உள்ளடக்கத்துக்குச் செல்

இட்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அடால்ஃப் ஹிட்லர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அடால்ஃப் ஹிட்லர்
ஜெர்மனியின் தலைவர்
ஃபியூரர்
பதவியில்
ஆகஸ்ட் 2, 1934 – ஏப்ரல் 30, 1945
முன்னையவர்போல் வொன் ஹிண்டன்பூர்க்
(தலைவராக)
பின்னவர்கார்ல் டோனிட்ஸ்
(தலைவராக)
ஜெர்மனியின் வேந்தர்
Chancellor of Germany
பதவியில்
ஜனவரி 30, 1933 – ஏப்ரல் 30, 1945
முன்னையவர்கூர்ட் வொன் சிலெயிச்சர்
பின்னவர்ஜோசப் கோபெல்ஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1889-04-20)ஏப்ரல் 20, 1889
ஆஸ்திரியா-ஹங்கேரி
இறப்புஏப்ரல் 30, 1945(1945-04-30) (அகவை 56)
பெர்லின், ஜெர்மனி
குடியுரிமைஆஸ்திரியர் (1889–1932)
ஜெர்மனியர் (1932–1946)
தேசியம்1929 வரையில் ஆஸ்திரியர்;[1] 1932 முதல் ஜெர்மனியர்
அரசியல் கட்சிதேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி (NSDAP)
துணைவர்(கள்)இவா பிரான்
(ஏப்ரல் 29, 1945 இல் திருமணம்)
வேலைஅரசியல்வாதி, சிப்பாய், ஓவியர், எழுத்தாளர், சர்வாதிகாரி
கையெழுத்து

அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றன. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால்[2] சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவேடுகள் கூறுகின்றன. அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.

இளமைக்காலம்

[தொகு]

தோற்றம்

[தொகு]
குழந்தையாக இட்லர்

இட்லர், காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் 20 ஏப்ரல், 1889 இல் தாய் (அலய்ஸ இட்லரின் மூன்றாவது மனைவி) கிளாரா போல்ஸ் (1860–1907), தந்தை அலாய்ஸ் இட்லர்-க்கும் (1837–1903) ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அடால்ப் இட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா இட்லர் மட்டும்தான்.

தந்தையின் துன்புறுத்தல்

[தொகு]

இட்லரும், இட்லரை விட ஏழு வயது சிறியவளான தங்கையும் பருவம் அடைந்தபோது இவருடைய தந்தை (அலாய்ஸ் இட்லர்) தன் இரண்டாவது மனைவியின் மூலம் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக அறியப்படுகின்றது. இளமைக்காலத்தில் தந்தையின் கொடுமைக்குத் தாயாரும் ஆளாக்கப்பட்டதாக பதிவேடுகள் கூறுகின்றன. தன் தந்தை எவ்வாறு தன்னையும் தன் தாயையும் அடித்துத் துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய மெயின் கேம்ப் என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று அறிகின்றோம். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புறுவதைக் கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார் என்று தெரிகின்றது. அதே சமயம் அவர் தந்தைமேல் அளவு கடந்த வெறுப்பையும் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது என்றும் தெரிகின்றது.

ஓவியராதல்

[தொகு]

இட்லர் தன் படிப்பில் ஏற்பட்ட மந்த நிலையைத் தன் தந்தையின் கொடுமைக்குக் கொடுத்த பரிசாகவும் தன் தந்தை தான் அவரைப்போன்று சுங்க அதிகாரி பணியில் அமரவேண்டும் என்ற கனவைப் பொய்யாக்கிய திருப்தி கிடைத்ததாக தன் சுயசரிதையில் இட்லர் விளக்கியுள்ளார். இதனால் அவர் ஓவியராகும் கனவை மெய்ப்பித்தாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய தந்தை 3 ஜனவரி, 1903 அன்று மரணமடைந்தார். அதன் பின் அவருடைய கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. இட்லர் தம் 16 ஆம் வயதில் உயர் நிலைப் பள்ளிப் படிப்பை டிப்ளாமா(diplomo) பட்டம் பெறாத நிலையில் நிறுத்திக்கொண்டதாகப் பதிவேடுகள் கூறுகின்றன.

கல்வி

[தொகு]

தொடக்கத்தில் ஹிட்லர் கல்வியில் சிறந்து விளங்கினார். ஆறாவது வகுப்பு படிக்கும் சமயத்தில் கல்வியில் சிறிது தொய்வு ஏற்பட்டது அதன் காரணமாக அவ்வகுப்பில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் அதே வகுப்பில் சேர்ந்து படித்தார். இவர் கல்வியில் நாட்டமில்லாமையை கண்டு இவன் உழைப்பதில் ஈடுபாடுகொண்டவனல்லன் என்று ஆசிரியர்கள் இவர் பெற்றோருக்கு சுட்டிகாட்டினர். இவர் படித்த பள்ளியில் இவர் வயதுடைய (20 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய தத்துவவியலாளரான) லுட்வக் விட்ஜென்ஸ்டின் இவரைவிட இரண்டு வகுப்பு கூடுதலான வகுப்பில் படித்தார். இருவரும் ஒருவரையொருவர் சந்தித்ததேயில்லை.

அடால்ப் இட்லர் பெயர்க்காரணம்

[தொகு]

அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த இட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். 1920 களில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி (Adi) என அழைத்தனர். இட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள், காப்பாளர் என்றும் பொருள்படும்.

வறுமையில் வாழ்தல்

[தொகு]

இட்லர் 1905 ம் ஆண்டு முதல் நாடோடித்தனமான வாழ்க்கையை வியன்னாவில் தன் தாயுடன் வாழ்ந்தார். தன் தாய்க்குக் கிடைத்த ஆதரவற்றோர் உதவித்தொகையே குடும்ப வருமானம். இந்நிலையில் இரண்டுமுறை வரைபடவரையத் தகுதியில்லையென்று, வியன்னாவின் வரைவாளர் நுண்கலைக்கழகம், (Academy of Fine Arts Vienna) அவரை நிராகரித்தது. அவர் படைப்புகள் கவர்ச்சியூட்டுவதாகவும் மற்றும் கட்டுமான தொழிலுக்கு பொருத்தமானதாகவும் இல்லையென்று அங்கீகரிக்க மறுத்தது. 21 டிசம்பர், 1909 அவருடைய தாய் தன்னுடைய 47 வயதில் மார்பக புற்று நோய் தாக்கத்தால் மரணமடைந்ததாகப் பதிவேடுகள் கூறுகின்றன. இட்லர் ஆதரவற்றோர் உதவித்தொகையை வைத்துக்கொண்டு தன் தங்கையுடன் மிகவும் வறுமையில் வாழும் சூழல் ஏற்பட்டது. இட்லர் 21 ஆம் அகவையில் தன் மரபுவழி சொத்துக்களால் கிடைத்த சிறு தொகையுடன் வரைவாளராக வியன்னாவில் வறுமை வாழ்க்கையுடன் போராடினார். அஞ்சல் அட்டையில் வரும் படங்களை மாதிரியாக வைத்து வரைந்த ஒவியங்களை வணிகர்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் விற்று வரும் பணத்தில் குடும்ப வறுமையை ஒரளவு குறைத்தார்.

இட்லரின் யூத எதிர்ப்பு

[தொகு]

வியன்னாவில் இவர் மட்டுமே யூதவைரியாக (Anti-Semite) இருந்தார் என்பதை அவருடைய சிறு வயது நண்பரான அகஸ்ட் குபிசெக் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். வியன்னாவில் பெரும்பான்மையோர் யூதர்கள். புராதன யூதர்களும் அதிகமிருந்தனர். வியன்னாவில் வகுப்புவாத கலவரங்கள் அதிகமிருந்தன.

புராட்டஸ்தாந்து சமய ஈடுபாடு

[தொகு]
மார்ட்டின் லூதர்

இட்லர் யூதப் பகைமை கருத்தாய்வு நூல்களை அதிகம் விரும்பினார். போல்மிக் மற்றும் மார்ட்டின் லூதரின் யூத எதிர்ப்பு நூல்களை அதிகம் விரும்பினார். கிறித்தவ சமயத்தின் ஒரு பிரிவான புராட்டஸ்தாந்து சமயத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மார்ட்டின் லூதர் எழுதிய யூதர்களும் அவர்களின் பொய்மையும் (On the Jews and their Lies) என்ற நூலே யூதர்கள் மேல் வெறுப்புடன் செயல்பட பின்புலமாக அமைந்தது என்று இட்லர் தன் மெயின் கேம்ப் நூலில் விவரித்துள்ளார்.

ஆரியக் கோட்பாடு

[தொகு]

ஆரியக் கோட்பாட்டுக்கு (Aryan Race) தடையாகவும், எதிரிகளாகவும் இருப்பவர்கள் யூதர்களே. ஆஸ்திரியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் யூதர்களே என்று பகிரங்கமாக வெளியிட்டார். யூதப்பகைமையாளரிடம் மார்க்சிசமும், சோசலிசமும் அதனை வழிநடத்தும் யூதத் தலைவர்களால் கலக்கப்பட்டதை கண்டுணர்ந்தார். அதன் விளைவாகவே முதலாம் உலகப்போரில் ஜெர்மனி யூதர்களிடம் வீழ்ந்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தினார். யூதர்களால் ஜெர்மனி அதன் உன்னதத்தை இழந்தது.

இராணுவத்தில் பணிபுரிதல்

[தொகு]

இட்லருடைய தந்தைவழி சொத்துக்களின் கடைசி பங்கு கிடைத்தவுடன் ஜெர்மனியின் பாரம்பரிய நகரமான முனிக் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு குடிபெயர்ந்தது. அதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. ஆஸ்திரிய இராணுவத்தில் பணிபுரிவதை தவிர்க்கவே ஆனால் எதிர் பாராதவிதமாக ஆஸ்டிரிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல் தகுதி தேர்வில் தோல்வியுற்றதால் முனிச் நகருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் 1914 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் பங்கெடுப்பதால் அதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து மூன்றாம் லுட்விக் அரசரிடம் பல்வேரியா இராணுவப்பிரிவிற்காக மனு செய்தார். அதற்கு அனுமதி கிடைத்து பல்வேரிய இராணுவப்பிரிவில் சேர்ந்தார்.

முதல் உலகப்போரில் இட்லர்

[தொகு]

இட்லர் 16 வது பவேரியன் ரிசர்வ் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். பல ஆபத்தான சவால்களை சமாளித்து தப்பிக்கும் சாதுரியம் படைத்தவராக மேற்கு முன்னணியிருக்காக தாக்குதல் புரிந்தார். பல நேரங்களில் எதிரியின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயம் அடையவும் நேரிட்டது.

குழந்தைகளின் கொடூரக்கொலை தாக்குதல்

[தொகு]

1914 ஒய்பெர்ஸ் (Ypers) சண்டையில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தார். இந்த போரில் கிட்டத்தட்ட 40000 குழந்தைகள் கொல்லப்பட்டதாகப் பதிவேடுகள் தெரிவிக்கின்றன. இந்தப் போர் விவிலியத்தில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை (Massacre of Innocents) என்று விமர்சிக்கப்பட்டது. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் இட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இதன் மூலம் இட்லர் விமர்சித்துப் பேசப்பட்டார். ஆகையால் தொடர்ந்து வந்த போர்களில் ஈடுபடவில்லை. என்று ஜான் கீகன் எனும் யூத பிரித்தானிய வரலாற்றியலாளர் குறிப்பிட்டுள்ளார். இரண்டுமுறை இட்லர் இராணுவத்தின் சிறப்பான பணி மேற்கொண்டமைக்காக எஃகு சிலுவை இரண்டாம் வகுப்பு (Iron Cross II Class), எஃகு சிலுவை முதலாம் வகுப்பு (Iron Cross I Class) பதக்கங்களைப் பெற்றார்.

தற்காலிகமாக பார்வையிழத்தல்

[தொகு]

15 அக்டோபர் 1918 இட்லர் நச்சுக்காற்றுக் குண்டு தாக்கியதில் தற்காலிகமாக பார்வையிழந்த நிலையில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் இந்த பார்வையிழப்பின் பக்கவிளைவாக ஒழுங்குலைந்த மனநிலை (பின்னாளில் இது இஸ்டிரியா எனப்பெயர்) ஏற்படும் என்று தெரிவித்தார். அந்த சூழ்நிலையிலும் அதைரியப்படாமல் ஜெர்மனியைக் காப்பாற்றுவதற்காக என் உயிர் போனாலும் கவலையில்லை என்று அவரே சமாதானம் செய்து கொண்டார். அவர் மனது முழுக்க யூதர்களை ஒழிப்பதிலேயே இருந்தது என்று ஆய்வியலாளர் லூசி தாவிட்ஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். இட்லர் ஜெர்மன் நாட்டையும், தேசப்பற்றையும் அதிகம் நேசித்தார் இத்தனைக்கும் 1932 வரை ஜெர்மன் குடிமகனாக மாறவில்லை. (பிறப்பால் ஆஸ்டிரியன்) அதனாலேயே சில பதவிகள் கைவிட்டுப்போயின.

வெர்செயில் ஒப்பந்தத்தின் விளைவு

[தொகு]

இட்லர் 1918 ம் ஆண்டு ஜெர்மனி சரணைடைந்தது என்ற செய்தி கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜெர்மனி இன்னும் போர்முனையில் இருக்கும் நிலையில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்ற பின்னணியில் மார்க்சிய கொள்கையாளர்களும், மக்கள் தலைவர்களும் ஹோம் பிரண்ட் (Home Front) அணியினருக்கு ஆதரவாக உள்ளனர் என்ற உண்மையை தெளிவு படுத்தினார். இந்த செயல் புரிந்த அமைப்பினரை பின்னாளில் நவம்பர் குற்றவாளிகள் (November Criminals) என அழைத்தனர். இந்த ஒப்பந்தத்தால் ஜெர்மனி அதன் தரமிழந்தது. ஜெர்மனியின் படைக்குறைப்பையும் படை விலக்கலையும் வலியுறுத்தியது. ரைன்லேன்ட் நகரில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மனியப் படைகள் திரும்பப் பெறப்பட்டன.

படைக்குறைப்பு

[தொகு]

ஜெர்மானியர்களால் பாதிக்கப்பட்ட போலந்தை புனரமைக்க வலியுறுத்தப்பட்டது. இவ்வளவு பேரிழப்பும் ஜெர்மனியின் போரினாலேயே ஏற்பட்டது இதற்கு ஜெர்மானியர்களே காரணம் என்று நிர்பந்திப்பதை பிரித்தானிய வரலாற்று இயலாளர் ஜான் கீகன் (John Keegan) மறுத்தார். ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே நாடு பிடிக்கும் ஆசையால் படைக்கலன்களைப் பெருக்கி இப்போரில் இறங்கின, ஜெர்மனியின் பங்கு சிறிதளவே என்று தெளிவு படுத்தினார். இருப்பினும் வஞ்சகமாக இதை ஆரம்பித்தது ஜெர்மனிதான் என்று ஹோம் பிரன்ட் அணியினர் குற்றஞ்சாட்டினர். போரினால் ஏற்பட்ட இழப்பீடுகளை ஒப்பந்தத்தில் பிரிவு 231இல் ஜெர்மனியின் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளபடி ஜெர்மனிதான் ஈடுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜெர்மனி எவ்வளவு படைக்கலன்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு அதன்படி அனுமதிக்கப்பட்ட படைக்கலன்களின் எண்ணிக்கைப்படி ஜெர்மனியின் முழுப் படைப்பிரிவும் படைக்குறைப்புக்கு ஆளாகியது.

வெர்செய்ல் ஒப்பந்தம் ஜெர்மனி நாட்டின் பாதுகாப்புக்கு அனுமதித்த படைக்கலன்கள்:
படைக்கலன்களின் பெயர் படைக்கலன்களின் எண்ணிக்கை
காலாட்படை 1,00,000
கப்பல்கள் 6 மட்டுமே
நீர்மூழ்கிக் கப்பல்கள் அனுமதியில்லை
ஆயுதம் தாங்கி வாகனங்கள் அனுமதியில்லை

நாசிசத்திற்கான காரணங்கள்

[தொகு]

இட்லர் பின்வரும் இரண்டு காரணங்களால் மட்டுமே ஜெர்மனியில் நாசிசத்தை உருவாக்கவும் ஆட்சியில் அமரவும் காரணமாயிற்று. இட்லரும் அவரது கட்சினரையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட தேவையில்லாமல் நவம்பர் குற்றவாளிகளினால் அழைக்கப்பட்டனர். ஜெர்மனியின் வளர்ச்சியில் இட்லர் அதிக அக்கறை காட்டுவதால் அதை தடுக்கவும், பாரிஸ் அமைதி பேச்சுவார்த்தையில் இவரை நவம்பர் கிரிமினல்கள் பலியாடாக ஆக்கி கையொப்பமிட வைத்தனர். முதலாம் உலகப்போரின் முடிவில் வெர்செயில் ஒப்பந்தம் நிறைவேறியது.

அரசியலில் நுழைவு

[தொகு]

இட்லர் ஆஸ்திரியா-ஹங்கேரியில் (தற்போதைய ஆஸ்திரியாவில்) 1889 இல் பிறந்தார்[3]. 1913 ஆம் ஆண்டு ஜெர்மனிக்குச் சென்றார்[4]. முதல் உலகப் போரில் ஜெர்மன் இராணுவத்தில் பணியாற்றினார். அவர் 1919 இல் NSDAP (நாசிக் கட்சி) இன் முன்னோடியான ஜெர்மன் தொழிலாளர்கள் கட்சியில் (DAP) சேர்ந்து 1921 ல் NSDAP(நாஜி கட்சி) இன் தலைவராக ஆனார். 1923 ம் ஆண்டு முனிச்சில் அதிகாரத்தை கைப்பற்ற அவர் ஒரு சதியினை முயற்சித்தார். ஆனால் அந்த சதி தோல்வியுற்றதால் இட்லரை சிறைத்தண்டனைக்கு இட்டுச் சென்றது, அதன் போது அவர் தனது சுயசரிதையின் மற்றும் அரசியல் அறிக்கையின் மேன் காம்ப் ("மை ஸ்ட்ரக்ள்") முதல் தொகுதியை எழுதினார்.1924 ல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் இட்லர் வெர்சல்லஸ் ஒப்பந்தத்தை தாக்கி, பான்-ஜெர்மைனிசம், யூத எதிர்ப்பு, கம்யூனிச விரோதம் மற்றும் நாஜி பிரச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் மக்கள் ஆதரவை பெற்றார். இட்லர் அடிக்கடி சர்வதேச முதலாளித்துவத்தையும், கம்யூனிஸத்தையும் யூத சதித்திட்டத்தின் பாகமாக கண்டனம் செய்தார்.[5]

1933 ஆம் ஆண்டளவில், ஜெர்மன் ரெய்சஸ்டாகின் மிகப்பெரிய தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியாக நாசிக் கட்சி இருந்தது, இது ஜனவரி 30, 1933 அன்று அதிபர் பதவிக்கு இட்லரை நியமித்தது. அவரது கூட்டணியின் புதிய தேர்தல்களுக்குப் பிறகு, ரெய்ச்ஸ்டாக், செயல்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியது, இது வேய்மார் குடியரசை நாஜி ஜெர்மனியாக மாற்றி, தேசிய சோசலிசத்தின் சர்வாதிகார மற்றும் சர்வாதிகார சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு-கட்சி சர்வாதிகாரமாக மாற்றியது. இட்லர் ஜெர்மனியில் இருந்து யூதர்களை அகற்றவும், பிரிட்டனும் பிரான்ஸும் ஆதிக்கம் செலுத்திய முதல் உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கிற்கு அநீதி என்று அவர் கண்டதை எதிர்த்து ஒரு புதிய ஒழுங்கை சாதிப்பதய் இலக்காகக் கொண்டிருந்தார். அதிகாரத்தில் இருந்த அவரது முதல் ஆறு ஆண்டுகள் பெரும் பொருளாதார மந்தநிலையிலிருந்து விரைவான பொருளாதார மீட்புக்கு வழிவகுத்தது[6], முதலாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மனியில் சுமத்தப்பட்ட கட்டுப்பாடுகள் சிறப்பாக கைவிடப்பட்டன, மில்லியன் கணக்கான இனவாத ஜெர்மனிய மக்களுக்கு சொந்தமான பிரதேசங்களைக் கைப்பற்றியது - இது அவருக்கு குறிப்பிடத்தக்க மக்கள் ஆதரவை அளித்தது. ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போரின் வெடிப்புக்கான பிரதான காரணமாக அவருடைய ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கை கருதப்படுகிறது. அவர் பெரிய அளவிலான மறுமலர்ச்சியை இயக்கி, செப்டம்பர் 1, 1939 இல் போலந்து மீது படையெடுத்தார், இதன் விளைவாக ஜெர்மனியின் மீது படையெடுப்பதாக பிரித்தானிய மற்றும் பிரஞ்சு நாடுகள் பிரகடனங்களை அறிவித்தன.[7]

ஜூன் 1941 இல், சோவியத் ஒன்றியத்தின் மீதான படையெடுப்பை இட்லர் உத்தரவிட்டார். 1941 இறுதியில் ஜெர்மனிய படைகள் மற்றும் ஐரோப்பிய அச்சு சக்திகள் ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்தன. டிசம்பர் 1941 ல் இட்லர் முறையாக அமெரிக்கா மீது போரை அறிவித்தார், அவர்களை மோதலில் நேரடியாகக் கொண்டு வந்தார்.போரின் இறுதி நாட்களில், 1945 இல் பேர்லின் போரின் போது, இட்லர் அவரது நீண்ட கால காதலான இவா பிரவுனை மணந்தார். ஏப்ரல் 30, 1945 அன்று, இரண்டு நாட்களுக்குள், சிவப்பு இராணுவத்தால் பிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகத் தற்கொலை செய்துகொண்டனர், அவர்களது சடலங்கள் எரிக்கப்பட்டன.

இட்லர் முதலாம் உலகப் போருக்குப்பின் இராணுவத்தில் தான் இருந்தார் பின் முனிச் நகருக்குத் திரும்பினார். பவேரியன் பிரதமர் கொல்லப்பட்டபின் பல மாறுபட்ட எண்ணங்களுடன் அவர் செயல்பாடுகள் அமைந்தன. 1919 ல் இட்லர் இராணுவ உளவாளியாக ரெய்ச்வேரில் நியமிக்கப்பட்டார். உடன் பணியாற்றிய வீரர்களின் ஆதரவால் அங்கு ஏற்படுத்திய ஒரு சிறு குழுவின் மூலம் ஜெர்மன் தொழிலாளர் கட்சி ஆன்டன் டிரக்ஸ்லரால் உருவாக்கப்பட்டது. அவர்களின் யூதபகைமை, தேசியவாதம், முதலாளித்துவ பகைமை, மார்க்சிய பகைமை போன்ற உணர்வுகளால் இட்லர் பெரிதும் கவரப்பட்டார்.ஆன்டன் டிரக்ஸ்லரும் இட்லரின் சாதுர்யமான, திறமையான பேச்சாற்றலால் கவரப்பட்டார். அவரை கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். அதன்பொருட்டு இட்லர் 56 வது உறுப்பினராக அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.

இட்லரின் பேச்சாற்றல்

[தொகு]

கட்சியின் 7 வது பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். ஆண்டுகள் ஆக கட்சியினரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தேசிய பொதுவுடைமை ஜெர்மன் தொழிலாளர் கட்சியாக உருமாறியது. கட்சிப் பணியில் தன் முழுக்கவனத்தையும் செலுத்துவதற்காக 1920 ல் இட்லர் இராணுவப்பணியை கைவிட்டார். தன் பேச்சுத்திறமையை கட்சி செயல்வீரர்களுக்கு பயிற்றுவித்தார். இதனால் கட்சியிலும் அவர் செல்வாக்கு உயர்ந்த்து. விரைவிலேயே கட்சித் தேர்தலில் 543 வாக்குகள் பெற்று கட்சித் தலைவர் ஆனார். எதிர்த்து வாக்களித்தவர் ஒருவர் மட்டுமே. 29 ஜூலை, 1921 இட்லர் கட்சியின் ஃபியூரராக முதல் முதலாக அந்த வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டு அதன்படி அழைக்கப்பட்டார்.

இட்லரின் மரணமும் மர்மமும்

[தொகு]

இட்லரின் மரணம் இன்னும் நிரூபிக்கப்படாமல் மர்மமாகவே உள்ளது.

இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நேச நாடுகள் ஜெர்மனி மீது வலுவான தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தது. இன்னொரு புறமிருந்து ரஷ்யாவும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருந்தது. ஜெர்மனி மீது இவ்வாறு குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தபோது, இரண்டாம் உலகப் போரின் இட்லர், பெர்லின் நகரில் அரசு தலைமை அலுவலக கட்டடத்திற்கு கீழே நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்க மாளிகையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதுங்கியிருந்தார்.

1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி ஜெர்மனி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. இந்நிலையில் இட்லரும், அவரது மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களது உடல்கள் எதிரிகளின் கைகளில் கிடைக்கக்கூடாது என்ற இட்லரின் ஆசைப்படி எரித்து சாம்பலாக்கப் பட்டதாகவும் கூறப்பட்டது. இதுதான் உலகம் முழுவதும் அனைவருக்கும் தெரிந்துக் கொண்ட தகவல் ஆகும். இதைத் தான் பெரும் பாலானோர் நம்பிக் கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் இட்லரின் இறுதி நாளில் அவரோடு இருந்தவர், அவரது மெய்க்காப்பாள ரான ரோஹுஸ் மிஷ், 95 வயதைக் கடந்து இன்றும் உயிரோடிருக்கும் மிஷ், அந்தக் கடைசி நேரக் காட்சிகளை நேரடியாகப் பார்த்தவர். எனவே, அவரது கூற்று உண்மையானதாக இருக்கும் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருந்தது.

ஏப்ரல் 30ம் தேதி அன்று பங்கரில் உள்ள அனைவரையும் இட்லர் அழைத்து, எல்லாம் முடிந்து விட்டது. அவரவர் தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்லலாம், தேவையானவர்கள் மட்டும் இங்கு இருந்து கொள்ளலாம் என்றார். இப்படி அவர் சொன்னதால், அங்கு இருக்க வேண்டியவர்களில் நானும் ஒருவனாக ஆகி விட்டேன். இட்லரும், இவாவும் தற்கொலை செய்வது என்னும் முடிவு அப்போதுதான் எடுக்கப்பட்டது. எப்படி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதற்கான யோசனையைக் கூறியவர் அங்கிருந்த டாக்டர் வெர்னர் ஹாஸெ ஆவார். முதலில் சயனைட் மாத்திரைகளை விழுங்கி விட்டு, பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது சிறந்த வழி என்றார். இதைக் கேட்ட பின்னர் இட்லர் சில நிமிடங்கள் ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

பின்னர் தனது மனைவி இவாவுடன் தங்கள் அறையை நோக்கிச் சென்று கதவை மூடிக்கொண்டார். நெடு நேரம் வரை அங்கிருந்து சத்தம் எதுவும் இல்லை. சிறிது நேரம் இடைவெளியிட்டு இட்லரின் அறையைத் திறந்தோம். நான் மெல்ல எட்டிப் பார்த்தேன். அங்கு கண்ட காட்சி மனதை உறையச் செய்வதாக இருந்தது. இட்லர் பெரிய சோபாவில் ரத்தக் கறையுடன் இறந்து கிடந்தார் அருகில் இருந்த சிறிய சோபாவில் இவா பிரான் தலை சாய்ந்து விழுந்து கிடந்தார். பின்பு அங்கிருந்த சிலர் அவர்கள் இருவரையும் தூக்கிச் சென்று பங்கருக்கு வெளியே இருந்த இடத்தில் வைத்து, பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர், இட்லரின் இறப்பைப் பற்றி முழுமையானதொரு அறிக்கையைக் கொடுத்த ஒரே நபர் மிஷ்தான். இட்லருடன் இருந்து தப்பிய ஒரே நபரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இட்லர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இவரின் நண்பரும், இத்தாலியின் சர்வாதிகாரியுமான முஸோலினியும், அவரது மனைவியும் கொல்லப் பட்டிருந்தனர். அத்துடன் அவர்களது உடல்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு அவ மரியாதை செய்யப் பட்டிருந்தது. இதனை இட்லர் அறிந்திருந்தார். எதிரிகளிடம் தங்களது உடல்கள் எக்காரணம் கொண்டும், சிக்கிவிடக் கூடாது என்று முடிவு செய்தார். அதனால்தான் அவரது மற்றும் இவாவுடைய உடல்களை எரித்துவிடுமாறு ஆணையிட்டு இருந்ததாகவும் ஒரு கருத்து உண்மை போல இருந்தது. இந்நிலையில் இட்லர் தற்கொலை செய்துகொள்ளும் தருணம் எப்படி இருந்தது என்பதை, அந்தப் பாதாள அரண்மனைக்குள் செவிலியராகப் பணியாற்றிய பெண்மணி எர்னா பிளஜல் என்பவர், சம்பவம் நிகழ்ந்து சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, சற்றே தைரியம் வந்தவராக ஊடகங்களில் பேசியிருந்தார்.[8]

இட்லரின் மரணத்தை மறுக்கும் இங்கிலாந்து ஆய்வாளர்கள்

[தொகு]

இட்லர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அவரது பதுங்கு குழியில் 2 பேர் உயிரிழந்ததும், உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதும் உண்மையாக இருக்கலாம். எரிக்கப்பட்ட இரு உடல்களும் இட்லர், இவா பிரானுடையது இல்லை. இட்லர், இவா பிரானைப் போல தோற்றம் கொண்ட 2 பேரை படுகொலை செய்து அந்த உடல்களைத்தான் இட்லரின் சகாக்கள் எரித்துள்ளனர். இட்லரும், இவா பிரானும் ஜெர்மனியிலிருந்து தப்பிவிட்டார்கள் என நம்புகிறோம். இட்லரின் உதவியாளர் மார்டின் பார்மனின் யோசனைப்படிதான் இட்லர்-இவா பிரான் தற்கொலை நாடகம் அரங்கேறியது. ஒரு பொய்யை திரும்பத் திரும்பக் கூறினால் அதை உலகம் நம்பிவிடும் என்ற கோயபல்ஸ் பாணியை மெய்ப்பிக்கும் வகையில் அந்த நாடகத்தை உண்மையென அனைவரும் நம்பி வருகின்றனர். இட்லரின் பதுங்கு குழியைக் கைப்பற்றிய ரஷ்யா படையினர் அவரது உடலைக் கண்டெடுத்ததாக 1945-ஆம் ஆண்டே அறிவிக்கவில்லையே. இட்லரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக 1968-ஆம் ஆண்டுதான் ரஷ்யாவே அறிவித்தது. இட்லர் தற்கொலை செய்து கொண்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட அமெரிக்க உளவுத் துறை உலகம் முழுவதும் இட்லரை வலை வீசித் தேடிக் கொண்டிருந்ததது. இட்லர் தற்கொலை செய்யவில்லை என்பது அவர்களுக்கும் தெரியும் என்று இங்கிலாந்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[9][10]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்லர்&oldid=4143754" இலிருந்து மீள்விக்கப்பட்டது