பிளண்டர் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளண்டர் நடவடிக்கை
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி

ஜெர்மானியத் தாக்குதலுக்கிடையே படகுகளில் ரைன் ஆற்றைக் கடக்கும் அமெரிக்க 89வது தரைப்படை டிவிசன் வீரர்கள்
நாள் மார்ச் 24, 1945
இடம் வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியா, ஜெர்மனி
நேசநாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 கனடா
 ஐக்கிய அமெரிக்கா
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் பெர்னார்ட் மோண்ட்கோமரி நாட்சி ஜெர்மனி யோஹான்னஸ் பிளாஸ்கோவிட்ஸ்
வார்சிட்டி நடவடிக்கை இந்த நடவடிக்கையின் வான்வழித் தாக்குதல் பிரிவாகும்.

பிளண்டர் நடவடிக்கை (Operation Plunder) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஜெர்மானியப் படையெடுப்பின் ஒரு பகுதியாகும். இந்த நடவடிக்கையில் மேற்கத்திய நேசநாட்டுப் படைகள் ரைன் ஆற்றைக் கடந்து நாசி ஜெர்மனியின் உட்பகுதியில் கால் பதித்தன.

மார்ச் 1945ல் மேற்கிலிருந்து நேசநாட்டுப் படைகளின் ஜெர்மானியப் படையெடுப்பு ரைன் ஆற்றங்கரையை அடைந்திருந்தது. ஜெர்மானியப் படைகள் ரைன் ஆற்றைக் கடந்து ஜெர்மனியின் உட்பகுதிக்குப் பின்வாங்கியிருந்தன. அடுத்த கட்டமாக ரைன் ஆற்றைக் கடப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மார்ச் 24ம் தேதி பிரிட்டானிய 2வது ஆர்மியும் அமெரிக்க 9வது ஆர்மியும் ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் ரைன் ஆற்றைக் கடந்தன. இவ்விரு படைப்பிரிவுகளும் ஃபீல்டு மார்ஷல் பெர்னார்ட் மோண்ட்கோமரியின் தலைமையிலான 21வது ஆர்மி குரூப்பின் உட்பிரிவுகளாகும். இந்த முயற்சிக்கு பிளண்டர் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைக்கு துணையாக வான்குடை வீரர்கள் ரைன் ஆற்றின் கிழக்குக் கரையில் வான்வழியே தரையிறங்கி முக்கிய பாலமுகப்புகளையும், ஜெர்மானிய அரண் நிலைகளையும் கைப்பற்றினர். இரு நேசநாட்டுப் படைப்பிரிவுகளும் வெற்றிகரமாக ரைன் ஆற்றைக் கடந்தன. ஏற்கனவே ரைன் ஆற்றின் மேற்குக் கரையில் நடைபெற்ற சண்டைகளால் பலவீனப்பட்டிருந்த ஜெர்மானியப் பாதுகாப்புப் படைகளால் இதனைத் தடுக்க முடியவில்லை. அவற்றின் துணைக்கு அனுப்பப்பட்ட இருப்புப் படைகளும் தரம் குறைந்த அனுபவமின்றி இருந்ததால், ஜெர்மானியத் தளபதிகளால் அவற்றைப் பயன்படுத்த இயலவில்லை. பின் வாங்கக்கூடாது என்று ஜெர்மானியப் போர்த் தலைமையகம் உத்தரவிட்டிருந்தும், ஏப்ரல் 1ம் தேதிக்குள் ஜெர்மானியப் படைகள் மெதுவாகப் பின் வாங்கி டியூடோபெர்க் காட்டுப் பகுதிக்குச் சென்று விட்டன. இந்த நடவடிக்கையில் ஜெர்மானியர்களுக்கு 30,000 இழப்புகளுக்கு மேல் ஏற்பட்டது.

ராணுவ ரீதியில் வெற்றியில் முடிவடைந்தாலும் இந்த போர் நடவடிக்கை நேசநாட்டுத் தளபதிகளுக்குள் நிலவிய உட்பூசலை மேலும் அதிகரித்தது. முன்னரே மோண்ட்கோமரியின் நடத்தை அமெரிக்கத் தளபதிகளுக்கு பிடிக்காதிருந்தது. மார்க்கெட் கார்டன் நடவடிக்கையிலும் பல்ஜ் சண்டையிலும் அவர் தன்னிச்சையாக நடந்து கொண்ட விதம் அவர்களைக் கோபப்படுத்தியிருந்தது. அவர் தனது புகழை நிலை நாட்டவும், அமெரிக்கப் படைகளை அவமானப் படுத்தவும் வேண்டுமென்றே சில காரியங்களைச் செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். பிளண்டர் நடவடிக்கையில் தேவையற்ற எச்சரிக்கையுடன் மெல்லச் செயல்பட்டதால், ஜெர்மானியப் பாதுகாப்புப் படைகள் சுதாரித்து தஙகளைத் தயார் செய்து கொள்ள அவகாசம் அளித்து விட்டார் என்று குற்றம் சாட்டினர். வேகமாக முன்னேறியிருந்தால், ஜெர்மானியர்க் ஆயத்தமாவதற்கு இடம் கொடுக்காமல் எளிதில் ரைன் ஆற்றைக் கடந்திருக்கலாம், இழப்புகளும் குறைவாக இருந்திருக்கும் என்பது அவர்களது கருத்து. நேச நாட்டுத் தலைமையகத்தில் ஏற்பட்ட இந்தப் பூசல் போரில் இறுதிவரை தொடர்ந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளண்டர்_நடவடிக்கை&oldid=2975666" இலிருந்து மீள்விக்கப்பட்டது