அட்லாண்டிக் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்லாண்டிக் நடவடிக்கை
கான் சண்டையின் பகுதி பகுதி
நாள் ஜூலை 18–20, 1944
இடம் கான், பிரான்சு
யாருக்கும் வெற்றியில்லை
பிரிவினர்
 கனடா  நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
கனடா கை சிமண்ட்ஸ் நாட்சி ஜெர்மனி குந்தர் வோன் குளூக்
பலம்
2 காலாட்படை டிவிசன்கள்
1 கவச பிரிகேட்
2 கவச டிவிசன்கள்
இழப்புகள்
1,349

அட்லாண்டிக் நடவடிக்கை (Operation Atlantic) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை நடைபெற்றது.

பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6ம் தேதி துவங்கியது. இப்படையெடுப்பின் உடனடி நோக்கங்களில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுதல். ஆனால் ஜூன் மாதம் முழுவதும் பல முறை முயன்றும் அந்நகரை நேச நாட்டுப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. ஜூலை மாதம் கான் நகரின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. இரு மாதங்கள் தொடர்ந்து நடந்த கடுமையான சண்டையால் இரு தரப்பினருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் இழப்புகளை ஈடு செய்வதில் ஜெர்மானியர்களால் நேச நாடுகளுக்கு இணையாகச் செயல்பட முடியவில்லை என்பதால், நார்மாண்டியில் அவர்களது நிலை வலுவிழந்து வந்தது. கான் நகரைக் கைப்பற்ற இயலாமை நார்மாண்டியிலிருந்து பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேற நேச நாட்டு உத்தியாளர்கள் செய்திருந்த திட்டத்தினைக் காலதாமதப் படுத்தியது. கான் சண்டையினை முடிவுக்குக் கொண்டுவர இறுதிகட்ட முயற்சியாக ஜுலை 18ம் தேதி நேசநாட்டுப் படைகள் குட்வுட் நடவடிக்கை மற்றும் அட்லாண்டிக் நடவடிக்கையைத் தொடங்கின. முன்னதில் பிரிட்டானிய 1வது கோர் கான் நகரின் கிழக்கிலும் பின்னதில் கனடிய 2வது கோர் மேற்கிலும் தாக்கின.

ஓர்ன் பாலமுகப்பிலிருந்து முன்னேறி கான் நகரின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றுவதே அட்லாண்டிக் தாக்குதலின் நோக்கம். ஆரம்பத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஓர்ன் ஆற்றின் அக்கரையிலிருந்த வெர்ரியர் முகட்டினைக் கனடியப் படைகளால கைப்பற்ற முடியவில்லை. ஜுலை 20ம் தேதி இத்தாக்குதல் கைவிடப்பட்டது. இரு நாட்கள் சண்டையில் கனடியப் படைகளுக்கு 1,349 இழப்புகள் ஏற்பட்டன. வெர்ரியர் முகட்டினைக் கைப்பற்ற ஜூலை 20ம் தேதி மற்றொரு தாக்குதல் தொடங்கப்பட்டது.