வடக்கில் வெரிடபிள் மற்றும் கிரெனேட் நடவடிக்கைகள்மூலம் மியூசே ஆற்றுக்கும் ரைன் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதி கைப்பற்றப்பட்டது. மார்ச் மாதம் வடக்கிலும் மத்தியிலும், ரைன் ஆற்றைக் கடக்க சண்டைகள் நடந்தன. வடக்கில் பிளண்டர் நடவடிக்கைமூலம் ரைன் ஆறு கடக்கப் பட்டது. மத்திய முனையில் பிராட்லியின் படைகள் எளிதாக ரெமகன் என்ற இடத்தில் ஆற்றைக் கடந்து விட்டன. ஆற்றைக் கடந்த பின்னர் இந்த இரு பெரும் படைப்பிரிவுகளில் ஒரு பாதி ரூர் பகுதியைச் சுற்றி வளைக்கவும், மற்றொரு பாதி ஜெர்மனியின் உட்பகுதியைத் தாக்கவும் விரைந்தன. ஏப்ரல் 1ம் தேதி ரூர் இடைப்பகுதியிலிருந்த ஜெர்மானியப் படைகள் சுற்றி வளைக்கப்பட்டன. அடுத்த இருபது நாட்களுள் அப்பகுதி கைப்பற்றப்பட்டு சுமார் மூன்று லட்சம் ஜெர்மானியப் படை வீரர்கள் கைப்பற்றப்பட்டனர். மார்ச் 26ம் தேதி தெற்கு முனையிலும் 6வது ஆர்மி குரூப் ரைனைக் கடந்து ஆஸ்திரியா நோக்கி விரைந்தது.
ரூர் பகுதியில் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே, 12வது ஆர்மி குரூப்பின் ஒரு பிரிவு ஜெர்மனியின் மையப்பகுதியை நோக்கி முன்னேறியது. முதலில் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினைக் கைப்பற்ற வேண்டுமென்று திட்டமிட்டிருந்த ஐசனாவர் மார்ச் மாத இறுதியில் தன் இலக்கை மாற்றினார். பெர்லினை மேற்கத்தியப் படைகள் அடைவதற்கு முன்னர் சோவியத் படைகள் கிழக்கிலிருந்து கைப்பற்றி விடுமென்பதால் பெர்லினை நோக்கி முன்னேறாமல், லெய்ப்சிக் நகரைக் கைப்பற்றுவது ஐசனாவரின் இலக்கானது. ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் எல்பா ஆற்றின் கரையில் அமைந்திருந்த லெய்ப்சிக் நகரை நோக்கி 12வது ஆர்மி குரூப் முன்னேறியது. ஏப்ரல் 25ம் தேதி கிழக்கிலிருந்து முன்னேறிக் கொண்டிருந்த சோவியத் படைகளும் மேற்கிலிருந்து விரைந்து கொண்டிருந்த அமெரிக்கப்படைகளும் எல்பா ஆற்றருகே கைக்கோர்த்தன. எஞ்சியிருந்த ஜெர்மானியப் படைகள் இதனால் இரண்டாகத் துண்டிக்கப்பட்டன. ஏப்ரல் 29ம் தேதி 21வது ஆர்மி குரூப் எல்பா ஆற்றைக் கடந்தது.
1945: போரின் முடிவு
[தொகு]ஏப்ரல் 30ல் முற்றுகையிடப்பட்ட பெர்லின் நகரில் ஹிட்லர் தனது பதுங்கு அறையில் தற்கொலை செய்து கொண்டார். அவருடன் அவரது மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது உயிலில் குறிப்பிட்டபடி அட்மைரல் கார்ல் டோனிட்ஸ் ஜெர்மனியின் புதிய தலைவரானார். மெ முதல் வாரத்தில் நாசி ஜெர்மனியின் பல பகுதிகளிலிருந்த படைப்பிரிவுகள் சரணடைந்தன.
மே 6ம் தேதி மேற்கத்திய நேச நாடுகளிடம் சரணடைவுப் பேச்சு வார்த்தைகளை நடத்த டோனிட்ஸ் ஜெனரல் யோடிலை அனுப்பினார். யால்டா மாநாட்டில் ஜெர்மனி அனைத்து நேச நாடுகளிடமும் சமமாகச் சரணடைய வேண்டுமென்று சோவியத் யூனியனும் மேற்கத்திய நேச நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்த படி, மே 7ம் தேதி அதிகாலை 2.41 மணிக்கு டோனிட்சின் உத்தரவின் பேரில் யோட்ல் நிபந்தனையற்ற சரணடைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சி பிரான்சின் ரெய்ம்சு நகரில் அமைந்திருந்த நேச நாட்டு ஐரோப்பிய போர்த் தளபதியின் தலைமையகத்தில் நடைபெற்றது. மறுநாள் இதே போன்று மற்றொரு சரணடைவு நிகழ்ச்சி பெர்லின் நகரில் நடைபெற்றது. ஜெர்மானியத் தளபதி வில்லெம் கெய்ட்டெல் சோவியத் தளபதி மார்ஷல் கிரகோரி சூக்கோவின் முன்னிலையில் சரணடைவு ஒப்பந்ததித்தில் கையெழுத்திட்டார். போர் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அனைத்து ஜெர்மானியப் படைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்துடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
குறிப்புகள்
[தொகு]- ↑ MacDonald, C (2005), The Last Offensive: The European Theater of Operations. University Press of the Pacific
மேற்கோள்கள்
[தொகு]- Clarke, Jeffrey J.; Smith, Robert Ross (1993). Riviera to the Rhine. United States Army in World War II., European theater of operations. Washington D.C.: Center of Military History. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-16-025966-1. CMH Pub. 7-10.
{{cite book}}
: Unknown parameter|lastauthoramp=
ignored (help) - Gootzen, Har and Connor, Kevin (2006). "Battle for the Roer Triangle" பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-9021455-9.See [1]
- Hastings, Max. (2004). Armageddon: The Battle for Germany, 1944–1945. New York: Alfred A. Knopf. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-375-41433-9.
- MacDonald, Charles B. (1993) [1973]. The Last Offensive. United States Army in World War II., European theater of operations (Special commemorative ed.). Washington D.C.: Center of Military History. இணையக் கணினி நூலக மைய எண் 41111259. CMH pub. 7-9-1.
- Seaton, Albert (1971). The Russo-German War. New York: Praeger Publishers.
- Weigley, Russell F. (1981). Eisenhower's Lieutenants. Bloomington: Indiana University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-13333-5.
- Zaloga, Steve, and Dennis, Peter (2006). Remagen 1945: endgame against the Third Reich. Oxford: Osprey Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1846032490.
மேலும் படிக்க
[தொகு]- Ellis, L. F. (1968). Victory in the West (Volume II). London: HMSO.
- Kurowski, Franz. (2005). Endkampf um das Reich 1944–1945. Erlangen: Karl Müller Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-86070-855-4.
- Young, Peter, editor. World Almanac of World War II. St. Martin's Press.