உள்ளடக்கத்துக்குச் செல்

செர்போர்க் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்போர்க் சண்டை
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி

செர்போர்க்கின் தெருக்களில் சண்டையில் ஈடுபடும் அமெரிக்க வீரர்கள்
நாள் ஜூன் 6–30, 1944
இடம் நார்மாண்டி, பிரான்சு
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா  ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
லாட்டன் காலின்சு ஃபிரடரிக் டால்மான்
பலம்
தெரியவில்லை 40,000
இழப்புகள்
2,800 மாண்டவர்,
5,700 காணவில்லை,
13,500 காயமடைந்தவர்
7,000 – 8,000 மாண்டவர்/காணவில்லை

30,000 போர்க்கைதிகள்

செர்போர்க் சண்டை (Battle of Cherbourg) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு தாக்குதல். இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் அமெரிக்க தரைப்படை நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் செர்போர்க் நகரைத் தாக்கிக் கைப்பற்றியது.

பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6, 1944ல் தொடங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் இப்படையெடுப்பு நிகழ்ந்தது. கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்ட பின்னர் நேச நாட்டுப் படைகள் நார்மாண்டியின் உட்புறத்தை நோக்கி முன்னேறத் துவங்கின. செர்போர்க் நார்மாண்டியின் கோடென்டின் தீபகற்பத்தின் முனையிலிருந்த ஒரு துறைமுகக் கோட்டை நகரம். அடுத்த கட்ட முன்னேறத்துக்குத் தேவையான தளவாடங்களை இறக்குமதி செய்ய நேச நாட்டு உத்தியாளர்களுக்கு ஒரு ஆழ்நீர் துறைமுகம் தேவைபடடது. இதற்காக செர்போர்க் தேர்ந்தெடுக்கப்பட்டு அதனைக் கைப்பற்ற அமெரிக்க 7வது கோர் அனுப்பப்பட்டது. செர்பொர்க் நகரைத் தாக்கும் முன்னர் கோடெண்டின் தீபகற்பத்தின் வாயில் பகுதியை அமெரிக்க 101வது மற்றும் 82வது வான்குடை டிவிசன்கள் கைப்பற்றின. செர்பொர்க்கிற்குச் செல்லும் வழியிலிருந்த கேரன்டான் நகர் ஜூன் 14ம் தேதி வீழ்ந்தது. ஜூன் 18ம் தேதி அமெரிக்கப் படைப்பிரிவுகள் செர்போர்க்கை நோக்கி முன்னேறத் துவங்கின. 24 மணி நேர முன்னேற்றத்துக்குப் பின் நகரை அடைந்து முற்றுகையிட்டன. செர்போர்க்கில் அப்போது சுமார் 21,000 ஜெர்மானியக் காவல் படைகள் இருந்தன. ஆனால் அவற்றுக்குத் போதுமான அளவு தளவாடங்கள் இல்லை.

சரணடைய மறுத்த ஜெர்மானியத் தளபதி கார்ல்-வில்லெம் வோன் ஷிலீபன் செர்போர்க் துறைமுகத்தைத் தகர்க்கும் பணிகளைத் துவங்கினார். ஜூன் 22ம் தேதி அமெரிக்கப் படைகள் செர்போர்க் மீதான தாக்குதலைத் தொடங்கின. நான்கு நாட்கள் கடும் சண்டைக்குப் பின் நகரின் முக்கிய அரண்நிலையான டு ரூல் கோட்டை அமெரிக்கர்களால் கைப்பற்றப்பட்டது. வோன் ஷிலீபனும் அமெரிக்கப் படைகளிடம் பிடிபட்டார். இதனால் செர்போர்க்கில் ஒருங்கிணைந்த ஜெர்மானிய எதிர்ப்பு முடிவுற்றது. அடுத்த சில நாட்களில் நகரின் பிற பகுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக சரணடைந்தன. ஜூலை 1ம் தேதி நகர் முழுவதும் அமெரிக்கர் வசமானது. இதற்குள் செர்போர்க் துறைமுகத்தை ஜெர்மானியர்கள் பெரிதும் நாசபடுத்தியிருந்தனர். துறைமுகத்தில் பல நீர் கண்ணி வெடிகளையும் நிறுவியிருந்தனர். துறைமுகத்தைச் செப்பனிட்டு வெடிகளை அகற்றி, சரக்குக் கப்பல் போக்குவரத்து துவங்க நேச நாட்டுப் படைகளுக்கு மேலும் ஒன்றரை மாத காலம் ஆயிற்று.

படங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்போர்க்_சண்டை&oldid=1378495" இலிருந்து மீள்விக்கப்பட்டது