உள்ளடக்கத்துக்குச் செல்

டார்ச் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டார்ச் நடவடிக்கை
வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையின் பகுதி

அல்ஜியர்ஸ் கடற்கரையில் தரையிறங்கும் அமெரிக்கப் படைகள்
நாள் 8–16 நவம்பர், 1942
இடம் மொரோக்கோ மற்றும் அல்ஜீரியா
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய இராச்சியம்
சுதந்திர பிரான்ஸ் விடுதலை பிரெஞ்சுப் படைகள்
பிரான்சு விஷி பிரான்சு
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா டுவைட் டி. ஐசனாவர்
ஐக்கிய இராச்சியம் ஆண்ட்ரூ கன்னிங்காம்
ஐக்கிய அமெரிக்கா ஜார்ஜ் பேட்டன்
ஐக்கிய அமெரிக்கா லாயிட் ஃபிரேடன்ஹால்
ஐக்கிய இராச்சியம் கென்னத் ஆண்டர்சன்
சுதந்திர பிரான்ஸ் ஆன்ரி டி’ ஆசுடியர்
சுதந்திர பிரான்ஸ் ஜோஸ் அபூல்கர்
விஷி பிரான்சு:
பிரான்சு ஃபிரான்சுவா டார்லான்
பிரான்சு சார்லஸ் நூகுவேஸ்
பிரான்சு ஃபிரிக்ஸ் மிசேலியர்
Germany:
நாட்சி ஜெர்மனி எர்ன்ஸ்ட் கால்ஸ்
பலம்
107,000
விஷி பிரான்சு: 60,000
ஜெர்மனி: இரண்டு நீர்மூழ்கிகள்
இழப்புகள்
479+ மாண்டவர்
720 காயமடைந்தவர்
1,346+ மாண்டவர்
1,997 காயமடைந்தவர்

டார்ச் நடவடிக்கை (Operation Torch) என்பது இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு படையிறக்க நடவடிக்கை. இதில் நேச நாட்டுப் படைகள் கடல்வழியாக வடக்கு ஆப்பிரிக்கக் கடற்கரையில் தரையிறங்கின.

1940-41ல் அச்சுப் படைகள் மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றின. 1941ல் நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியம் மீது படையெடுத்தததால் சோவியத் ஒன்றியமும் நேச நாட்டுக் கூட்டணியில் இணைந்தது. கிழக்குப் போர்முனையில் சோவியத் படைகளுக்கு நெருக்கடியைக் குறைக்க இன்னொரு போர்முனையை உருவாக்கி ஜெர்மனியை இருமுனைப் போரில் ஈடுபடச் செய்யவேண்டுமென்று நேச நாட்டு மேல்நிலை உத்தியாளர்கள் திட்டமிட்டனர். ஆனால் எவ்விடத்தில் அத்தாக்குதலை நிகழ்த்துவது என்பதில் அவர்களிடையே வேறுபாடுகள் நிலவின. ஆரம்பத்தில் மேற்கு ஐரோப்பா மீது படையெடுக்க அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் அதனால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டதால், அதற்கு பதில் வடக்கு ஆப்பிரிக்கா மீது படையெடுக்க முடிவு செய்தனர். டார்ச் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்ட இப்படையெடுப்பு அமெரிக்க மற்றும் பிரிட்டானியப் படைகளால் நடத்தப்படும் என்றும் முடிவானது. டுவைட் டி. ஐசனாவர் இதற்கான தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

1943ல் வடக்கு ஆப்பிரிக்காவின் பிரெஞ்சு காலனிகள் (அல்ஜீரியா மற்றும் மொராக்கோ) நாசி ஆதரவு விஷி பிரெஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. மேலும் கிழக்கே லிபியாவிலும், எகிதிலும் இரு ஆண்டுகளாக அச்சு நாடுகளுக்கும் நேச நாடுகளுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. விஷி கட்டுப்பாட்டிலிருந்து பிரெஞ்சுக் காலனிகளை மீட்பதும், வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்த அச்சுப் படைகளைப் பின்புறமாகத் தாக்க வழிவகை செய்வதும் டார்ச் நடவடிக்கையின் உடனடி இலக்குகள். படையெடுப்புக்கு முன்னரே விஷி அரசின் வடக்கு ஆப்பிரிக்க ஆட்சியாளர்கள் படைத்தளபதிகள் சிலருடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களைத் தங்கள் தரப்புக்கு நேச நாட்டுத் தலைவர்கள் ஈர்த்துவிட்டனர். இதனால் படையிறக்கம் நிகழும் போது எதிர்ப்பு குறைவாக இருந்தது.

அல்ஜீரியா மற்றும் மொரோக்கா நாடுகளின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலையங்களை விரைந்து கைப்பற்றுவது நேச நாட்டுத் திட்டம். நவம்பர் 8, 1942 அதிகாலையில் டார்ச் நடவடிக்கை தொடங்கியது. பிரிட்டானிய மற்றும் அமெரிக்கத் துறைமுகங்களில் இருந்து மூன்று இலக்குப் படைப்பிரிவுகளாக (task forces) நேச நாட்டுப் படைகள் புறப்பட்டு வடக்கு ஆப்பிரிக்கக் கரையை அடைந்தன. இவற்றுள் மேற்குக் குறிக்கோள் பிரிவு கேசாபிளாங்கா துறைமுகத்தையும், மத்திய மற்றும் கிழக்குக் குறிக்கோள்ப்பிரிவுகள் முறையே ஓரான் மற்றும் அல்ஜியர்ஸ் துறைமுகங்களையும் தாக்கின. இம்மூன்று பிரிவுகளிலும் முறையே 35,000, 18,500 மற்றும் 20,000 படைவீரர்கள் இடம்பெற்றிருந்தனர். தரையிறங்கிய படைகள் நிலவழியாக இத்துறைமுகங்களைத் தாக்கிய அதே நேரம் பிரிட்டானியப் போர்க்கப்பல்கள் கடல் வழியாக குண்டு வீசின. இவை தவிர வான்குடை படைப்பிரிவுகள் வான்வழியாக டாஃபூரி மற்றும் லா சேனியா வானூர்தி நிலையங்களின் மீது தரையிறங்கி அவற்றைக் கைப்பற்றின. நவம்பர் 8ம் தேதி தொடங்கிய டார்ச் நடவடிக்கை இரு நாட்களுள் முடிவடைந்தது. நேச நாட்டுப் படைகளை எதிர்ப்பதா வேண்டாமா என்று விஷி ஆட்சியாளர்களுள் நிலவிய குழப்பத்தால், நேச நாட்டுப் படைகளுக்கு எதிர்ப்பு குறைவாகவே இருந்தது. இத்தரையிறக்கத்தை காசாபிளாங்கா துறைமுகத்திலிருந்த பிரெஞ்சுக் கடற்படை மட்டும் எதிர்க்க முயன்று தோற்றது. அல்ஜியர்ஸ் நகரில் விடுதலை பிரெஞ்சுப் படையினரும் உள்ளூர் எதிர்ப்புப் படையினரும் விஷி ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒரு எழுச்சியைத் தொடங்கினர். கடற்கரையோர பீரங்கிகளைச் செயலிழக்கச் செய்து நேச நாட்டுப் படைகளுக்கு உதவினர். அனைத்து புறங்களிலும் நேச நாட்டுப் படைகளால் சூழப்பட்ட அல்ஜியர்ஸ் நகரம் நவம்பர் 8ம் தேதி மாலை சரணடைந்தது. அதே போல நவம்பர் 9ம் தேதி ஓரான் துறைமுகமும் 10ம் தேதி காசாபிளாங்காவும் சரணடைந்தன. அடுத்த ஒரு வார காலத்துக்குள் அனைத்து நேச நாட்டுப் படைப்பிரிவுகளும் வடக்கு ஆப்பிரிக்காவில் தரையிறங்கி விட்டன.

டார்ச் நடவடிக்கை வரைபடம்

டார்ச் நடவடிக்கையின் வெற்றியால் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் அச்சுப்படைகளின் தோல்வி உறுதியானது. இப்படையிறக்கம் நடந்து கொண்டிருந்த அதே நேரம், இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டையில் தோல்வியுற்ற அச்சுப்படைகள் துனிசியாவுக்குப் பின்வாங்கின. கிழக்கிலிருந்து பிரிட்டானியப் படைகள் அவற்றை விரட்டி வந்தன. டார்ச் நடவடிக்கையின் வெற்றியால் துனிசியாவுக்கு மேற்கிலிருந்த பகுதிகளும் நேச நாட்டுப் படைகளிடம் சிக்கிக் கொண்டன. இதனால் அச்சுப் படைகள் துனிசியாவில் சிக்கிக் கொண்டன. துனிசியப் போர்த்தொடரில் அவை தோற்கடிக்கப்பட்டு சரணடைந்தன. வடக்கு ஆப்பிரிக்கா முழுவதும் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தது. இப்பகுதியின் துறைமுகங்கள் செப்டம்பர் 1943ல் நிகழ்ந்த இத்தாலி மீதான தாக்குதலுக்கு படைத்தளங்களாகப் பயன்பட்டன.

வடக்கு ஆப்பிரிக்காவின் விஷிப் படைகள் எளிதில் நேச நாட்டு படைகளிடம் சரணடைந்ததால் இட்லர் பிரான்சின் விஷி அரசின் மீது நம்பிக்கை இழந்தார். இதனால் தெற்கு பிரான்சின் விஷி அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்து ஜெர்மனியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்ச்_நடவடிக்கை&oldid=2917578" இலிருந்து மீள்விக்கப்பட்டது