உள்ளடக்கத்துக்குச் செல்

மல்பெரி துறைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புயலில் சேதமடைந்த மல்பெரி ஏ.

மல்பெரி துறைமுகம் (Mulberry harbour) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் பயன்படுத்துவதற்காக பிரிட்டானிய இராணுவ அறிவியலாளர்கள் உருவாக்கிய ஒரு வகை செயற்கைத் தற்காலிகத் துறைமுகம். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் கடல்வழிப் படையெடுப்பில் பயன்படுத்த இத்தகைய செயற்கைத் துறைமுகங்கள் இரண்டு உருவாக்கப்பட்டன.

பிரான்சில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் படைப்பிரிவுகளுக்குத் தேவையான தளவாடங்களை இறக்குமதி செய்ய துறைமுகங்கள் தேவைப்பட்டன. ஆனால் பிரான்சின் துறைமுகங்களை ஜெர்மானியப் படைகளிடமிருந்து கைப்பற்ற பல மாதங்கள் பிடிக்கும் என்பதால், நேச நாட்டு உத்தியாளர்கள் செயற்கைத் துறைமுகங்களை உருவாக்க முனைந்தனர். அலைதாங்கிகள் (breakwaters), தூண்கள் (piers), இணைப்புப் பாலங்கள் ஆகியவை தனித்தனியே பிரிட்டனில் செய்யப்பட்டு பிரான்சில் தரையிறங்கிய படைகளுடன் எடுத்துச் செல்லப்பட்டன. ஜூன் 6 1944ல் ஒமாகா கடற்கரையில் மல்பெரி துறைமுகம் ஏ, கோல்ட் கடற்கரையில் மல்பெரி பி ஆகியவை கட்டப்பட்டன. உடனடியாக அவற்றின் மூலம் சரக்குக் கப்பல்கள் படைகளையும் தளவாடங்களையும் இறக்கத் தொடங்கின. ஜூன் 19ம் தேதி வீசிய புயலால் மல்பெரி ஏ சேதமடைந்து பயன்படாமல் போனது. வின்ஸ்டன் துறைமுகம் (Port Winston) என்று பெயரிடப்பட்ட மல்பெரி பி மேலும் பத்து மாதங்களுக்கு நீடித்தது. 25 லட்சம் படைவீரர்கள், 5 லட்சம் வண்டிகள், 40 லட்சம் டன் தளவாடங்கள் இதன் மூலம் பிரான்சில் இறக்கப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்பெரி_துறைமுகம்&oldid=1358802" இலிருந்து மீள்விக்கப்பட்டது