டோங்கா நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோங்கா நடவடிக்கை
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி

தரையிறங்கிய படைப்பிரிவுகளில் வழிகாட்டிகள், தங்கள் இலக்குகளை நோக்கிக் கிளம்பும் முன் தங்கள் கைக்கடிகாரங்களை ஒரே நேரத்துக்கு மாற்றுகிறார்கள்.
நாள் ஜூன் 6, 1944
இடம் கான், நார்மாண்டி, பிரான்சு
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 கனடா
 நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ரிச்சர்ட் நெல்சன் கேல் நாட்சி ஜெர்மனி யோசப் ரெய்கார்ட்
நாட்சி ஜெர்மனி வில்லெம் ரிக்டர்
பலம்
8,500 [1] ~ 16,000[2]
இழப்புகள்
800 (மாண்டவர்களும் காயமடைந்தவர்களும்)[3] ~ 400 (மாண்டவர்)
~ 400 போர்க்கைதிகள்

டோங்கா நடவடிக்கை (Operation Tonga) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். ஓவர்லார்ட் நடவடிக்கையில் பிரிட்டானிய வான்குடை வீரர்களின் தரையிறக்கம் மற்றும் தாக்குதல்களுக்கு டோங்கா நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது.

நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேசநாட்டு கடல்வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ல் தொடங்கியது. கடல்வழியே தரையிறங்கும் படைகளுக்குத் துணையாக பிரிட்டானிய மற்றும் அமெரிக்க வான்குடை படைப்பிரிவுகள் வான்வழியே பிரான்சில் தரையிறக்கப்பட்டன. பிரான்சின் உட்பகுதிக்கு விரைந்து முன்னேற உதவியாக சில முக்கிய பாலங்களைக் கைப்பற்றுவது, ஜெர்மானிய இருப்புப் படைகள் நார்மாண்டி களத்துக்குச் செல்ல பயன்படுத்தக் கூடிய பாலங்களைத் தகர்த்தல், நார்மாண்டிக் கடற்கரையைத் தாக்கக் கூடிய பீரங்கி நிலைகளை அழித்தல் போன்ற இலக்குகள் இப்படையினருக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. பிரிட்டானிய 6வது வான்குடை டிவிசன், ஜூன் 5 முதல் 7ம் தேதி வரை பிரான்சில் வான்வழியே தரையிறங்கியது.

மோசமான வானிலையாலும், விமானிகளின் தவறினாலும் முடிவு செய்யப்பட்ட இலக்குகளில் அல்லாமல் வேறு இடங்களில் பிரிட்டானியப் படைகள் தரையிறங்கின. இதனால் துவக்கத்தில் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் குழப்பம் நிலவியது. பின்னர் சமாளித்துக் கொண்டு கான் கால்வாய், ஓர்ன் ஆறு ஆகியவற்றின் குறுக்கே இருந்த பாலங்களைத் தாக்கிக் கைப்பற்றின. பிற பாலங்களைக் குண்டு வைத்து தகர்த்தன. மேலும் நார்மாண்டிக்குச் செல்லும் சாலைகளின் மீது அமைந்திருந்த சில நகரங்களையும் கைப்பற்றின. ஒரு பிரிவினர் சுவார்ட் கடற்கரையைத் தாக்க வல்ல மெர்வில் பீரங்கிக் குழுமத்தைத் தாக்கி கைப்பற்றினர். தரைப்படைகள் கடற்கரையிலிருந்து முன்னேறி தாங்கள் கைப்பற்றிய பாலங்களையும், அரண்நிலைகளையும் அடையும் வரை அவற்றை, பல ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்களிலிருந்து பாதுகாத்தனர்.

இச்செயல்களால் நார்மாண்டி தாக்குதலுக்கான ஜெர்மானிய எதிர்வினைக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டது. நார்மாண்டி கடற்கரையில் தரையிறங்கிய நேச நாட்டுப் படைகளை ஜெர்மானியர்களால் தடுத்து விரட்ட முடியவில்லை. ஜூன் 7ம் தேதி தரைப்படைகள் பிரிட்டானிய 6வது டிவிசன் கைப்பற்றிய நிலைகளை அடைந்தன. ஜூன் 10ம் தேதி, 6வது டிவிசன் தான் கைபற்றிய பகுதிகளுக்கு அருகிலுள்ள இடங்களையும் தாக்கி கைப்பற்றத் தொடங்கியது. இதன் பின்னர், ஜூன் 11 ம் தேதி முதல் ஆகஸ்ட் மாத மத்தி வரை வான்குடை வீரர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் பாதுகாப்புப் படைகளாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Parachute Regiment (2004-03-26). "D-Day - The Normandy Landings". Ministry of Defense. http://www2.army.mod.uk/para/history/normandy.htm. பார்த்த நாள்: 2008-06-11. 
  2. Niklas Zetterling. "German Order of Battle". http://web.telia.com/~u18313395/normandy/gerob/gerob.html. பார்த்த நாள்: 2008-07-24. 
  3. Ministry of Information, p.89
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோங்கா_நடவடிக்கை&oldid=3556828" இருந்து மீள்விக்கப்பட்டது