உள்ளடக்கத்துக்குச் செல்

ராட்டர்டாம் பிளிட்ஸ்

ஆள்கூறுகள்: 51°57′51.95″N 4°27′4.45″E / 51.9644306°N 4.4512361°E / 51.9644306; 4.4512361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராட்டர்டாம் குண்டு வீச்சு
குண்டுவீச்சுக்குப் பிறகு ராட்டர்டேமின் மையப்பகுதி
இடம்ராட்டர்டாம், நெதர்லாந்து
ஆள்கூறுகள்51°57′51.95″N 4°27′4.45″E / 51.9644306°N 4.4512361°E / 51.9644306; 4.4512361
நாள்மே 14, 1940
16:20 (MET - 1h 40m)
தாக்குதல்
வகை
வான்வழித் தாக்குதல்
ஆயுதம்1,150 x 50 கிலோ மற்றும் 158 x 250 கிலோ குண்டுகள்
இறப்பு(கள்)~1000
தாக்கியோர்நாசி ஜெர்மனி
Defenderநெதர்லாந்து

ராட்டர்டாம் பிளிட்ஸ் (Rotterdam Blitz) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு குண்டுவீச்சு நிகழ்வு. இது நெதர்லாந்து சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் வான்படைகள் ராட்டர்டாம் நகரின் மீது குண்டுவீசி பெரும் நாசம் விளைவித்தது. ”பிளிட்ஸ்” என்ற இடாய்ச்சு சொல்லுக்கு மின்னலென்று பொருள். ஜெர்மானியத் தரைப்படையின் மின்னலடித் தாக்குதல் (பிளிட்ஸ்கிரீக்) முறையின் பெயரையே ஜெர்மானிய வான்படை குண்டுவீச்சுகளுக்கும் மேற்கத்திய ஊடகங்கள் பயன்படுத்தியதால், இந்த குண்டுவீச்சும் “ராட்டர்டாம் பிளிட்ஸ்” என்று வழங்கப்படுகிறது.

மே 10, 1940 அன்று ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் தொடங்கியது. பெல்ஜியம், பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு நாடுகளையும் ஒரே நேரத்தில் ஜெர்மானியப் படைகள் தாக்கின. ராட்டார்டாம் நகரைக் கைப்பற்ற ஜெர்மானியப் படைகள் செய்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெறவில்லை. இதே போல நெதர்லாந்தின் பிற பகுதிகளிலும் ஜெர்மானியத் தளபதிகள் திட்டமிட்டபடி வேகமாக முன்னேற முடியவில்லை. இதனால் நெதர்லாந்து அரசை அச்சுறுத்தி சரண்டைய வைக்க ஜெர்மானியப் போர்த்தலைமையகம் முடிவு செய்தது. ராட்டர்டாம் நகரம் சரணடையவில்லையென்றால் லுஃப்டவாஃபேவின் குண்டுவீச்சுக்கு ஆளாகும் என்று நெதர்லாந்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நெதர்லாந்து சரணடைய விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு நெருங்கியதால், லுஃப்ட்வாஃபேயின் குண்டு வீசி விமானங்கள் ராட்டர்டாம் நகரை அழிக்க அனுப்பப்பட்டன. அவை ராட்டர்டாமை நெருங்கும் முன்பே அந்நகரம் சரணடைந்து விட்டது. ஆனால் இந்த செய்தியை வானொலி மூலம் அனைத்து விமானங்களுக்கும் தெரிவித்து குண்டுவீச்சை ரத்து செய்யும் முன், சில குண்டுவீசிகள் ராட்டர்டாம் நகரை அடைந்து தங்கள் குண்டுகளை வீசிவிட்டன. மொத்தம் 1150, ஐம்பது கிலோ குண்டுகளும் 158 இருநூற்று ஐம்பது கிலோ குண்டுகளும் வீசப்பட்டன. இந்த குண்டுகளால் நகரில் பெருந்தீ மூண்டு சுமார் 25,000 கட்டிடங்கள் எரிந்து சாம்பலாயின. 2.6 சதுர கி.மீ பரப்பளவுள்ள பகுதி முற்றிலும் நாசமானது. சுமார் 1000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 85,000 பேர் வீடிழந்தனர்.

ராட்டர்டாமைக் கைப்பற்ற இந்த குண்டுவீச்சு தேவையில்லாது போனாலும், நெதர்லாந்து அரசை மிரட்டி அடிபணிய வைக்க ஜெர்மானியத் தளபதிகளுக்குப் பயன்பட்டது. உடனடியாகச் சரணடையவில்லையென்றால், நெதர்லாந்தின் பிற நகரங்களுக்கும் ராட்டர்டாமின் கதி ஏற்படும் என்று ஜெர்மானியர்கள் மிரட்டினர். லுஃப்ட்வாஃபே குண்டுவீசிகளைத் தங்களால் தடுக்க இயலாதென்பதை உணர்ந்த நெதர்லாந்து அரசு மே 14ம் தேதி சரணடைந்தது. அச்சுறுத்தலுக்காக பொதுமக்கள் குடியிருப்புகளின் மீது குண்டு வீசப்பட்டது இதுவே இரண்டாவது முறையாகும். முன்னர் போலந்து நாட்டின் மீது ஜெர்மனி தாக்கியபோது வார்சா நகரின் மீது இவ்வாறு குண்டுவீசப்பட்டது. இந்த குண்டுவீச்சு நிகழ்வை நேச நாட்டு ஊடகங்கள் போர் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டன. அதுவரை ஜெர்மனியின் நகரங்களை குறிவைக்காதிருந்த நேச நாட்டு வான்படைகள் ராட்டர்டாம் குண்டுவீச்சுக்குப்பின் அவற்றையும் தாக்கத் தொடங்கின. இதற்குப்பின் இரண்டாம் உலகப்போரில் எதிரி நாட்டு நகரங்களில் குண்டு வீசுவது சாதாரண நிகழ்வாகிப் போனது.

படங்கள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராட்டர்டாம்_பிளிட்ஸ்&oldid=1837532" இலிருந்து மீள்விக்கப்பட்டது