லா கெய்ன் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லா கெய்ன் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி

தற்காலத்தில் பான்சர் குழு மேற்கின் தலைமையகம் அமைந்திருந்த மாளிகை
நாள் 10 ஜூன் 1944
இடம் லா கெய்ன், பிரான்சு
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
ஐக்கிய இராச்சியம் நாட்சி ஜெர்மனி
பலம்
40 ஹாக்கர் டைஃபூன் ரக விமானங்கள்
61 பி-25 மிட்செல் ரக விமானங்கள்
இழப்புகள்
0 18 பேர் மாண்டனர்
தலைமை தளபதி லியோ கெயிர் வோன் ஷ்வெப்பென்பெர்க் காயமடைந்தார்

லா கெய்னில் உள்ள மேற்குக் கவசப் படைக்குழுத் தலைமையகம் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல் (Attack on Panzer Group West's headquarters at La Caine) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதல். ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதி. இதில் பிரான்சின் லா கெய்ன் கிராமத்தில் அமைந்திருந்த மேற்குக் கவசப் படைக்குழுத் தலைமையகத்தின் மீது நேச நாட்டு வான்படைகள் குண்டுவீசித் தாக்கின.

நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ல் நார்மாண்டிப் பகுதியில் தொடங்கியது. இப்படையெடுப்பை முறியடிக்கவேண்டுமெனில் ஜெர்மானியர்கள் மேற்குப் போர்முனையில் உள்ள அவர்களது பான்சர் (கவச) படைப்பிரிவுகளைப் பயன்படுத்த வேண்டும். அக்கவசப் படைப்பிரிவுகள் பான்சர் குழு மேற்கு (Panzer group west) அல்லது 5வது பான்சர் ஆர்மி என்ற படைப்பிரிவின் கீழ் வந்தன. இதன் தலைமையகம் லா கெய்ன் கிராமத்தில் உள்ள ஒரு மாளிகையில் அமைந்திருந்தது. ஜெர்மானியர்கள் பான்சர் படைகளை ஒருங்கிணைத்து தாக்குதல் நடத்துவதைத் தடுக்கவும், ஜெர்மானியப் படைத் தலைமை ஒழுக்கத்தை (command and control) சீர் குலைக்கவும் பான்சர் குழு மேற்கின் தலைமையகத்தின் மீது நேச நாட்டு வான்படைகள் குண்டு வீசித் தாக்கின.

ஜூன் 10, 1944ல் இந்த குண்டுவீச்சு நடைபெற்றது. 40 டைஃபூன் ரக விமானங்களும் 61 பி-25 மிட்ச்செல் ரக விமானங்களும் இதில் பங்கு கொண்டன. இத்தாக்குதலில் 18 ஜெர்மானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். பான்சர் குழு மேற்கின் தலைமைத் தளபதி ஜெனரல் லியோ கெயிர் வோன் ஷ்வெப்பென்பெர்க் காயமடைந்தார். தலைமையகத்தில் தொலைதொடர்பு கட்டமைப்பு நாசமானது. தலைமையக மாளிகை சேதமடைந்ததால், பான்சர் குழு மேற்கின் தலைமையகம் பாரிசுக்கு மாற்றப்பட்டது. இதனால் நார்மாண்டி கள முனையில் பல கவச டிவிசன்களை ஒருங்கிணைக்கக்கூடிய மேலாண்மைக் கட்டமைப்பு வசதிகளை ஜெர்மானியர்கள் இழந்தனர்.