ஆக் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக் சண்டை
நெதர்லாந்து சண்டையின் பகுதி

வால்கன்பர்கில் நொறுங்கிக் கிடக்கும் ஜெர்மானிய ஜங்கெர்ஸ் 52 ரக விமானம்
நாள் மே 10, 1940
இடம் டென் ஹாக், நெதர்லாந்து
கீழ்நிலை உத்தியளவில் நெதர்லாந்திய வெற்றி
பிரிவினர்
நெதர்லாந்து நெதர்லாந்து நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
நெதர்லாந்து ஹென்றி வின்கெல்மான் நாட்சி ஜெர்மனி ஹன்ஸ் கிராஃப் வான் ஸ்போனெக்
பலம்
11,100 பேர் (3 டிவிசன்கள்)
2 கவச வண்டி படைப்பிரிவுகள்
3,000 வான்குடை வீரர்கள்
இழப்புகள்
515 (மாண்டவர்)
~1,000 (காயமடைந்தவர்)
134-400 (மாண்டவர்)
700 (காயமடைந்தவர்)
1,745 (கைது செய்யப்படவர்)
125 போக்குவரத்து விமானங்கள் அழிந்தன, 47 சேதமடைந்தன[1]

ஆக் சண்டை அல்லது ஹெய்க் சண்டை (Battle for The Hague) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது நெதர்லாந்து சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் வான்குடை வீரர்கள் நெதர்லாந்தின் டென் ஹாக் நகரைக் கைப்பற்ற முயன்று தோற்றனர்.

மே 10, 1940 அன்று ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் தொடங்கியது. பெல்ஜியம், பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு நாடுகளையும் ஒரே நேரத்தில் ஜெர்மானியப் படைகள் தாக்கின. நெதர்லாந்தை மிக விரைவாகத் தோற்கடிக்க விரும்பினர் ஜெர்மானியத் தளபதிகள். வான்குடை வீரர்களைக் கொண்டு டென் ஹாக் நகரையும் அதன் சுற்று வட்டாரங்களையும் கைப்பற்றினால் நெதர்லாந்து (டச்சு) அரசாங்கமும் அரசியும் சரணடைந்து விடுவார்கள் என்று எண்ணினார்கள். இதற்காக முதலில் ஹாக் நகரைச் சுற்றியுள்ள மூன்று விமான ஓடுதளங்களைக் - யிப்ரன்பர்க், வால்க்கன்பர்க் மற்றும் ஓக்கன்பர்க் - கைப்பற்றத் திட்டமிட்டனர். இதற்கான பொறுப்பு 22வது வான்குடை டிவிசனிடம் ஒப்படைக்கப்பட்டது. மே 10ம் தேதி காலை 6.00 மணியளவில் ஜெர்மானிய வான்குடை வீரர்கள் மூன்று ஓடுதளங்களின் மீது தரையிறங்கி கைப்பற்றினர். ஆனால் ஜெர்மானிய போர்த் தலைமையகம் எதிர்பார்த்தது போல டச்சு அரசும், ராணுவமும் சரணடையவில்லை. மாறாக கடும் எதிர்த்தாக்குதல் நடத்தத் தொடங்கின.

நெதர்லாந்து படையினரின் எதிர்த்தாக்குதலால் ஹாக் நகரம் ஜெர்மானியர் கையில் வீழாமல் தப்பியது. மே 10 பகல் முழுவதும் இரு தரப்பினருக்கும் கடும் சண்டை நடைபெற்றது. இதில் ஜெர்மானிய வான்குடை வீரர்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டது. அன்று இரவு மூன்று ஓடுதளங்களையும் டச்சுப் படைகள் ஜெர்மானியர் வசமிருந்து மீட்டன. மீதமிருந்த ஜெர்மானியப் படைகள், அருகிலிருந்த கிராமங்களுக்குப் பின்வாங்கின. பின்னர் ராட்டர்டேம் நகரைக் கைப்பற்றுமாறு அவற்றுக்கு உத்தரவிடப்பட்டது. ஹாக் சண்டையில் டச்சுப் படைகள் வெற்றியடைந்தாலும் ஜெர்மானியத் தரைப்படைகள் வேறு பகுதிகளில் எளிதில் ஊடுருவி வேகமாக முன்னேறியதால், டச்சு அரசாங்கம் சில நாட்களுக்குப்பின் சரணடைந்தது.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. E.R Hooton 2007 Vol. 2, p. 50.

மேற்கோள்கள்[தொகு]

  • Hooton, E.R (2007). Luftwaffe at War; Blitzkrieg in the West: Volume 2. London: Chervron/Ian Allen. ISBN 978-1-85780-272-6.
  • Brongers, E.H. (2004). The Battle for the Hague 1940. Uitgeverij Aspekt BV. ISBN 90-5911-307-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்_சண்டை&oldid=2695802" இருந்து மீள்விக்கப்பட்டது