உள்ளடக்கத்துக்குச் செல்

பாய்ண்ட் டியோக் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போய்ண்ட் டியோக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாய்ண்ட் டியோக் சண்டை
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி

பாய்ண்ட் டியோக் அரண்நிலையின் வரைபடம்
நாள் ஜூன் 6, 1944
இடம் நார்மாண்டி, பிரான்சு
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
ஐக்கிய அமெரிக்கா 2வது அமெரிக்க ரெஞ்சர் பட்டாலியன்  ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா ஜேம்ஸ் இயர்ல் ரட்டர் நாட்சி ஜெர்மனி கெர்ட் வான் ரண்ட்ஸ்டெட்
பலம்
225+ வீரர்கள் 6 கள பீரங்கிகள்
20+ Fw 190 விமானங்கள்[1] 200 வீரர்கள், 4 எந்திரத்துப்பாக்கி நிலைகள், 1 கண்காணிப்பு நிலை
இழப்புகள்
135 மாண்டவர்/காயமடைந்தவர் 6 கள பீரங்கிகள் அழிக்கப்பட்டன

பாய்ண்ட் டியோக் சண்டை (Battle of Pointe du Hoc) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு தாக்குதல். இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் அமெரிக்க ரேஞ்சர் படைப்பிரிவுகள் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் பாய்ண்ட் டியோக் என்ற மலை முகட்டைத் தாக்கிக் கைப்பற்றின.

பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6, 1944ல் தொடங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் இப்படையெடுப்பு நிகழ்ந்தது. இக்கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட். பாய்ண்ட் டியோக் என்பது ஒமாகா கடற்கரையிலிருந்து 6.4 கிமீ மேற்கிலிருந்த மலைமுகடு. 30மீ உயரமுள்ள இதில் ஜெர்மானியப் பாதுகாவல் படைகள் ஒரு அரண்நிலை உருவாக்கி அதில் 155 மிமீ பீரங்கிகளை நிறுவியிருந்தனர். ஒமாகா மற்றும் யூட்டா கடற்கரைகள் இந்த பீரங்கிகளின் தாக்கெல்லைக்குள் வந்ததால் இந்த அரண்நிலையைக் கைப்பற்றி பீரங்கிகளைச் செயலிழக்கச் செய்வது அவசியமானது.

அமெரிக்கத் தரைப்படை ரேஞ்சர் படைப்பிரிவின் 2வது பட்டாலியனுக்கு பாய்ண்ட் டியோக்கைக் கைப்பற்றும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஜூன் 6ம் தேதிக்கு சில நாட்கள் முன்னரே அங்கிருந்த பீரங்கிகளை ஜெர்மானியப் படைகள் அப்புறப்படுத்தி விட்டன. இந்த விஷயம் நேச நாட்டு தளபதிகளுக்குத் தெரிய வந்தபின்னரும், இந்த அரண் நிலையைக் கைப்பற்றும் திட்டத்தை அவர்கள் கைவிடவில்லை. பீரங்கிகளை மீண்டும் ஜெர்மானியர்கள் பாய்ண்ட் டியோக்கிற்கு நகர்த்த வாய்ப்பிருந்ததால் அதனைக் கண்டிப்பாகக் கைப்பற்றி விட வேண்டும் என்று கருதினர். ஜூன் 6ம் தேதி காலை 2வது ரேஞ்சர் பட்டாலியன் டியோக்கைத் தாக்கியது. ரேஞ்சர்கள் ஜெர்மானிய குண்டுமழையின் இடையே செங்குத்தான மலையில் கொக்கியிணைத்த கயிறுகள் மூலமாக ஏறி மேலிருந்த அரண்நிலையைக் கைப்பற்றினர். ஆனால் அவர்களுக்குத் துணையாக வரவேண்டிய இரண்டாவது அலை ஒமாகா கடற்கரையில் தவறுதலாகத் தரையிறங்கியதால், ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்களைத் தனியே சமாளிக்க வேண்டியதானது. பெரும் இழப்புகளுடன் மறுநாள் துணைப்படைகள் டியோக்கை அடையும் வரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இச்சண்டையை நினைவு கூறும் வண்ணம் பாயிண்ட் டியோக்கில் ஒரு நினைவுச் சின்னமும், அருங்காட்சியகமும் கட்டப்பட்டுள்ளன.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Focke-Wulf FW 190 Aces of the Western Front, Osprey Publishing

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்ண்ட்_டியோக்_சண்டை&oldid=3584423" இலிருந்து மீள்விக்கப்பட்டது