குன்று 262
குன்று 262 சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
டிராக்டபிள் நடவடிக்கையின் பகுதி | |||||||
குன்று 262ல் போலந்திய வீரர்கள் (ஆகத்து 20, 1944) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
போலந்து | நாசி ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஸ்டானிஸ்லா மாசெக் சிக்மண்ட் சிட்லாவ்ஸ்கி | வால்டர் மோடல் | ||||||
பலம் | |||||||
1,500 காலாட்படை ~80 டாங்குகள் | சுமார் 20 காலாட்படை மற்றும் கவச டிவிசன்களின் எஞ்சிய பகுதிகள் | ||||||
இழப்புகள் | |||||||
351 பேர் 11 டாங்குகள் | ~1,500 |
குன்று 262 (Hill 262) அல்லது மோண்ட் ஓர்மெல் முகடு (Mont Ormel ridge) பிரான்சின் நார்மாண்டிப் பகுதியில் உள்ள மேட்டுப் பகுதியைக் குறிக்கும். இங்கு இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் கடுமையான சண்டை ஒன்று நிகழ்ந்தது. பிரான்சின் ஃபலேசு நகர்ப் பகுதி அருகே பல ஜெர்மானியப் படைப்பிரிவுகளைச் சுற்றி வளைக்க நேச நாட்டுப் படைகள் முயன்ற போது இச்சண்டை நடைபெற்றது.
ஆகத்து 1944ல் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சில் நேச நாட்டுப் படைகளுக்கும் ஜெர்மானியப் படைகளுக்கும் கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது. ஃபலேசு நகர்ப் பகுதியருகே ஜெர்மானிய ஆர்மி குரூப் பி யைச் சேர்ந்த சில படைப்பிரிவுகளைச் சுற்றி வளைக்க நேச நாட்டுப் படைகள் முயன்றன. இதற்காக டிராக்டபிள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆகத்து 19ம் தேதி ஃபலேசிலிருந்த ஜெர்மானியப் படைகள் சுற்றி வளைக்கப்பட்டு ஃபலேசு இடைப்பகுதி உருவானது. வளைக்கப்பட்ட ஜெர்மானியர்கள் தப்பிச்செல்ல மோண்ட் ஓர்மெல் / குன்று 262 அருகே ஒரு சிறு இடைவெளி மட்டும் இருந்தது. அதனை அடைக்க போலந்திய 1வது கவச டிவிசனின் படைப்பிரிவுகள் மோண்ட் ஓர்மெல்லை ஆக்கிரமித்தன. ஃபலேசிலிருந்து பின்வாங்கித் தப்ப முயன்ற ஜெர்மானியர்கள் மீது பீரங்கித் தாக்குதல் நிகழ்த்தி பெரும் இழப்புகள் எற்படுத்தின. எளிதில் தப்ப வேண்டுமெனில் ஜெர்மானியர்கள் போலந்தியப் படைப்பிரிவுகளை முறியடித்துச் செல்ல வேண்டும் என்ற நிலை உருவானது. ஆகத்து 19-20 தேதிகளில் ஜெர்மானியர்கள் இருபுறமிருந்தும் (ஃபலேசு இடைப்பகுதியிலிருந்தும், வெளிப்புறம் இருந்தும்), குன்று 262 ஐத் தாக்கி, தப்பிச் செல்லும் வழியைத் திறக்க பெருமுயற்சி செய்தனர். எண்ணிக்கையில் குறைந்த அளவே இருந்தாலும், போலந்தியப் படைவீரர்கள் கடுமையாகப் போராடி குன்று 262 ஜெர்மானியர் வசமாகாமல் பார்த்துக்கொண்டனர். ஆகத்து 21ல் கனடியத் துணைப்படைகள் வந்து சேர்ந்தவுடன், ஃபலேசு இடைப்பகுதியிலிருந்து தப்பும் வழி முற்றிலுமாக அடைபட்டு, படை வளையம் இறுகிவிட்டது. சிக்கிக்கொண்ட ஜெர்மானியப் படைகள் சரணடைந்தன.
அடிக்குறிப்புகள்
[தொகு]