ஜெட்பர்க் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பயிற்சியில் ஈடுபடும் ஜெட்பர்க் குழுக்கள்

செட்பர்க் நடவடிக்கை (Operation Jedburgh, ஜெட்பர்க் நடவடிக்கை) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு ரகசிய நாசவேலை நடவடிக்கை. இதில் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் இயங்கி வந்த உள்நாட்டு எதிர்ப்புப் படைகளுக்குத் துணையாகச் செயல்பட நேச நாட்டு சிறப்புப் படை அதிகாரிகள் வான்குடை மூலம் அந்நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

1940ல் பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகள் நாசி ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டன. இந்த நாடுகளில் நாசி ஆட்சிக்கு எதிராக உருவான உள்நாட்டு எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து தேவையான தளவாடங்களை வழங்க பிரிட்டன் மற்றும் இந்நாடுகளில் நாடு கடந்த அரசுகள் திட்டமிட்டன. பிரிட்டனின் சிறப்பு நடவடிக்கைகள் செயற்குழு, அமெரிக்காவில் மேல்நிலை உத்திச் சேவைகளுக்கான அலுவலகம், சுதந்திர பிரெஞ்சு அரசின் உளவு மற்றும் நடவடிக்கைகளுக்கான நடுவண் அமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஜெட்பர்க் நடவடிக்கையைத் தொடங்கின. இதில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் பயிற்சி அளிக்கப்பட்டு நாசி ஆக்கிரமிப்பு நாடுகளில் வான்குடை வழியாக தரையிறக்கப்பட்டனர். “ஜெட்பர்குகள்” என்று அழைக்கப்பட்ட இக்குழுவினர் உள்நாட்டு எதிர்ப்புப் படையினருக்கு ஆயுதப் பயிற்சி, நாச வேலைப் பயிற்சி, கொரில்லாப் போர்முறைகள் ஆகியவற்றில் பயிற்சி அளித்தனர். எதிர்ப்புப் படையினருக்கும் நேச நாட்டுப் போர்த் தலைமையகத்துக்கும் இடைமுகமாகச் செயல் பட்டனர். 1944ல் மேற்கு ஐரோப்பா மீது நேச நாட்டுப் படைகள் கடல்வழியாகப் படையெடுத்த போது, அவற்றுக்குத் துணையாக ஜெர்மானிய படைநிலைகளுக்குப் பின்னால் நாச மற்றும் சீர்குலைப்பு வேலைகளிலும் இக்குழுக்கள் ஈடுபட்டன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெட்பர்க்_நடவடிக்கை&oldid=1358674" இருந்து மீள்விக்கப்பட்டது