உள்ளடக்கத்துக்குச் செல்

போஸ்டேஜ் ஏபிள் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போஸ்டேஜ் ஏபிள் நடவடிக்கை (Operation Postage Able) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு நோட்ட நடவடிக்கை (reconnaissance operation). இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிபிலிருந்த பிரான்சு நாட்டின் மீது ஜூன் 1944ல் நேச நாடுகள் கடல்வழியாகப் படையெடுக்கத் திட்டமிட்டன. இதற்கு தேவையான ஆயத்தங்களைச் செய்யவும், கடல்வழிப் படையெடுப்பு நிகழ்த்துவதற்கு உகந்த கடற்கரையைத் தேர்ந்தெடுக்கவும் பிரான்சின் கடற்கரையை ஆய்வு செய்ய பிரிட்டானியக் கடற்படை முயற்சிகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைக்கு போஸ்டேஜ் ஏபிள் என்று குறிப்பெயரிடப்பட்டது.

ஜனவரி 16, 1944ல் பிரிட்டானிய நீர்மூழ்கிக் கப்பல் எச். எம். எசு எக்சு20 பிரெஞ்சு கடற்கரைப் பகுதிகளை வேவு பார்க்கக் கிளம்பியது. அடுத்த நான்கு நாட்கள், பிரெஞ்சு கடற்கரைப் படுகைகளிலிருந்து மணல் மாதிரிகளை சேகரித்தல், எதிரொலி முறை மூலம் நீராழம் காணல், கடற்கரைப் பகுதிகளை நோட்டமிடல் போன்ற செயல்களைச் செய்தன. இரவு நேரங்களில் மூழ்காளர்கள் (divers) கடற்கரைக்கு நீந்திச் சென்று அப்பகுதியினை ஆய்வு செய்தனர். ஜனவரி 21ம் தேதி அந்த நீர்மூழ்கி பிரிட்டன் திரும்பியது. அது சேகரித்த தரவுகளைக் கொண்டு, நேச நாட்டு உத்தியாளர்கள் அளவு மாதிரிக் கடற்கரைகளை உருவாக்கி தங்கள் தாக்குதல் திட்டமிடுதலுக்குப் பயன்படுத்தினர்.