மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெர்மானியப் படையெடுப்பு
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி

ஏப்ரல் 29, 1945ல் கை கோர்க்கும் சோவியத், அமெரிக்கப் படைகள்
நாள் பெப்ரவரி 8, 1945 – மே 8, 1945
இடம் ஜெர்மனி
நேசநாட்டு வெற்றி; ஜெர்மனி சரணடைந்தது
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய இராச்சியம்
 கனடா
பிரான்சு பிரான்சு
நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா டுவைட் டி. ஐசனாவர்
ஐக்கிய இராச்சியம் பெர்னார்ட் மோண்ட்கோமரி
ஐக்கிய இராச்சியம் ஆர்த்தர் டெட்டர்
ஐக்கிய இராச்சியம் டிராஃப்போர்ட் லீக் மால்லரி
ஐக்கிய அமெரிக்கா ஒமார் பிராட்லி
ஐக்கிய அமெரிக்கா ஜேகப் டெவர்ஸ்
நாட்சி ஜெர்மனி அடால்ஃப் ஹிட்லர்
நாட்சி ஜெர்மனி ஆல்பெர்ட் கெஸ்செல்ரிங்
நாட்சி ஜெர்மனி வால்டர் மோடல் 
நாட்சி ஜெர்மனி பவுல் ஹவுசர்
நாட்சி ஜெர்மனி யொஹான்னஸ் பிளாஸ்விட்ஸ்
நாட்சி ஜெர்மனி ஹைன்ரிச் ஹிம்லர்

பிப்ரவரி 1945ல் இரண்டாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் மேற்கத்திய நேச நாடுகள் நாசி ஜெர்மனியை மேற்கிலிருந்து தாக்கின. கிழக்கிலிருந்து சோவியத் படைகள் ஜெர்மனியின் மீது படையெடுத்தன. இவ்விரு படையெடுப்புகளாலும் நிலை குலைந்து போன ஜெர்மனி மே 8, 1945ல் சரணடைந்தது. பிப்ரவரி 8ம் தேதி தொடங்கிய மேற்கத்திய படையெடுப்பின் இறுதியில் வடக்கே பால்டிக் கடல் முதல் தெற்கில் ஆஸ்திரியா வரை ஜெர்மானிய மூன்றாம் ரெய்க்கின் பெரும் பகுதிகள் மேற்கத்திய நாடுகள் வசமாகின. அமெரிக்க ராணுவ வரலாற்றில் இப்படையெடுப்பு மத்திய ஐரோப்பா போர்த்தொடர் என்று அழைக்கப்படுகிறது.

1944ம் ஆண்டு இறுதியில் ஐரோப்பிய மேற்குப் போர்க்களத்தில் வெற்றிபெற கடைசி முயற்சியாக ஹிடலர் பல்ஜ் தாக்குதலை மேற்கொண்டார். இரு மாதங்கள் கடும் சண்டைக்குப்பின் இத்தாக்குதல் தோல்வியடைந்தது; நாசி ஜெர்மனியின் படைகள் பலவீனமடைந்து விட்டன. பிப்ரவரி 1945ல் நேச நாட்டுப் படைகள் ஜெர்மனி மீது படையெடுத்தன. நேசநாட்டு ஐரோப்பிய தலைமைத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் ஜெர்மனியின் மேற்கெல்லையில் ஒரு பரந்த முனையெங்கும் தாக்கத் திட்டமிட்டார். மேற்கு களம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - 1) வடக்கில் வட கடலிலிருந்து கோல்ன் நகர் வரையான எல்லை ஃபீல்டு மார்ஷல் பெர்னார்ட் மோண்ட்கோமரியின் 21வது ஆர்மி குரூப்பின் பொறுப்பு 2) மத்தியில் மெயின்ஸ் நகரம் வரை லெப்டினன்ட் ஜெனரல் ஒமார் பிராட்லியின் 12வது அமெரிக்க ஆர்மி குரூப்பின் பொறுப்பு 3) தெற்கில் சுவிட்சர்லாந்து எல்லை வரை லெப்டினன்ட் ஜெனரல் ஜேகப் டெவர்சின் 6வது ஆர்மி குரூப்பின் பொறுப்பு.

பிப்ரவரி மாதம் வடக்கில் வெரிடபிள் மற்றும் கிரெனேட் நடவடிக்கைகள் மூலம் மியூசே ஆற்றுக்கும் ரைன் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதி கைப்பற்றப்பட்டது. மார்ச் மாதம் வடக்கிலும் மத்தியிலும், ரைன் ஆற்றைக் கடக்க சண்டைகள் நடந்தன. வடக்கில் பிளண்டர் நடவடிக்கை மூலம் ரைன் ஆறு கடக்கப் பட்டது. மத்திய முனையில் பிராட்லியின் படைகள் எளிதாக ரெமகன் என்ற இடத்தில் ஆற்றைக் கடந்து விட்டன. ஆற்றைக் கடந்த பின்னர் இந்த இரு பெரும் படைப்பிரிவுகளில் ஒரு பாதி ரூர் பகுதியைச் சுற்றி வளைக்கவும், மற்றொரு பாதி ஜெர்மனியின் உட்பகுதியைத் தாக்கவும் விரைந்தன. ஏப்ரல் 1ம் தேதி ரூர் இடைப்பகுதியிலிருந்த ஜெர்மானியப் படைகள் சுற்றி வளைக்கப்பட்டன. அடுத்த இருபது நாட்களுள் அப்பகுதி கைப்பற்றப்பட்டு சுமார் மூன்று லட்சம் ஜெர்மானியப் படை வீரர்கள் கைப்பற்றப்பட்டனர். மார்ச் 26ம் தேதி தெற்கு முனையிலும் 6வது ஆர்மி குரூப் ரைனைக் கடந்து ஆஸ்திரியா நோக்கி விரைந்தது.

ரூர் பகுதியில் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே, 12வது ஆர்மி குரூப்பின் ஒரு பிரிவு ஜெர்மனியின் மையப்பகுதியை நோக்கி முன்னேறியது. முதலில் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினைக் கைப்பற்ற வேண்டுமென்று திட்டமிட்டிருந்த ஐசனாவர் மார்ச் மாத இறுதியில் தன் இலக்கை மாற்றினார். பெர்லினை மேற்கத்தியப் படைகள் அடைவதற்கு முன்னர் சோவியத் படைகள் கிழக்கிலிருந்து கைப்பற்றி விடுமென்பதால் பெர்லினை நோக்கி முன்னேறாமல், லெய்ப்சிக் நகரைக் கைப்பற்றுவது ஐசனாவரின் இலக்கானது. ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் எல்பா ஆற்றின் கரையில் அமைந்திருந்த லெய்ப்சிக் நகரை நோக்கி 12வது ஆர்மி குரூப் முன்னேறியது. ஏப்ரல் 25ம் தேதி கிழக்கிலிருந்து முன்னேறிக் கொண்டிருந்த சோவியத் படைகளும் மேற்கிலிருந்து விரைந்து கொண்டிருந்த அமெரிக்கப்படைகளும் எல்பா ஆற்றருகே கை கோர்த்தன. எஞ்சியிருந்த ஜெர்மானியப் படைகள் இதனால் இரண்டாகத் துண்டிக்கப்பட்டன. ஏப்ரல் 29ம் தேதி 21வது ஆர்மி குரூப் எல்பா ஆற்றைக் கடந்தது. சோவியத் படைகளால் முற்றுகையிடப்பட்டிருந்த பெர்லின் நகரில் ஏப்ரல் 30ம் தேதி ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். அவருக்குப் பின் நாசி ஜெர்மனியின் பியூரரான அட்மிரல் கார்ல் டோனிட்ஸ் மே 8ம் தேதி ஜெர்மனி சரணடைவதாக அறிவித்தார். ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

ரைன் ஆற்றங்கரை வரையான முன்னேற்றம்[தொகு]

வெரிடபிள் மற்றும் கிரெனேட் நடவடிக்கைகளின் வரைபடம்

ஜனவரி 1945, இறுதி வாரத்தில் பல்ஜ் சண்டை முடிவுற்றது. மேற்கில் போரை வெல்ல ஜெர்மனியின் இறுதிகட்ட முயற்சி தோல்வியடைந்தது. அடுத்து ஜெர்மனி மீது படையெடுக்க நேசநாட்டுப் படைகள் தயாராகின. ஜெர்மனியின் மேற்கெல்லையில் இயற்கை அரணாக அமைந்திருப்பது ரைன் ஆறு. அதனைக் கடந்தால் தான் மேற்கு திசையிலிருந்து அணுகும் எந்தப்படையும் ஜெர்மனியின் உட்பகுதிகளை அடைய முடியும். நேச நாட்டுப் படைகள் மூன்று பகுதிகளில் ரைன் ஆற்றங்கரையை அணுகின. வடக்கில் ஃபீல்டு மார்ஷல் பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையிலான 21வது ஆர்மி குரூப், ரை ஆற்றை அடையுமுன்னர் மியூசே ஆற்றுக்கும் ரைனுக்கும் இடைப்பட்ட பகுதியைக் கைப்பற்ற வேண்டியிருந்தது. ரைன்லாந்து என்றழைக்கப்பட்ட இப்பகுதியைக் கைப்பற்ற மார்ச் 11ம் தேதி வரை நேசநாட்டுப்படைகள் போராட வேண்டியிருந்தது.

ரைன்லாந்துப் பகுதியை ஒரு பெரும் கிடுக்கி போல சுற்றி வளைத்து பிடிக்க ஐசனாவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் கிடுக்கி வியூகத்தின் தெற்கு கரமாக அமைந்த படைப்பிரிவுகள் முன்னேற வேண்டிய பகுதிகளை, ஜெர்மானியர்கள் ரூர் ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த அணைகளைத் தகர்த்து வெள்ளக்காடாக்கினர். இதனால் இவற்றின் முன்னேற்றம் தாமதமானது. வடக்குக் கிடுக்கிக் கரத்தின் படைப்பிரிவுகள் மட்டும் முன்னேறத் தொடங்கின. அடர்ந்த காட்டுப் பகுதியும், சிக்ஃபிரைட் கோட்டின் பலமான ஜெர்மானிய அரண்நிலைகளும் அவற்றின் முன்னேற்றத்துக்குத் தடைகளாக இருந்தன. இருவாரங்கள் கடும் சண்டையினூடே ஜெர்மானிய எதிர்ப்புகளை முறியடித்து வடக்கு கிடுக்கி முன்னேறியது. இருவாரங்கள் கழித்து தெற்குப் பகுதியில் வெள்ளம் வடிந்து விட்டதால் தெற்கிலிருந்தும் நேசநாட்டுப் படைப்பிரிவுகள் முன்னேறத் தொடங்கின. இந்த இருமுனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாத ஜெர்மானியப்படைகள் ரைன் ஆற்றைக் கடந்து பின்வாங்கின. மார்ச் இரண்டாம் வாரத்தில் ரைன் ஆற்றின் கிழக்கிலிருந்த பகுதிகள் அனைத்தும் நேசநாட்டுப் படைகள் வசமாகின. இந்த ரைன்லாந்து தாக்குதலுக்கு வெரிடபிள் மற்றும் கிரெனேட் நடவடிக்கைகள் என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தன.

ரைன் ஆற்றங்கரை[தொகு]

ரைன் ஆற்றைக் கடக்கும் நேசநாட்டுப்படைகள்

மார்ச் மாத மத்தியில் ரைன் ஆற்றைக் கடக்க நேச நாட்டுப் படைகள் முயன்றன. வட களத்திலும், மத்திய களத்திலும், நேசநாட்டுப் படைகள் இரு வேறு உத்திகளைக் கையாண்டன. வடக்கில் மோண்ட்கோமரியின் 21வது ஆர்மி குரூப், கவனமாகத் திட்டமிட்டு, இரு வாரங்கள் கழித்து மெல்ல ரைன் ஆற்றைக் கடக்க முயன்றது. பிளண்டர் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்ட இத்தாக்குதலின் ஒரு பகுதியாக வான்குடை வீரர்கள் வான்வழியாக ரைன் ஆற்றின் கிழக்குக் கரையில் தரையிறங்கி முக்கிய பாலங்களையும் அரண்நிலைகளையும் கைப்பற்றினர். ஆனால் மோண்ட்கோமரியின் இந்த கவனமான தாக்குதலுக்கு நேர் மாறான உத்தியை மத்திய களத்தில் ஒமார் பிராட்லியின் 12வது ஆர்மி குருப் கையாண்டது. ரெமாகன் என்ற இடத்தில் அமைந்திருந்த லுடண்டார்ஃப் பாலத்தை அதிரடியாகக் கைப்பற்றியது. இந்த பாலமுகப்பைப் பயன்படுத்தி பிற படைகள் ரைன் ஆற்றை விரைவில் கடந்து விட்டன. மார்ச் 24ம் தேதி இரு களங்களிலும் நேசநாட்டுப் படைகள் ரைன் ஆற்றை கடந்து விட்டன. மார்ச் 26ம் தேதி தெற்கு களத்தில் 6வது ஆர்மி குரூப் எளிதாக ரைன் ஆற்றைக் கடந்து முன்னேறத் தொடங்கியது. இவ்வாறாக மார்ச் மாத இறுதிக்குள் ரைன் ஆற்றை ஜெர்மனியின் மேற்கு எல்லையெங்கும் நேசநாட்டுப் படைகள் கடந்து விட்டன.

ஜெர்மனியின் உட்பகுதியில்[தொகு]

ரூர் இடைப்பகுதியில் கைப்பற்றப்பட்ட லட்சக்கணக்கான ஜெர்மானிய போர்க்கைதிகள்

ரைன் ஆற்றைக் கடந்தவுடன் மூன்று பெரும் படைப்பிரிவுகளும் வேகமாக ஜெர்மனியுள் முன்னேறத் தொடங்கின. வடக்கு மற்றும் மத்திய களப் படைப்பிரிவுகள் ரைன் ஆற்றை அடுத்திருந்த ரூர் பகுதியை சுற்றி வளைக்க ஒரு பெரும் கிடுக்கி வியூகத்தை அமைத்தன. ரூர் பகுதி ஜெர்மனியின் தொழில்மையப்பகுதி. இதனைக் கைப்பற்றி விட்டால் ஜெர்மனியின் போர் எந்திரத்தை முடக்கி விடலாம் என்பது நேச்நாட்டுத் தளபதிகளின் கணக்கு. அதன்படி வடக்கிலிருந்து மோண்ட்கோமரியின் படைகளும், தெற்கிலிருந்து பிராட்லியின் படைகளும் ரூர் பகுதியை சுற்றி வளைத்தன. ஏப்ரல் 1ம் தேதி கிடுக்கி வியூகத்தின் இரு கரங்களும் இணைந்து இடைப்பட்ட பகுதி சுற்றிவளைக்கப்பட்டது. இதனுள் ஜெர்மானியத் தரைப்படையான வெர்மாட்டின் 21 டிவிசன்கள் அடங்கிய ஆர்மி குரூப் பி சிக்கிக் கொண்டது. ஐந்தாண்டுகள் தொடர்ந்து நடைபெற்றிருந்த போரில் ஜெர்மானியப் படைப்பிரிவுகள் மிகவும் பலவீனமடைந்திருந்தன.

அவற்றுக்குத் துணையாக வயதானவர்கள் அடங்கிய ஊர்க் காவல்படைகளும் (வோக்ஸ்டிரம்), ஹிட்லர் சிறுவர் இயக்கப் படைப்பிரிவுகளும் (ஹிட்லர்யுகெண்டு) மட்டுமே இருந்தன.சுமார் நாலு லட்சம் பேர் கொண்ட பலவீனமான படையை அழிக்கும் இலக்கு இரு அமெரிக்க ஆர்மிகளுக்குத் தரப்பட்டது. ஏனைய நேசநாட்டுப் படைகள் ஜெர்மனியின் மையப்பகுதியை நோக்கி விரைந்தன. ஏப்ரல் மாதம் முதல் மூன்று வாரங்களில் ரூர் இடைப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கர்கள் வசமானது. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஜெர்மானியப் படைவீரர்கள் சரணடைந்தனர். தோல்வி உறுதி என்று தெரிந்தவுடன் ஆர்மி குரூப் பி யின் தளபதி வால்டர் மோடல் சரணடைவதைத் தவிர்க்க தற்கொலை செய்து கொண்டார். ஏப்ரல் 21ம் தேதி ரூர் பகுதி முழுவதும் கைப்பற்றப்பட்டுவிட்டது.

ஏப்ரல் 15, 1945ல் போர் நிலவரம்

வடக்கிலும் மத்தியிலும் நேசநாட்டுப் படைகள் ஜெர்மனியைத் தாக்கிய போது, தெற்கிலிருந்த 6வது ஆர்மி குரூப் ஆஸ்திரியா, மற்றும் இத்தாலிய எல்லை நோக்கி விரைந்தது. ரூர் இடைப்பகுதியை பிற படைப்பிரிவுகள் அழித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் தெற்குப் பிரிவுகள் நியூரம்பெர்க், மியூனிக், இசுடுட்கார்ட் நகரங்களை கைப்பற்றி ஏப்ரல் 22ம் தேதி டேன்யூப் ஆற்றைக் கடந்தன.

மார்ச் 28 வரை ஐசனாவரின் இறுதி இலக்கு ஜெர்மனியின் தலைநகர் பெர்லினைக் கைப்பற்றுவதாக இருந்தது. ஆனால் மார்ச் மாத இறுதியில் கிழக்கிலிருந்து ஜெர்மனியைத் தாக்கிக் கொண்டிருந்த சோவியத் படைகள் நேசநாட்டுப் படைகளுக்கு முன்பாக பெர்லினை அடைந்துவிடும் என்பதை ஐசனாவர் உணர்ந்தார். இதனால் தனது திட்டங்களை மாற்றினார். பெர்லினை நோக்கி முன்னேறும் திட்டத்தைக் கைவிட்டு, கிழக்கிலிருந்து முன்னேறி வரும் சோவியத் படைகளுடன் கூடிய விரைவில் கைகோர்ப்பது அவரது முதன்மை இலக்காகியது. பெர்லின் வீழ்ந்தால் நாசிக் கட்சியின் தலைவர்கள் தெற்கில் ஆல்ப்ஸ் மலைப் பகுதியிலிருந்த கோட்டைகளுக்குத் தப்பி செல்லத் திட்டமிட்டிருந்தனர். அதனைத் தடுக்க பெர்லினிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் வழியை அடைக்க வேண்டுமென ஐசனாவர் விரும்பினார். மேலும் பெர்லினை யார் கைப்பற்றினாலும் முன்னரே யால்டா மாநாட்டில் நேச நாடுகள் ஒப்புக்கொண்டபடி அது போருக்குப்பின் சோவியத் கட்டுப்பாட்டில் போய்விடும் என்பதும் அவரது மனதை மாற்றி விட்டன.

அதுவரை மோண்ட்கோமரியின் 21வது ஆர்மி குரூப் தான் ஜெர்மனியின் உட்பகுதியினுள் முன்னேற வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த முடிவை மாற்றி பிராட்லியின் 12வது ஆர்மி குரூப்பை எல்பா ஆற்றை நோக்கி முன்னேற உத்தரவிட்டார் ஐசனாவர். 21வது ஆர்மி குரூப்புக்கு பால்டிக் கடலை நோக்கி முன்னேறி டென்மார்க் பகுதிகளை ஜெர்மனியிலிருந்து துண்டிக்க உத்தரவிட்டார். ஏப்ரல் 12ம் தேதி பிராட்லியின் படைப்பிரிவுகள் அனைத்தும் லெய்ன் ஆற்றை அடைந்து, எல்பாவை நோக்கி முன்னேறத் தொடங்கின. கவசப் படைப்பிரிவுகள் முன்னால் சென்று ஜெர்மானியப் பாதுகாவல் நிலைகளைச் சுற்றி வளைத்த பின்னர் தரைப்படைகள் அவற்றை மெதுவாகத் தாக்கி அழித்தன. ஏப்ரல் 25ம் தேதி பிராட்லியின் படையின் முன்னணிப் பிரிவுகள் கிழக்கிலிருந்து முன்னேறி வரும் சோவியத் படைகளை எல்பா ஆற்றருகே டொகாவு என்ற இடத்தில் சந்தித்தன. இதனால் நாசி ஜெர்மனி இரண்டாகத் துண்டிக்கப்பட்டது. ஏப்ரல் 29ம் தேதி வடக்கில் முன்னேறிக் கொண்டிருந்த மோண்ட்கோமரியின் 21வது ஆர்மி குரூப்பும் எல்பா ஆற்றை அடைந்து அதனைக் கடந்தது.

போரின் முடிவு[தொகு]

மே 15, 1945ல் இறுதிப் போர் நிலவரம்

ஏப்ரல் மாத இறுதியில் நாசி ஜெர்மனி சின்னாபின்னமாகி விட்டிருந்தது. நாசிக்களின் கட்டுப்பாட்டில் இருந்து ஜெர்மனி முழுவதும் விடுவிக்கப்பட்டிருந்தது. டென்மார்க் போன்ற ஜெர்மனியல்லாத வேறு பகுதிகள் மட்டும் நாசிக்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. பெர்லின் நகரமும் சோவியத் படைகளால் முற்றுகையிடப் பட்டிருந்தது. ஏப்ரல் 30ம் தேதி ஹிட்லர் தனது பெர்லின் பதுங்குகுழியில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்குப் பின் நாசி ஜெர்மனியின் ஃப்யூரராக (தலைவர்) அட்மைரல் கார்ல் டோனிட்ஸ் பதவியேற்றார். அவர் மேற்கத்திய நேச நாடுகளிடம் சரணடைய பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார். ஆனால் எல்லாப் போர்முனைகளிலும் உடனடியாக நிபந்தனையின்றி சரணடைய வேண்டுமென்று நேச நாடுகள் அவரது பேச்சு வார்த்தை முயற்சிகளை நிராகரித்து விட்டன. வேறு வழியின்றி மே 7ம் தேதி டோனிட்சின் தூதுவர் ஜெனரல் ஆல்ஃபிரட் யோடில் நிபந்தனையற்ற சரணடைவு ஒப்பந்ததில் கையெழுத்திட்டார். ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.

உசாத்துணைகள்[தொகு]