பாடிகார்ட் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாடிகார்ட் நடவடிக்கை (Operation Bodyguard) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த மேற்கு ஐரோப்பா மீதான படையெடுப்புக்கு நேச நாட்டு உத்தியாளர்கள் வகுத்த மேல்நிலை உத்தியின் பகுதி. படையெடுப்பு நிகழப்போகும் இடம் குறித்து ஜெர்மானியர்களை ஏமாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு பாடிகார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது.

இரண்டாம் உலகப் போர் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெர்மனியை வீழ்த்த மேற்கு ஐரோப்பா மீது கடல்வழியாகப் படையெடுக்க வேண்டுமென்று நேச நாட்டுத் தலைவர்கள் முடிவு செய்தனர். மேற்கில் ஒரு படையெடுப்பு நிகழும் என்பதை ஜெர்மானிய உத்தியாளர்களும் உணர்ந்திருந்தனர். இந்த படையெடுப்பு எப்போது எங்கு நிகழும் என்பதை ஜெர்மானியர்கள் ஊகிக்க முடியாமல் அவர்களைத் திசைதிருப்ப நேச நாட்டு உத்தியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் இந்த முயற்சிக்கு ஜெயில் திட்டம் (Plan Jael) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. (ஜெயில் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் ஒரு பாத்திரம்). பின்னர் 1943ல் நிகழ்ந்த டெஹ்ரான் மாநாட்டில் சர்ச்சில் ஸ்டாலினிடம் கூறிய பின் வரும் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு “பாடிகார்ட்” (மெய்க்காப்பாளர்) நடவடிக்கை என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது:

பாடிகார்ட் நடவடிக்கைக்கு மூன்று முக்கிய இலக்குகள் இருந்தன:

  1. கடல்வழிப் படையெடுப்பு பிரான்சின் பா டீ கலே பகுதியில் நிகழும் என்று ஜெர்மானியப் போர்த் தலைமையகத்தை நம்ப வைப்பது. இதன் மூலம் உண்மையில் படையெடுப்பு நிகழ்ப்போகும் நார்மாண்டிப் பகுதியிலிருந்து படைகளை ஜெர்மானியர்கள் கலே பகுதிக்கு நகர்த்துவர்; கலே பகுதியிலேயே தங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவர்.
  2. ஜெர்மானியர்களால் படையெடுப்பு நிகழப்போகும் நாள் நேரம் எப்போது என்று கணிக்க முடியாது செய்தல்
  3. படையெடுப்பு நிகழ்ந்த பின்னர், அடுத்த பதினான்கு நாட்களுக்கு ஜெர்மானியர்கள் தங்கள் பாதுகாப்பு படைப்பிரிவுகளில் பெரும்பாலானவற்றை பாஸ் டே கலேக்கு கிழக்கிலேயே நிறுத்தி வைக்கும்படி செய்தல்.

இந்நடவடிக்கை ஃபார்ட்டிடியூட் நடவடிக்கை, செப்பலின் நடவடிக்கை, அயர்ன்சைட் நடவடிக்கை என பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.