சயனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சயனைடு (cyanide) என்பது கார்பன், நைட்ரசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு வேதிப்பொருளாகும். C≡N என்ற சயனோ வேதி வினைக்குழுவைக் கொண்ட சேர்மங்கள் யாவும் சயனைடுகள் எனப்படும். ஒரு கார்பன் அணு முப்பிணைப்பால் நைட்ரசன் அணுவுடன் இணைந்திருப்பது சயனோ குழுவாகும் [1].

கனிம வேதியியல் சயனைடுகளில் சயனைடு தொகுதியானது (CN−) ஓர் எதிர்மின் அயனியாக காணப்படுகிறது. சோடியம் சயனைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு போன்ற உப்புகள் மிகவும் நச்சுத்தன்மை கொண்டவையாகும் [2].

எளிதில் ஆவியாகக்கூடிய நீர்மமான ஐதரோசயனிக் அமிலம் என்று அறியப்படும் ஐதரசன் சயனைடு பேரளவில் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது. சயனைடு உப்புகளை அமிலமாக்கல் வினை மூலம் இது தயாரிக்கப்படுகிறது. கரிம சயனைடுகள் பொதுவாக நைட்ரைல்கள் எனப்படுகின்றன.நைட்ரைல்களில் CN தொகுதியானது கார்பன் அணுவுடன் ஒரு சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக அசிட்டோ நைட்ரைலில் சயனைடு தொகுதியானது மெத்தில் தொகுதியுடன் (CH3) பிணைந்துள்ளது. ஏனெனில் அவை சயனைடுகளை விடுவிப்பதில்லை. பொதுவாக சயனைடுகளைக் காட்டிலும் நைட்ரைல்கள் மிகக் குறைவான நச்சுத்தன்மை கொண்டவையாகும். இயற்கையாகத் தோன்றும் சயனோயைதரின் போன்ற சில நைட்ரைல்கள் ஐதரசன் சயனைடை விடுவிக்கின்றன.

பெயர்க்காரணமும் பெயரிடலும்[தொகு]

சயனைடு அயனி, CN

.

மேலிருந்து:

1. இணைதிறன் பிணைப்பு கட்டமைப்பு
2. இடம் நிரப்பு மாதிரி
3. நிலை மின்னழுத்த மேற்பரப்பு
4. கார்பன் தனி இணை

கரிமச்சேர்மங்களுக்கு பெயரிடப்படும் ஐயுபிஏசி முறை பெயரிடலில் C≡N வேதி வினைக்குழு இடம்பெற்றுள்ள சேர்மங்கள் நைட்ரைல்கள் எனப்படுகின்றன. எனவே நைட்ரைல்கள் எனப்படுபவை எல்லாம் கரிமச் சேர்மங்களாகும்[3][4]. அசிட்டோநைட்ரைல் (CH3CN) ஒரு நைட்ரைல் ஆகும். இது மெத்தில் சயனைடு என்றும் அழைக்கப்படுகிறது. நைட்ரைல்கள் பொதுவாக சயனைடு அயனிகளை விடுவிப்பதில்லை. ஒரே கார்பனுடன் ஒரு ஐதராக்சில் குழுவும் சயனைடும் பிணைக்கப் பட்டிருந்தால் அது சயனோ ஐதரின் எனப்படும். நைட்ரைல்களைப் போல இல்லாமல் சயனோ ஐதரின்கள் ஐதரசன் சயனைடை விடுவிக்கின்றன. கனிம வேதியியலில் C≡N− அயனியைக் கொண்டுள்ள உப்புகள் சயனைடுகள் எனப்படுகின்றன.

அடர் நீலம் என்ற பொருள் கொண்ட கயனோசு என்ற கிரேக்க சொல்லிலிருந்து சயனைடு என்ற சொல் வருவிக்கப்பட்டுள்ளது. பிரசிய நீலம் என்ற நிறமியை சூடுபடுத்தும் போது முதன் முதலில் சயனைடு கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக சயனைடு என்ற பெயர் இதற்கு வைக்கப்பட்டது.

பிணைப்பு[தொகு]

கார்பனோராக்சைடு மற்றும் மூலக்கூற்று நைட்ரசனுடன் சயனைடு அயனி ஒத்த எலக்ட்ரான் எண்னிக்கையுடையதாக உள்ளது[5][6].

தோற்றம் மற்றும் வினைகள்[தொகு]

நைசீரியாவில் மரவள்ளியிலிருந்து சயனைடை நீக்குதல்

இயற்கையில்[தொகு]

சில வகை பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பாசி இனங்களில் சையனைடு இயற்கையில் தோன்றுகிறது. இவை தவிர பல தாவரங்களிலும் சயனைடு காணப்படுகிறது. சில விதைகள் மற்றும் பழங்களில் கணிசமான அளவு சயனைடுகள் காணப்படுகின்றன, எ.கா. கசப்பான பாதாம், ஆப்பிரிக்காட் எனப்படும் வாதுமை, ஆப்பிள் மற்றும் பீச் எனப்படும் குழிப்பேரி போன்றவை இதற்கு உதாரணங்களாகும் [7]. தாவரங்களில், சயனைடுகள் வழக்கமாக சயனோசெனிக் கிளைக்கோசைடுகளின் வடிவில் சர்க்கரை மூலக்கூறுகளுடன் பிணைந்துள்ளன. மற்றும் தாவர உண்ணிகளிடமிருந்து தாவரத்தை பாதுகாக்கின்றன. உருளைக்கிழங்கு உணவு போன்ற மரவள்ளி கிழங்கும் சயனோசெனிக் கிளைக்கோசைடுகளைக் கொண்டுள்ளன [8][9].

விண்மீனிடை ஊடகத்தில்[தொகு]

விண்மீனிடை விண்வெளியில் சயனைடு தனி உறுப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. விண்மீனிடை வாயு மேகங்களின் வெப்பநிலையை அளவிட சயனைடு தனி உறுப்பு பயன்படுகிறது.

வெப்பச்சிதைவு மற்றும் எரிதல் விளைபொருள்[தொகு]

சில பொருட்களை ஆக்சிசன் பற்றாக்குறை நிபந்தனையில் வெப்பச்சிதைவு அல்லது எரித்தல் வினை மூலம் ஐதரசன் சயனைடு உற்பத்தி செய்யப்படுகிறது. உதாரணமாக உள்ளெரி இயந்திரங்கள் வெளிவிடும் புகையில், புகையிலை புகையில், சிலவகை நெகிழிகள் எரியும்போது ஐதரசன் சயனைடு உருவாகிறது.

ஒருங்கினைவு வேதியியலில்[தொகு]

பல இடைநிலைத் தனிமங்களுக்கு சயனைடு அயனி ஈந்தணைவியாக உள்ளது. இந்த எதிர்மின் அயனிக்கான உலோகங்களின் உயர் நாட்டம் அதன் எதிர்மின் சுமை, சிறிய அளவு மற்றும் π- பிணைப்பு ஆகியவை காரணமாக இருக்கலாம். நன்கு அறியப்பட்ட அனைவுகள் பின்வருமாறு:

 • எக்சாசயனைடுகள் [M(CN)6]3− (M = Ti, V, Cr, Mn, Fe, Co) இவை எண்முக வடிவம்
 • டெட்ராசயனைடுகள் [M(CN)6]3− (M = Ti, V, Cr, Mn, Fe, Co), இவை சதுரதள வடிவம்
 • டைசயனைடுகள், [M(CN)2]− (M = Cu, Ag, Au), இவை நேரியல் வடிவம்

மிக முக்கியமான சயனைடு ஒருங்கிணைப்பு சேர்மங்கள் எல்லாம் எண்முக வடிவில் ஒருங்கிணைந்த சேர்மங்களாக உள்ளன. பொட்டாசியம் பெரோசயனைடு மற்றும் நிறமியான பிரசியன் நீலம் இரண்டும் நச்சுத்தன்மை அற்றவையாகும். மத்தியிலுள்ள இரும்பு அணுவுடன் சயனைடு இறுக்கமாகப் பினைக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும் [10].பிரசியன் நீலத்திலிருந்து எதிர்பாரா விதமாக 1706 ஆம் ஆண்டு சயனைடு கண்டறியப்பட்டது. ஐதரசனேசு எனப்படும் நொதிகள் சயனைடைக் கொண்டுள்ளன.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. IUPAC Gold Book cyanides
 2. "Environmental and Health Effects of Cyanide". International Cyanide Management Institute (2006). பார்த்த நாள் 4 August 2009.
 3. IUPAC Gold Book nitriles
 4. NCBI-MeSH Nitriles
 5. Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. ISBN 0-7506-3365-4.[page needed]
 6. G. L. Miessler and D. A. Tarr "Inorganic Chemistry" 3rd Ed, Pearson/Prentice Hall publisher, ISBN 0-13-035471-6.[page needed]
 7. "ToxFAQs for Cyanide". Agency for Toxic Substances and Disease Registry (July 2006). பார்த்த நாள் 2008-06-28.
 8. Vetter, J. (2000). "Plant cyanogenic glycosides". Toxicon 38 (1): 11–36. doi:10.1016/S0041-0101(99)00128-2. பப்மெட்:10669009. 
 9. Jones, D. A. (1998). "Why are so many food plants cyanogenic?". Phytochemistry 47 (2): 155–162. doi:10.1016/S0031-9422(97)00425-1. பப்மெட்:9431670. 
 10. Holleman, A. F.; Wiberg, E. (2001). Inorganic Chemistry. San Diego: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-352651-5. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சயனைடு&oldid=2745893" இருந்து மீள்விக்கப்பட்டது