உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஃகன் சண்டை

ஆள்கூறுகள்: 50°46′N 6°6′E / 50.767°N 6.100°E / 50.767; 6.100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆஹன் சண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆஹன் சண்டை
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி

ஆஹன் தெருக்களில் அமெரிக்க எந்திரத் துப்பாக்கிக் குழு ஒன்று சண்டையில் ஈடுபடுகிறது (அக்டோபர் 15, 1944)
நாள் அக்டோபர் 2-21, 1944
இடம் 50°46′N 6°6′E / 50.767°N 6.100°E / 50.767; 6.100
ஆஹன் , ஜெர்மனி
அமெரிக்க வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா  ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா லீலாண்ட் ஹோப்ஸ்
ஐக்கிய அமெரிக்கா கிளாரென்ஸ் ஹ்யூப்னர்
ஐக்கிய அமெரிக்கா கொர்ட்னி ஹோட்ஜஸ்
நாட்சி ஜெர்மனி கெரார்ட் வில்க்
பலம்
தெரியவில்லை ~ 44,000
இழப்புகள்
~ 5,000 ~. 5,000
5,600 போர்க்கைதிகள்

ஆஃகன் சண்டை (ஆஹன் சண்டை; Battle of Aachen) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நேச நாடுகளுக்கும், நாசி ஜெர்மனிக்கும் நடந்த ஒரு சண்டை. அக்டோபர் 2-21, 1944ல் நடைபெற்ற இந்த சண்டையில் அமெரிக்கப் படைகள் ஜெர்மனியின் ஆஹன் நகரைத் தாக்கி கைப்பற்றின.

1944ல் நேச நாட்டுப் படைகள் ஜெர்மனியின் ஆக்கிரமிலிருந்து பிரான்சு நாட்டை முழுவதுமாக மீட்டன. அடுத்து ஜெர்மனியை நேரடியாகத் தாக்கத் திட்டமிட்டன. பிரான்சுக்கான சண்டைகளில் பெரும் இழப்புகளைச் சந்தித்த ஜெர்மானியத் தரைப்படை பிரெஞ்சு-ஜெர்மானிய எல்லை அரணான சிக்ஃபிரைட் கோட்டிற்குப் பின்வாங்கி அடுத்த கட்ட மோதலுக்குத் தயாரானது. சேதமடைந்திருந்த படைப்பிரிவுகள் மறு சீரமைக்கப்பட்டு நேச நாட்டுத் தாக்குதலை எதிர்கொள்ள மொத்தம் 2,30,000 ஜெர்மானிய வீரர்கள் மேற்கு எல்லையில் நிறுத்தப்பட்டிருந்தனர். செப்டம்பர் 1944ல் அமெரிக்கப்படைகள் பிரெஞ்சு-ஜெர்மானிய எல்லையருகே உள்ள ஆஹன் நகரைத் தாக்கத் தொடங்கின. அப்போதிருந்த ஆஹன் நகர ஜெர்மானியத் தளபதி அமெரிக்கர்களிடம் சரணடையை முடிவு செய்தார். ஆனால் அவரது நோக்கம் ஜெர்மானிய எஸ். எஸ் படைகளுக்குத் தெரிந்து விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு அவருக்குப் பதில் கர்னல் கெரார்ட் வில்க் ஆஹன் நகரத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அக்டோபர் 2ம் தேதி அமெரிக்க முதலாம் ஆர்மியின் தாக்குதல் ஆரம்பமாகியது

அமெரிக்கத் தளபதிகள் 1வது மற்றும் 30வது காலாட்படை டிவிசன்களைக் கொண்டு இரு திசைகளிலிருந்து ஆஹன் நகரைச் சுற்றி வளைத்து பின் கைப்பற்றத் திட்டமிட்டனர். ஜெர்மனியின் 81வது கோர் ஆஹன் நகரைப் பாதுகாத்து வந்தது. சண்டையின் ஆரம்பத்தில் இதில் நான்கு காலாட்படை டிவிசன்களும் இரண்டு எண்ணிக்கை குறைவான கவசப் படைப்பிரிவுகளும் இடம்பெற்றிருந்தன. சண்டை நடந்து கொண்டிருந்த போது மேலும் ஒரு கவச டிவிசன், ஒரு கவசஎறிகுண்டாளர் டிவிசன், முதலாவது எஸ். எஸ். அடால்ஃப் ஹிட்லர் டிவிசன் (ஹிட்லரின் மெய்க்காப்பாளர்கள்) போன்ற படைப்பிரிவுகள் (மொத்தம் 24,000 வீரர்கள்) ஆஹனுக்கு அனுப்பபட்டன. அமெரிக்கப் படைகளை விட ஜெர்மானியப் படைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், நகரமெங்கும் கட்டப்பட்டிருந்த அரண்நிலைகள் (pillbox) அவர்களுக்கு சாதமாக அமைந்தன.

அமெரிக்க 30வது டிவிசன் அக்டோபர் 2ம் தேதி வடதிசையிலிருந்து ஆஹன் நகரைத் தாக்கியது. ஜெர்மானியர்களின் கடும் எதிர்த்தாக்குதல் அதன் முன்னேற்றத்தைத் தடை செய்தது. அமெரிக்கர்களின் பீரங்கித் தாக்குதலும், வான்வழி குண்டுவீச்சும் ஜெர்மானியப் பாதுகாவலர்களைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. வடக்கில் சண்டை நடந்துகொண்டிருக்கும் போதே அக்டோபர் 9ம் தேதி தெற்கிலிருந்து அமெரிக்க 1வது டிவிசன் தன் தாக்குதலைத் தொடங்கியது. இரண்டு நாட்களில் அதற்கு அளிக்கப்பட்டிருந்த இலக்குகளை எட்டியபின், 30வது டிவிசனுடன் கைகோர்த்து நகரைச் சுற்றி வளைக்கக் காத்திருந்தது. ஆனால் 30வது டிவிசனால் குறித்த நேரத்துக்குள் அதற்குக் கொடுக்கப்பட்டிருந்த இலக்குகளை அடைய முடியவில்லை. மேலும் ஐந்து நாட்கள் கடுமையான சண்டைக்குப் பின்னரே இரு படைப்பிரிவுகளும் கைகோர்க்க முடிந்தது. இச்சண்டை நடந்து கொண்டிருக்கும் போது அமெரிக்க பீரங்கிகள் ஆஹன் நகரின் மீது தொடர்ந்து குண்டு வீசின. இக்காலகட்டத்தில் சுமார் 153 டன் எடையுள்ள 5000 குண்டுகள் நகரின் மீது வீசப்பட்டன. அக்டோபர் 16ம் தேதி இரு அமெரிக்க டிவிசன்களும் சேர்ந்து நகருக்குள் முன்னேறத் தொடங்கின.

அக்டோபர் 16-21ல் ஆஹன் நகரத் தெருக்களில் இரு தரப்பினருக்கும் கடும் சண்டை நிகழ்ந்தது. நகரெங்கும் கட்டப்பட்டிருந்த அரண்நிலைகள், வீடுகளின் நிலவறைகள், பதுங்குகுழிகள், பாதாளச் சாக்கடைகள், போன்றவற்றிலிருந்து தாக்கும் ஜெர்மானியப் படைகளைச் சமாளித்து அமெரிக்கப் படைகள் மெல்ல நகரின் மையப்பகுதியை நோக்கி முன்னேறின. கடும் சண்டைக்குப்பின் 21ம் தேதி ஜெர்மானியத் தளபதி மில்க் ஆஹன் நகர் சரணடைவதாக அறிவித்தார். இச்சண்டையில் இரு தரப்பிலும் தலா 5,000 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 5,000 ஜெர்மானியப் படைவீரர்கள் கைது செய்யப்பட்டனர். ஆஹன் நகர் அமெரிக்கர் வசமானாலும், ஜெர்மனியின் உட்பகுதியுள் நேசநாட்டு முன்னேற்றம் தடைபட்டது.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆஹன் சண்டை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஃகன்_சண்டை&oldid=3582196" இலிருந்து மீள்விக்கப்பட்டது