உள்ளடக்கத்துக்குச் செல்

பெல்ஜியம் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெல்ஜியம் சண்டை
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி
German soldiers pictured with a Vickers Utility Tractor (VUT) of the Belgian Army, and a pile of Belgian rifles and helmets the day after the Belgian surrender, 29 May 1940
பெல்ஜியம் சரணடைந்த மறுநாள் பெல்ஜிய தரைப்படையினர் ஒப்படைத்த பெல்ஜிய சுடுகலன்கள், தலைக்கவசங்கள் மற்றுமொரு விக்கர்ஸ் டிராக்டருடன் ஜெர்மானியப் படை வீரர்கள்
நாள் 10–28 மே 1940
இடம் பெல்ஜியம்
தெளிவான இடாய்ச்சுலாந்திய வெற்றி
  • சுதந்திர பெல்ஜியப் படைகளின் தோற்றம்
நிலப்பகுதி
மாற்றங்கள்
பெல்ஜியத்தை இடாய்ச்சுலாந்து ஆக்கிரமித்தது
பிரிவினர்
 பெல்ஜியம்சரணடைந்தது
பிரான்சு பிரான்சு
 ஐக்கிய இராச்சியம்
 நெதர்லாந்துசரணடைந்தது[1]
நாட்சி ஜெர்மனி நாசி இடாய்ச்சுலாந்து
தளபதிகள், தலைவர்கள்
பிரான்சு மாரீஸ் காமெலின்
பிரான்சுமாகிசீம் வெய்காண்ட்
ஐக்கிய இராச்சியம் கோர்ட் பிரபு
பெல்ஜியம் மூன்றாம் லியோபோல்ட் சரணடைந்தார்
நெதர்லாந்து எச். சி. விங்கெல்மேன் சரணடைந்தார்
நாட்சி ஜெர்மனி கெர்ட் வான் ரண்ட்டுசிட்டட்
நாட்சி ஜெர்மனி ஃபெடார் வான் போக்
பலம்
144 டிவிசன்கள்[2]
13,974 பீரங்கிகள்[2]
3,384 டாங்குகள்[2][3]
2,249 விமானங்கள்[2][4]
141 டிவிஷன்கள்[2]
7,378 பீரங்கிகள்[2]
2,445 டாங்குகள்[2]
5,446 விமானங்கள் (4,020 இயங்கு நிலையில்)[2]
இழப்புகள்
222,443+ (200,000 கைதிகள்)[5][6][7]
~900 விமானங்கள்[8][9]
தனியே தெரியவில்லை (பார்க்க இழப்புகள் பிரிவு)

பெல்ஜியம் சண்டை (Battle of Belgium) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. மே 10-28, 1940ல் நடந்த இச்சண்டையில் நாசி இடாய்ச்சுலாந்து, (ஜெர்மனி) பெல்ஜியம் நாட்டைத் தாக்கிக் கைப்பற்றியது.

செப்டம்பர் 1939ல் நாசி இடாய்ச்சுலாந்து, போலந்தைத் தாக்கிக் கைப்பற்றியதால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. செப்டம்பர் 1939 முதல் மே 1940 வரை நேச நாடுகளும் இடாய்ச்சுலாந்தும் அடுத்த கட்ட மோதலுக்காகக் தயாராகின. இந்த காலகட்டம் போலிப் போர் என்றழைக்கப்பட்டது. இடாய்ச்சுலாந்து அடுத்து பிரான்சைத் தாக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஜெர்மானியப் படைகளை எதிர்கொள்ள பிரிட்டன், பிரான்சிற்குப் படைகளை அனுப்பியது. இந்த படையெடுப்பு இடாய்ச்சுலாந்து-பிரான்சு எல்லையிலுள்ள மசினோ அரண்கோட்டுப் பகுதியில் நடைபெறும் என்று நேசநாடுகள் எதிர்பார்த்தன. ஆனால் இடாய்ச்சுலாந்தின் தளபதிகள் பலம் வாய்ந்த மசினோ அரண்களை நேரடியாக மட்டும் தாக்காமல் அதனைச் சுற்றி வளைத்து பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகள் வழியாகவும் தாக்கத் திட்டமிட்டனர். இந்த இருமுனைத் தாக்குதல் இடாய்ச்சுலாந்தின் மேற்குமுனைக்கான உதவியான ”மஞ்சள் திட்ட”த்தின் (இடாய்ச்சு: Fall Gelb ) ஓர் அங்கமாகும். நேசநாட்டுப் படைகள் பெல்ஜியத்தின் மீதான தாக்குதலே இடாய்ச்சுலாந்தின் முக்கிய தாக்குதல் என நம்பி தங்கள் படைகளில் சிறந்தவற்றை பெல்ஜியத்துக்கு அனுப்பின. இடாய்ச்சுலாந்தின் படைகளை பெல்ஜியத்தில் முறியடிக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். ஆனால் மஞ்சள் திட்டத்தின்படி இது ஒரு ஏமாற்றுத் தாக்குதல். நேசநாட்டுப் படைகளைத் திசை திருப்புவதே இதன் நோக்கம். பெரும்பான்மையான நேசநாட்டுப் படைகள் பெல்ஜியத்துக்குச் சென்றவுடன் இன்னொரு பெரும் ஜெர்மன் படை மசினோ கோட்டை உடைத்து ஆர்டென் காடு வழியாக பிரான்சைத் தாக்கியது. இடாய்ச்சுலாந்தின் இந்த இருமுனைத் தாக்குதலும் இடாய்ச்சுலாந்தியக் கவச படையினரின் மின்னலடித் தாக்குதல் (பிளிடஃசுக்கிரீக்) உத்தியும் நேசநாட்டுப் படைகளை நிலை குலையச் செய்தன. பதினெட்டு நாட்களில் பெல்ஜியம் தாக்குப்பிடிக்க முடியாமல் சரணடைந்தது. அடுத்த மாதம் பிரான்சும் சரணடைந்தது.

போர் ஆயத்தங்கள்

[தொகு]

நேச மற்றும் அச்சு நாடுகளின் போர் உபாயத் திட்டங்களில் பெல்ஜியத்துக்கு முக்கிய இடமளிக்கப்படிருந்தது. முதல் உலகப் போரில் பெல்ஜியத்தை இடாய்ச்சுலாந்து தாக்கியதால்தான் பிரிட்டன் இடாய்ச்சுலாந்துக்கு எதிராக போரில் இறங்கியது. அதன்பின்னர் பல ஆண்டுகள் நேச நாட்டுக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த பெல்ஜியத்தின் நிலையில் 1930களில் மாற்றம் ஏற்பட்டது. 1936ல் பெல்ஜியத்தின் அரசர் மூன்றாம் லியோபோல்டு தனது நாடு இனி நடுநிலை வகிக்கும் என்று அறிவித்தார். இதனால் பெல்ஜியத்துக்கும் மற்ற நேச நாடுகளுக்குமான கூட்டுறவில் விரிசல் விழுந்தது. பெல்ஜியத்தின் ராணுவம் அதிகாரபூர்வமாக பிரான்சு மற்றும் பிரித்தானிய படைத்துறையுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டது. ஆனாலும் இடாய்ச்சுலாந்தால் விளையக் கூடிய தீயவிளைவை உணர்ந்து தன் படைகளை ஆயத்தம் செய்யத் தொடங்கியது. இடாய்ச்சுலாந்து பெல்ஜியம் மீது தாக்கினால் பிரான்சின் கவசப் படைப்பிரிவுகள் விரைந்து சென்று எதிர்த்தாக்குதல் நடத்த வேண்டுமென ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் பிரான்சிற்கும் பெல்ஜியத்துக்கும் ஏற்பட்டது. இந்தத் திட்டதுக்கு ”டைல் திட்டம்” என்று பெயரிடப்பட்டது. இடாய்ச்சுலாந்திய தளபதிகளும் பெல்ஜியத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திருந்தனர். இடாய்ச்சுலாந்தின் மேற்குப் போர்முனை உபாயம் ஃபீல்டு மார்சல் எரிக் வான் மான்சுட்டீனால் உருவாக்கப்பட்டிருந்தது. முன்னர் இடாய்ச்சுலாந்து வகுத்திருந்த மஞ்சள் திட்டத்தின் படி பெல்ஜியத்தின் மீதான் தாக்குதலே மேற்குப் போர்முனையின் முக்கிய தாக்குதல். ஆனால் ஜனவரி 10, 1940ல் மஞ்சள் திட்டத்தின் விவரங்கள் பெல்ஜியப் படைகளின் கையில் சிக்கிவிட்டன. இதனால் மஞ்சள் திட்டம் மாற்றப்பட்டது. பெல்ஜியம் தாக்குதல் திசைதிருப்பும் தாக்குதலாக மாற்றப்பட்டது. ஆர்டென் காடு வழியாக மாசினோ கோட்டைக் கடப்பது முக்கியத் தாக்குதலாக மாற்றப்பட்டது. இப்புதிய திட்டத்திற்கு வகுத்தவர் பெயரே - மான்சுட்டீன் திட்டம் - வைக்கப்பட்டது. இதன்படி இடாய்ச்சுலாந்தியக் கவசப் படைப்பிரிவுகள் நிறைந்த ஆர்மி குரூப் பி ஆர்டென் காடுகளையும், ஆர்மி குரூப் ஏ, பெல்ஜியத்தையும் தாக்க ஏற்பாடானது. பெல்ஜியத்தின் எல்லை அரண்களை வான்குடை வீரர்களைக் கொண்டு தாக்கி அழிப்பதென்றும் இடாய்ச்சுலாந்திய தளபதிகள் திட்டமிட்டனர்.

சண்டையின் போக்கு

[தொகு]
எபென் எமேலைக் கைப்பற்றிய இடாய்ச்சுலாந்திய வான்படை வீரர்கள்

மே 10, 1940 அன்று இரு இடாய்ச்சுலாந்திய ஆர்மி குரூப்புகளும் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. அதிகாலை நான்கு மணியளவில் இடாய்ச்சுலாந்திய வான்படை லுஃப்ட்வாஃபேயின் குண்டுவீசி போர் வானூர்திகள் பெல்ஜியத்தின் வான்படைத் தளங்களையும், தகவல் தொடர்பு மையங்களையும் தாக்கி அழிக்கத் தொடங்கின. பெல்ஜியத்தின் பாதுகாப்பு அரண்களைக் கைப்பற்ற இடாய்ச்சுலாந்திய வான்குடை வீரர்கள் மிதவை வானூர்திகள் மூலம் தாக்கினர். எபென் எமேல் போன்ற பெல்ஜிய எல்லைக் கோட்டைகள் இவ்வாறு இடாய்ச்சுலாந்தியர் வசம் வீழ்ந்தன. அடுத்த இரு நாட்களில் இடாய்ச்சுலாந்தியப் படைகள் பெல்ஜிய போர்முனையில் அனைத்து பகுதிகளிலும் பெல்ஜிய பாதுகாப்புப் படைகளை முறியடித்து முன்னேறின. இடாய்ச்சுலாந்தின் தாக்குதல் செய்தி கேட்டவுடன் பிரான்சின் படைப்பிரிவுகள் பெல்ஜியத்துக்கு விரைந்து வந்து இடாய்ச்சுலாந்தியப் படைகளுடன் மோதின. மே 11 அன்று பிரித்தானியப் படைகளும் போர்முனையை அடைந்து விட்டன. தாக்குதல் தொடங்கி இரு நாட்களுள் பெல்ஜிய எல்லைப் பகுதிகள் இடாய்ச்சுலாந்து வசம் வந்தன. முன்பு திட்டமிட்டபடி பெல்ஜியப் படைகள் இரண்டாம் கட்ட அரண் நிலையான டைல் கோட்டிற்குப் பின்வாங்கின.

மேற்கு பெல்ஜியத்தில் இடாய்ச்சுலாந்திய டாங்குகள்

அடுத்த மூன்று நாட்களில் (மே 12-14) மத்திய பெல்ஜியத்தின் சமவெளிகளில் இரு தரப்பினரும் மோதினர். இம்மோதல்களில் யாருக்கும் தெளிவான வெற்றி கிட்டவில்லை. ஹன்னூட்டிலும், ஜெம்புளூவிலும் நடந்த சண்டைகளின் மூலம் மான்சுட்டீன் திட்டத்தின் திசை திருப்பும் முயற்சிக்கு வெற்றி கிட்டியது. முதலாம் நேசநாட்டு ஆர்மி குரூப்பின் கவனம் முழுவதும் பெல்ஜியத்தில் இருந்தபோது, இன்னொரு முக்கிய போர்முனையான ஆர்டென் காடுகளில் இடாய்ச்சுலாந்தின் ஆர்மி குரூப் பி எளிதில் நேசநாட்டு படைகளை முறியடித்து முன்னேறத் தொடங்கியது. இடாய்ச்சுலாந்திய படைகளின் இடுக்கிப் பிடிக்குள் பெரும்பான்மையான நேச நாட்டுப் படைகள் சிக்கிக் கொண்டன. மே 15ல் செடானில் ஆர்மி குரூப் ஏ நேச நாட்டு அரண் கோட்டை தகர்த்த பின்னர் அட்லாண்டிக் கடற்கரையை நோக்கிப் பின்வாங்குவதைத் தவிர நேச நாட்டு படைகளுக்கு வேறு வழியில்லை. அடுத்த ஒரு வாரம் அவை பலமுறை திருப்பித் தாக்கி இடாய்ச்சுலாந்தியப் படைகளின் முன்னேற்றத்தை நிறுத்த முயற்சி செய்தன. ஆனால் அத்தாக்குதல்களுக்குப் பலன் கிட்டவில்லை. இடாய்ச்சுலாந்துப் படைகள் இதன் பின்னர் தங்கு தடையின்றி முன்னேறத் தொடங்கின. நேச நாட்டுப் படைகள் மூன்று கட்டங்களாக கடற்கரை நோக்கி பின்வாங்கின; பெரும்பாலான பெல்ஜிய பிரதேசங்கள் இடாய்ச்சுலாந்தின் வசமாகின.

ஆங்கிலக் கால்வாயை நோக்கி இடாய்ச்சுலாந்திய முன்னேற்றம்

மே 22-24ல் இறுதிகட்ட சண்டைகள் நடைபெற்றன. பெல்ஜியம் சண்டையின் முடிவு இதற்குள் அனைவருக்கும் தெளிவாகி விட்டது. நேச நாட்டுப் படைகளால் இடாய்ச்சுலாந்திய முன்னேற்றத்தைக் காலந்தாழ்த்த முடியுமேயன்றி நிறுத்த முடியாது என்பதை நேச நாட்டுத் தலைவர்களும் தளபதிகளும் உணர்ந்தனர். முடிந்தவரை தங்கள் படைகளைப் பத்திரமாக இங்கிலாந்திற்குத் தப்பிக்க வைக்க வேண்டுமென விரும்பினர். இடாய்ச்சுலாந்தியப் படைகளின் விரைவான முன்னேற்றம் பெல்ஜியப் படைகளை பிரிட்டன், பிரான்சு படைகளிடமிருந்து பிரித்து விட்டது. மே 26-27ல் பெல்ஜியப் படைகள் முற்றிலுமாக சிதறிவிட்டன. இனிமேல் தாக்குபிடிக்க முடியாதென்பதை உணர்ந்த மூன்றாம் லியோபோல்டு மே 28 அதிகாலை நான்கு மணியளவில் பெல்ஜியம் சரணடைவதாக அறிவித்தார்.

விளைவுகள்

[தொகு]

சரணடைந்த பெல்ஜியம் நாசி இடாய்ச்சுலாந்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு 1945 வரை தொடர்ந்தது. மூன்றாம் லியோபோல்டு சரணடைந்ததைப் பல பெல்ஜியர்கள் ஏற்கவில்லை. பெல்ஜியத்திலிருந்து தப்பி தொடர்ந்து நாசிக்களை எதிர்த்துப் போராடினர். சுதந்திர பெல்ஜியப் படைகள் என்றழைக்கப்பட்ட இவர்கள் நேச நாட்டுப் படைகளுடன் இணைந்து இரண்டாம் உலகப்போரின் பல்வேறு களமுனைகளிலும் போரிட்டனர். பெல்ஜியம் சரணடைந்தபின் அந்நாட்டில் மீதமிருந்த நேச நாட்டுப் படைகளின் நிலை மோசமாகியது. இடாய்ச்சுலாந்தியர்களிடம் அவர்கள் சிக்காமலிருக்க டைனமோ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பெரும்பாலானோர் ஆங்கிலக் கால்வாய் வழியாக இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றனர். பெல்ஜியம் வீழ்ந்த பின் பிரான்சு சண்டையில் பிரான்சும் தோல்வியடைந்து ஜூன் 1940ல் இடாய்ச்சுலாந்திடம் சரணடைந்தது.

இழப்புகள்

[தொகு]
பெல்ஜிய சரணடைவு பேச்சுவார்த்தை
இழப்புகள் பெல்ஜியம் பிரான்சு பிரிட்டன் இடாய்ச்சுலாந்து
மாண்டவர் 6093 90000 68111 10232
காயமடைந்தவர் 15850 200000 8463
காணாமல் போனவர் 500 42523
போர் கைதிகள் 200000 1900000 0
இழந்த விமானங்கள் 112 264 344 432

குறிப்பு:
1) இடாய்ச்சுலாந்து, பிரிட்டன், மற்றும் பிரான்சின் இழப்புகள் மொத்த மேற்குப் போர்முனைக்குத் தரப்பட்டுள்ளது.
2) பிரிட்டனின் இழப்புகளுள் மாண்டவர், காயமடைந்தவர், கைதானவர் என்று பிரித்தறியப்படவில்லை

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Contributed lightly armed infantry units retreating from Dutch territory. Also committed the Dutch Air Force on few, ineffective and costly missions. Gunsburg 1992, p. 216.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 The Belgian Army consisted of 22 divisions, the French provided 104, the British provided 10, and the Dutch 8 divisions.Holmes 2005, p. 324. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Holmes 2005, p. 324" defined multiple times with different content
  3. The Belgian Army had 10 tanks, the French 3,063, the British 310 and the Dutch 1 tank.
  4. The Belgian Air Force consisted of 250 aircraft, the French Air Force 1,368, the British Royal Air Force provided 456 aircraft and the Dutch Air Force 175.
  5. The Belgian Army sustained 6,093 men killed, 15,850 men wounded in action, more than 500 men missing and 200,000 men captured, of which 2,000 died in captivity.Keegan 2005, p. 96.
  6. Ellis 1993, p. 255.
  7. French and British losses on Belgian territory are unknown.Keegan 2005, p. 326.
  8. The Belgian Air Force lost 83 planes on the ground on 10 May; 25 lost in aerial combat between 10–15 May and four lost in the air between 16–28 May. Hooton 2007, pp. 49-53.
  9. French and British losses are not certain, however the French Air Force lost 264 aircraft between 12–25 May and 50 for 26 May – 1 June while the British Royal Air Force lost 344 and 138 aircraft in these respective periods. Hooton 2007, p. 57.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்ஜியம்_சண்டை&oldid=3582746" இலிருந்து மீள்விக்கப்பட்டது