உள்ளடக்கத்துக்குச் செல்

எபென் எமேல் கோட்டைச் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எபென் எமேல் கோட்டைச் சண்டை
பெல்ஜியம் சண்டையின் (இரண்டாம் உலகப் போர்) பகுதி

எபென் எமேல் கோட்டையைக் கைப்பற்றிய ஜெர்மானிய வான்குடை வீரர்கள்
நாள் மே 10-11, 1940
இடம் எபென் எமேல் கோட்டை, பெல்ஜிய எல்லை அரண்
தெளிவான ஜெர்மானிய வெற்றி
பிரிவினர்
பெல்ஜியம் பெல்ஜியம் நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
பெல்ஜியம் மேஜர் ஜான் ஜோட்ராண்ட் நாட்சி ஜெர்மனி ஒபர்லியூடெனன்ட் ருடால்ஃப் விட்சிக்
பலம்
1,000+ (கணிப்பு) 493[1]
இழப்புகள்
60 மாண்டவர்
40 காயமடைந்தவர்
1,000 கைது செய்யப்பட்டவர் (கணிப்பு)[2]
43 மாண்டவர்
99 காயமடைந்தவர்[3][4]

எபென் எமேல் கோட்டைச் சண்டை (Battle of Fort Eben-Emael) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. பெல்ஜியம் சண்டையின் ஒரு பகுதியான இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் வான் குடை வீரர்கள் பெல்ஜியத்தின் எல்லை அரணான எபென் எமேல் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றினர்.

மே 10, 1940ல் நாசி ஜெர்மனியின் படைகள் பெல்ஜியம், பிரான்சு, நெதர்லாந்து ஆகிய நாடுகள்மீது தங்கள் தாக்குதலைத் தொடங்கின. ஜெர்மானியப் போர்த் திட்டப்படி பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து பகுதிகளை ஆல்பர்ட் கால்வாய் வழியாகத் தாக்க வேண்டும். ஆனால் அக்கால்வாயின் மீது அமைந்திருந்த பல பாலங்கள் எபென் எமேல் கோட்டையின் பீரங்கிகளின் சுடு எல்லைக்குள் இருந்தன. எபென் எமேல் பெல்ஜியப் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ளவரை ஆல்பர்ட் கால்வாய் வழியாக ஜெர்மானியப் படைகள் செல்ல முடியாது. எனவே அக்கோட்டையை வான்குடை வீரர்களைக் கொண்டு தாக்கிக் கைப்பற்ற ஜெர்மானியத் தளபதிகள் முடிவு செய்தனர்.

எபென் எமேல் 1935ல் கட்டி முடிக்கப்பட்ட ஒரு பலமான கோட்டை. இது மஷினோ அரண் கோட்டின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. 180 மீ நீளமும் 370 மீ அகலமும் கொண்ட இக்கோட்டையின் பீரங்கிகள், எந்திரத் துப்பாக்கிகள் மற்றும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் அதனை அணுகும் வழிகள் அனைத்தையும் தாக்கக் கூடியதாக இருந்தன. மேலும் ஆல்பர்ட் கால்வாயின் பாலங்களில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. ஜெர்மானியப் படைகள் அவற்றைக் கைப்பற்றும் நிலை உண்டாகின் அப்பாலங்களைத் தகர்க்க பெல்ஜியப் பாதுகாவல் படைகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எபென் எமேல் மீது சத்தமின்றித் தாக்க மிதவை வானூர்திகளின் மூலம் வான்வழியாகத் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். மே 10, அதிகாலை 4.23 மணியளவில் இத்தாக்குதல் தொடங்கியது. சத்தமின்றி எபென் எமேல் மீது ஜெர்மானிய மிதவை வானூர்திகள் தரையிறங்கின. அவற்றிலிருந்த வான்குடை வீரர்கள் கோட்டையின் பீரங்கிச் சாளரங்களை வெடி வைத்து தகர்த்தனர். கோட்டையின் மேற்புறம் ஜெர்மானியர் வசமானது. கோட்டையின் உள்ளிருந்த பெல்ஜியப் பாதுகாவல் படைகள் வெளிவர முடியாமல் முடங்கியது. இதேபோல ஆல்பர்ட் கால்வாயின் மீதிருந்த மூன்று பாலங்களையும் ஜெர்மானிய வான்குடை வீரர்கள் கைப்பற்றினர். பாலங்களையும், கோட்டையையும் மீண்டும் கைப்பற்ற பெல்ஜியர்கள் நடத்திய எதிர்த்தாக்குதல்கள் வெற்றி பெறவில்லை. மறுநாள் (மே 11), ஜெர்மானியத் தரைப்படைகள் கோட்டையை அடைந்தவுடன், கோட்டையின் பாதுகாவலர்கள் சரணடைந்தனர்.

படங்கள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Lucas, p. 22
  2. this only refers to casualties and prisoners at Fort Eben-Emael. Belgian casualties taken during fighting at the three bridges is unknown .Harclerode, p. 55.
  3. Kuhn, pp. 31–32
  4. Harclerode, p. 55

மேற்கோள்கள்

[தொகு]


வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
எபென் எமேல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.