உள்ளடக்கத்துக்குச் செல்

டிராகூன் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிராகூன் நடவடிக்கை
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி

டிராகூன் நடவடிக்கையின் வரைபடம்
நாள் ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 14, 1944
இடம் தெற்கு பிரான்சு
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா
 பிரான்சு (சுதந்திர பிரஞ்சுப் படைகள்)
 ஐக்கிய இராச்சியம்
 கனடா[1]
 கிரேக்க நாடு
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா ஜாக்கப் எல். டெவர்ஸ்
ஐக்கிய அமெரிக்கா அலெக்சாண்டர் பாட்ச்
ஐக்கிய அமெரிக்கா லூசியன் டிரஸ்காட்
சுதந்திர பிரான்ஸ் ஜான் டி லாட்ரே டி டாசிக்னி
நாட்சி ஜெர்மனி யொஹான்னெஸ் பிளாஸ்கோவிட்ஸ்
நாட்சி ஜெர்மனிபிரடரிக் வெய்ஸ்
நாட்சி ஜெர்மனி ஃபெர்டினாண்ட் நியூலிங்
பலம்
175,000-200,000 85,000-100,000 (தாக்குதல் பகுதிகளில் மட்டும்),
285,000-300,000 (தெற்கு பிரான்சில்)

டிராகூன் நடவடிக்கை (Operation Dragoon) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு படையெடுப்பு. ஆகஸ்ட் 15, 1944ல் நேச நாட்டுப் படைகள் பிரான்சின் தெற்குப் பகுதியைத் தாக்கி அதை நாசி ஜெர்மனியிடமிருந்து மீட்டன.

பின்புலம்

[தொகு]

ஜூன் 1944ல் நார்மாண்டிச் சண்டையுடன் நேச நாடுகளின் நாசி ஐரோப்பாவின் மீதான படையெடுப்பு தொடங்கியது. அடுத்த இரு மாதங்களில் நேச நாட்டுப் படைகள் வேகமாக முன்னேறி பிரான்சின் பல பகுதிகளைக் கைப்பற்றின. ஆனால் பிரான்சிலுள்ள படைகளுக்குத் தேவையான தளவாடங்களை இறக்குமதி செய்ய போதுமான துறைமுக வசதிகள் நேச நாட்டுப்படைகளிடம் இல்லை. நேச நாடுப்படைகளின் ஐரோப்பிய தலைமைத் தளபதி ஐசனோவர் பிரான்சின் மார்சே துறைமுகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று கருதினார். ஆனால் பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிரான்சில் இன்னொரு போர் முனையைத் துவக்குவது இத்தாலியிலும் பிரான்சிலும் ஏற்கனவே சண்டை நடந்து கொண்டிருக்கும் போர் முனைகளிலிருந்து நேச நாட்டுப் படைகளின் கவனம் சிதறி விடுமென்று கருதினார். அப்படி இன்னொரு முனையில் தாக்குவதென்றால் பால்கன் குடா பகுதியைத் தாக்க வேண்டுமென விரும்பினார். ஆனால் ஐசனோவரின் நிலையே இறுதியில் ஏற்கப்பட்டு, பிரான்சின் தென்பகுதியைத் தாக்குவதென்று முடிவானது. இத்தாக்குதலுக்கு டிராகூன் நடவடிக்கை என்று பெயரிடப்பட்டது.

சண்டையின் போக்கு

[தொகு]

ஆகஸ்ட் 1, 1944ல் அமெரிக்காவின் 6வது ஆர்மி குரூப் லெப்டினன்ட் ஜெனரல் ஜேகப். எல். டெவர்ஸ் தலைமையில் கார்சிகா தீவில் செய்முறை படுத்தப்பட்டது. டிராகூன் படை என்றும் அழைக்கப்பட்ட இதில் அமெரிக்காவின் 7வது ஆர்மியும் பிரான்சின் முதல் ஆர்மியும் இடம் பெற்றிருந்தன. ஆகஸ்ட் 15ம் தேதி ஆல்ஃபா, டெல்டா, காமெல் என்று குறிப்பெயரிடப்பட்டிருந்த பிரான்சின் தெற்குக் கடற்கரைப் பகுதிகளில் படைகள் தரையிறங்கத் தொடங்கின. தரையிறங்கும் படைகளுக்கு உதவியாக வான்குடை வீரர்கள் ஜெர்மானிய பீரங்கித் தளங்களைத் தாக்கி அழித்தனர். பல நேச நாட்டுப் போர்க்கப்பல்களும் ஜெர்மானியப் பாதுகாப்பு நிலைகளின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தின. உள்ளூர் பிரெஞ்சு எதிர்ப்பு படையினரும் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளைத் தாக்கினர். இந்த பகுதியில் முன்பு நிறுத்தப்படிருந்த ஜெர்மானியப் படைகளின் பெரும் பகுதி வடபிரான்சு போர்முனைக்கு அனுப்பப்பட்டிருந்ததால், ஜெர்மானியர்களிடமிருந்து பெரிதாக எதிர்ப்பு ஒன்றும் இல்லை. முதல் நாளன்றே 94,000 படை வீரர்களும், 11,000 வண்டிகளும் பிரான்சு மண்ணில் தரையிறங்கி விட்டன. அவை விரைவாக இருபது கிலோ மீட்டர் வரை முன்னேறி தாக்குதல் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தன.

விளைவுகள்

[தொகு]

இத்தாக்குதலின் வெற்றி பாரிசிலிருந்த பிரெஞ்சு எதிர்ப்புப் படையினருக்கு பெருத்த நம்பிக்கையை ஊட்டியது. அவர்கள் ஜெர்மானிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக தங்கள் தாக்குதலைத் தொடங்கினர். ஆகஸ்ட் 25ம் தேதி பாரிஸ் நேச நாட்டுப்படைகளின் வசமாகியது. இப்பகுதியைப் பாதுகாத்து வந்த ஜெர்மானிய 19வது ஆர்மி விரைவாகப் பின்வாங்கியதால் தெற்கு பிரான்சின் பல பகுதிகளை டிராகூன் படை எளிதில் கைப்பற்றியது. மார்சே துறைமுகம் நேச நாட்டுப் படைகள் வசமாகியதும், செப்டம்பர் மாதம் முதல் தளவாடங்கள் அதன் வழியாக நேச நாட்டுப் படைகளுக்கு அனுப்பப்பட்டன. சிக்கலான இந்த நடவடிக்கை எளிதான வெற்றியில் முடிவடைந்தாலும், இன்று ராணுவ வரலாற்றில் இது பெரிதாகப் பேசப்படுவதில்லை.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. A significant number of Canadians also took part, both afloat and in the battles in southern France as members of the bi-national US-Canadian First Special Service Force (a.k.a. The Devil's Brigade).

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராகூன்_நடவடிக்கை&oldid=4071870" இலிருந்து மீள்விக்கப்பட்டது