உள்ளடக்கத்துக்குச் செல்

தியப் திடீர்த்தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டியப் திடீர்த்தாக்குதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டியப் திடீர்த்தாக்குதல்
இரண்டாம் உலகப் போரின் வடமேற்கு ஐரோப்பிய போர்த்தொடரின் பகுதி

டியப்பின் செர்ட் கடற்கரையில் நேச நாட்டுப் படைகள் பின்வாங்கிய போது விட்டுச் சென்ற ஒரு டிங்கோ கண்காணிப்பு வண்டி கேட்பாரின்றி கிடக்கிறது.
நாள் ஆகஸ்ட் 19, 1942
இடம் டியப், பிரான்சு
கீழ்நிலை உத்தியளவில் ஜெர்மானிய வெற்றி
பிரிவினர்
 கனடா
 ஐக்கிய இராச்சியம்
 ஐக்கிய அமெரிக்கா
 போலந்து
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் மவுண்ட்பேட்டன் பிரபு
கனடா ஜே. ஹெச். ராபர்ட்ஸ்
ஐக்கிய இராச்சியம் டிராஃபர்ட் லீக் மல்லோரி
நாட்சி ஜெர்மனி கெர்ட் வான் ரன்ஸ்டட்
நாட்சி ஜெர்மனி கொன்ராட் ஹாஸ்சே
பலம்
தரைப்படை

 கனடா
2வது கனடிய தரைப்படை டிவிஷன்

 ஐக்கிய இராச்சியம்
நம்பர் 3. கமாண்டோ
நம்பர் 4. கமாண்டோ(* 50 அமெரிக்க ரேஞ்சர்களுடன்)

பிரித்தானிய கடற்படை
237 கப்பல்கள் மற்றும் தரையிறங்கு பரிசல்கள்

பிரித்தானிய விமானப்படை
74 ஸ்குவாட்ரன்கள்
~10,500 படைவீரர்கள்

நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
302வது நகராத தரைப்படை டிவிஷன்
~1,500 படைவீரர்கள்
இழப்புகள்
தரைப்படையினர்
கனடா
3,367
ஐக்கிய ராஜ்யம்:
275 கமாண்டோக்கள்
ஐக்கிய அமெரிக்கா
3 (மாண்டவர்)
பிரித்தானிய கடற்படை
1 டெஸ்டிராயர் வகை கப்பல்
33 தரையிறங்கு படகுகள்
550 பேர்
பிரித்தானிய விமானப்படை
64 ஸ்பிட்ஃபயர்கள்
20 ஹரிக்கேன்கள்
6 பாஸ்ட்ன் குண்டுவீசிகள்
10 மஸ்டாங்குகள்
62 (மாண்டவர்), 30 (காயமடைந்தவர்), 17 (கைப்பற்றப்பட்டவர்)
தரைப்படையினர்
311 (மாண்டவர்),
280 (காயமடைந்தவர்)
லுஃப்ட்வாஃபே
23 எஃப் டபிள்யூ 190கள்
25 டோர்னியர் டி.ஒ. 217கள்

ஜூபிலி நடவடிக்கை (Operation Jubilee) என்றழைக்கப்படும் டியப் திடீர்த்தாக்குதல் (Dieppe Raid) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு திடீர்த்தாக்குதல். இது ரட்டர் நடவடிக்கை (Operation Rutter) மற்றும் டியப் சண்டை (Battle of Dieppe) என்றும் அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் 19, 1940ல் நாசி ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பிரான்சு நாட்டின் டியப் துறைமுகத்தின் மீது நேச நாட்டுப் படைகள் நடத்திய திடீர்த்தாக்குதல் இது. 6000 தரைப்படையினரும் 237 பிரித்தானிய கடற்படை கப்பல்களும் 74 பிரித்தானிய விமானப்படை ஸ்குவாட்ரன்களும் இந்த நடவடிக்கையில் பங்கேற்றன. ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த ஒரு நகரைக் கைப்பற்றி சில நாட்கள் தக்க வைக்கமுடியும் என்பதை நிரூபிக்கவும். கடல்வழிப் படையெடுப்பு நடவடிக்கைளில் போதிய அனுபவம் பெறவும் இத்திடீர்த்தாக்குதல் நடத்தப்பட்டது. இவை தவிர கடல்வழித் தாக்குதலை ஜெர்மானியப் படைகள் எப்படி எதிர்கொள்ளுகின்றன என்பதை கணிப்பது, கைப்பற்றிய ஜெர்மன் போர்க்கைதிகளிடமிருந்து ராணுவ ரகசியங்களைத் தெரிந்து கொள்வது போன்ற நோக்கங்களும் இந்த நடவடிக்கைக்கு இருந்தன.

இந்த நோக்கங்கள் எதுவும் நிறைவேறவில்லை. அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய இந்த திடீர்த்தாக்குதல் காலை 10.50 வரைதான் நீடித்தது. தயார் நிலையிலிருந்த ஜெர்மானியப் படைகளின் உடனடி எதிர்வினை, தரையிறங்கு நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதில் நடந்த தவறுகள் ஆகியவற்றால் நேச நாட்டுப் படைகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டது. பங்கேற்ற 6000 வீரர்களில் கிட்டத்தட்ட 60 சதவிகித வீரர்கள் மாண்டனர், காயமடைந்தனர் அல்லது ஜெர்மானியர்களால் கைது செய்யப்பட்டனர். 34 பிரித்தானிய கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன. இந்த திடீர்த்தாக்குதல் நேச நாட்டுப் படைகளுக்கு தோல்வியில் முடிவடைந்தாலும், இதில் கற்ற பாடங்கள் அடுத்த சில வருடங்களில் நடைபெற்ற டார்ச் நடவடிக்கை மற்றும் ஓவர்லார்ட் நடவடிக்கை போன்ற கடல்வழிப் படையெடுப்புகளை வெற்றிகரமாக நடத்த உதவின.

பின்புலம்

[தொகு]

1940ல் பிரான்சு சண்டையில் வெற்றி பெற்றதன் மூலம் ஜெர்மனி பிரான்சு நாட்டை ஆக்கிரமித்தது. டன்கிர்க் துறைமுகத்திலிருந்து மயிரிழையில் தப்பிய பிரித்தானிய படைகள் அடுத்த இரு ஆண்டுகளுக்கு மீண்டும் ஜெர்மனியை எதிர்கொள்ள ஆயத்தங்களில் ஈடுபட்டன. பிரித்தானியச் சண்டையில் தோல்வியடைந்தபின் நாசி ஜெர்மனியின் கவனம் கிழக்கு நோக்கி திரும்பியது. ஹிட்லர் ஜூன் 1941ல் சோவியத் யூனியன் மீது படையெடுத்தார். ஜெர்மனியின் படைகளில் பெரும்பாலானவை கிழக்குப் போர்முனையில் ஈடுபட்டிருந்த போது ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சின் மேற்குக் கடற்கரையில் ஒரு சிறு தாக்குதல் நடத்த நேச நாடுகள் முடிவு செய்தன. அடுத்த சில வருடங்களில் கடல்வழியாக பிரான்சின் மீது படையெடுக்க வேண்டுமெனற மூல உபாயத்தை நேச நாடுகள் கொண்டிருந்தன. இதற்கு ஒத்திகையாகவும், நீர், நில போர் நடவடிக்கைகளின் நடைமுறைச் சிக்கல்களை அறிந்து கொள்ளவும் இத்தகைய தாக்குதல் அவசியமானதாயிற்று. அதுவரை கனடிய படைகள் எந்த முக்கிய போரிலும் கலந்து கொள்ளவில்லையென்பதால் அவற்றை இத்திடீர்தாக்குதலுக்குப் பயன்படுத்த நேச நாட்டு தளபதிகள் முடிவு செய்தனர்.

டியப் துறைமுகம் ஆங்கிலக் கால்வாய் ஓரத்தில் அமைந்திருந்ததால் அங்கு தாக்குதல் நிகழ்த்துவது என்று முடிவானது. அந்நகரம் பிரித்தானிய வான்படை விமானங்களின் தாக்கு எல்லைக்குள் அமைந்திருந்ததும் சாதகமாகப் போனது. ரட்டர் நடவடிக்கை எனவும் பின்பு ஜூபிலி நடவடிக்கை எனவும் குறிப்பெயரிடப்படப்பட்ட இத்திடீர்த்தாக்குதலுக்கான திட்டம் மவுண்ட்பேட்டன் பிரபுவின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தலைமையகத்தால் தயாரிக்கப்பட்டது. 5000 கனடிய தரைப்படை வீரர்கள், 1000 பிரித்தானிய தரைப்படை வீரர்கள், 50 அமெரிக்க ரேஞ்சர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களை 237 பிரித்தானிய போர்க்கப்பல்கள் மூலம் டியப் கடற்கரையில் இறக்கிவிட திட்டமிடப்பட்டது. அவர்கள் தரையிறங்கும்முன் துறைமுகத்தின் இருபுறமும் அமைந்துள்ள ஜெர்மானியக் கடற்கரை பீரங்கிகளை அழிக்கும் பணி நம்பர் 3 மற்றும் நம்பர் 4 கமாண்டோ படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்கபப்ட்டது. தாக்குதல் பகுதி நீலம், சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சைக் கடற்கரைகள் என்று நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. டியப்பின் ஜெர்மானியப் பாதுகாவலர்களுக்குத் தாக்குதல் நடக்கப் போகிறதென்று பிரெஞ்சு இரட்டை நிலை உளவாளிகள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தபடியால், அவர்கள் தயார் நிலையில் இருந்தனர். கடற்கரையோரமாக எங்கெல்லாம் படைகள் தரையிறங்கக் கூடுமோ அங்கெல்லாம் ஜெர்மானிய அரண்கள் நிறுவப்பட்டன. டியப் பிரதேசம் நேச நாட்டுப் படைகளை அழிக்க ஒரு பெரும் பொறியாக மாறியிருந்தது.

சண்டையின் போக்கு

[தொகு]

ஆகஸ்ட் 19 அதிகாலை 4.50 மணியளவில் இந்த திடீர்த்தாக்குதல் தொடங்கியது. தரையிறங்கியவுடன் நம்பர் 3 மற்றும் நம்பர் 4 கமாண்டோ படைப்பிரிவுகள் இலக்குப் பகுதியின் இருபுறமிருந்த கடற்கரை பீரங்கி குழுமங்களைத் தாக்கின. இதில் நம்பர் 3 கமாண்டோ பிரிவு கிழக்குப்புற பீரங்கிகளைத் தாக்கி தோல்வி கண்டது. நம்பர் 4 கமாண்டோ பிரிவு மேற்குப்புற பீரங்கிகளைத் தாக்கி அழித்தது. அடுத்து நீலக்கடற்கரையில் தரையிறங்கிய ராயல் கனடிய ரெஜிமண்ட் ஜெர்மானியப் படைகளின் கடும் எதிர்த்தாக்குதலை எதிர் கொண்டது. இப்பிரிவில் இருந்த பெரும்பாலான வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர். பச்சைக் கடற்கரையில் தரையிறங்கிய தெற்கு சாஸ்காட்ச்சவேன் ரெஜிமண்டாலும் கடும் ஜெர்மானிய குண்டுவீச்சை எதிர்த்து முன்னேற முடியவில்லை. அடுத்து தரையிறங்கிய கனடிய ஹைலாண்டர் ரெஜிமண்டுக்கும் இதே நிலை ஏற்பட்டது. பெருத்த இழப்புகளுக்குப் பின்னர் இரு படைப்பிரிவுகளும் கடற்கரைக்குப் பின்வாங்கின.

5.20 அளவில் நேசநாட்டு தாக்குதல் படையின் முதன்மைப் படைப்பிரிவுகள் டியப் கடற்கரைகளில் தரையிறங்கத் தொடங்கின. ஆனால் அவைகளாலும் ஜெர்மானியத் தாக்குதலை சமாளித்து முன்னேற முடியவில்லை. தாக்குதலுக்காகக் கொண்டுவரப்பட்ட டாங்குகள் தரையிறங்கினாலும் டாங்கு எதிர்-தடைகளால் முன்னேற முடியாமல் சிக்கிக் கொண்டன. சில மணி நேரம் முயன்றும் நேச நாட்டுப் படைகளால் கடற்கரையைத் தாண்டி முன்னேற முடியவில்லை. ஜெர்மானியர்களின் கண்களை மறைக்க போர்க்கப்பல்கள் உருவாக்கியிருந்த அடர்த்தியான புகை மண்டலம் நேச நாட்டு படைகளின் பார்வையையும் மறைத்து விட்டது. தங்கள் முதன்மைப்படைகள் கடற்கரையில் சிக்கியிருப்பதை அறியாத நேச நாட்டு தளபதிகள் இருப்புப் படைகளை 7.00 மணியளவில் தரையிறக்கினர். அவைகளும் ஜெர்மானிய குண்டு வீச்சினால் கடற்கரையில் சிக்கிக் கொண்டன. அடுத்த நான்கு மணி நேரத்துக்கு ஜெர்மானியர்களின் இடைவிடாத தாக்குதல் நேசநாட்டுப் படைகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. 11.00 மணியளவில் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தளபதிகள் படைகளை பின்வாங்குமாறு உத்தரவிட்டனர். டியப் திடீர்த்தாக்குதல் ஜெர்மானிய வெற்றியில் முடிவடைந்தது.

விளைவுகள்

[தொகு]

இந்த திடீர்த்தாக்குதலில் பங்கேற்ற படைவீரர்களுள் 3367 கனடியர்களும் 275 கமாண்டோக்களும் மாண்டனர் அல்லது காயமடைந்தனர் அல்லது கைப்பற்றப்பட்டனர். பிரித்தானிய கடற்படையின் ஒரு டெஸ்டிராயர் கப்பலும் 33 தரையிறங்கு படகுகளும் மூழ்கடிக்கப்பட்டன. பிரித்தானிய விமானப்படை 103 விமானங்களை இழந்தது. ஜெர்மானியரின் இழப்புகள் - 591 படைவீரர்களும் 48 விமானங்களும். கைப்பற்றப்பட்ட ஜெர்மானியப் படைவீரர்களது கால்களில் விலங்கிட வேண்டுமென நேச நாட்டு தளபதிகள் வகுத்திருந்த திட்டம், ஜெர்மன் தளபதிகளுக்குத் தெரிந்து விட்டது. இதனால் அவர்கள் கோபம் கொண்டு கைது செய்யப்பட்ட கனடிய வீரர்களின் கால்களில் விலங்குகளைப் பூட்டினர். டியப் தாக்குதலின் பாடங்கள் அடுத்து நிகழ்ந்த கடல்வழிப் படையெடுப்புகளுக்குப் பயன்பட்டன. நேச நாடுகள் டியப்பில் கற்று கொண்ட விஷயங்களின் மூலம் புதிய உத்திகளையும், பீரங்கி வண்டிகளையும், தரையிறங்கு படகுகளையும் உருவாக்கினர். இவை பின்னர் நிகழ்ந்த டார்ச் நடவடிக்கையிலும் ஓவர்லார்ட் நடவடிக்கையிலும் நேச நாட்டு வெற்றிக்கு உதவின.

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

சிறிய எழுத்துக்கள்