உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டர்கோ நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்டர்கோ நடவடிக்கை
சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் பகுதி
நாள் செப்டம்பர் 22அக்டோபர் 1, 1944
இடம் கலே, பிரான்சு
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
கனடா கனடா
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்
செருமனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
கனடா டேனியல் ஸ்ப்ரை செருமனி லுட்விக் ஷ்ரோயடர்
பலம்
7,500
இழப்புகள்
~ 260 9,128 போர்க்கைதிகள்

அண்டர்கோ நடவடிக்கை (Operation Undergo) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு போர் நடவடிக்கை. சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் பிரான்சின் கலே துறைமுக நகரை நேசநாட்டுப் படைகள் நாசி ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றின.

கனடியப் படைகள் ஆங்கிலக் கால்வாய் கடற்கரையில் அமைந்திருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகங்களை நாசி ஜெர்மனியிடமிருந்து கைப்பற்ற முயன்றன. டியப், லே ஆவர், போலோன் ஆகிய துறைமுகங்களைக் கைப்பற்றிய பின் கலே துறைமுகத்தை அணுகின. ஹிட்லர் “கோட்டைகள்” என அறிவித்திருந்த துறைமுகங்களில் கலேவும் ஒன்று. அவற்றில் உள்ள ஜெர்மானியப் படைகள் சரணடையவோ காலி செய்யவோ கூடாதென்று உத்தரவிட்டிருந்தார். இதனால் கலேயின் ஜெர்மானியப் பாதுகாவல் படைகள் பின்வாங்காமல் நேசநாட்டுப் படைகளை எதிர்த்தன.

கலே நகரைக் கைப்பற்றும் முயற்சிக்கு அண்டர்கோ நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. போலோன் நகரைக் கைப்பற்ற நடந்த சண்டையின் போது கையாண்ட அதே உத்திகளை இச்சண்டையிலும் நேசநாட்டுப் படைகள் கையாண்டன. நகரினை தொடர் குண்டுவீச்சுக்கு உள்ளாக்கி, ஜெர்மானியப் படைகளின் மன உறுதியைக் குலைத்த பின்னர் தரைவழியே தாக்கின. இத்தாக்குதலில் கனடிய 7வது மற்றும் 8வது தரைப்படை பிரிகேடுகள் ஈடுபட்டன. செப்டம்பர் 22ம் தேதி கலே மீது குண்டுவீச்சு தொடங்கியது. மூன்று நாட்கள் கழித்து தரைவழித் தாக்குதல் ஆரம்பமாகியது. கனடியப் படைகள் சிறிது சிறிதாக நகரினுள் முன்னேறின. செப்டம்பர் 29ம் தேதி பொதுமக்களை நகரிலிருந்து காலி செய்வதற்காக சிறிது நேரம் போர் நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது. சண்டை மீண்டும் துவங்கிய பின்னர் ஜெர்மானியப் படைகள் விரைவாக சரணடைந்தன. செப்டம்பர் 30ம் தேதி கலே நகர் முழுவதும் நேசநாட்டுப் படைகள் வசமானது.

கலே நகருக்கு அருகில் கெப் கிரி நெஸ் (Cap Griz Nez) என்ற இடத்தில் அமைந்திருந்த ஜெர்மானிய கனரக பீரங்கிக் குழுமங்களும் தாக்கப்பட்டு செப்டம்பர் 29ல் கைப்பற்றப்பட்டன. இச்சண்டையில் கலே துறைமுகத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருந்ததால் அதனை உடனே கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியவில்லை. நவம்பர் மாத நடுவில் தான் இத்துறைமுகம் மீண்டும் திறக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டர்கோ_நடவடிக்கை&oldid=2266977" இலிருந்து மீள்விக்கப்பட்டது