கோப்ரா நடவடிக்கை

ஆள்கூறுகள்: 49°06′55″N 1°05′25″W / 49.1152777°N 1.0902777°W / 49.1152777; -1.0902777 (சென் லோ)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோப்ரா நடவடிக்கை
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி

கோப்ரா நடவடிக்கையில் பங்குபெறும் அமெரிக்க 4வது கவச டிவிசன்கள்
நாள் 25–31 ஜூலை 1944
இடம் சென் லோ, நார்மாண்டி, பிரான்சு
தெளிவான நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா  Germany
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் பெர்னார்ட் மோண்ட்கோமரி
ஐக்கிய அமெரிக்கா ஒமார் பிராட்லி
செருமனி குந்தர் வோன் குளூக்
செருமனி பால் ஹாசர்
பலம்
8 காலாட்படை டிவிசன்கள்
3 கவச டிவிசன்கள்
2,451 டாங்குகள்
2 காலாட்படை டிவிசன்கள்
1 வான்குடை டிவிசன்
4 கவச டிவிசன்கள்
1 பான்சர் கிரனேடியர் டிவிசன்
190 டாங்குகள் மற்றும் பீரங்கிகள்
இழப்புகள்
1,800 தெரியவில்லை

கோப்ரா நடவடிக்கை (Operation Cobra) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு தாக்குதல். இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் அமெரிக்க தரைப்படை நார்மாண்டி கடற்பகுதியிலிருந்து ஜெர்மானியப் பாதுகாவல் படைவளையத்தை உடைத்துக் கொண்டு பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேறத் தொடங்கியது.

பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6, 1944ல் தொடங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் இப்படையெடுப்பு நிகழ்ந்தது. கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்ட பின்னர் நேச நாட்டுப் படைகள் நார்மாண்டியின் உட்புறத்தை நோக்கி முன்னேறத் திட்டமிட்டன. நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் இருந்த நார்மாண்டிப் பகுதி பிரிட்டனியக்/கனடியப் பகுதி மற்றும் அமெரிக்கப் பகுதி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கான் நகரைச் சுற்றியிருந்த பிரிட்டானியக்/கனடியப் பகுதியில் இரு மாதங்களாக கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மானியப் படைகளின் பலமும் அதிகமாக இருந்தது. இதற்கு மாறாக சென் லோ நகரைச் சுற்றி இருந்த அமெரிக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஜெர்மானியப் படைபலம் குறைவாகவே இருந்தது. இதனால் நார்மாண்டியிலிருந்து உடைத்து வெளியேற்ற (breakout) தாக்குதலை அங்கு நிகழ்த்த நேச நாட்டுத் தளபதிகள் முடிவு செய்தனர்.

மோசமான வானிலையால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட கோப்ரா நடவடிக்கை ஜூலை 25ம் தேதி கடும் வான்வழி குண்டுவீச்சுடன் தொடங்கியது. ஜெர்மானியர்களின் கவனத்தைத் திசை திருப்ப இதே சமயம் கான் நகரருகே குட்வுட் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் ஒமார் பிராட்லி தலைமையில் அமெரிக்க 1வது ஆர்மி பிரான்சின் உட்பகுதியை நோக்கி முன்னேறத் தொடங்கியது. ஆரம்பத்தில் முன்னேற்றம் மெதுவாக நிகழ்ந்தாலும் விரைவில் ஜெர்மானியப் படைப்பிரிவுகள் அனைத்தும் முறியடிக்கபட்டன. நார்மாண்டியைச் சுற்றியிருந்த ஜெர்மானியப் படைவளையம் சிதறியது. படை ஒழுங்கு சீர்குலைந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகள் செய்னை நோக்கிப் பின்வாங்கத் தொடங்கின. ஜூலை 31ம் தேதி 1வது ஆர்மி நார்மாண்டியிலிருந்து வெளியேறி பிரான்சின் உட்பகுதிக்குள் புகுந்து விட்டது.

நிலையைச் சீர்செய்ய ஜெர்மானிய மேற்குமுனைத் தளபதி குந்தர் வோன் குளூக் புதியப் படைப்பிரிவுகளை நார்மாண்டிப் போர்முனைக்கு அனுப்பினார். ஆனால் இரண்டு மாதங்கள் நடந்திருந்த தொடர் சண்டையில் ஜெர்மானியப் படைபலம் வெகுவாகக் குறைந்ததிருந்தது. மேலும் இதுவரை நடந்த சண்டை நகராத காலாட்படை மோதல்கள். கோப்ரா நடவடிக்கையின் வெற்றியால் பிரான்சில் போர், நகரும் போராக மாறியது (war of maneuver). ஆயுத பலத்திலும், எந்திரமயமாக்கலிலும் ஜெர்மனியை விட மிகவும் முன்னணியில் இருந்த நேச நாட்டுப் படைகளுக்கு இப்புதிய போர்முறை சாதகமாக அமைந்தது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்ரா_நடவடிக்கை&oldid=1828747" இலிருந்து மீள்விக்கப்பட்டது